Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
நேர்காணல்
நரசய்யா
டைரக்டர் கிருஷ்ணா
- வடிவேல் ஏழுமலை, சி.கே.வெங்கட்ராமன்|ஏப்ரல் 2011|
Share:
வடிவேல்: 'ஜில்லென்று ஒரு காதல்' படம், பாடல், வடிவேல் காமெடி, கதை என்று எல்லோரையும் கவர்ந்த படம். கதை, கரு எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்!

கிருஷ்ணா: ஒரு இன்ஸ்பிரேஷனால்தான் அந்தப் படத்தை எடுத்தேன். அது உண்மையிலேயே நடந்த கதை. அதுவும் கோரிப்பட்டி என்ற ஒரு சின்ன ஊரில், ஒரு சாதாரண தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவரின் குடும்பத்தில் நடந்தது. அதை ஒரு நண்பர் எனக்குச் சொன்னார். கேட்கும்போது ஆச்சரியமாக இருந்தது. பெண்கள் என்றாலே பொஸஸிவ், அதில்லாமல் எப்படி ஒரு பெண்ணால் இருக்க முடியும் என்று. ஒரு காலேஜ் பெண், ஒரு கல்யாணமான பெண் என்று ஏழெட்டு பேரிடம் இந்தக் கதையைச் சொன்னேன். கேட்ட எல்லாருமே அழுது விட்டார்கள். கதை மிகவும் அழகாக இருக்கிறது, அப்படி ஒரு பெண்ணாக நானும் இருக்க விரும்புகிறேன். ஆனால் முடியுமா என்று தெரியவில்லை என்று சொன்னார்கள். பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது.

"ஆடியன்ஸைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் புதுமையை ரசிக்க, வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்கள். மொழியே புரியாத பல ஆங்கிலப் படங்கள் நம்மூரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடத்தானே செய்கின்றன. முதலில் நாங்கள் கன்வின்ஸ் செய்ய வேண்டியது தயாரிப்பாளரையும் நடிகரையும் தான். ஆடியன்ஸை அல்ல."
ஜோதிகாவிடம் கதையைச் சொன்னேன். கதையை குந்தவை கேரக்டரில் நடிப்பது அவர்தான் என்று முடிவு செய்திருந்தேன். அப்போதுதான் 'காக்க காக்க' படத்தை முடித்திருந்தோம். நான் அதில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தேன். ஜோதிகா கதையைக் கேட்டதும் அழுதுவிட்டார். "நானே நடிக்கிறேன்" என்றும் சொல்லி விட்டார். பின்னர் ஹீரோ தேடும்போது, சூர்யாவிடம் இந்தக் கதையைச் சொல்லிப் பாருங்கள் என்று ஜோதிகா சொன்னார். அவருக்கும் கதை பிடித்திருந்தது. பட், அப்பாவாக நடிக்க வேண்டியிருக்கிறதே, அது ஓகேவா? என்று கேட்டார். வேறு வழியில்லை, செய்துதான் ஆக வேண்டும் என்று சொன்னேன். அதற்குப் பிறகு பேசவில்லை.

பிறகு மாதவனைச் சந்தித்துக் கதை சொன்னேன். அவரிடமும் இதே அனுபவம்தான். அப்பாவாக நான் எப்படி நடிப்பது என்று கேட்டார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்தீர்களே! இதில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்தால் என்ன என்று கேட்டேன். "அது மணிரத்னம் படம். அதனால் நடித்தேன்" என்றார். கதை பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். "பிடித்திருக்கிறது. குழந்தை கேரக்டரைத் தூக்கிடுங்க. நான் நடிக்கிறேன்" என்றார். "இல்லை. நிறைவான குடும்பம் என்றாலே அதில் குழந்தை இருந்தால்தான். குழந்தை கேரக்டரையே தூக்கி விட்டால் வெறும் கணவன், மனைவி வைத்து எப்படிக் கதை சொல்வது? பிரச்னையே குழந்தை வேண்டும் என்பதுதான். கதையை மாற்ற முடியாது" என்று சொல்லிவிட்டேன். இப்படி எந்த ஹீரோவுமே இந்தக் கதைக்கு நடிக்கத் தயாரில்லை. தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ், நாகார்ஜுனா எல்லோரிடமும் அதே பிரச்சனைதான்.

