Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
டாக்டர் வைத்தியலிங்கம் கங்காதர தேவ்
- நாகராஜன், நாராயணன் நாச்சியப்பன்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlarge1960களிலேயே அமெரிக்காவுக்குச் சென்ற டாக்டர் வி.ஜி. தேவ் அமெரிக்காவின் ஆதி தமிழர்களில் ஒருவர். அதன் முதல் தமிழ்ச் சங்கத்தை நியூயார்க்கில் நண்பர் குமரேசனுடன் சேர்ந்து தொடங்கியவர். பின்னர் மெட்ரோப்ளெக்ஸ் டல்லஸ், டென்னஸி ஆகிய தமிழ்ச் சங்கங்கள் தொடங்கவும் தோள் கொடுத்தவர். FeTNA, TNF ஆகியவற்றில் முக்கியப் பதவிகள் வகித்தவர். World Tamil Organization என்ற புலம்பெயர் தமிழரின் அரசியல் அமைப்பின் நிறுவனர்-செயலர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர். அடிப்படையில் மரபியல் விஞ்ஞானியான டாக்டர் தேவ் தமிழ்வழிக் கல்வியே தமிழனின் சிந்தனை மேம்பாட்டுக்கு உகந்தது என்ற உறுதியான கருத்து உடையவர். அமெரிக்காவில் ஜெனடிக் அசோசியேட்ஸ் (www.geneticsassociates.com) என்ற நிறுவனத்தைச் சில நண்பர்களோடு சேர்ந்து தொடங்கி மரபணுசார் நோயறிதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். தென்றலுக்காக அவரைச் சந்தித்தபோது....

கே: தொடக்கத்திலிருந்தே தொடங்கலாமா?

ப: விருதுநகருக்கும் சிவகாசிக்கும் அருகில் உள்ள காளையார்குறிச்சி எனது கிராமம். அங்குள்ள துவக்கப்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். மணலில் அ, ஆ என்று எழுதிப் படித்த காலம் அது. விருதுநகரில் உயர்நிலைக் கல்வி பயின்றேன். மேல்நிலைக் கல்விக்காக அம்பாசமுத்திரம் சென்றேன். கல்லூரிப் படிப்பை தூத்துக்குடி வ.உசி கல்லூரியில் படித்தேன். அப்போது அங்கு பேராசிரியர் அ. சீனிவாசராகவன் பணியாற்றி வந்தார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே மிகுந்த புலமை மிக்கவர். அறிஞர். 'தீபம்' என்ற பத்திரிகை நடத்தினார். அவர் மூலம் தமிழின் மீதான ஆர்வம் அதிகரித்தது. பின்னர் சென்னை விலங்கியல் கல்லூரியில் படித்தேன்.

தந்தையார் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தாயார் படிக்கவில்லை. தந்தை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். பல பெரிய மனிதர்களுடன் பழகு வாய்ப்பினைப் பெற்றவர். காமராஜர் போன்றோரை நன்கு அறிந்தவர். இது போன்ற வெளியுலகத் தொடர்புகளால் அவர் ஆங்கிலம், ஹிந்தி இரண்டையுமே கற்றுக் கொண்டிருந்தார். அதனால் எங்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு இருந்தது. எங்கள் ஊரிலிருந்து முதலில் ஹைஸ்கூல் முடித்து, பட்டதாரி ஆகி, அமெரிக்காவும் வந்துவிட்டுப் போனவர் எனது அண்ணன்தான்.

கே: உங்களது வித்தியாசமான பெயருக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

ப: அப்பாவுக்கு பால கங்காதர திலகரை மிகவும் பிடிக்கும். பகத் சிங்குடன் தூக்கிலிடப்பட்ட சுக தேவையும் பிடிக்கும். எனவே அவர்களது ஞாபகமாக பால கங்காதர தேவ் என்று இந்தப் பெயரை வைத்தார். அது மிகவும் பெரிதாக இருக்கிறதே என்று எல்லோரும் கங்காதர தேவ் என்று அழைத்தார்கள். அது இப்போது வி.ஜி. தேவ் ஆகிவிட்டது.

கே: உங்களுடைய குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: நான், எனது மனைவி, மகன் இளங்கோ, மகள் கோமதி. இளங்கோ இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் வென்மார்டில். கோமதி வாஷிங்டனில் பள்ளி ஆசிரியை.

