Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மாயமாய் மறைந்த மெமரிகள்
- கதிரவன் எழில்மன்னன்|ஜனவரி 2002|
Share:
சூர்ய பாஸ்கர் தனது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருந்த மின்வலை அஞ்சலிலிருந்து நிமிர்ந்து பார்த்தார்.

"கிரண், இதைப் பார், ரொம்ப இன்டரெஸ் டிங்கா இருக்கும் போலிருக்கு" என்றார்.

கிரண் அவன் விளையாடிக் கொண்டிருந்த நின்டென்டோ கேம்பாய் அட்வான்ஸ் விளையாட்டிலிருந்து தலை நிமிராமல் இரண்டு கட்டை விரல்களாலும் க்ளிக் செய்து கொண்டே,

"ஆமாமாம், இருக்கும் பாஸ், உங்க கிட்ட வரத்துக்குள்ள எல்லாமே இன்டரெஸ்டிங்காத் தான் ஆயிடுது!" என்றான். ஆனால் சில நொடிகளில் விளையாட்டை விசனத்துடன் விசிறி எறிந்தான்!

"இப்ப பாருங்க பாஸ், உங்களால என் கவனம் போச்சு!

அந்த எறும்பு ரோபாட்டை எரிச்சுடலாம்னு பாத்தா, அது என் தலைய கடிச்சிடுச்சு!"

கிரணுக்கு இருபத்து எதோ வயது! ஆனால் பார்த்தாலும், அவன் பழகுவதும் டீனேஜ் என்றுதான் சொல்லலாம். ஒல்லியாக, உயரமாக, ஒட்டடைக் கொம்பு போல ஊதினால் உடைந்து விடுவது போலிருப்பான். எப்போதும் விளை யாட்டு புத்திதான்.

ஆனாலும் அபார மூளை, திறமைசாலி. அவன் MBA படிப்பு படித்து முடித்து, தனியாக private mutual fund நடத்துகிறான் என்று பேர். சூர்யா எடுத்துக் கொள்ளும் துப்பறியும் கேஸ்களில் உதவி செய்வது அவனுக்கு ஒரு ஹாபி! ஆனால் அதுவே முழு நேர வேலை போல் எப்போதும், சூர்யாவின் அலுவலகத்திலேயே உழன்று கொண்டிருந்தான். ஸ்டாக்களிலிருந்தும் அக்கவுன்ட் கணக்குகளிலிருந்தும் ஒளிந்து கொண்டிருந்தானோ என்னவோ?! அவனுக்கு விடியோ கேம்களிலும், கம்ப்யூட்டரில் குடைந்து ப்ரோக்ராம் செய்வதும், மின்வலையில் ஆராய்வதிலும் தான் மிகவும் ஆர்வம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டே இருப்பான்.

கிரணுக்கு சூர்யா எப்போதும் "பாஸ்" தான். சூர்யாவும், பேரை சொல்லி கூப்பிட சொல்லி எவ்வளவோ முயன்று பார்த்தார், முடியவில்லை, விட்டு விட்டார். "பாஸ் என்பது உங்க ஒரு பேரில் ஒரு பகுதிதானே, அதனால், இரண்டுக்கும் இருக்கட்டும், mega cool!" என்று வாதித்து, கிரண் மாற்றவில்லை!

"உங்க அப்பாக்கு உதவியா கோர்ட்டில் சட்டம் பேசாவிட்டாலும், இங்கே நல்லா பேசற?!" என்றார் சூர்யா.

கிரணுக்கு அதுவே குஷியாகிவிட்டது! "இத என்னோட அப்பா கேட்டா ரொம்ப சந்தோஷப் படுவார், பாவம்! என்ன சட்டம் படின்னு கஷ்டப் படித்திட்டே இருந்தார். நான் டிமிக்கி கொடுத்துட்டு, எம்.பி.ஏ படிச்சுட்டேன். இங்கயாவது நல்லா சட்டம் பேசறேன்னுட்டு இப்பவாவது திருப்தி படட்டும்!" என்றான்!

(கடந்த காலத்துக்கு செல்வோம்!)

சூர்யா துப்பறியும் தொழிலுக்கு வந்தது தற்செயலான ஒரு சுவையான நிகழ்ச்சியால்.

சூர்யாவின் பூர்வீகச் சிறப்பு (!) இளம் வயதிலேயே silicon valley-யில் ஒரு மிகச் சிறந்த நிறுவனத்தில் உயர் நிலை தொழில் நுட்ப (technical) மேனேஜராக இருந்தது. அதற்கு முன், பல இந்தியர்களைப் போல அவரும் ஒரு மகத்தான இந்திய பொறியியல் கல்விச் சாலையில் பட்டம் பெற்று, பிறகு அமெரிக்காவிலேயே சிறந்த பல்கலைக் கழகம் ஒன்றில் உயர் நிலைப் பட்டமும் பெற்றார்.

அவர் நிறுவனத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்து அவரது சிறப்புத் திறமைகள் ஜொலித்து, அவர் மிக விரைவில் வேலை உயர்வுகள் பெற்றார். MBA பட்டம் இல்லாவிட்டாலும், அவருடைய அறிவுக் கூர்மையால் அவர் எடுத்த முடிவுகள் நிறுவனத்துக்குப் பல வெற்றிகளைத் தரவே, நிறுவனத்தின் ஸ்டாக் விலையும் ஜிவ்வென்று உயர, சூர்யாவின் நிதி நிலையும் கொடி கட்டிப் பறந்தது!

ஒரு நாள் மாலை, சூர்யா ஒரு நண்பருடன் யாருடைய வீட்டுக்கோ விருந்துக்குப் போயிருந்தார். விதி அவரை அங்கு அழைத்திருக்குமோ?! அப்போது அந்த வீட்டுக்கார அம்மணி திடீர் என்று வீலென ஒரு பெரும் குரல் எழுப்பினாள்.

"போச்சு! போச்சு! என்னோட ரத்தின ஹாரம் காணோம்!"

யாருக்கும் என்ன செய்வது என்று உடனே தோன்றவில்லை.

போலீஸை அழைத்தால் அங்கு வந்த எல்லாருக்கும் உபத்திரவம், அவமானம் என்று விருந்து வைத்தவருக்குத் தோன்றியது. அவர் பெயர் கருணாகரன். சூர்யா தன் நண்பரிடம் கூறி, கருணாகரனிடம் அறிமுகம் செய்து கொண்டு ஒரு யோசனை கூறினார்.

"விருந்து ஒன்றும் ஆகாதது போல் மேலும் நடக்கட்டும், ஆனால் யாரும் அங்கிருந்து நகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குள் இன்னும் கொஞ்சம் தேடிப் பார்க்கலாம், அத்துடன் நெருங்கிச் சம்பந்தப் பட்டவர்களை விசாரித்தும் பார்க்கலாம்" என்றார்.

சூர்யாவின் படப்படப்பில்லாத தோரணை கருணாகரனுக்கும், அவரது மனைவி ஜெயாவுக்கும் சற்று நிம்மதி தரவே அவர்கள் அமைதியடைந்து சூர்யா கூறியபடி நடக்க ஆரம்பித்தனர். சில நொடிகளில், சூர்யா அவர்களிடமிருந்து எல்லா விவரங்களையும் பெற்று விட்டார்:

கே: ஜெயா கடைசியாக நகையைப் பார்த்தது எப்போது?

ப: விருந்து ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்னால்தான். எந்த நகையைப் போட்டுக் கொள்ளலாம் என்று அம்மணி அலசும் போது பார்த்தது.

கே: அப்போது எங்கேயாவது விழுந்திருக் குமோ?

ப: (எரித்து விடுவது போல் அம்மணியின் பார்வை! அலட்டிக் கொள்ளாமல் சூர்யாவின் புன்னகை! ஓம் சாந்தி!) இருக்கவே முடியாது, அம்மணி ஒவ்வொரு நகைக்கும் ஒரு குழி உள்ள பெரிய நகைப் பெட்டியில் கவனமாகத் திருப்பி வைத்தாயிற்று.

கே: காணாமல் போனது எப்போது எப்படித் தெரிந்தது?

ப: தற்செயலாக. சாதாரணமாக, நகைப் பெட்டியை அடிக்கடி பார்ப்பதில்லை. இந்த விருந்துக்கும், அதிக விலை இல்லாத நகை போட்டிருந்ததால், ஒரு வேளை சில நாட்கள் கூட பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு சிநேகிதி அந்த நகை இருந்த

கீழ்ப் பகுதியில் இருந்த வேறு எந்த நகயையோ பார்க்க வேண்டும் என்று கேட்டதால் பார்த்தபோது தெரிந்தது.

கே: பெட்டி மூடியிருந்ததா, திறந்திருந்ததா?

ப: நிச்சயமாக மூடியிருந்தது. தற்போது பார்க்கும் போது சாவி போட்டுத் திறக்க வேண்டியிருந்தது.

அவ்வளவு குறைந்த காலமே காணாமால் இருந்ததால், நகை இன்னும் வீட்டுக்குள் எங்கோ அல்லது யாரிடமோ இருக்க நல்ல வாய்ப்புண்டு என்று சூர்யா அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு நகைப் பெட்டி வைக்கப் பட்டிருந்த பலமான கஜானாப் பெட்டியை ஆராய்ந்து பார்க்கலானார். சாவித் துவாரத்தில் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு சிறிய (ஆனால் மிக வெளிச்சமான) டார்ச் விளக்கைப் போட்டுப் பார்த்து விட்டு, "யார் யாரிடம் சாவி இருக்கிறது?" என்றார். கருணாகரனிடமும், ஜெயாவிடமும்தான்.

மீண்டும் கஜானாப் பெட்டியைப் பார்த்து அதை செய்த நிறுவனத்தின் பேரையும் பெட்டியின் எண்ணையும் எழுதிக் கொண்டார்.

சூர்யா தனது இடுப்பில் தொங்கிய தன் சிறிய கம்ப்யூட்டரை எடுத்து, மின்வலையில் சிறிது நேரம் எதையோ குடாய்ந்தார். அவரது சந்தேகம் நிவர்த்தியாயிற்று. கஜானாப் பெட்டியின் பூட்டு எளிதாக கம்பி போட்டு திறக்கக் கூடிய பூட்டுதான். யார் வேண்டுமானாலும் திறந்திருக்கலாம். நகை விலை உயர்ந்ததாக இருந்ததால் காரணமும், எடுக்கப் பட்ட விதமும் தெளிவாகிவிட்டது போல் தோன்றியது. விருந்தினரில் யாருக்கு எடுக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது என்றுதான் தேட வேண்டும். வெளியிலிருந்து வந்த திருடனாக இருக்குமோ? ஆனால் ...?! சற்று முன்பு கிடைத்த விவரம் ஒன்று சூர்யாவின் மனத்தில் நெருடியது - இந்த விஷயம், அவ்வளவு எளிதல்ல. இன்னும் தோண்ட வேண்டும்! சூர்யா தன் மீசையை நெருடியபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு யோசித்தார். கருணாகரனும் ஜெயாவும் பொறுமையை இழக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் மின்னலடிப்பது போல் ஒரு துப்பு கிடைத்தது! சூர்யா கஜானாப் பெட்டியின் கீழ் கிடந்த ஒரு கசங்கிய காகிதத் துண்டைப் பார்த்தார்.

அதை எடுத்து விரித்துப் பார்த்தார். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவர், ஜெயா திடுக்கிட்டு முகம் வெளிறிப் போய் விட்டு மீண்டும் சுதாரித்துக் கொண்டதைக் கவனித்து விட்டார்.

கருணாகரனைப் பார்த்து, "என்ன சார், லாஸ் வேகாஸ் எப்படி இருந்தது?! இந்த தடவை கும்பலே நிறைய இல்லை, நல்லா கஸினோ சுத்தியிருப்பீங்களே?!" என்றார், ஜெயா மீது ஒரு பக்க வாட்டில் நோட்டம் விட்டபடி.

கருணாகரன் COMDEX பொருட்காட்சிக்காக லாஸ் வேகாஸ் சென்றிருந்தது சூர்யாவுக்குத் தெரியும். சூர்யாவும் அங்கிருந்து தான் சமீபத்தில் திரும்பியிருந்தார். கருணா கரனுக்கு மிகக் கடுப்பேறியது.

"என்னடா இது, நகையைக் காணோம்னுட்டு பரிதவித்துக் கொண்டிருந்தாக்க, இந்த ஆசாமி ஊர் வம்பு இழுக்கறானே?! சரியான லூஸ் போலிருக்கு, இத்த நம்பி போலீஸ கூப்பிடாம இருக்கமே, சீக்கிரம் ·போன் அடிக்க வேண்டியதுதான்!" - நினைத்தார், சொல்ல வில்லை.

கருணாகரன் முகம் போன அஷ்ட கோணலைப் பார்த்து, சூர்யாவே புரிந்து கொண்டார்! அவருக்கு வேண்டிய விவரம் அந்த முக பாவனையிலேயே கிடைத்து விட்டது.

"ஊம், சரி, சரி, விஷயத்துக்கு திரும்ப வருவோம். உங்க வீட்டுல இன்னும் யார் யார் இருக்காங்க?!"

மீண்டும் ஜெயா மீது நோட்டம். மீண்டும் முக வெளிறல்.

"ஆஹா, சூடு புடிக்குது!" - இது சூர்யா தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டது!

கருணாகரன்தான் பதிலளித்தார். "நாங்க ரெண்டு பேர், எங்க பையனும் பொண்ணும்.

ம்ம்ம்ம், அப்புறம், இப்போ ஜெயாவோட தம்பியும் இருக்கான் ரெண்டு வருஷமா. எதுக்கு கேக்கறீங்க?"

சூர்யா ஜெயாவைப் பார்த்தார். இப்போது அவள் முகம் பரிதாபமாகவே மாறிவிட்டிருந்தது. கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த சூர்யா, "ஒண்ணுமில்லை சார், சும்மா எல்லா விவரமும் தெரிஞ்சுகிட்டா நல்லது அதுதான். சரி, நீங்க போய் கெஸ்ட் எல்லாரையும் கவனியுங்க, நான் இன்னும் கொஞ்சம் இங்கயே தேடிப் பாக்கறேன். ஜெயா, நீங்க மட்டும் கொஞ்ச நேரம் என்னோட இங்க பாருங்க" என்றார்.

கருணாகரனுக்கு இன்னும் ஏமாற்றம்.

"கத்துக் குட்டிப் பய ... சுத்த வேஸ்ட்!

போலீஸக் கூப்பிட்டு அல்லோலப் பட வேண்டியதுதான் போலிருக்கு!"

மனத்துக்குள் சபித்துக் கொண்டே நகர்ந்தார்.

அவர் கிழே செல்லும் வரை மெளனமாக இருந்த சூர்யா, ஜெயாவைத் தீர்க்கமாகப் பார்த்து, கனிவாக, "என்னம்மா, நீங்க எதாவது சொல்லணும் போலிருக்கே?!" என்றார்.

ஜெயா திடுக்கிட்டு, தடுமாறினாள், "நீ...நீ...நீங்க என்ன எத பத்தி கேக்கறீங்க?"

சூர்யா பெருமூச்சுடன், இன்னும் மென்மையாக விசாரித்தார், "உங்க தம்பி லாஸ்வேகாஸ்ல சூதாடறத்துக்கும், நகை காணாம போனதுக்கும் இருக்கற இணைப்பப் பத்தி!"

ஜெயாவின் கண்கள் முழுநிலவைப் போல் வட்டமாகப் பெரிதாகின. "உங்..உங்களூக்கு எப்படி தெரிஞ்சது? தயவு செஞ்சு கருணா கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க, ரணகளமாயிடும்."

சூர்யா மெதுவாக தலையாட்டி ஆறுதல் காட்டி ஆமோதித்தார்.
"எனக்கு தெரிஞ்சது ரொம்ப சுலபம். பெட்டி பூட்டியிருந்துச்சு. நீங்க திறந்துதான் நகை காணாமப் போனதப் பாத்ததா சொன்னீங்க. அதனால அத சாவி கிடைக்கக் கூடிய நெருங்கிய யாரோதான் எடுத்திருக்கணும். இந்த கிழிஞ்ச கஸினோ ரசீதயும், லாஸ்வேகாஸ், தம்பி இரண்டையும் பத்தி பேசச்ச உங்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தையும் வைச்சே யூகிச்சேன். போலீஸ் எவ்வளவு சுலபமா அதையே புடிப்பாங்க தெரியுமா. கருணா நான் லாயக்கில்ல, போலீஸத்தான் கூப்பிடணும்னு முடிவுக்கு வந்துட்டார் போலிருக்கு, ஜாக்கிரதை. உங்க குடும்பத்துக்கு வேண்டியத நீங்க செய்யுங்க. எனக்கு அதுல ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா, நகை கிடச்சாகணுமே, அதுக்கு வழி பண்ணுங்க. சிக்கிரமா உங்க தம்பிய கூப்பிட்டு நகையத் திருப்பி வாங்குங்க."

ஜெயா விசித்துக் கொண்டு, உளமார்ந்த நன்றியுடன், "ரொம்ப தேங்க்ஸ் சார்! என் தம்பிக்கு சூதாட்டப் பழக்கம் வந்துடுச்சு. மின்வலைல நிறைய வர்ச்சுவல் கஸினோக்கள்ள நிறைய க்ரெடிட் கார்ட் கடனாயிடுச்சு. நான் கருணாவுக்குத் தெரியாம அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக் கொடுத்துகிட்டுருந்தேன். இப்போ COMDEX-க்கு கருணாவோடப் போகச்சே, ரொம்ப கடனாயிடுச்சு போலிருக்கு, இந்த நடப்புக்கு வந்துட்டான்" என்றாள். தம்பியை மேலே கூப்பிட்டாள்.

சூர்யா அவனுக்கு புத்தி கூறி, அவரது நண்பரின் தங்கை ஷாலினி ஸ்டான்·போர்ட் மருத்துவ மனையில் வேலை புரிவதால் சூதாட்ட addiction-ஐ மாற்ற உதவ முடியும் என்று சமாதானம் கூறி, நகையை மீட்டு, பெட்டிக்கு பின்னால் விழுந்ததை ஜெயாவே கண்டு பிடித்து விட்டதாக அவளுக்கே புகழ் மாலையையும் சூட்டி விலகிவிட்டார். எல்லாம் சுபம்!

அன்றிலிருந்து ஜெயா ஒரே சூர்யா புகழ் பரப்பும் மஹா விசிறியாகிவிட்டாள். அவளுக்குத் தெரியாத ஆளில்லை, மேலும் அவள் பேசாத பேச்சில்லை! டமாரம் தான்! அதனால், வெளிப்படுத்த முடியாத சில இக்கட்டான பிரச்சனைகள் துப்பறிவதற்காக சூர்யாவுக்கு வரத் தொடங்கின. தன் துறையில் கொடிகட்டிப் பறந்த சூர்யா, போதும் என்ற நிலைக்கு வந்து விட்டிருந்ததால்,

வேலையை விட்டு விலகி விட்டு, சுவையான இந்த துப்பறியும் தொழிலில் மட்டும் முழு நேர பொழுது போக்காக இறங்கிவிட்டார்!

வழக்கறிஞர் நிறுவனம் வைத்திருந்த நண்பரின் மகன் கிரண் (ஷாலினியின் தம்பி) நகை விஷயத்தைக் கேள்விப் பட்டு அவருடன் ஒட்டிகொண்டு விட்டான். இளவயதிலிருந்து எவ்வளவோ ஷெர்லாக் ஹோம்ஸ், அகதா க்றிஸ்டி போன்ற துப்பறியும் கதைகளைப் படிப்பதில் ஆவல் இருந்ததால் நிஜ வாழ்வில் துப்பறியும் ஒருவருடன் சேருவதில் அவனுக்கு அபார குஷி!

அவ்வப்போது, ஸ்டாக் வணிக வேலையிலிருந்து நேரம் கிடைத்த போது சூர்யாவுக்கு உதவி செய்வான். ஆனால் அவனுக்கு வேலையை விட, சூர்யாவுடன் கழிக்கும் காலந்தான் நிறைய எனலாம்!

சூர்யாவும், "என்ன கிரண், இந்த டைம் எல்லாம், கிளையன்ட்ஸ்க்கு பில் போட்டு டறயா?!" என்று கேட்டார்!

கிரணின் பதில் ஒரு கண்ணடிப்பும் ஒரு மர்மப் புன்னகைதான்! "சரி போகட்டும், நீயாச்சு, உன் கிளையன்ட்ஸாச்சு!" என்று சூர்யா விட்டு விட்டார்!

(கதையின் நிகழ்காலத்துக்கு வருவோமா?!)

கிரண் டெலிவிஷன் பக்கத்திலிருந்து எழுந்து, வழியிலிருந்த மேசை, நாற்காலி போன்ற ஒவ்வொரு பொருள்மீதும், வழக்கம் போல் இடித்துக் கொண்டு சூர்யா அமர்ந்திருந்த கம்ப்யூட்டர் மேசைக்கு வந்து சேர்ந்தான். சூர்யாவின் பின்னாலிருந்து மின்வலைக் கடிதத்தைப் படித்தான்.

"... சூர்யா அந்த 3d ஹோலோக்ராம் மெமரிகள் திரும்பக் கிடைக்காவிட்டால், என் கம்பனியையே இழுத்து மூடிவிட வேண்டியது தான்! இந்த விஷயம் வெளில தெரிஞ்சாலே அதோகதிதான்!

அஞ்சு வருஷமா என்னோட வியர்வையையும், கண்ணீரையும், ரத்ததையுமே சிந்தி, கல்லு கல்லா வைச்சு கட்டின கம்பனி. சூர்யா, நம்மோட பல வருஷ சினேகிதத்த நம்பி கெஞ்சி கேக்கறேன், கண்டு பிடிச்சி காப்பாத்து சூர்யா..."

சூர்யா கிரணை நோக்கி, தன் புருவத்தை கேள்விக் குறியாக உயர்த்தினார். "இதே மாதிரி ஒரு ரெண்டு மூணு வாய்ஸ் மெயிலும் இருக்கு..." என்றார். இன்னும் மின்னஞ்சலில் இருந்த இன்னொரு பகுதியையும் சுட்டிக் காட்டினார்:

"...நாங்க இன்னும் மூணு நாளுல எங்க 3D ஹோலோக்ராம் மெமரியை கன்பனில முதலிட்டவங்களுக்கு சரியா வேலை செய்யு துன்னு காட்டியே ஆகணும். அதுக்காக பத்து மெமரி பார்ட் பண்ணி வச்சிருந்தோம். ஆனா அதுல அஞ்சு யாரோ எடுத்துட்டு போயிட்டிருக் காங்க. மீதி அஞ்சு பார்ட் சரியா வேலை செய்யாத படி நுணுக்கமா, ரொம்ப தொழில் நுட்பமா மேலுக்குத் தெரியாத படி மாத்தி வைச்சிருக்காங்க. நாங்க எல்லா மெமரி ஸ்டோர் / ரீகால் சோதனை பண்ணிப் பாத்தப்ப தான் இப்படி உள்ளோட மாத்தப் பட்டிருக்கறது தெரிய வந்தது. இது யாரோ எங்க மெமரி தொழில் ரகசியம் எல்லாம் நல்லாத் தெரிஞ்ச உள்ளாளுங்கதான் இப்படி பண்ணியிருக்க முடியும். இன்னும் இரண்டே நாளூக்குள்ள நீ யாருன்னு கண்டு பிடிச்சி அந்த மீதி அஞ்சு பார்ட்கள கண்டு பிடிச்சி கொடுத்தாத்தான் நானும், என் கம்பனியும் பிழைக்க முடியும்..."

கிரண் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்!

"ஓகே, பாஸ்! ரொம்ப இன்டரஸ்டிங் விஷயமாத்தான் இருக்கும் போலிருக்கு. உடனே நடையக் கட்டுங்க! போறச்ச அந்த மாயாஜால techy nerd விவரத்த எல்லாம் கேட்டுக்கறேன்!" என்றான்.

இருவரும் கிரணின் போர்ஷா காரில் கிளம்பினர்.

கிரண் சும்மா சூர்யா எடுத்துக் கொள்ளும் மின்னணு தொழில் நுட்ப விஷயங்களை nerdy stuff என்று மேலுக்கு கேலி செய்வானே ஒழிய, அந்த மாதிரி சங்கதிகளில், அவனே ஊறியவன்தான்! சிறு வயதிலேயே, கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங் கற்றுக் கொண்டு, பலப் பல விளையாட்டுக்களை எழுதியவன். தற்போதும், அவ்வப்போது அதைச் செய்வதுண்டு. சொல்லப் போனால், கிரண் இருக்கும் இடத்தில் எதாவது ஒரு வெகு சமீபத்தில் வெளிவந்த ஒரு மிக முன்னேறிய எலக்ட்ரானிக் சங்கதி இல்லாமல் இருக்காது. சோனி அயிபோ ரொபோட் நாய் லேடஸ்ட் மாடலா?! உண்டு. உலகத்திலேயே மிகச் சிறிய செல் ·போனா?! இதோ இருக்கே! அப்படித்தான், இன்னும் பலப் பல வகையறாக்கள்!

அப்படி இருந்ததால்தானோ என்னவோ, சூர்யா நிறைய தொழில் நுட்பம் சம்பந்தப் பட்ட கேஸ்கள் எடுத்துக் கொண்டதால், அவருடன் எபாக்ஸி கோந்து வைத்தது போல ஒட்டிக் கொண்டு விட்டான்!

கிரணுக்கு இன்னும் இரண்டு மிக பலமான ஆசை உண்டு - ஒன்று மிக பளப் பளப்பான வேகமான கார்கள், இன்னொன்று, மிகப் பளப் பளப்பான, வேகமான சினேகிதிகள்!

முதல் விஷயத்தில் சூர்யாவுக்கும் மிக ஆர்வமுண்டு, கிரணுடன் போர்ஷிக்களையும், ·-பர்ராரிகளையும் பற்றி மணிக் கணக்கிலும் பேசித் தள்ளுவார்!

ஆனால் இரண்டாவது விஷயம்?! "ஆளை விடுடா சாமி! என்ன வேணாப் பண்ணிக்கோ, என் கிட்ட மட்டும் ஒண்ணும் சொல்லாதே! அப்புறம் உங்க அப்பா கிட்ட நான் பதில் சொல்லணும்!" என்று கை கழுவி விட்டார். ஆனாலும் அவ்வப்போது "பயலே, ஜாக்கிரதை, கொஞம் நிதானமாப் போ! எதாவது வம்பு தும்புல மாட்டிக்கப் போறே" என்று புத்தி மட்டும் சொல்லி விடுவார். கிரணின் பதில்?! எப்போதுப் போல ஒரு கண்ணடிப்பும், கோணல் புன்னகையும்தான்!

கிரண் இரண்டு வேகப் பிசாசுக் கார்கள் வைத்திருந்தான். வழக்கறிஞர் மகன், அவனும் பணம் புரளும் ஸ்டாக் வாணிகத் தொழில். அதனால் பணத்துக்குக் குறைவில்லை! ஒன்று போர்ஷா - மிகக் கடினமான எம்.பி.ஏ தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதற்காக அவன் அப்பா அளித்த பரிசு! மற்றது BMW Z8, தன் செ'ந்த நிறுவனத்தில் முதல் வருஷ லாபத்துக்கு கிரணே வாங்கிக் கொண்டது. தனக்குக் கிடைத்த அளவு பிரம்மாண்ட லாபத்தைப் பார்த்து கிரணுக்கே பிரமிப்புத்தான். தகுதியுண்டா என்று சந்தேகம்! ஆனால் ஓரிரண்டு பெரும் கிளையன்ட் அக்கவுன்ட் டுகளில், அவனுடைய அபாரத் திறமையால்தான் நிறைய லாபம் பெற முடிந்தது என்பது உண்மை. அதனால்தான் கிடைத்தது!

கிரண் காரோட்டும் பாணியும் அலாதிதான்! சென்னையில் இரண்டு பஸ்களுக்கு நடுவில் மூக்கை நுழைக்க முடிந்தால் புகுந்து விடும் ஆட்டோரிக்ஷா டிரைவர்களுக்கு நல்ல போட்டி கொடுக்கும் விதம்! கிளம்பிய முதல், இரண்டு தெரு தாண்டவேண்டுமானாலும் ஒரே லேனில் ஓட்டியதாக சரித்திரமே கிடையாது! எதாவது ஒரு இடத்தில் பிரேக் போட வேண்டி வந்து விட்டால் மிக எரிச்சல் கிளம்பி விடும்.

("எவன்டா இவங்களுக்கெல்லாம் லைசென்ஸ் குடுத்துட்டான்") சுற்றிலுள்ள எல்லா டிரைவர் களுக்கும் ஒரு சஹஸ்ர நாம அர்ச்சனைதான்!

சூர்யாவை கார் ஓட்டவே விட மாட்டான். ("பாஸ், நீங்க ஓட்டினா, போய் சேர்ர வேளைக்கு எனக்குப் பேரன் பொறந்துடுவான்!") இத்த னைக்கும் மற்றவர்கள், சூர்யாவே படுவேகம் என்று அவரை சபிப்பதுண்டு! சூர்யாவும் முதலில் கிரணுடன் போகும் போதெல்லாம், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் போவார். ஆனால், கிரண் பொறுமையில்லாமல் வேகமாக ஓட்டினாலும், மிகத் திறமையாக, மிகவும் முன்னெச்சரிக்கையுடன் தான் ஓட்டுகிறான் எனப் புரிந்து கொண்டு போகப் போகப் பழகிவிட்டது!

சூர்யாவும் கிரணும், சான்டா க்ளாராவில் இருந்த குமாரின் நிறுவனத்துக்கு லாரன்ஸ் எக்ஷ்ஸ்ப்ரேஸ்வேயின் நெரிச்சலில், ஒரு வழியாக, உடைந்து போகாமல் உருப் படியாக வந்து சேர்ந்தனர்! அங்கு அவர்கள் கண்ட அற்புத தொழில் நுட்ப மாயமும், அதைச் சார்ந்த மர்மமும் விழிகளை விசாலமாக விரிக்க வைக்கும் வியப்பை அளித்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline