Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தாயாகிய சேய்
உறைந்து போன உறவுகள்
- அண்ணாமலை சி|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeடாக்டர் குமாரும் அவர் மனைவி ரேகாவும் அன்று காலை அந்த நகரை விட்டுப் போகிறார்கள். சுந்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுந்தரும், அவன் மனைவி சாவித்திரியும் அவர்களுடன் கடந்த நான்கு வருஷங்களாகப் பழகியிருக்கிறார்கள். ஆனால், சமீப காலமாய் இரண்டு குடும்பங்களுக்கிடையிலும் அவ்வளவு நல்ல பேச்சு வார்த்தையில்லை. டாக்டர் குமாரும் ரேகாவும் அந்த நகரத்தில் 35 வருஷங்களாக வாழ்ந்துவிட்டு இப்போது ரிட்டையர் ஆகி ஃப்ளோரிடா செல்கிறார்கள். அவர்கள் பஞ்சாப்காரர்கள். சாவித்திரிக்கும் சுந்தருக்கும் அவர்களிடம் இந்தியர்கள் என்ற வகையில் மட்டுமின்றி பெரியவர்கள் என்ற அன்பும் இருந்தது. அவர்களுக்கோ சுந்தர் குடும்பத்துடன் உறவு வைத்துக் கொள்வது ஏதோ ஒரு பெரிய தியாகம்போலத் தான் தெரிந்தது. ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும், இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் விடாப்பிடியாய் அவர்கள் குரலில் ஒட்டிக் கொண்டிருந்த இந்தியாவும், இது தவிர, வேறொரு நாட்டிற்கு வந்து தாம் இன்று எதிர்கொள்ளும் ஒவ்வொன்றையும் இருபது வருஷங்களுக்கு முன்பே சந்தித்து சமாளித்தவர்கள் இவர்கள் என்ற உணர்வும் சுந்தரையும் சாவித்திரியையும் அவர்கள்பால் கவர்ந்திருந்தது. டாக்டர் குமாருக்கும் ரேகாவுக்கும் அப்படி ஒன்றுமில்லை. சுந்தரையும் சாவித்திரியையும் சக மனிதர்களாகப் பாவிப்பதற்கே அவர்கள் தயாரில்லை.

ஒரு வருஷத்துக்குப் பின்னால் சென்ற வாரம்தான் டாக்டர் குமாரும் ரேகாவும் சுந்தர் வீட்டிற்கு வந்தார்கள். எப்போதும் போலவே, புரிந்து கொள்ள முடியாத ஒரு வெற்றுப் புன்னகை இருவர் முகத்திலும். சுந்தரும் சாவித்திரியும் மரியாதையாக வரவேற்றனர். வந்தவுடனே பெரியவர் வந்த காரியத்தைச் சொல்ல ஆரம்பித்தார்: "சுந்தர், எனக்குப் புரியவில்லை. நாம் நன்றாகப் பேசிக் கொண்டு ஒரு வருஷத்திற்கு மேலாகிறது. உங்களுக்கு எங்கள் மீது ஏதாவது கோபமா?"

சாவித்திரிக்கு அவர்களிடம் பேசுவதற்கே ஒருவித பயம். சுந்தரும் பதில் ஒன்றும் தெரியவில்லை. பெரியவர் தொடர்ந்தார்: "நாங்கள் நாளைக் காலையில் ஃப்ளோரிடாவிற்குப் போகிறோம். எங்கள் பிள்ளைகள் இருவரும் சான் ஃப்ரான்சிஸ்கோவிலும் வாஷிங்டன் டி.ஸி.யிலும் செட்டில் ஆகிவிட்டார்கள். இந்தக் குளிரில் இந்த ஊரில் இருப்பதைவிட ஃப்ளோரிடா நன்றாக இருக்கும் என்று நினைத்துவிட்டோம். சதீஷன்-கூட இன்னும் 2-3 வருஷத்திற்குள் டென்யூர் கிடைத்தவுடன் வேறு பெரிய யுனிவர்சிட்டிக்கு மூவ் பண்ணலாம் என்றிருக்கிறார். தவிர, எப்படியும் அடிக்கடி ஃப்ளோரிடாவிற்கு வந்து எங்களைப் பார்ப்போம் என்று சொல்கிறார்கள் உமாவும் சதீஷனும். ஆகவே, நாங்கள் இனிமேல் இந்த ஊருக்கு வருவோம் என்று சொல்ல முடியாது." சதீஷனும் அந்த ஊரில்தான் குடும்பத்துடன் வாழ்ந்தார்.