இன்னும் ஐந்தாண்டுகளில் சோதனைக் குழாயில் டி.என்.ஏ.வை நேரடியாக ஆய்வு செய்து குறைபாடுகளோ, மாறுபாடுகளோ இருப்பதை அறியுமளவுக்கு ஆராய்ச்சிகள் முன்னேறிவிடும்.
கே: அமெரிக்காவுக்கு வந்தது எப்படி?

ப: அமெரிக்கா வந்தது ஒரு அதிர்ஷ்டமான விபத்து. எனக்கு அமெரிக்கக் கனவு இருக்கவில்லை. அண்ணன் படிப்பை முடித்து விட்டு அமெரிக்கா வந்து போயிருந்தார். ஊருக்கு வந்த அவருக்கு என்னை எப்படியாவது அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு நானாக விரும்பி வரவில்லை. கடலில் தூக்கி எறிகிற மாதிரி அவர் எறிந்தார்.

கே: American college of medical genetics ஆரம்பித்த காலத்தில் அதன் முதல் நிறுவன உறுப்பினர் நீங்கள். அதுபற்றிச் சொல்லுங்களேன்!

ப: அமெரிக்க மரபியல் மருத்துவக் கல்லூரி என்பது தொழில்ரீதியான நிறுவனம். 1981ல் American Board of Medical Genetics என்பதைத் தொடங்கி, அவர்கள் தேர்வு வைத்தார்கள். அதில் முதலில் தேர்வானவர்கள் ஒன்றிணைந்து American college of medical genetics என்பதைத் தோற்றுவித்தார்கள். முதலில் தேர்வாகி அதில் உறுப்பினர் ஆனவர்களுக்கு Founding Fellow என்று விருது கொடுத்தார்கள்.

கே: மரபியல் துறை மீது ஆர்வம் வந்தது எப்படி?

ப: நான் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது வந்த ஆர்வம்தான். Animal Breeding என்பது மரபணு முறையில் நல்ல தலைமுறைகளை உருவாக்குவது. இதற்கு முன்னோடி என்று சொன்னால் என் அண்ணன். அவரும் இதே துறையில் படித்தவர்தான்.

கே: நீங்கள் கல்லூரியில் படித்த காலத்தில், 1955ல், மரபியல் பற்றிய விழிப்புணர்ச்சி இருந்ததா?

ப: அப்போது விவாசயம் மற்றும் கால்நடைத் துறையில் இருந்தது. ஆனால் மனிதவளத் துறையில் இல்லை. நான் அமெரிக்காவில் பிஎச்.டி படித்து விட்டுச் சில வருடம் இந்தியாவில் வேலை செய்த பின்னர்தான் அமெரிக்கா திரும்பினேன். ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது ஸ்டான்லியிலிருந்து வந்த பேராசிரியர் ஒருவர் எங்களைச் சந்தித்தார். குரோமசோம் பற்றிய ஆய்வுகளைக் காண வேண்டும் என்று தெரிவித்தார். நாங்கள் அதுவரை கோழி போன்ற உயிரினங்களுக்கு மரபியல் ஆய்வு செய்திருந்தோம். அவர் மரபியல் குறைபாடுள்ள சில குழந்தைகளின் இரத்த மாதிரியைச் சேகரித்துத் தருவதாகவும், அதை குரோமசோம் மரபியல் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். நாங்கள் காண்பித்தோம். முதன்முதலில் தமிழ்நாட்டில் chromosome study போன்றவை செய்யப்பட்டது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில்தான்.

கே: வெளிநாடுகளில் இத்துறையில் நிகழ்ந்த ஆய்வுத் தகவல்கள் அப்போது இந்தியாவிலிருந்த உங்களுக்குக் கிடைத்தனவா?

ப: மிகவும் தாமதமாகக் கிடைக்கும். அவற்றை பாடநூல்கள் மூலமாகப் படிப்போம். சில ஜர்னல்ஸ் தாமதமாக நூலகத்துக்கு வரும். அவற்றின் மூலம் அறிந்து கொள்வோம். ஆனால் அப்போது கல்லூரியில் அதிக ஆராய்ச்சிகள் செய்ய முடியவில்லை. பாடநூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் குறிப்புகள் என்ற பகுதி இருக்கும். அவை மிக முக்கியம். அந்தத் தகவல் எப்படி வந்தது, அதற்கான ஆதாரம் என்ன என்பதையெல்லாம் அவை காண்பிக்கும்.

கே: அமெரிக்காவில் சொந்தமாகத் தொழில் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?