அப்போதுதான் தாணு என்னைத் தொடர்பு கொண்டார். அவர் காக்க காக்க தயாரிப்பாளர். அவர், "ஏன்பா, புதிய படத்திற்கு முயற்சி செய்யறையாமே! யார் யாரையோ சந்தித்துக் கதை சொல்வாய். என் கிட்ட சொல்ல மாட்டியா?" என்றார். "சார், என்னிடம் ஹீரோ டேட்ஸ் எதுவும் இல்லை. நீங்க பெரிய ப்ரொட்யூஸர். ஹீரோ டேட்ஸ் இருந்தால்தான் படம் பண்ணுவீர்கள். அதனால்தான் உங்களிடம் சொல்லவில்லை என்றேன். "யார் சொன்னது அப்படின்னு. நீ நேர நாளைக் காலை நம் வீட்டுக்கு வா" என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

காலையில் போனேன். ஆறுமணி இருக்கும். அவர் அப்போதுதான் படுக்கையைவிட்டு எழுந்து, பெட்டிலேயே உட்கார்ந்து கொண்டு கதையைக் கேட்டார். அவர் பதில் பேசவில்லை. நேராக உள்ளே போனார். அட்வான்ஸ் எடுத்து வந்து கொடுத்தார். "நீதான் என் அடுத்த படத்தின் டைரக்டர். என்ன பண்ணனுமோ அதுக்கான வேலையெல்லாம் பண்ணு" என்று சொன்னார். "எல்லா ஹீரோவையும் அப்ரோச் செய்துட்டேன். யாருமே ஒப்புக் கொள்ளவில்லை" என்று பிரச்சனையை விவரித்தேன். "குழந்தை இருந்தால்தான் சரியா இருக்கும். மாற்றி விடாதே" என்றார்.

திடீரென்று ஒருநாள் போனில் "விஜய்க்குக் கதை சொன்னியா?" என்று கேட்டார் தாணு. நான் யோசிக்கவே இல்லை. அவர் இந்த மாதிரி படம் பண்ணுவாரான்னு எனக்கு சந்தேகம் என்றேன். நீ போய் விஜயைப் பார். பார்த்தேன். கதை கேட்டு முடித்ததும், " ரொம்ப நல்லா இருக்குங்க. எப்பங்க ஸ்டார்ட் பண்ணலாம்?" என்று கேட்டார். எனக்கு அவர் என்னைக் கிண்டல் செய்கிறாரா என்று சந்தேகம். "ஏங்க உண்மையிலேயே பிடித்திருக்கா?" என்று கேட்டேன். "ஏங்க, நானெல்லாம் நல்ல படத்துல நடிக்கக் கூடாதாங்க?" என்றார். இறுதியில் ஒப்புக்கொண்டார். ப்ராஜெக்ட் நடக்கும்கிற முடிவுக்கு வந்தபோது விஜயோட அப்பாவுக்குக் கதை சொல்ல வேண்டி வந்தது. அவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பின் விஜய் என்னிடம் பேசினார். "அப்பா ஃபீல் பண்ணுகிறார். அந்தக் குழந்தை விஷயம்தான்" என்று சொன்னார். அத்தோடு முடிந்து போனது.

நான் இசைக்காக ரகுமானைச் சந்தித்தேன். முன்பின் அறிமுகமே கிடையாது. அவரிடம் கதையைச் சொன்னேன். கேட்டதும் "ஓகே. எப்போதிலிருந்து கம்போசிங் ஸ்டார்ட் பண்ணலாம்" என்றுதான் கேட்டார். முதலில் ரெகார்ட் ஆனது "முன்பே வா என் அன்பே வா" பாடல். அப்போது ஹீரோ முடிவாகவில்லை. பின் திடீரென ஒரு நாள் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்று கேட்டார். "எனக்கும் தெரியாது சார்" என்று சொன்னேன்.