மரணம் என்ற ஒன்று வந்துவிட்டால், காக்கை போன்ற பறவைகள் கூட ஒன்று சேர்ந்து துக்கத்தைத் துடைத்துக் கொள்வதுதானே இயற்கை
அவர் சொன்ன விஷயம் சாவித்திரிக்கும் சுந்தருக்கும் தெரிந்திருந்ததுதான். ஆனால், அவர்கள் இருவரும் வீடு தேடி வந்து சொல்வதுதான் அவர்கள் இருவருக்கும் ஆச்சர்யமாயிருந்தது. கடைசியாய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்தார்களாம். சுந்தரும் சாவித்திரியும் எவ்வளவுதான் மரியாதையில்லாமல் நடந்து கொண்டாலும் அவர்கள் மனம் கேட்காமல்தான் வந்து சொல்கிறார்கள் என்பது போல் காட்டிக் கொண்டார்கள். சாவித்திரியும் சுந்தரும், பெரியவர்கள் மேல் எவ்வளவோ வருத்தமும் ஆதங்கமும் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல், மறுநாள் காலையில் சந்திப்பதாகச் சொல்லி அனுப்பிவைத்தார்கள்.

சுந்தருக்கு இது அண்மையில் அறிமுகமான ஓர் உணர்வு. இதுவும் ஒரு நிரந்தரமான பிரிவு என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவர்கள் மேல் என்னதான் வருத்தம் இருந்தாலும் அவர்களைப் பூரணமாய் இழந்துவிட சுந்தருக்கு விருப்பமில்லை. சரியாக 10 மாதங்களுக்கு முன்புதான் தன் அப்பாவை இழந்திருந்தான். அந்த நினைவுகள் சுந்தரின் நெஞ்சை மீண்டும் ஆக்ரமித்துக் கொண்டன.

*****


ஒவ்வொரு தடவை ஃபோன் பண்ணும்போதும் "சுந்தரமூர்த்தி, நல்லாயிருக்கியாடா?" என்று கம்பீரமாய்க் கேட்கும் அப்பாவின் குரலை கடந்த 10 நாட்களாகக் கேட்க முடியவில்லை. அப்பா சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு 64 வயதாகிறது. அவர் எப்படியிருப்பாரோ, பிழைப்பாரோ, மாட்டாரோ என்று விதவிதமாய்க் கற்பனை செய்து ஓய்ந்து போயிருந்தான் சுந்தர். கடைசியில், அவனும் அவன் மனைவி சாவித்திரியும், சுந்தர் மட்டும் இந்தியா சென்று அப்பாவுடன் மூன்று வாரங்கள் இருந்துவிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். சுந்தர் வீட்டை விட்டுப் புறப்படும் நேரமும் வந்தது.

சாவித்திரி அழுகையை அடக்கிக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையாய்ப் பேசினாள். "ரொம்ப கவனமா போய்ட்டு வாங்க. கடவுள் கிருபையில் உங்க அப்பா பிழைச்சுக்குவாங்க. கவலைப்படாதீங்க. நான் பிள்ளைங்கள நல்லாப் பாத்துக்கிடுவேன் ..." குழந்தைகள் ஏழு வயதில் நந்தினியும் 4 வயதில் ரவியும். சீக்கிரமாகவே தூங்கியெழுந்து சுந்தரை ஆரத்தழுவி விடை தந்தார்கள்.

டென்வரிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் ஏர்போர்ட்டுக்குச் சென்றதும் சுந்தர் மனைவிக்கு ஃபோன் செய்தான். அதற்குள் அவன் நினைத்துப் பார்க்க மறுத்தது நடந்துவிட்டது. சாவித்திரி அழுதுகொண்டே அப்பா காலமாகிவிட்ட செய்தியைச் சொன்னாள். சுந்தருக்கு அடிவயிற்றில் பகீரென்று பயம் வந்தது. நாக்கு உலர்ந்து போயிற்று. உடம்பெல்லாம் உஷ்ணமடைந்தது. நெஞ்சுக்குள் கட்டையாய் ஏதோ நிற்பதுபோல் தோன்றிற்று. அடுத்த 20 மணி நேரமும் சுந்தர் அத்தனை மனிதர்கள் மத்தியிலும் தனியாய் இருப்பதாய் உணர்ந்தான். அழுதான். ஒருவழியாய் பிரயாணத்தை முடித்து, அப்பாவின் உயிரற்ற சடலத்திற்கு முன்னால் வந்து நின்றான். துக்கம் தொண்டையை அடைத்தது. ஆனால், அழுகை வரவில்லை. அப்பா கண்ணாடிப் பெட்டிக்குள் தூங்குவது போலிருந்தார். அம்மா கதறி அழுதாள். அக்காள், தங்கை, அண்ணன், தம்பி அனைவரும் அழுதனர்.