ப: முதலில் நோயறிதல் (diagnostic) துறையில்தான் மரபியல் ஆய்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். எலிகளின் குரோமசோம்கள் என்றெல்லாம் ஆய்வு செய்து நிறையக் கற்றுக் கொண்டோம். மரபணுக்கள் எப்படி அதில் அமைந்துள்ளது என்று தெரிந்து கொண்டோம். ஆனால் வேலை வாய்ப்பைப் பொருத்தவரை எப்போதுமே மனிதரில் நோயறிதல் குறித்துப் படித்தால்தான் எதிர்காலம் என்பதால் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சில பயிற்சிகள் பெற்றேன். டல்லஸில் சௌத் வெஸ்டர்ன் மருத்துவக் கல்லூரியில் மரபணு நோயறிதல் ஆய்வக இயக்குனர் (Laboratory Director for Genetic Diagnosis) ஆகச் சேர்ந்தேன்.

நிறைய ரிஸ்க் எடுத்துத்தான் சொந்தத் தொழில் தொடங்கினேன். கல்வித்துறை நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது, புதியவற்றைச் செய்யப் பலதுறைகளுக்கும் சென்று, விளக்கி, அனுமதி வாங்கிச் செய்ய வேண்டியதாய் இருக்கும். ஆறுமாதமும் அதற்கு மேலும் கூட ஆகலாம். அனுமதி கிடைத்தாலும் நம் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அனைத்தும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இங்கிருப்பதை விட ஏன் நாம் தனியாகச் சென்று செயல்படக் கூடாது, இன்னும் சுதந்திரம் இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. நமக்கு வேண்டியதை நாம் சுதந்திரமாகச் செய்யும் போது, சேவை சிறப்பாகும். பத்து நாளில் செய்ய வேண்டியதை நான்கு நாட்களிலேயே செய்ய முடியும். இந்த எண்ணம்தான் எங்களுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவித்தது.

கே: மரபியல் துறையின் எதிர்காலம் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: இப்போது குரோமசோம்களைப் படமெடுத்து, அது குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகிறோம். அதற்குள் இருக்கும் ஜீன்களை ஆராயும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. நமது உடலிலுள்ள ஜீனோம்களைப் பிரித்து எந்த ஜீனோம்களில் குறைபாடு உள்ளது என்பதை அறியும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இன்னும் ஐந்தாண்டுகளில் சோதனைக் குழாயில் போட்டு டி.என்.ஏ.வை நேரடியாக ஆய்வு செய்து குறைபாடுகளோ, மாறுபாடுகளோ இருப்பதை அறியுமளவுக்கு முன்னேறிவிடும். பிரச்சனை என்னவென்றால், மாறுபாடுகள் நிறைய இருக்கும். அவை குறைபாடுகள் அல்ல. ஆனால் அவை மாறுபாடுகளா குறைபாடுகளா என்பதைக் கண்டுபிடிக்க நிறைய ஆய்வுகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறோம்.
Click Here Enlargeகே: குறைபாடுகளைக் கண்டறிவதோடு அவற்றைத் தீர்க்கும் ஆய்வுகளையும் செய்கிறீர்களா?

ப: இல்லை. ஆனால் மரபணு மருத்துவ முறையில் சில ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழுமையடையவில்லை. மறதி, நரம்பு சம்பந்தப்பட்ட சில நோய்கள், பார்கின்ஸன் டிஸார்டர் போன்றவற்றை இதன்மூலம் குணப்படுத்தலாமா என்பதுபற்றி ஆய்வு செய்கிறார்கள். அதுபோல இரத்த சோகை போன்ற இரத்தம் சம்பந்தப்பட்ட மரபியல் பிறழ்வால் வரும் நோய்களைத் தீர்ப்பதற்கு, நல்ல ஜீனை உடம்பில் செலுத்துவதும் ஒரு சிகிச்சை முறை. மேலும் புற்றுநோய் போன்றவற்றுக்குச் சிகிச்சை அளிக்கிறோம். ஆனாலும் அது வேறுவகையில் திரும்ப வரத்தான் செய்கிறது. கேன்சரைப் பொருத்தமட்டில் எனக்கு நம்பிக்கையில்லை. குணப்படுத்த முடியாது, சிகிச்சை மூலம் வாழ்நாளைக் கொஞ்சம் நீட்டிக்கலாம். அவ்வளவுதான்.

கே: நீங்கள் முதன்முதலில் இங்கு வந்தது தமிழர்களே அதிகம் இல்லாத காலகட்டத்தில். எப்படிச் சமாளித்தீர்கள்?

