Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
பொள்ளாச்சி நசன்
- சிசுபாலன்|டிசம்பர் 2010||(1 Comment)
Share:
1934ல் வெளியான, ஆறுமுகநாவலரால் பதிப்பிக்கபெற்ற திரிகடுகம் உரைநூல் இன்று கிடைக்குமா? 1948ல் வெளியான 'டமாரம்' இதழ் அட்டை எப்படி இருக்கும்? 1950ல் வெளிவந்த 'சித்திரக் குள்ளன்' சிறுவர் இதழ் பார்க்கக் கிடைக்குமா? 1966ல் நடந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஏ.கே. செட்டியார், தி.ஜ.ர. குறித்து என்ன பேசினார்? இவற்றைத் தெரிந்து கொள்ள நூலகங்களுக்கோ, ஆவணக் காப்பகங்களுக்கோ, பத்திரிகை அலுவலகங்களுக்கோ செல்லத் தேவையில்லை. இணையமும், கணினியும் இருந்தால் போதும். பொள்ளாச்சி நசன் உதவுவார்.

தனி ஒருவராக நின்று, பழைய தமிழ்ப் பொக்கிஷங்களை அழியாமல் பாதுகாத்து, மின்னூலாக்கி, வலையேற்றித் தமிழின் வளர்ச்சிக்கு உதவி வரும் நசன் குறிப்பிடத் தகுந்தவர். நசனின் இயற்பெயர் நடேசன். சுயமரியாதைக்காரர். பெயரில்கூட 'டே' இருக்கக் கூடாது என்பதற்காக நசன் ஆனார். செப்டம்பர் 15, 1952ல் சிதம்பரத்தில் பிறந்த நசன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். படித்தபின் வேலை தேடி அலைந்தபோது, சுண்ணாம்பு அடிப்பது முதல் அனைத்து வேலைகளையும் செய்தார். அது எளிய கடைநிலை மக்களின் அவல வாழ்வை, அவர்களது மன உணர்வை இவருக்கு உணர்த்தியது. அதுமுதல் எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும், அடித்தட்டு மக்கள் உயர உழைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டார். பட்டப் படிப்பு முடித்திருந்ததால் ஆசிரியர் பணி கிடைத்தது. விலங்கியல் துறை ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். கொண்ட தமிழார்வத்தால் தமிழிலும் முதுகலைப் படிப்பையும் முடித்தார்.

ஓய்வு நேரத்தில் பல்வேறு இலக்கியப் புத்தகங்களைப் படித்ததால் தானே ஒரு பத்திரிகையை நடத்தும் எண்ணம் வந்தது. தானே வடிவமைத்த உருட்டச்சு இயந்திரத்தில் அச்சிட்டு 'விடுதலைப் பறவை' இதழை நடத்தினார். கதை, கவிதை, துணுக்கு, செய்திக் குறிப்புகள் கொண்ட பல்சுவை இதழான அதை, தனக்குக் கிடைத்த முகவரிகளுக்கு இலவசமாகவே அனுப்பி வந்தார். மாற்று இதழ்களாக இவருக்கும் பல இலக்கிய இதழ்கள் வர ஆரம்பித்தன. அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார். அதுவே அவரது இன்றைய சாதனையின் முதல்படி. 'விடுதலைப் பறவை' இதழைத் தொடர்ந்து 'சிற்றிதழ் செய்தி' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். அது தமிழில் வெளிவரும் பல சிற்றிதழ்கள், அவற்றின் சிறப்புகள் பற்றிய செய்திகளைத் தாங்கி வந்தது. பின்னர் சொந்தமாக ஓர் அச்சகத்தை நிறுவிய நசன், அதில் அச்சுக்கோர்ப்பவர் முதல் 'பைண்ட்' செய்வது வரையிலான அனைத்துப் பணிகளையும் தானே செய்தார். இதழ் சில ஆண்டுகள் வெளிவந்தது. ஆனால் இல்லப் பொறுப்பு, பணிச்சுமை இவற்றோடு தொடர்ந்து இதழை நடத்த நசனால் இயலவில்லை. தொடர் பணிகளால் கண்பார்வைக் குறைவு ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலையும் ஏற்பட்டது. ஆனாலும் இதழ்கள், நூல்கள் சேகரிக்கும் பணியில் அயராது ஈடுபட்டார்.