"பத்தாயிரம் மைல் தாண்டி வரணுமில்ல. எப்படியோ அவர் உடலையாவது வந்து பாத்துட்டான்," துரை சித்தப்பா சொன்னார். சித்தி அவன் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள். சென்ற வருஷம் முழுவதும் துரை சித்தப்பாவுக்கும் சுந்தர் குடும்பத்துக்கும் ஏகப்பட்ட சண்டை. "அவர் எப்படி இங்கே" என்று கூட சுந்தருக்கு நினைத்துப் பார்க்க முடியவில்லை. மரணம் என்ற ஒன்று வந்துவிட்டால், காக்கை போன்ற பறவைகள் கூட ஒன்று சேர்ந்து துக்கத்தைத் துடைத்துக் கொள்வதுதானே இயற்கை.

சுந்தர் வருவதற்குக் காத்திருந்த சுற்றங்கள், உடனடியாக அப்பாவை அடக்கம் செய்வதில் முனைந்தனர். அவன் வந்து இரண்டே மணி நேரத்துக்குள் எல்லாம் முடிந்தது. அடுத்த நான்கு நாட்களுக்கு துரை சித்தப்பா வீட்டிலிருந்துதான் சுந்தர் வீட்டில் அனைவருக்கும் சாப்பாடு வந்தது. நான்கு நாட்களுக்குப் பின் காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்தன. ஆயிரத்துக்கும் மேலான மக்கள் வந்து சென்றனர். எல்லோரும் இறந்தவரைப் புகழ்ந்து பேசினார்கள். அவருக்கு நல்ல சாவு என்று சொன்னார்கள்.

சாவித்திரி ஃபோனிலேயே அழுது முடித்தாள். அவளால் சின்னப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உடனே இந்தியா வரமுடியவில்லை. அவர்களுடைய பொருளாதார நிலையும் அதற்கு சாதகமாக அமையவில்லை.

சுந்தருக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. கடன், காரியம் என்று நம் கலாசாரம் ஏற்படுத்தி வைத்திருப்பது செத்துப் போனவருக்கு மட்டும் அல்ல. அவர் விட்டுச் சென்றாரே அவர்களுக்கும் தான். அத்தனை சொந்த பந்தங்களும் வந்து துக்கம் விசாரித்ததும், தங்கள் வேலைகளைப் போட்ட இடத்தில் போட்டுவிட்டு வந்து நின்றதும் நிச்சயமாய் நல்ல ஆதரவாய்த் தெரிந்தது சுந்தருக்கு. சாவித்திரியிடம் அடிக்கடி ஃபோனில் பேசிக் கொண்டான். அவளும் எப்படியோ நிலைமையைச் சமாளித்துவிட்டாள்.

ஒருவர் மூலம் ஒருவர் கேள்விப்பட்டு அந்த நகரிலிருந்த அத்தனை இந்தியக் குடும்பங்களும் சுந்தர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர். சதீஷன் மனைவி உமாவும் இரண்டு தடவை ஃபோன் செய்து சாவித்திரியிடம் துக்கம் விசாரித்தாள். பெரியவர்கள் மட்டும் கண்டு கொள்ளவில்லை.

*****
சாவித்திரி இந்த மனிதர்களிடம் எவ்வளவு ஆசையாய் இருந்தாள். ஒருவேளை அவர்களுக்கு நம் அப்பாவின் மரணம் தெரியாமல் இருந்திருக்குமோ? நிச்சயமாய் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு நாளும் சதீஷன் வீட்டிற்கு இவர்கள் இருவரும் செல்லாமல் இருப்பதில்லை. உமா சொல்லாமலா இருப்பாள்? எப்படி இவர்களால் மனதைக் கல்லாக்கிக் கொள்ளமுடிகிறது? பெரியவர்கள் இருவருக்கும் தெரியாமல் இருந்துவிட்டதாகவே நினைத்துக் கொண்டாலும், சதீஷன், உமா ஏன் இப்படி இருக்கிறார்கள்? அவர்களாவது சுந்தரிடம் நேரில் சந்தித்து துக்கம் விசாரித்திருக்கலாமே? உண்மையில் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னை முழுமையாக வெட்டிவிடப் பார்க்கிறார்களோ சதீஷனும் பெரியவரும்? இப்படியெல்லாம் சுந்தர் மனதில் பல கேள்விகள்.