ப: நான் வந்தபோது தமிழ் மாணவர்களே கிடையாது. மிசௌரி யூனிவர்சிடியில் இரானிலிருந்து வந்திருந்த 40, 50 மாணவர்கள் இருந்தார்கள். 10, 15 இந்தியர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்களில் பலர் வடஇந்தியர்கள். சிலர் தெலுங்கர்கள். நான் வந்த அடுத்த ஆண்டு நண்பர் குமரேசன் வந்தார். 1965வரை இதே நிலைதான்.

கே: நீங்கள் அமெரிக்கக் கல்லூரியில் படித்த போது தகவல் தொடர்பு எப்படி இருந்தது?

ப: பெரிய பிரச்சனைதான். மிசௌரி பல்கலையில் ஜர்னலிசம் துறைக்கு ஹிந்து பத்திரிகையின் வாரமலர் ஏர் மெயிலில் அடுத்த வாரம் வரும். மெல்லிய பேப்பரில் அச்சிட்டிருப்பார்கள். அது ஒரு டைஜஸ்ட். அதைத்தான் படிப்போம். மற்றபடி தமிழகச் செய்திகள், ஊர்ச் செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இந்த ஊர் டி.வி.க்களில் இந்தியாவைப் பற்றிய செய்திகள் வந்தது கிடையாது. ஒருவேளை பேரழிவு, வெள்ளம் ஏதாவது நடந்தால் சில விநாடி செய்தி வரும். எங்கள் குக்கிராமத்தில் டெலிபோனே கிடையாது. ஆறாண்டுகள் கடிதத்தைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை. கடிதம் மட்டும் வாராவாரம் வரும், போகும்.

கே: நீங்கள் தமிழ்ச் சங்கங்கள் உருவாக நிறையப் பங்களித்துள்ளீர்கள். அதைப் பற்றி நினைவு கூருங்களேன்....

தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தில் மிக கவனமாக இருக்கும் இந்தியர்கள், சுற்றுப்புறச் சூழலில் அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். சுகாதாரத்தில் நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.
ப: 1969-70க்குப் பிறகுதான் தமிழ்ச் சங்கங்கள் அமைக்கும் வாய்ப்பு வந்தது. 1965வரை அமெரிக்கக் குடிவரவுக் கொள்கையில் கோட்டா முறை அமலில் இருந்தது. இந்தியாவுக்கு 200, சீனாவுக்கு 200 என்று. ஆனால் ஐரோப்பாவுக்கு 20, 30 ஆயிரம் இருக்கும். 1965ல் ஜான்சன் வந்தபிறகு மாற்றம் வந்தது. கல்வி, திறமை, தகுதி போன்றவை உள்ளவர்கள் வருவதற்கு முன்னுரிமை தரப்பட்டது. அப்போது நம் டாக்டர்கள், எஞ்சினியர்களுக்கு குடிவருகை விசா கிடைத்தது. அமெரிக்காவில் மருத்துவர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது, இந்தியாவிலிருந்து நிறைய டாக்டர்கள் வந்தனர். இங்கே படிக்க வந்தவர்களுக்கும் உடனடியாகக் குடிவரவு விசா கிடைத்தது. நிறையத் தமிழர்கள் வரவே தமிழ்ச் சங்கம் அமைப்பது பற்றி நினைத்தோம்.

1971ல் அமெரிக்காவில் முதன்முதலில் நியூயார்க் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு முதலாண்டு பாரதி சொசைட்டி என்று நியூயார்க்கிலேயே அமைத்திருந்தார்கள். பின்னர்தான் தமிழ்ச் சங்கம் அமைக்க நான், குமரேசன் போன்றவர்கள் ஆர்வமாக இருந்தோம். குமரேசன் தான் இதற்கு மூலகாரணம். அவர் தலைமையில் தமிழ்ச் சங்கத்தை அமைத்தோம். அந்தச் சமயத்தில் அறிஞர் அண்ணா அமரராகி, கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக வந்திருந்த சமயம். அவர் இங்கு கண் சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரைக் கொண்டு நியூயார்க் தமிழ்ச் சங்கத்தைத் திறந்து வைத்தோம். அந்த விழாவில், அப்போது அமெரிக்காவில் இருந்த நாட்டியப் பேரொளி பத்மினி கலந்து கொண்டார். நாளடைவில் தொடர்ந்து பல தமிழ்ச் சங்கங்கள் உருவாகின.
நான் 1978ல் டல்லஸ் போயிருந்தேன். அங்குள்ள நண்பர்கள் விருப்பத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்டதுதான் மெட்ரோப்ளக்ஸ் டல்லஸ் தமிழ்ச் சங்கம்.