அப்புறம்தான் சூர்யா போன் செய்தார். இந்தக் கதையை மறுபடி சொல்லச் சொன்னார். சொன்னேன். ஐ லைக் தட். நாம ஸ்டார்ட் பண்ணலாம் என்று சொன்னார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

வடிவேல்: படம் வெளியான பின் "எப்படி இந்த மாதிரிக் கதையை யோசிக்க முடிந்தது" என்று யாராவது கேட்டார்களா?

கிருஷ்ணா: ஆம். எங்க வீட்டிலேயே எங்கள் அண்ணி கேட்டாங்க. அவர் வாஷிங்டன் டி.சி.யில் சயன்டிஸ்டா இருக்காங்க. அவரை இதுவரைக்கும் கன்வின்ஸ் பண்ண முடியவில்லை. ஆனால் பெண்களிடம் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். தியேட்டரில் படம் பார்த்தவர்களே பத்துப் பதினைந்து தடவை படத்தைப் பார்த்திருக்கிறார்கள். எதனால் என்று சொல்லமுடியாது. அப்படி எஃபக்டைப் படம் கிரியேட் பண்ணியிருக்கிறது.

வடிவேல்: நான் ஓரிரண்டு வருடங்களில் பார்த்த படங்களில் எந்தக் கதாநாயகனுக்கும் குழந்தை இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு ஃபார்முலா வைத்திருக்கிறார்கள். ஃபைட், நாலு பாட்டு. அதில் ஒன்று குத்துப் பாட்டு என்று. அது தவிர, சிலர் மட்டுமே யதார்த்தப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு பாணி இருக்கிறது. இப்போது முன்பைவிடக் கொஞ்சம் அதிகமாக யதார்த்தப் படங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஏன் இன்னும் அதிகம் வரவில்லை?

கிருஷ்ணா: இதை நடிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொண்டு விட்டால் எல்லாமே ஈஸி. ஆடியன்ஸைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் புதுமையை ரசிக்க, வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்கள். மொழியே புரியாத பல ஆங்கில படங்கள் நம்மூரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடத்தானே செய்கின்றன. முதலில் நாங்கள் கன்வின்ஸ் செய்ய வேண்டியது தயாரிப்பாளரையும் நடிகரையும் தான். ஆடியன்ஸை அல்ல.

வடிவேல்: அவர்கள் ஏன் கன்வின்ஸ் ஆக மாட்டேன் என்கிறார்கள்?

கிருஷ்ணா: ஒரு வருடத்தில் 100 படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதில் 90 படம் கமர்ஷியல் படமாக இருக்கும். 10 படங்கள் தான் யதார்த்தப் படங்களாக இருக்கும். இந்த 90 படத்தில் ஐந்து அல்லது ஆறு படங்கள் சக்சஸ் ஆகும். மற்றவை ப்ளாப் ஆகும். அந்த வெற்றிப் படத்தை வைத்துக் கொண்டு அதன் வெற்றி விகிதத்தை கால்குலேட் செய்வார்கள். எத்தனை படம் ஃப்ளாப் என்பதை விட்டு விடுவார்கள். 90க்கு ஐந்து ஆறு படம் ஹிட் என்றால், யதார்த்தப் படங்களில் 10க்கு இரண்டு அல்லது மூன்று ஹிட் ஆகி இருக்கும். இதில் எட்டுப் படங்கள்தான் ஃப்ளாப். இதன் ரேஷியோதான் அதிகம் இருக்கும். அதில் கிட்டத்தட்ட 85 படங்கள் ஃப்ளாப். அதை விட்டு விடுகிறார்கள். இதற்காக எந்த ஒரு அமைப்பையோ, குழுவையோ குற்றம் சொல்ல முடியாது. தயாரிப்பாளர் தனி ஆளாக எடுக்க வேண்டிய முடிவு இது.