சாவித்திரி இந்த இரண்டு குடும்பங்களுடனும் குறிப்பாக டாக்டர் குமாருடனும் ரேகா அம்மாவுடன் எவ்வளவு அன்பாயிருந்தாள் என்பதை நினைத்துப் பார்த்தான் சுந்தர்.

சாவித்திரிக்கு அந்த ஊரிலுள்ள அத்தனை இந்தியக் குடும்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ரேகா அம்மாவிடம் நண்பராகிவிட மிகவும் விருப்பம். டாக்டர் குமாருக்கும் ரேகா அம்மாவுக்கும் இரண்டு மகன்கள். இரண்டு பேருமே வேறு நகரங்களில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். அவர்கள் மணம் செய்து கொண்டது வெள்ளைக்காரப் பெண்களை. அந்த சின்ன நகரத்தில் இருபதுக்கும் குறைவான இந்தியக் குடும்பங்களே இருந்தன. ஏதாவது ஒரு விழாவில் யாராவது ஓர் இந்தியர் அவர்களிடம் சென்று பேசினாலும் அளவாகப் பேசிவிட்டு அகன்று விடுவார்கள். இதற்கெல்லாம் ஒரெ ஒரு விலக்கு: அது சதீஷன்-உமா தம்பதியினர். சதீஷன் முப்பதே வயதில் அந்த ஊருக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியராக வந்திருந்தார். பிரயோஜனமில்லாமல் ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டார். மற்ற இந்தியர்களைக் கண்டால் பெரியவர் குமாரைப் போலவே அவர்களிடம் அதிகம் பேசாமல் தப்பித்துக் கொள்வார். சதீஷனும் உமாவும் கேரளாக்காரர்கள் என்றாலும் அசப்பில் பெரியவர் வீட்டுப் பிள்ளைகள் போலிருப்பார்கள். பெரியவர்களைப் போலவே அந்தஸ்த்து உள்ளவர்களாய்த் தெரிவார்கள். அதனால்தானோ என்னவோ பெரியவர் குமாருக்கும் ரேகா அம்மாவுக்கும் சதீஷனையும் அவர் குடும்பத்தையும் நன்றாகப் பிடித்துப் போய்விட்டது.

சுந்தர் குடும்பம் அங்கு இருந்தாலும் அங்கிருந்த ஒருவருக்கும் அவர்கள் இருப்பதாகவே தெரியவில்லை அல்லது தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை!
சாவித்திரியும் விடவில்லை. முதலில் உமாவிடம் பழகி, அதன்பின் அவள் மூலம் ரேகா அம்மாவையும் பிடித்துவிட்டாள். அந்தச் சமயத்தில் சுந்தர்-சாவித்திரியின் மூத்த மகள் நந்தினிக்கு டான்ஸில் சர்ஜரி செய்திருந்தார்கள். நந்தினி வலி தாங்க முடியாமல் பயங்கரமாய் அழுதபோது ரேகா அம்மாதான் சாவித்திரிக்கு ஆறுதல் சொன்னார். நாளாக நாளாக பெரியவர்களுக்கு நந்தினியிடமும் ரவியுடனும் பழகுவதற்குப் பிடித்திருக்க வேண்டும்: சதீஷன்-உமா அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ ஒருவகையில் சுந்தர்-சாவித்திரியையும் நண்பர்களாக ஏற்றுக் கொண்டார்கள்.

சுந்தர் தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். வெற்றுப் பேச்சுப் பேசுவது தவிர வேறு திறமை ஒன்றும் கிடையாது அவனிடம். அவனும் அந்த நகரில் இருந்த ஒரே பல்கலைக்கழகத்தில்தான் வேலை பார்த்தான். சதீஷன் வாங்குவதில் பாதி சம்பளம்கூட சுந்தருக்குக் கிடைக்கவில்லை. எப்படியோ சமாளித்து வந்தான். பெரியவர் குமாருக்கும் ரேகா அம்மாவுக்கும் இரண்டு குடும்பங்களின் நிலைமையும் நன்றாகத் தெரியும். சுந்தர் வீடு, பெரியவர்கள் வாழ்ந்த தெருவிலும், சதீஷன் வீடு சுமார் அரை மைல் தூரத்திலும் இருந்தன. இருந்தாலும், பெரியவர்களுக்கு சதீஷன்-உமாதான் நம்பர் ஒன். சதீஷன்-உமாவுக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் இருவரும் பள்ளிக்கூட நேரம் தவிர மற்ற நேரங்களில் பெரியவர்களிடம்தான் இருந்தார்கள். பெரியவர்களுக்கு அதுவரையிருந்த எம்ப்டி நெஸ்ட் உணர்வை சதீஷன் குடும்பம்தான் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தது. சாவித்திரி எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் பெரியவர்கள் முன்னால் ஒன்றும் எடுபடவில்லை. சாவித்திரி சமையலில் ரொம்பவும் திறமைசாலி. பெரியவர் குமாருக்கும் ரேகா அம்மாவுக்கும் சாவித்திரியிடம் பிடித்ததே அவள் செய்யும் சமையல்தான். உமா, சாவித்திரியைப் போல் அல்லாமல் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவள். காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் செய்து கொண்டவள். நல்ல குணம். ஆனால், கொஞ்சம் அப்பாவி. ரேகா அம்மா உமாவை உட்காரச் சொன்னால் உட்காருவாள். எழுந்திருக்கச் சொன்னால் எழுந்திருப்பாள். ரேகா அம்மாவின்பால் அப்படி ஓர் அன்பு, மரியாதை அவளுக்கு.

அப்போதெல்லாம், பெரியவர் தனியாக சுந்தரிடம் மாட்டினால் அவ்வளவுதான். தான் சின்ன வயதில் பள்ளிக்கூடம் செல்ல மறுத்தது, அவன் தாய் தந்தையர் அவனை அடித்து அடித்து பள்ளிக்கூடம் அனுப்பியது, விடுமுறை நாட்களில் மாடு மேய்த்தது, என்று விடாமல் அவரிடம் பேசிக் கொண்டேயிருப்பான். குமார் கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு சுந்தர் பேசுவதில் ஆர்வம் இருக்காது. அவர் உலகமே வேறு. இவற்றிற்கெல்லாம் மேற்பட்டவர் போலிருப்பார்.

பெரியவர் ஓரிரு முறை சதீஷன் குடும்பத்துடன் சுந்தர் குடும்பதையும் அழைத்து விருந்து கொடுத்திருக்கிறார். அந்த சமயங்களில் எல்லாம் சாவித்திரி பூரித்துப் போவாள். சாவித்திரியும் அடுத்த வாரமே அவர்களுக்கு மட்டும் விசேஷமாய் விருந்து கொடுத்து விடுவாள். யார் வீட்டில் விருந்து என்றாலும் உமா அருகில்தான் ரேகா அம்மா இருப்பார். பெரியவரும் சதீஷன் கூடவேதான் இருப்பார். சதீஷனிடம்தான் மனம் விட்டுப் பேசுவார். அவர்கள் பேசுவதெல்லாம் ரிஸர்ச், டீச்சிங் சம்பந்தப் பட்டதாகத்தானிருக்கும். இதற்கிடையில், சதீஷனும் தன்னைப் புறக்கணிக்கிறார் என்பதை சுந்தர் உணர்ந்து கொள்ளும்படி சம்பவம் ஒன்று நடந்தது.

ஒரு நாள் சுந்தர் யுனிவர்சிட்டி பார்க்கிங் லாட்டில் சதீஷன் கார் வந்து நிற்பதைப் பார்த்தான். கார் கதவைத் திறந்து இறங்கப் போகும் போது சதீஷனும் சுந்தரைப் பார்த்துவிட, வெடுக் என்று திரும்பவும் காருக்குள்ளேயே ஏறி உட்கார்ந்து கொண்டார். சுந்தர் சிறிது தூரம் நடந்த பின், கவனமாய் சதீஷன் காரைவிட்டு இறங்கி வந்தார். சுந்தருக்குப் புரிந்துவிட்டது சதீஷனுக்குத் தம் சகவாசமே பிடிக்கவில்லையென்று. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தனக்கு நாகரிகம் தெரியவில்லையோ என்று சுந்தர் மனதில் ஒரு சுய பச்சாதாபம் ஏற்பட்டது. சாவித்திரியோ அவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடினாள். உண்மையில் அவனுக்கும் பெரியவரையும் சதீஷனையும் தன் ஃப்ரண்ட்ஸ் என்று சொல்லிக் கொள்வது பெருமையாய்த்தான் இருந்தது.

இந்த நிலையில்தான் சுந்தர் அப்பா இறந்து போனார். சதீஷன் இந்தியாவில் இருக்கும்போது சாவித்திரியிடம் ஃபோனில் பேசிக்கொண்டதைத் தவிர, அன்று வரை, பெரியவரும், ரேகா அம்மாவும், சதீஷனும், சுந்தரிடம் அவன் தந்தை இறந்தது பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. அதன் பிறகுதான் சுந்தரும் சாவித்திரியும் பெரியவர் குடும்பத்தை ஓடி ஓடி உபசரிப்பதை விட்டார்கள்.

*****


பெரியவர் வீட்டு முன்னால் ட்ரக் ஒன்று வந்து நின்றது. சாவித்திரி ஒன்றும் நடக்காதது போல் வீட்டு வேலைகளில் மும்முரமாய் இருந்தாள். சுந்தர் மட்டும் தன் வீட்டிலிருந்தபடியே பெரியவர் வீட்டில் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். சதீஷனும், பெரியவரும் பெட்டிகளைக் கொண்டு வந்து ட்ரக்கில் ஏற்றினார்கள். ரேகா அம்மா உமாவிடம் உருகி உருகி பேசிக் கொண்டிருந்தார்கள். வேறு ஒருவரையும் காணவில்லை. அவர்கள் பிள்ளைகளில் ஒருவன் மட்டும் வருகிறான் என்று பெரியவர் சொல்லியிருந்தார். ஆனால் அவனைக் கூடக் காணவில்லை.

எங்கே போனார்கள் சக இந்தியர்கள்? என்னைப் போலத்தான் மற்றவர்களிடமும் இவர்கள் நடந்து கொண்டார்களோ? இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்த சுந்தருக்குத் துரைச் சித்தப்பா ஞாபகம் வந்தது. ஷூவை எடுத்துப் போட்டுக் கொண்டு மெதுவாய்ப் பெரியவர் வீட்டை நோக்கி நடந்தான். சாவித்திரிக்கும் சும்மா இருந்துவிட முடியவில்லை. அவளும் குழந்தைகள் இருவருடன் அவனைத் தொடர்ந்தாள்.

பெரியவர் இவர்களிடம் "ஹலோ" என்றார். ரேகா அம்மா இன்னும் உமாவிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தார். பெரியவர் ஓர் ஒயின் பாட்டிலைத் திறந்து இரண்டு கப்புகளில் ஊற்றி ஒன்றை சதீஷனிடம் தந்தார். அவர் முகத்தில் உணர்ச்சிகளின் பூரண வெளிப்பாடு தெரிந்தது. இன்னொரு ஒயின் கப்பைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு: "டு மை டியர் சன் அன்ட் டாட்டர்!" என்று சொல்லித் தன் கப்பை சதீஷன் கப்புடன் சேர்த்தார். சதீஷன் "டு யுவர் ஹப்பி லைஃப்!" என்று விரிந்த புன்னகையுடன் சொன்னார்.

சுந்தர் குடும்பம் அங்கு இருந்தாலும் அங்கிருந்த ஒருவருக்கும் அவர்கள் இருப்பதாகவே தெரியவில்லை அல்லது தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை! சுந்தர் கண்ணிலும் ஈரம் கசிந்தது. நெஞ்சில் அதிகமாய் ஒரு பாரம் ஏறிக் கொண்டது: ஒருதலை உறவுகளும் இருக்கின்றனவோ? ஜனவரி மாதப் பனிபோல உறவுகளும் உறைந்து போகுமோ?

ரவி ஓடிச் சென்று ஒயின் பாட்டிலை எடுத்தான். பெரியவர் வேகமாய் பாட்டிலை அவனிடமிருந்து பிடுங்கி சதீஷனிடம் தந்தார்.

*****


சி. அண்ணாமலை
More

தாயாகிய சேய்
Share: 




© Copyright 2020 Tamilonline