இந்நிலையில் தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களோடு பழககும் வாய்ப்பு நசனுக்குக் கிடைத்தது. தானும் ஒரு தாய்த்தமிழ்ப் பள்ளியை சூளேசுவரன்பட்டியில் நிறுவி நடத்தத் தொடங்கினார். மாணவர்கள் எளிய முறையில் கற்க வேண்டும் என விரும்பிய அவர், தாமே புதுமையான முறையில் அதற்கான பாடங்களை வடிவமத்தார். தமிழே அறியாதவரும் கூட மூன்றே மாதங்களில் தமிழைப் படிக்கக்கூடிய அளவுக்கு அந்தப் பாடங்கள் எளிமையாகவும், நுணுக்கமாகவும் இருந்ததால், அவரது முன்மாதிரியைப் பல பள்ளிகள் பின்பற்றத் தொடங்கின. இதுபற்றி அறிந்த மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நசனைப் பாராட்டிக் கடிதம் எழுதி வாழ்த்தினார்.
தாம் சேகரித்த இதழ்களோடு நண்பர்களின் சேகரிப்பில் இருந்த இதழ்களையும் கேட்டுப் பெற்றுப் பாதுகாக்கத் தொடங்கிய நசனுக்கு, சிற்றிதழ்களோடு மட்டுமல்லாமல் அரிய நூல்களைச் சேகரிக்கும் ஆர்வமும் வந்தது. பல நண்பர்கள் உதவினார்கள். ஈழத்தில் வெளியான நூல்கள், இதழ்கள், தமிழகத்தில் வெளியான பழைய இதழ்கள் யாவும் அவரது சேகரிப்பில் சேர்ந்தன. அவ்வாறு சேகரித்தவற்றைக் கொண்டு சிற்றிதழ்க் கண்காட்சி நடத்தினார். அதன்மூலம் அப்பகுதியில் உள்ளவர்களிடம் இருந்த இதழ்களையெல்லாம் திரட்டலானார். அவற்றை வெறுமனே சேகரித்து வைத்திருப்பதை விட அது எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்பினார். அக்காலகட்டத்தில் கணினி மற்றும் இணையம் அறிமுகமானது. மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, நூலகம்.நெட் போன்றவை நூல்களைத் தட்டச்சு செய்தும், ஸ்கேன் செய்தும் கோப்பாக மாற்றிச் சேகரிப்பது பற்றி அறிந்தார். தானும் அவ்வாறே செய்ய முடிவு செய்த நசன், அது குறித்த தொழில்நுட்ப அறிவுக்காக கணினிக் கல்வி பெற்றார். நூலகம்.நெட் குழுவினரிடம் தொழில்நுட்ப ஆலோசனை பெற்றார். 2003 ஆகஸ்ட் 1 அன்று தமிழம்.நெட் (www.thamizham.net) என்ற இணையதளத்தைத் தொடங்கினார். அதில் தனது சேகரிப்புகள் பலவற்றையும் ஸ்கேன் செய்து மின்னூலாக, மின்னிதழ்களாக வலையேற்றத் தொடங்கினார். காலப்போக்கில் கூடுதலாகப் பல சேவைகளைத் தனது தளத்தில் இலவசமாகத் தர ஆரம்பித்தார். தமிழ்ப் பேழை பகுதியில் தமிழ் வளர்க்கப் பாடுபட்டவர்களின் படங்கள், மழலையர்களுக்கான தமிழ்ப் பெயர்கள், நிகண்டு, புறநானூறு போன்ற படைப்புககள், தமிழிசைப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சிற்றிதழ் பற்றிய விவரங்களை 'சிற்றிதழ்' பகுதியில் காணலாம். மேலும் மழலையர்கள் தமிழை எளிமையாகவும், நுட்பமாகவும் பயில வழிவகுக்கும் கல்வி முறையையும் தமது இணையதளத்தில் மூலம் இலவசமாக வழங்கி வருகிறார். தொடர்ந்து 'நாள் ஒரு நூல்' என்னும் மடல் குழுமத்தை ஆரம்பித்த நசன், அதன் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய நூல்களை/இதழ்களை வலையேற்றி இலவசமாக அனுப்பி வைத்து வருகிறார். அரிய பல நூல்கள் இவரது அயராத உழைப்பினால் இன்று பலருக்கும் இலவச மின்னூல்களாகக் கிடைக்கின்றன.

தமது இணைய மின்னூல்கள் குறித்து நசன், "தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் வைக்கப்படுபவை அனைத்துமே இலவசமாக நம் மக்கள் வலையிறக்கிப் படிக்கவும், பயனபடுத்தவும்தான்" என்கிறார். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நசன், ஒவ்வொரு நாளும் பதினைந்து மணி நேரத்துக்கும் மேல் தனி ஒருவராக இருந்து, பக்கம் பக்கமாக நூல்களை ஒளிவருடி (ஸ்கேன்) மின்னூலாக்கி வலையில் ஏற்றிக் கொண்டிருக்கிறார். வலையேற்ற வேண்டிய நூல்கள் ஆயிரக்கணக்கில் இருந்தபோதிலும் பழைய தமிழ் நூல்களை அனுப்பி வைக்குமாறு எல்லோரையும் சளைக்காமல் வேண்டுகிறார்.

தமிழ்க்கனல் என்ற புனைபெயரில் பல்வேறு இலக்கிய ஆக்கங்களை அளித்து வரும் நசன், மிகவும் எளிமையானவர். தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள விரும்பாதவர். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியைத் தனி ஒருவராகவே செய்து வரும் இவர், சாதனையாளர் மட்டுமல்ல, தமிழ்ப்பணிக்காகப் பாராட்டிப் போற்றப்பட வேண்டியவரும் கூட.

சிசுபாலன்
Share: 




© Copyright 2020 Tamilonline