அதன் பிறகு 1993ல் நேஷ்வில் வந்தபோது குணசேகரன், தெய்வநாயகம், நாகராஜன், கோம்ஸ்கணபதி போன்ற நண்பர்கள் ஒரு தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்க விரும்பினார்கள். அப்போது ஃபெட்னாவுக்கு சிலம்பொலி செல்லப்பன் வந்திருந்தார். நான் ஃபெட்னா செயலாளராக இருந்தேன். உடனே அவரை நேஷ்வில்லுக்கு வரவழைத்து டென்னஸி தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கிவைத்தோம்.

கே: உலகத் தமிழ் அமைப்பு என்பதில் உங்களின் பங்களிப்பு குறித்துச் சொல்லுங்களேன்!

ப: World Tamil Organization என்பது நாங்கள் சில நண்பர்கள் - தனிச்சேரன், நான், இளங்கோவன், பாபு - மற்றும் சிலர் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தது. Fetna கிட்டத்தட்ட ஓர் இலக்கிய அமைப்பு. TNF ஒரு அறக்கட்டளை. சேவை நோக்கம் கொண்டது. ஆனால் WTO என்பது அரசியல் ரீதியாகத் தமிழர்களின் உரிமைகள், அவர்கள் பாதுகாப்பு, தமிழர்களுக்கான தேவைகளை அறிந்து உலகளாவிப் பலநாடுகளிலும் வசிக்கும் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் ஒரு உறவை ஏற்படுத்தி அவர்களது அரசியல் ரீதியான தேவைகளுக்கு உதவும் பொருட்டு அமைக்கப்பட்ட ஒன்று. இது முற்றிலும் அரசியல் சார்ந்த அமைப்பு என்றே சொல்லலாம். மூன்று வெவ்வெறு துறைகளில் மூன்றுமே சிறந்த நற்பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.

கே: இலங்கைத் தமிழர்கள் அங்கே பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து வருகிறார்கள். அதுகுறித்த உங்கள் கருத்தென்ன...?

ப: நினைக்கும் போதே நெஞ்சு கலங்குகிறது. அதைப்பற்றிப் பேசவே என்னால் முடியவில்லை. உலகில் ஏழு, எட்டு கோடித் தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் அங்கிருக்கும் இரண்டு மில்லியன் தமிழர்களைக் காக்க நம்மால் முடியவில்லை. அவர்களுக்கு உரித்தான உரிமைகளைக் கூட அடைய முடியாதபடி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இது ஒரு பெரிய பின்னடைவு. இதற்குப் பலபேர் பல காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் இது தவிர்த்திருக்கக் கூடியதுதான். அதாவது உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்க முடியும்.

கே : தமிழ் இதழ்கள், தமிழ் நூல்கள் பற்றி... உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: தமிழில் கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் எல்லாம் பாரதிக்குப் பின்னால்தான். கவிஞர் கண்ணதாசன் கூட ஒருமுறை எழுதியிருப்பார், "நான் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறேன். ஆனாலும் பாரதி எழுதியவற்றிற்கு அவை ஈடாகாது. அவர் அளித்திருப்பது விட்டமின் மாத்திரை. நான் அளித்திருப்பது சோறு" என்று. அந்த வகையில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு மு.மேத்தா, இன்குலாப் ஆகியோரது கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.

எழுத்தாளர்களில் தமிழ்நாவல் உலகையே புரட்டிப் போட்ட ஜெயகாந்தனை மிகவும் பிடிக்கும். கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், சு. சமுத்திரம் ஆகியோரது நூல்கள் பிடிக்கும். சு. சமுத்திரத்தின் எழுத்துக்கள் மிக வீரியமுடையதாக இருக்கும். அவரது அகால மரணம் மிகவும் வருந்தத் தக்கது. சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி பிடிக்கும்.

கே: மற்றப் பொழுதுபோக்குகள் சின்னத்திரை, டி.வி நிகழ்ச்சிகள்...

ப: தமிழ் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எப்போதும் யாராவது அழுதுகொண்டே இருக்கிறார்கள். பொதிகை, மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான் பார்க்கும்படி இருக்கிறது.

கே: நீங்கள் தமிழ்ச்சங்கங்களை ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 38 வருடங்கள் ஆகின்றன. நீங்கள் ஆரம்பித்த அதே நோக்கத்தில்தான் இன்றைக்கும் சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவா?

ப: தமிழர்கள் ஒன்று கூடுவதற்கு ஒரு வாய்ப்பாகத்தான் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்தது பொழுதுபோக்கு மற்றும் இலக்கியம். பின்னர், இங்கே உள்ள படைப்பாளிகளின் திறமைகளை வெளிக்கொணர்வது. அப்போதும் திரைப்படம் போட்டால்தான் கூட்டம் வரும். முதன்முதலில் நியூயார்க் 16 எம்.எம். திரையில் நாங்கள் போட்ட திரைப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'. நடிகை பத்மினி தவறாமல் படம் பார்க்க வருவார். தமிழ்ச்சங்கங்கள் தொடங்கிய நோக்கம் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கே: தமிழ்ச் சங்கங்களைப் பொருத்தவரையில் உறுப்பினர்களும் பொதுமக்களும் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

ப: தமிழ் மூலம் கற்பதைச் சாத்தியமாக்க வேண்டும். அதாவது தாய்மொழி வழிக் கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். நாங்கள் படிக்கும் போதெல்லாம் பள்ளி இறுதிவகுப்பு வரை தமிழில்தான் படிப்போம். இப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கிலத்தில்தான் பயில்கிறார்கள். இதனால் பலருக்கும் தமிழும் சரியாகத் தெரிவதில்லை. ஆங்கிலமும் சரியாக வருவதில்லை. விஞ்ஞானமும் புரிவதில்லை. வீட்டில் பேசும் மொழியாகவும், சுற்றி இருப்பவர்கள் பேசும் மொழியாகவும் ஒன்று இருக்க, பாடமொழியாக வேறொன்று இருந்தால் அது புரியவும், பயிலவும் கடினமானதாகத்தான் இருக்கும். அதனால் அது மூளையில் ஏறவும் ஏறாது. சிந்திக்கும் தன்மையும் மிகக் குறைவாக இருக்கும். ரபீந்திரநாத் தாகூரிலிருந்து எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும் கருத்து இது. தாய்மொழி வழிக் கல்வி மிக அவசியமானது. மிக முக்கியமானதும் கூட. அதுதான் மூளையை வளர்க்கும்.

சீனா, ஜப்பானில் இருந்து நிறைய விஞ்ஞானிகள் வருவதற்குக் காரணம் அவர்கள் அடிப்படையில் தங்கள் தாய்மொழியில் கல்வி பயில்வதுதான். ஆங்கிலம் பயிற்சி மொழி இல்லாத சீனா, ஜப்பான், போலந்து, ரஷ்யாவிலிருந்து கூட இன்றைக்கு நிறைய அறிவியல் துறை சார்ந்த நூல்கள், கட்டுரைகள் வெளிவருகின்றன. ஆங்கிலம் அலுவலக மொழியாகவும், பேச்சு மற்றும் பயிற்சி மொழியாகவும் இருக்கும் இந்தியாவிலிருந்து இதுபோன்ற அறிவியல் துறை சார்ந்த நூல்கள், கட்டுரைகள் வருவது மிக மிகக் குறைவு. இதற்கெல்லாம் காரணம் நமது சிந்திக்கும் திறன் குறைபாடு என்றுதான் நான் நினைக்கிறேன். ஐ.டி துறையில் உள்ளவர்களெல்லாம் என்ன செய்யலாம் என்றால் கணினி வழியே எப்படித் தமிழைப் பயிற்சி மொழியாக மாற்றலாம் என்று யோசிக்கலாம்.

கே: 72 வயதிலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்கள், அதன் ரகசியம் என்ன?

ப: அது மரபியல் சார்ந்ததுதான். எனது தந்தை 86 வயது இருந்தார். அதிகம் மருத்துவரிடம் சென்றதில்லை. தாயார் 82 வயது இருந்தார். உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தவரை மரபியல் மிக முக்கியமானது. அடுத்து உணவுப் பழக்கம், வேலை, உடற்பயிற்சி என்று பல காரணங்களைச் சொல்லலாம். நான் சிறுவயதில் தினந்தோறும் என் தந்தையாருடன் யோகப்பயிற்சிகள் செய்வேன். பின்னர் தொடர்ந்து செய்யாவிட்டாலும் அதன் தாக்கம் இன்னமும் உடலில் இருக்குமோ என்று எண்ணுவதுண்டு. இப்போதும் வாரம் மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்கிறேன். வேலையிலும் நான் ஓரிடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்க மாட்டேன். பணியிடத்தில் யாருக்காவது சந்தேகம் என்றால் அவர்களை எனது அறைக்குக் கூப்பிட்டு விளக்குவதற்கு பதிலாக, நானே அவர்களைத் தேடிப் போவேன். அது ஒருவிதமான நடைப்பயிற்சிதான்.

கே: இன்றைய தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ப: ஒருமுறை ஃபெட்னா விழாவுக்கு ஜெயகாந்தன் வந்திருந்தார். ஒருவர், அவரிடம் இதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர் சொன்னார் "ஒன்றுமில்லை. அந்த வயதில் நான் யாருடைய அறிவுரையும் கேட்டதில்லை." என்றார். அது உண்மைதான். நம் ஊரில் இலவசமாகக் கிடைப்பது உதையும் உபதேசமும்தான். இருந்தாலும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க அஞ்சக்கூடாது என்பதுதான் எனது அறிவுரை.

கே: தலைவர்களுடனான உங்களது அனுபவங்கள் குறித்து...

ப: கருணாநிதி, எம்.ஜி.ஆர். எல்லோரையும் நேரடியாகச் சந்தித்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். நான் அம்பாசமுத்திரத்தில் படித்துக் கொண்டிருந்த போது 'நேதாஜி கழகம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினோம். அதில் பேசுவதற்கு அன்பழகன், கவி கா.மு.ஷெரீஃப், ம.பொ.சி போன்றோரையும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் அழைத்திருக்கிறோம். அமெரிக்கா வந்தபிறகு எந்தத் தலைவர் வந்தாலும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்திற்கு அழைப்போம். சந்திப்போம். எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் வந்துள்ளனர். மற்றபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் மகேந்திரனுடன் நல்ல நட்பு உண்டு. இந்த நட்புகளெல்லாம் அரசியல் சார்ந்தவையல்ல. தனிப்பட்ட நட்பு.

கே: இந்தியாவில் நீங்கள் எந்தெந்த விதமான மாற்றங்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீகள்?

ப: மாற்றங்கள் தாமாகவே வந்து கொண்டே இருக்கின்றன. மாநில சுயாட்சி அதில் முக்கியமானது. ஒரு கட்சி ஆட்சி முறை போய் இப்போது மாநிலக் கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நிலை வந்திருக்கிறது. கல்வித்துறையில், சுகாதாரத்தில் நிறைய மாற்றங்கள் வர வேண்டும். தனிப்பட்ட முறையில் சுகாதாரத்தில் மிக கவனமாக இருக்கும் இந்தியர்கள், சுற்றுப்புறச் சூழலில் அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். வீடு உள்ளே சுத்தமாக இருக்கும். ஆனால் வீட்டைச் சுற்றி வெளியே ஒரே குப்பையும் கூளமுமாக இருக்கும். இந்தியாவின் எல்லா குக்கிராமங்களிலும், வீடுகளிலும், பள்ளிகளிலும் சீரான கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். இது மிக மிக அவசியம்.

கே: நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முந்தைய தேவுக்கும், இன்றைய தேவுக்கும் இடையே என்ன வேறுபாடு?

ப: இது கொஞ்சம் தர்ம சங்கடமான கேள்விதான். இண்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு வசதிகள் பெருகியிருக்கின்றன. நிறையப் பொழுதுபோக்குகள் வந்துவிட்டன. ஆனால் முன்போல் அமைதியாகப் படித்து, அதை அமைதியாகச் சிந்தித்து மகிழ்ச்சியடையும் வாய்ப்பு இப்போது இல்லை. அதுதான் எனக்குத் தெரிகிறது. இளமைக்காலம் என்பது எல்லோருக்கும் மிக மகிழ்ச்சியானது. என்னைப் பொருத்தவரையில் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப நான் மகிழ்ச்சியாக, நிறைவாக வாழ்ந்திருப்பதாகவே கருதுகிறேன். பெரிய திரையில் டி.வி. பார்க்கிறேன். சினிமாக்கள் பார்க்கிறேன். தரமான சினிமாக்கள் என்று பார்த்தால் அப்போதும் 10% தான் இருந்தது. இப்போதும் அதே சதவீதம்தான் இருக்கிறது.

கே: உங்களுடைய வெற்றியில் உங்களது துணைவியாரின் பங்கு என்ன?

ப :என்னுடய வெற்றிக்கு அவர்களுடைய உந்துதலும் நிச்சயம் ஒரு காரணம்தான். பல ஊர்களிலும் வாழ்ந்திருக்கிறோம். கொலம்பியா, நியூயார்க், டல்லஸ், டெக்ஸஸ் அலபாமா நடுவில் இந்தியா என்று போய் வந்திருக்கிறோம். நான் எந்த ஊருக்குச் சென்றாலும் சலிக்காது கூடவே வந்து மனைவி மிக உதவிகரமாக இருந்தார்.

சந்திப்பு: நாகராஜன், நாராயணன் நாச்சியப்பன் (டென்னஸி)

*****


அமெரிக்கா என்ன செய்ய வேண்டும்

பிற வெளிநாடுகளுக்குச் சென்று, பொருளாதார மாற்றம் செய்கிறேன், அரசியல் மாற்றம் கொண்டு வருகிறேன் என்றெல்லாம் பல உயிர்களை அழிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். மு.மேத்தா ஒரு கவிதையில் அழகாகச் சொல்லியிருந்தார், பேரழிவு ஆயுதங்களைத் தேடிப் போனவர்களிடம் தான் அந்த ஆயுதங்கள் இருந்தன என்னும் பொருளில். ராஜாஜி கூட ஒரு முறை சொன்னார், "அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைக் கடலில் தூக்கிப் போட்டு விட்டால் போதும் உலகம் மிக க்ஷேமமாக இருக்கும்" என்று. அது உண்மைதான். அணு ஆயுதங்களுக்குச் செலவழிக்கும் பணம் ஏராளம். அதை வேறு விதங்களில் பயன்படுத்தினால் உலகத்தில் வறுமையே இருக்காது.

*****


தமிழ்நாடு மாற வேண்டும்

தமிழ் நாட்டில் ஹீரோ வொர்ஷிப் ஒழிய வேண்டும். அதற்காக மாணவர்களிடையே ஒரு புரட்சி உண்டாக வேண்டும். அரசியல் கட்சிகளுக்குக் கொடி கட்டுவதும், தோரணம் கட்டுவதும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். அதுபோல அரசியல் தலைவர்களுக்காகத் தீக்குளிப்பதும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்திராகாந்தி இறந்தபோது ஏழு பேர் தீக்குளித்தார்களாம், ஆறு பேர் தமிழ்நாட்டில்; ஒருவர் ஒரிஸ்ஸாவில். அந்த ஆளும் தமிழ்நாட்டில் இருந்து ஒரிஸ்ஸா போய் செட்டில் ஆனவராம். இந்த மாதிரி உணர்ச்சி வயமான செயல்பாடுகளுக்கு தமிழர்களின் மரபியல்தான் காரணமா என்பது தெரியவில்லை. அறிவுபூர்வமான செயல்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. இவற்றைத் தாண்டி தமிழ்நாட்டில் முன்னேற்றமும் உள்ளது. இது போன்ற குறைகளும் நீங்கி விட்டால் தமிழகம் இன்னும் நன்றாக இருக்கும்.

*****


தென்றல் குறித்து டாக்டர் தேவ்

தென்றல். நல்ல உயிர்த் துடிப்பான பத்திரிகை. புதுமையான எழுத்துக்கள். தொடர்ந்து ஒரேயடியாகப் படிக்காமல் அவ்வப்போது படிப்பேன். தமிழகத்தில் இருந்து வரும் வெகுஜனப் பத்திரிகை எழுத்தாளர்களுக்குச் சமமாக, ஏன் அதை விட முன்னோடியாகக் கூடச் சில சிறுகதைகளைத் தென்றல் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். சொற்பிரயோகங்கள் சிறப்பாக உள்ளன. புதுமையான விஷயங்களோடு, மரபு சார்ந்த விஷயங்களுக்கும் தென்றல் முக்கியத்துவம் தருவது சிறப்பு. நேர்காணல், முன்னோடிகள் பற்றிய செய்திகள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. சமீபத்தில் ஜி. ராமநாதன் பற்றிய கட்டுரை வந்திருந்தது. தமிழறிஞர்கள், இசை, கலை பற்றியெல்லாம் நிறையத் தென்றலில் வருகின்றது. நம் ஊர் வெகுஜனப் பத்திரிகைகளைவிடத் தென்றல் சிறப்பாகவே இருக்கிறது. நம் ஊர் பத்திரிகைகள் சினிமாச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தென்றலிலும் சினிமா பற்றிய செய்திகள் வருகின்றன என்றாலும் பிற செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அதற்கு எனது பாராட்டும் வாழ்த்துகளும்.
மேலும் படங்களுக்கு
More

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
Share: 




© Copyright 2020 Tamilonline