எல்லா ப்ரொட்யூசருக்குமே தான் போட்ட பணம் திரும்ப வர வேண்டும், இதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. மற்றொன்று தமிழ்ப் படத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு மார்கெட்டிங் செலவு மிக அதிகம். நீங்கள் ஒரு மூன்று கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை முடித்திருந்தால் மார்கெடிங் செலவே 2 கோடிக்கு மேல் ஆகும். இதை எல்லாத் தயாரிப்பாளர்களாலும் செய்ய முடியுமா என்றால் முடியாது. சமீபத்தில் 'மைனா' என்ற லோ பட்ஜெட் படம், பெரிய அளவில் சக்சஸ் ஆனது. காரணம், மார்கெடிங். அது நல்ல படம் என்று 10 பேர் சொல்லியிருக்கலாம். மீதிப் பேரைச் சொல்ல வைப்பது மார்கெட்டிங்தான்.

வடிவேல்: சேனல்களைக் கையில் வைத்திருக்கும் சில தயாரிப்பாளர்கள் சாதாரண படத்தைக்கூட மார்கெட்டிங் உத்திகளால் ஓடவைத்து விடுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதே சமயம், அது போன்றவர்கள் சம்பந்தப்படாத பிற படங்களும் நன்றாக ஓடத்தான் செய்கிறது என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இதே நிலைமைதான் எதிர்காலத்திலும் நீடிக்குமா?

கிருஷ்ணா: எதிர்காலம் என்பதே மாறிக் கொண்டிருக்கும் ஒன்றுதான். இங்கே யாரும் நிரந்தரம் கிடையாது. ஒரு கலையையோ, கலைஞனையோ தற்காலிகமாக விலைக்கு வாங்கலாம். அதுக்கு மேல் யாராலும் எதையும் செய்ய முடியாது. மார்க்கெடிங்கில் என்ன பிரச்சனை என்றால், நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன், அதில் எல்லாமே புது முகங்கள் என்று வையுங்கள். அந்தக் காலத்தில், படம் ஓடுகிறதோ, ஓடவில்லையோ இரண்டு வாரமாவது தியேட்டரில் அந்தப் படத்தை ஹோல்ட் செய்வார்கள். புதுமுகங்கள் நடித்த படம் என்பதால் பார்ப்பவர்களை ரீச் ஆகக் கொஞ்ச நாள் பிடிக்கும் என்பதால் அப்படிச் செய்வார்கள். இன்றைக்கு என்ன நிலைமை என்றால் முதல் நாளே தியேட்டரில் கூட்டம் வர வேண்டும் 50, 60 சதவிகிதம் ஃபுல் ஆகிவிட வேண்டும். இல்லாவிட்டால் மூன்றாம் நாளே தூக்கி விடுகிறார்கள். சனி, ஞாயிறில் ரிலீஸ் என்றால், கூட்டம் வரவில்லை என்றால் திங்கட்கிழமை அந்தப் படம் இருக்காது. அதுதான் இன்றைய நிலைமை.

மக்களும் ஒருவிதத்தில் இதற்குக் காரணம். ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோ படம் பார்க்கக் கூட்டமாக வருவார்கள். புதுமுகங்கள் என்றால் பார்த்தவர்கள் யாராவது நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் வருவார்கள். புதுமுகங்கள் நடித்த படம்தானே, சீக்கிரமே டிவியில் வந்துவிடும் என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது திருட்டு டிவிடி. Pirated DVD is killing the Cinema. 30, 40 ரூபாய் கொடுத்து வாங்கிப் பார்ப்பவர் தியேட்டருக்கு வருவதில்லை. அவர்கள் வந்தாலே போதும், படங்கள் கொஞ்சமாவது ஓட ஆரம்பித்துவிடும். இதுதான் நடப்பு உண்மை. சினிமா இல்லாமல் உலகத்தில் எந்த என்டர்டெயின்மென்ட் மீடியாவுமே பிழைக்க முடியாது. ஏன், லேட்டஸ்ட் ஐபேட்-2 கூடத்தான். எந்த மொழியில் இருந்தாலும், சினிமா இல்லாமல் சேனல்கள் இல்லை. நல்ல நகைச்சுவை, நல்ல பாடல்கள் என்று எதுவுமே கிடைக்காது. அப்படிப்பட்ட இண்டஸ்டிரியைத் திருட்டு டிவிடி மூலம் கொன்றுவிடாதீர்கள்.
சி.கே: இப்போதெல்லாம் social phenomenon என்று சொல்லி ஒரு பெரிய மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. smart phone, face book, twitter என்று பல விதங்களில். முன்பு இரண்டு வாரங்கள் புதுப்படங்களை அவர்கள் செலவில் ஓட்டிப் பார்த்தது போலவே, இப்பவும் இவற்றில் செய்யலாம். இந்தப் புதிய வழிகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

"தமிழ்ப் படத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு மார்கெட்டிங் செலவு மிக அதிகம். நீங்கள் ஒரு மூன்று கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை முடித்திருந்தால் மார்கெடிங் செலவே 2 கோடிக்கு மேல் ஆகும். இதை எல்லாத் தயாரிப்பாளர்களாலும் செய்ய முடியுமா என்றால் முடியாது."
கிருஷ்ணா: நிச்சயமாக. எனக்கு டெக்னாலஜி மீது எப்பவுமே நம்பிக்கை இருக்கிறது. தொழில்நுட்பம் வளரும்போது மற்ற எல்லா இண்டஸ்ட்ரியும் தாமாக வளர்ந்துதான் ஆக வேண்டும். குறிப்பாக சினிமா இண்டஸ்ட்ரி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சி.கே: நான் கேட்பது என்னவென்றால் இந்த மார்கெடிங் செலவு குறைந்து, மீண்டும் சினிமாத் தொழில் வேறு பாதையில் வளர்ச்சி நிலை நோக்கிப் போக வாய்ப்பு இருக்கிறதா?

கிருஷ்ணா: இப்ப நான் சொல்வது இன்றைக்கு இருக்கும் நிலைமைதான். எதிர்காலத்திலும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. Future can change. கண்டிப்பாக மாறும். தியேட்டரில் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்யும் நிலை மாறி, மொபைலில் ரிலீஸ் செய்யும் நிலைமை கூட வரலாம்.

சி.கே: சரி, அந்த மார்கெட்டிங் பேரியர் கம்மி ஆனது என்றால் சினிமா இண்டஸ்ட்ரி எப்படி இருக்கும்?

கிருஷ்ணா: ஒரு தமிழ்ப் படத்தைத் தமிழர்கள்தான் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி, எல்லோரும் பார்ப்பதாக இருக்கும். அதே சமயம் அப்படி ஒரு இன்டர்நேஷனல் லெவலில் நாம் கொடுப்பதாக இருந்தால், அந்த காம்பெடிஷனை எதிர்கொள்ள அந்த அளவிற்கு கதைக்கரு உள்ளதாக நம் படங்கள் இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். அதற்கு முதலில், ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பி அடிப்பதை நிறுத்த வேண்டும். நாம் எடுக்கப் போவது எல்லோருக்குமான சினிமா என்பதால் it should be unique. நிறைய புது கான்செப்ட்களை யோசித்துக் கொண்டு வர வேண்டும். டிஜிடல் சினிமா வந்துவிட்டது. எதிர்காலத்தில் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். என்னுடைய அனுமானம் இன்னும் இரண்டு வருடங்களில் டிஜிடல் சினிமாதான் இண்டஸ்ட்ரியின் தூணாக இருக்கும்.

வடிவேல்: மக்கள் மிகவும் விரும்புகின்ற-அதாவது தாங்கள் கேட்க நினைப்பதை, சமூகநீதியைத் தங்கள் சார்பாக ஒரு கதாபாத்திரம் கேட்பதாக வரும் 'அந்நியன்' போன்ற படங்கள் ஏன் அதிகம் வருவதில்லை?

கிருஷ்ணா: 'அந்நியன்' படம் எனக்கும் பிடித்த படம்தான். அதன் டைரக்டர் ஷங்கர். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. சோஷியல் கான்செப்ட் அவர் பெரும்பாலான படங்களில் இருக்கும். மக்கள் கேட்க வேண்டிய கேள்விகளை ஹீரோவைக் கேட்க வைப்பார். அவருடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் எல்லோருமே அது மாதிரி எடுத்தால் அப்புறம் ஷங்கரின் படத்திற்கு என்ன தனித்துவம் இருக்கும்? நான் அதுமாதிரி ஒரு படம் எடுத்தால், ஷங்கர் மாதிரி படம் எடுத்திருக்கிறான் என்றுதானே சொல்வார்கள்?

வடிவேல்: புரிகிறது. இப்போது சினிமாத் துறையில் இளம் இயக்குனர்கள், திறமைசாலிகள் நிறையபேர் இருக்கிறார்கள். வாய்ப்புகளும் நிறையவே இருக்கிறது. உங்களுடைய பார்வை என்ன?

கிருஷ்ணா: ஆமாம். என்னுடைய தலைமுறையில் சொல்ல வேண்டும் என்றால் சசிகுமார், மிஷ்கின் இருக்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்கள் தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த விஷயங்கள் எல்லாமே தொடர்ந்து நடக்க வேண்டுமென்றால், பொருளாதார வெற்றியும் வேண்டும். அப்போதுதான் அந்த வெற்றி தொடரும்.

வடிவேல்: இல்லை. இருபது வருடத்திற்கு முன்னால் பார்த்தோமானால் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகச் சில இயக்குனர்கள் மட்டும் தான் இருந்தார்கள். இப்போது நிறைய இயக்குனர்கள் வெற்றிகரமாக இருக்கிறார்கள். நன்றாகவும் செய்கிறார்கள். வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. எப்படி இவ்வளவு பேர் வர முடிந்தது? சினிமாவில் நுழைவதற்கான சிரமங்கள் குறைந்துள்ளதா?

கிருஷ்ணா: அப்படி ஒன்றுமில்லை. நீங்கள் சொன்ன காலக்கட்டத்திலும் திருலோகசந்தர், பீம்சிங் என்று பலர் லைம்லைட்டில் இருந்தார்கள். தவிரவும் பல இயக்குனர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அதே மாதிரிதான் இப்பவும். ஆறேழு டைரக்டர்ஸ் லைம்லைட்டில் தெரிவார்கள். கொஞ்சம் சக்கரம் சுழலும். வேறு சிலர் வருவார்கள். இது நடந்து கொண்டே இருக்கும். திறமையான டைரக்டர்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள். Flim making is not an easy work. சில சமயம் அது ரொம்பக் கொடுமையான வேலையாகக் கூட இருக்கும். சுகங்களை விட சுமைகளும், சந்தோஷங்களை விட சங்கடங்களும் நிறைந்த இண்டஸ்ட்ரிதான் சினிமா. அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

வடிவேல்: நீங்கள் எந்தெந்த மாதிரி சவால்களை எதிர்கொண்டீர்கள்?

கிருஷ்ணா: என்னுடைய முதல் படம் என்று பார்த்தால் அதில் எல்லாமே தானாக அமைந்தது. இசை மட்டும்தான் ரகுமான் என்று திட்டமிட்டிருந்தேன். மற்றது எல்லாமே தெய்வாதீனமாக தானாக அமைந்ததுதான். என்னுடைய இரண்டாவது படம் 'ஏன் இப்படி மயக்கினாய்?'. இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. என் வாழ்க்கையின் மிக மோசமான காலகட்டம் என்று இந்தப் படத்தயாரிப்பு நாட்களைச் சொல்லலாம். ஆறு அல்லது ஏழு மாதத்திற்குள் முடிக்க வேண்டித் திட்டமிட்டுத்தான் அதை ஆரம்பித்தோம். ஆனால் மூன்று வருடம் ஆகிவிட்டது. நான் படம் தயாரிக்கும்போது அந்த கார்ப்பரேட் கம்பெனி நன்றாகவே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் பொருளாதார நெருக்கடி என்று பிரச்னைகள் வர, நானும் அதில் மாட்டிக் கொண்டு விட்டேன். என்னால் தூக்கி எறிந்து விட்டு வெளியே வர முடியவில்லை.

நான் இப்போது இங்கே படித்துக் கொண்டிருக்கிறேன். இது மிகவும் சேலஞ்சிங்கான காலக்கட்டம். ஏனென்றால் வந்த இரண்டு மூன்று ஆஃபர்களையும் மிஸ் விட்டு விட்டேன். காரணம், இந்தப் படத்தின் மீதுள்ள காதல். ஹீரோ, இரண்டு ஹீரோயின், மியூசிக் டைரக்டர், கேமரா மேன் என்று நிறையப் பேரை அறிமுகம் செய்திருக்கிறேன். அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு, நான் சுயநலமாக இந்த ப்ராஜெக்டிலிருந்து விடுபட்டுப் போக விரும்பவில்லை.

சி.கே:
எந்த மாதிரியான சினிமாக்களை நீங்கள் தர விரும்புகிறீர்கள்?


கிருஷ்ணா: யதார்த்த சினிமாக்கள் எனக்குப் பிடிக்கும். அதுபோல நல்ல ஃபேண்டஸி படங்களும். சாத்தியமே இல்லை லைஃபில் என்பார்கள் அல்லவா? அது மாதிரியான படங்கள் பண்ணப் பிடிக்கும். Maniratnam is my all time favourite director. நான் அவர் இந்தப் படத்தை எப்படிச் செய்திருப்பார் என்று யோசித்துப் பார்ப்பேன். அந்த மாதிரி சின்ன கம்பேரிஸன் எனக்குள்ளேயே நான் பண்ணிப் பார்த்துக் கொள்வேன். சில பேர் சொன்னார்கள், 'ஜில்லென்று காதல்' படத்தில் மணிரத்னம் சாரின் பாதிப்பு இருந்தது என்று. அதை என்னால் தவிர்க்க முடியாது.

வடிவேல்: உங்கள் அடுத்த படத்தைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்!

கிருஷ்ணா: அடுத்த படத்தின் பெயர் "ஏன் இப்படி மயக்கினாய்?". பதின்பருவ (அடொலசண்ட்) காதல் பற்றிய சம்பவத்தை வைத்து எழுதியிருக்கிறேன். ரொமாண்டிக் த்ரில்லர் என்று சொல்லலாம். நிச்சயம் சுவையாக இருக்கும்.

சி.கே: இரண்டும் வேறுவேறு மாதிரியான கதைக்களம் கொண்டவை அல்லவா?

கிருஷ்ணா: ஆமாம். முன்னதில் அடலசண்ட் லவ்வில் விழுந்த பெண்ணை அது எந்த அளவுக்குக் கொண்டு செல்கிறது என்று சொல்லியிருக்கிறோம். அது என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான். சில சமயங்களில் காதலின் வேகத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. அதுதான் ஏன் இப்படி மயக்கினாய். Highway thief நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்ப்பட்டது. அது ஒரு நிஜமான கேரக்டர். அந்தக் கேரக்டரை நான் சந்தித்தேன். அதன் பிறகுதான் அந்தக் கதையை எழுதினேன். அந்தப் படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லை. அதுவும் ரியலிஸ்டிக் ஆக இருக்கும்.

வடிவேல்: அமெரிக்கத் தமிழர்களோடு உங்கள் அனுபவம் என்ன?

கிருஷ்ணா: வட இந்தியர்கள் ஏதாவது விழாவிலோ, கூட்டத்திலோ சந்திக்கும் போது தாய்மொழியில்தான் பேசிக் கொள்கிறார்கள். ஒரு ஆங்கில வார்த்தையைக்கூட நான் கேட்க முடியவில்லை. ஆனால் தமிழர்கள் சந்தித்துப் பேசும்போது தமிழ் குறைவான அளவில்தான் பயன்படுகிறது. ஆங்கிலத்தைத்தான் அதிகம் கலந்து பேசுகின்றனர். இது ஏன் என்பதுதான் புரியவில்லை.

வடிவேல்: உங்கள் பொழுதுபோக்குகள்?

கிருஷ்ணா: நிறைய சினிமா பார்ப்பேன். எல்லா மொழிப் படங்களும் பார்ப்பேன். புத்தகம் படிப்பேன். தத்துவப் புத்தகங்கள் பிடிக்கும். நிறைய சஞ்சிகைகள் பார்ப்பேன். நாவல் படிப்பதில்லை.

சந்திப்பு: வடிவேல் ஏழுமலை, சி.கே.வெங்கட்ராமன்
மேலும் படங்களுக்கு
More

நரசய்யா
Share: 




© Copyright 2020 Tamilonline