Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (பகுதி- 8)
- சந்திரமௌலி|ஜனவரி 2012|
Share:
Click Here Enlargeபிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் மேலும் ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்துகொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான். இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயை சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ஸ்ரீக்கு ஏற்பட்ட காயம் என்ன? ராஜுக்கு வேலை கிடைக்குமா? அவன் கஷ்டம் தீருமா? அவனது மறுபக்கம் என்ன?...

*****


சீனுவின் உடல் நடுங்குவது இரண்டு பெஞ்சு தள்ளி இருந்த எனக்கே தெரிந்தது. தேர்வு அதிகாரி சீனுவின் அருகில் சென்று "ஏன் இப்படி நடுங்குற? ஏன் இவ்வளவு வியர்த்து ஊத்துது? உன் பெயர் என்ன? என்றார். சீனுவால் பதில் சொல்லமுடியவில்லை. இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தான். முருகேசன் வாத்தியார் இதற்குள் சீனுவின் அருகில் வந்து அந்த அதிகாரியைப் பார்த்து "இவன் பெயர் சீனு சார். ரொம்ப நெல்லா படிக்கிற பையன். ஸ்டேட் ரேங்க் வாங்கணும்னு முனப்பா இருக்கிறவன் அதனாலேதான் இப்படி.. பயந்த சுபாவம் நீங்க இப்படி அவனை குறிப்பா கேள்வி கேக்கவே பயந்திருப்பான். பையன்களை தடங்கலில்லாமல் பரிட்சை எழுதவிடுங்க. வேறு ஏதாவது தெரியணும்னா என்னைக் கேளுங்க. எங்க மாணவர்கள் யாரும் காப்பியடிக்கற மாதிரி சின்னத்தனமெல்லாம் செய்யமாட்டாங்க" என்றவர் தொடர்ந்து அந்த அதிகாரியின் பதிலுக்குக் காத்திராமல் "சீனு நீ தொடர்ந்து எழுது" என்றார்.

அந்த அதிகாரியை வாத்தியார் முருகேசனின் பதில் உசுப்பிவிட்டது. "எப்படி உங்க மாணவர்களைப் பத்தி உங்களுக்கு தெரியுமோ, உங்ககிட்ட எப்படி பண்ற தப்பை மறைக்கிறதுனு உங்க மாணவர்களுக்கும் நல்லா தெரியும். ஆனா எங்ககிட்ட அது நடக்காது. தம்பி… உன் பேரு என்ன சொன்னே? ஆ…சீனு கொஞ்சம் நகரு உன் டெஸ்கை செக் பண்ணனும்." என்றார். இதற்குள் இன்னும் ஒரு அதிகாரியும் பக்கத்தில் வரவே இருவரும் சேர்ந்து சோதனை செய்தனர். எல்லா மாணவர்களும் இப்போது பரிட்சை எழுதுவதை நிறுத்திவிட்டு அங்கே நடப்பதை இமைகொட்டாமல் பார்க்கத்தொடங்கினர். டெஸ்கில் ஒன்றும் கிடைக்கவில்லை. சீனுவின் சட்டை, கால் சிராய் பாக்கெட்டுகளிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. சீனு இன்னும் பதட்டமாக இருந்தான். அவனுடைய பரீட்சைத் தாள்களைக் கையில் எடுத்த அந்த அதிகாரி அவற்றுக்குக் கீழே சிறிது கசங்கி ஆனால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த தாளை, செந்தில் சீனுவிடம் எறிந்த தாளைக் கைப்பற்றினார். மிக சாமர்த்தியமாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்த பெருமிதமும், நான் அப்போதே சொன்னேனே என்ற ஏளனமும் கலந்து முருகேசன் சாரைப் பார்த்து "இதுக்கு என்ன சொல்றீங்க சார்" என்றார்.

சீனு இப்போது அழத்தொடங்கினான். "நான் இல்லை. செந்தில்தான். ரங்கன்தான்" என்று தந்தியடிப்பது போல் ஏதோ சொன்னான். முருகேசன் சார் குறுக்கிட்டு "சீனு உன்னை எனக்குத் தெரியும். நீ நெல்ல பையன். நீ அழாதே" என்று சொல்லிவிட்டு "சார் இந்த பையன் தப்புப் பண்ணமாட்டான். அந்தத் தாளை எங்கிட்ட குடுங்க" என்றார். அந்த அதிகாரி அந்தத் தாளை தன் கைகளிலேயே வைத்துக்கொண்டு அவரிடம் காட்டினார். முருகேசன் வாத்தியார் கண்ணாடியை சரிசெய்து அந்தத் தாளை உற்றுப் பார்த்து சற்றே அதிர்ந்தவராய் "இது சீனுவுடைய கையெழுத்துதான். எல்லா முக்கிய குறிப்புகளும் எழுதியிருக்கு" என்று பின்வாங்கிய குரலில் கூறி காயம்பட்ட மனதோடு "என்னப்பா சீனு இதெல்லாம். இப்படித்தான் நீ முதல் மார்க் எல்லா பரீட்சையிலும் வாங்கறியா. இது எப்படி உன் பரீட்சைத் தாள் அடியில இருக்கு?" என்றார்.

இதற்குள் அதிகாரி "சரி இதையெல்லாம் ஆபீஸ் ரூமில் போய் விசாரிச்சுக்கலாம். மத்த பசங்க பரீட்சை எழுதுவது தடைப்பட வேணாம். சார் நீங்க இந்த ஃபார்ம்ல மட்டும் ஒரு கையெழுத்துப் போடுங்க. இங்க நடந்ததுக்கு விட்னஸ் வேணும்" என்று அடுத்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். சீனு நிலைமை விபரீதமாவதை உணர்ந்து பெரிதாக அழத்தொடங்கினான். தேம்பியவாறே "சார் நான் காப்பி அடிக்கலை சார். அம்மா சத்தியமா நான் இதை இங்க எடுத்துவரலை சார். செந்தில்தான் இதை வீசினான். எல்லாம் ரங்கன்தான் காரணம். வேணுமின்னா தனலட்சுமியைக் கேளுங்க." இது எதையும் காதில் வாங்காமல், ஒரு அதிகாரி அவனது தேர்வுத்தாளை அள்ளிக்கொண்டு இன்னொரு கையால் அவனை ஹெட் மாஸ்டர் ரூமுக்கு இழுத்துச் செல்லத் தொடங்கினார். சீனு தனலட்சுமியைத் திரும்பி திரும்பிப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காமல் தலையை நிமிர்த்தாமல் பரீட்சை எழுதுவதைத் தொடர்ந்தது எனக்கே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. சீனுவின் அலறல் அந்த அறையை விட்டு அவனை இழுத்துச்சென்ற பிறகும் பெரிதாகக் கேட்டுக்கொண்டே இருந்தது. சில நிமிடங்களில் அது ஓய்ந்து நிசப்தமாகிப் போனது. அன்று ஹெட்மாஸ்டரின் அறையில் நடந்தவற்றை ப்யூன் ஆறுமுகம் சொல்லித்தான் எல்லாரும் தெரிந்து கொண்டோம்.

ஒரு சிறு விளையாட்டு விஷயத்துக்கு எவ்வளவு பெரிய தவறை அந்த சிறு வயதில் விளைவுகளை யோசிக்காமல் செய்து, ஒருவனது வாழ்க்கையையே கெடுத்துவிட்டேன் என்று அன்றிலிருந்து வருந்தாத நாளே இல்லை. அந்தச் சிறு வயதிலேயே பொறாமையும் பழிவாங்கும் உணர்ச்சியும் பொறுப்புணர்வில்லாமல் சர்வ சாதாரணமாக ஒரு பெரிய குற்றத்தை செய்யவைத்தது. சிறுவன் அறியாமல் பற்ற வைத்தாலும், பெரியவர்கள் தெரிந்து பற்ற வைத்தாலும் நெருப்பு ஒன்றுதான். விளைவு ஒன்றுதான் என்பதைக் காலம் கடந்து புரிந்துகொண்டேன்.

*****
ராஜை அழைத்துவரக் கிளம்பிய தினேஷ் உடனே திரும்பிவிட்டான். "ஸ்ரீ நீயும் என்னோடு வா. நீதான் கார் ஓட்டணும். ரெண்டு பெக் சாப்பிட்டது நினைவில்லாமல் அப்படியே கிளம்பிட்டேன். மழையா வேற இருக்கு. ரிஸ்க் எடுக்க விரும்பலை. சாரி டு டிஸ்டர்ப் யூ" என்றான். யோசனையில் இருந்த ஸ்ரீ பதில் ஏதும் பேசாமல் கிளம்பினான். வண்டியில் உட்காரும் போது "எனக்கு அமெரிக்காவில் கார் அதிகம் ஓட்டிப் பழக்கமில்லை. அதனால் வேகமாக ஓட்டமாட்டேன்" என்றான் ஸ்ரீ. "பரவாயில்லை. இந்தியாவில் கார் ஓட்டிப் பழகியவர்கள் உலகத்தில் எங்கே வேணுமானாலும் ஈஸியா கார் ஓட்டலாம். கவலையே இல்லை. போலாம் ரைட்" என்றான் தினேஷ். மப்பு கொஞ்சம் ஏறிவிட்டது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, தினேஷ் வழி சொல்ல ஸ்ரீ வண்டியை நிதானமாகவே ஓட்டினான். அவன் எண்ணம் மீண்டும் அந்தத் தேர்வு நாள் நிகழ்ச்சியை நினைக்கத் தாவியது.

நான் காப்பியடித்திருப்பேன் என்று முருகேசன் வாத்தியார்கூட நினைத்தது என்னை ரொம்ப பாதித்தது. அத்தனை பேர் முன்பும் இப்படி ஒரு கெட்ட பெயர் வருமாறு கண் இமைக்கும் நேரத்தில் ஒரு விஷயம் நடந்தது என்னைச் செயலிழக்கச் செய்து புலம்ப வைத்தது. நான்மட்டும் கொஞ்சம் தைரியமான பையனாக இருந்தால் என் தரப்பு நியாயத்தை முறையாக எடுத்து சொல்லியிருப்பேன். செந்தில் என்மீது அந்தத் தாளை விட்டெறிந்த போதே அதை முருகேசன் சாரிடம் கொடுத்திருப்பேன். என் கோழைத்தனத்தாலும் பயத்தாலும் ஒரு பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்டேன். இதை எல்லாம் விட தனலட்சுமி எனக்காக ஏதாவது சொல்வாள் என்று நினைத்தபோது அவள் என் முகத்தைக்கூடப் பார்க்காமல் தலையைக் குனிந்தவாறு இருந்தது என்னைப் பெரிதாக நிலை குலையச்செய்தது. அப்பா, அம்மா என் எதிர்காலம் என்று என்னென்னவோ தாறு மாறான நினைவுகள் என்னை அலைக்கழித்தன. நான் ஹெட்மாஸ்டர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டதோ அங்கு என் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு என்னைப் பரீட்சை எழுதுவதைத் தடைசெய்து முத்திரை இட எத்தனித்ததையோ யாருக்கோ நடப்பது போல பிரமையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டதாக எண்ணிய அதிகாரி ஹெட் மாஸ்டரிடம் "சார் இந்த பையன் பிட் அடிக்கும் போது பிடிச்சிட்டோம். மொத்த வாய்ப்பாடு, தேற்றமெல்லாம் எழுதிவெச்சு காப்பி அடிச்சிட்டிருந்தான். இவன் வகுப்பு வாத்தியார் இதுல இருக்கிறது இவன் கையெழுத்து தான்னு வெரிஃபை கூட பண்ணிட்டாரு. இவன் இனிமே இந்த டெர்ம் பரீட்சை எழுதமுடியாது. இவனை டீபார் பண்றோம்" என்றார். ஹெட்மாஸ்டர் கதிரேசன் சார் "இல்லை சார் ஏதோ தப்பு நடந்திருக்கு. இவன் அப்படிப்பட்ட பையன் இல்லை. இந்தத் தாளைப்பார்த்து காப்பி அடிச்சான்னு சொல்றீங்க. அதுல இருக்கிற வாய்ப்பாடு, தேற்றம் எல்லாம் நீங்க இப்ப கேளுங்க. எல்லாத்துக்கும் பதில் பார்க்காம சொல்லுவான். இதுல இருக்கிறது இவன் கையெழுத்தா இருக்கலாம். ஆனால் அதை இவன் காப்பியடிக்க உபயோகப்படுத்தினான்னு முடிவு பண்ணவேணாம். தவறுதலா இது அவன்கிட்ட இருந்திருக்கலாம். இது ஒரு பையனோட வாழ்க்கைப் பிரச்சனை. நிதானமா முடிவெடுப்போம் சார்" என்றார். அதற்கு தலையை பலமாக மறுத்து ஆட்டிய அதிகாரி "சார் நீங்க உங்க ஸ்கூல் பேர் கெட்டுப்போயிடும்னு பூசி மெழுகப் பாக்கறீங்க. இந்த பிட் பேப்பரை இவனோட பாக்கெட்டிலிருந்தோ, டெஸ்கிலிருந்தோ எடுக்கலை. இவனோட பரீட்சைப் பேப்பருக்கு அடியிலிருந்து எடுத்தோம். எங்களை எங்க ப்ரொசீஜரைப் பண்ணவிடுங்க. வேணுமானா நீங்க அப்பீல் பண்ணிக்கோங்க" என்றவாரே அரசாங்க முத்திரையைக் கையில் எடுத்தார். கதிரேசன் சார் "கொஞ்சம் இருங்க சார், நான் இவனை விசாரிக்கிறேன்." என்றவாரே "சீனு என்னப்பா நடந்தது. உண்மையைச் சொல்லு. உன் எதிர்காலத்தை வீணடிச்சிக்காதே" என்று என்னைப் பார்த்து சொன்னார்.

என் மூளையில் ஏதோ ஒரு புயல் அடித்து, மின்னல் வெட்டியதுபோல திடீரென்று ஏதோ கலவரமான எண்ணங்கள். இதுவரை நான் உணர்ந்தறிந்திராத ஒரு வேதனை. என் உடல் மார்கெட்டில் தூக்கியெறியப்படும் காய்கறி மூட்டை போல என் வசமின்றி தூக்கிப்போட்டது. அடுத்த நொடி என் கால்களில் சக்தியின்றி கீழே விழுந்தேன். இப்போது என் காதில் "உய்ய்" என்று ஒரு ஓசை, வாயில் கசப்பாக ஒரு கொழகொழ, உடல் தன்னிலை இன்றி வெட்டி வெட்டி இழுத்தது. கண்கள் மங்கத் தொடங்கியது. இறுதியாக நான் நினைவிழக்கும் முன் அந்த அதிகாரி "சும்மா நடிக்கிறான் சார். எவ்வளவு பேரை இப்படி பார்த்திருக்கோம்" என்று சொன்னது கலங்கலாக நினைவில் நின்றது. பிறகு நடந்த எதுவும் என் நினைவில் இல்லை.

நான் கண் விழித்தபோது என் வீட்டுப் படுக்கை அறையில் இருந்தேன். ஜன்னலின் வழியே நிலா தெரிந்தது. அரை நாளுக்கு மேல் மயங்கியிருக்கிறேன் என்று நினைத்தேன். பிறகு அன்று நடந்ததெல்லாம் ஏதோ ஒரு கனவோ என்று தோன்றியது. சிறிது சிறிதாக உணர்வு வரத்தொடங்கிய போது அது முகத்தில் அறையும் நிஜம் என்பது உறைத்தது. என்னை சுற்றி என் அம்மா, மாமா, அத்தை கவலை தோய்ந்த முகத்தோடு நின்று கொண்டிருந்தனர். இவர்களோடு டாக்டரும், தனலட்சுமியும், அவள் அம்மாவும் இன்னும் சிலரும் கூடக் கூடியிருந்தனர். என் உள்ளங்கைகளும், என் நாவும் பயங்கரமாக வலித்தன. கைகளில் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. டாக்டர் என் நாடி பிடித்து திருப்தி அடைந்து, பின் என் நாக்கை நீட்டச் சொன்னார்.

பிறகு என் அம்மாவைப் பார்த்து "இப்படி இவனுக்கு இதுக்கு முன்னே எப்பவாவது நடந்திருக்கா?" என்று கேட்டார். என் அம்மா "இவன் ஆரோக்கியமான பையன். இப்படி நடந்ததே இல்லை" என்றாள். டாக்டர் "ஆரோக்கியத்துக்கும் இதுக்கும் சம்மந்தமில்லமா. உங்க பையனுக்கு வந்தது வலிப்பு. இது மூளைல நடக்கிற சில செயல்களால வர்ரது. இதை ஒழுங்கா கவனிச்சா குணப்படுத்தலாம். நான் இப்ப அவனை அமைதிப்படுத்த சில மருந்து கொடுக்கிறேன். நீங்க ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிப்போய் காட்டுங்க" என்றார். என் அம்மா "அப்ப திரும்ப இவனுக்கு இப்படி வரும்னு சொல்றீங்களா" என்று கலவரமாகக் கேட்டாள். "அப்படி சொல்லலை. அவனுக்கு வந்தது எபிலெப்ஸிங்கிற வலிப்பு நோய். இது வராமலும் போகலாம். ஆனா நீங்க இது ஏன் வந்தது, இனி வந்தால் என்ன செய்யிறதுனு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டறது நல்லதுனு சொன்னேன். இப்படி இனி ஆச்சுனா பக்கத்துல கூர்மையான வஸ்துக்கள் இல்லாம பாத்துக்கங்க. இரும்புச் சாவி, கூர்மையான ஆயுதமெல்லாம் கையில குடுக்கறது மூட வழக்கம். இதனால பாருங்க அவன் கைகள்ல எவ்வளவு காயம். அதேபோல, நாக்கை கடிச்சிக்காம பாத்துக்கங்க, முடிஞ்சா ஒரு ரப்பர் துண்டை, பல்லுக்கு நடுவில வையுங்க. பயப்பட ஒண்ணுமில்லை. ஆனால் எச்சரிக்கையா இருங்க" என்றார்.

அய்யோ ஆண்டவனே நல்லா படிக்கிறான், ஆரோக்கியமா இருக்கான்னு பெருமையா இருந்தேன். இப்படி ஒரு சோதனையை என் தலையில இறக்கிட்டியே. என்னடா ஆச்சு அப்படி ஸ்கூல்லே. பரீட்சை எழுதி இன்னிக்கு நூத்துக்கு நூறு வாங்குவேனு சொல்லி சந்தோஷமா போனியே. உன்னை சுய நெனைவில்லாம கொண்டு வந்து வீட்ல போட்டதும் நான் எப்படி துடிச்சேனு தெரியுமா. என்ன ஆச்சு சொல்லுப்பா" என்றாள் என் அம்மா. நான் கஷ்டப்பட்டு பதில் சொல்லும் முன் தனலட்சுமி முந்திக்கொண்டு "நான் சொல்றேம்மா. எங்ககூட சேர்ந்து படிக்கிற மாதிரி நடிச்சு அந்த செந்தில்தான் சீனு எழுதின ஒரு காகிதத்தை அவன் பரீட்சை எழுதும்போது அவனுக்குத் தெரியாம வெச்சிருக்கணும். கண்காணிப்பு அதிகாரிங்க சீனுவைச் சோதனை போடவே மாட்டிகிட்டான். வாத்தியார் முருகேசனும் அதை நம்பிட்டாரு. அந்த அதிர்ச்சிலதான் அவனுக்கு இப்படி ஆகியிருக்கணும். ஆனா இதையெல்லாம் நிரூபிக்க முடியாது. எதுக்கும் ஆதாரம் கிடையாது." என்றவள் என்னைப்பார்த்து "சீனு என்னை மன்னிச்சுடு. நீ என்னைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் போது நான் ஒண்ணும் சொல்லாம தலை குனிஞ்சுட்டிருந்தது உனக்கு அதிர்ச்சியா இருந்திருக்கும். உன்னை அந்த அதிகாரி சோதனை போடும்போது, என் டெஸ்கையும் நான் பாத்தேன். அப்பதான், அதில் நான் செந்திலுக்கு எழுதிக் கொடுத்த பேப்பர் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாயிட்டேன். நான் எழுந்து பேசினா அந்த அதிகாரி என்னையும் சோதனை போட்டிருப்பார், நானும் மாட்டிகிட்டிருப்பேன். முருகேசன் வாத்தியாரே நம்பாதபோது அப்ப ஒண்ணும் பேசாம இருக்கிறது நல்லதுனு முடிவு பண்ணினேன். நம்மளை ரொம்ப தந்திரமா ரங்கனும் செந்திலும் ஏமாத்திட்டாங்க. ஆனா இதுல பாதிக்கப்பட்டது நீதான். நான் பரீட்சை முடிச்சிட்டு ஹெட் மாஸ்டர் கதிரேசன் சாரைப் பார்த்து நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன். ரங்கன் மேலே ஆதாரம் இல்லாம ஆக்‌ஷன் எடுக்கமுடியாதுனு சொல்லிட்டாரு. ஆனா தவறுதலா அந்த பேப்பர் உன்கிட்ட இருந்தது, நீ காப்பி அடிக்கலைனு அவரு உனக்காக அந்த அதிகாரிங்ககிட்ட எழுதிக் குடுத்துருக்கார். இதை நீ அப்பீலுக்கு எடுத்துப் போனா அடுத்த டெர்மில் பரீட்சை எழுத விடுவாங்க. கவலைப்படாதே" என்றாள்.

"சே... இவ்வளவு மோசமா பசங்க இருப்பாங்களா! அந்த வாத்தியாருக்கெல்லாம் இவனைப் பத்தி நல்லா தெரிஞ்சும் இவனை எப்படி குத்தம் சொல்ல விட்டாங்க" என்றவாறே பளிச்சென்று இரண்டு கைகளையும் அடித்துக் கும்பிட்டு "அண்ணா. போதும் இந்த ஊர் எங்களுக்கு. அவருக்கு தந்தி குடுத்துருக்கேன். நாளை மதியம் ரயிலுக்கு வர்ராரு. அவரோடவே நாங்க ரெண்டு பேரும் கெளம்பரோம். சென்னையில நல்ல டாக்டரெல்லாம் இருக்காங்க. என் பையனுக்கு ஒரு குறைவும் இல்லாம அங்க வெச்சு பாத்துக்கரோம்" என்று வெறுப்பை உழிழ்ந்தாள் அம்மா. "அவசரப்படாதே. போகணுமின்னா போ. ஆனா கோபத்துல எந்த முடிவும் எடுக்காதே. சீனு நல்லா இருந்தா அதுவே போதும். இப்ப அவனோட பரீட்சையோ, இந்த ஸ்கூலோ முக்கியமில்லை. அவன் குணமாகிறதுதான் முக்கியம். அவனை கவனி முதல்லே. சரி எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பாருங்க. சீனு அவன் அம்மாவோட தனியா கொஞ்சம் இருக்கட்டும்" என்றார் மாமா.

எல்லாரும் வெளியேறத் தொடங்கும்போது மறுபடி என் கண்கள் சொருகின. மீண்டும் செந்தில் என்மீது அந்தத் தாளை எறிவதும், அந்த அதிகாரி என்னை நோக்கி வரும் காட்சியும் நிழலாக ஓடின. மீண்டும் வாயில் கசப்பும், மண்டைக்குள் "உய்ய்..." என்ற ஒலியும் உணரவே கட்டிலின் இருபுறத்தையும் பலமாகப் பிடித்துக்கொண்டு மீண்டும் ஒரு புயலுக்குத் தயாரானேன். "அய்யோ சீனு என்னவோ மாதிரி பார்க்கிறான். எல்லாரும் வாங்க. ஆண்டவனே" என்ற அம்மாவின் அலறலும், வெளியேறிக் கொண்டிருந்தவர்கள் உள்ளே மீண்டும் வரும் களேபரக் குரலும் எனக்குள் மங்கத் தொடங்கின. மறுபடி உடல் குலுங்கி, முகம் கோணத் தொடங்க நான் நினைவிழந்தேன்.

(தொடரும்...)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline