Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாட்டியின் ஏக்கம்
பார்வை
- எல்லே சுவாமிநாதன்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeசிறுகதைப் போட்டித் தேர்வு

"இங்க இருக்கம்மா டபிள் ஃபைவ் டபிள் டூ" என்றார் காரின் பின்சீட்டில் இருந்த சீனிவாசன்.

கட்டிட வாசலில் காரை நிறுத்தினாள் மைதிலி. கதவுகளைத் திறந்து, "மெதுவா இறங்குங்க" என்றாள். சீனிவாசனும் லஷ்மியும் இறங்கினார்கள்.

"இந்த இடத்திலதான் மீட்டிங். நான் அஞ்சுமணிக்கு இங்க வந்து உங்களை அழைச்சிட்டுப் போறேன். சீக்கிரம் முடிஞ்சிட்டா எனக்கு செல்போன்ல சொல்லுங்க" என்று சொல்லி விட்டு விடைபெற்றாள்.

"சீக்கிரம் வந்துட்டம் போல இருக்கு. மணி இன்னம் மூணு ஆகலை. பின்னால தோட்டம் போல இருக்கே பார்த்துட்டு வரலாமா?"

"அது கிடக்கட்டும். இது என்ன மீட்டிங் ? எனக்கு சரியாப் புரியல"

"அன்னிக்கி மால்ல பார்த்தமே வைஷ்ணவின்னு ஒரு பொண்ணு. அமெரிக்காவில வாழற இந்தியர்களின் வாழ்க்கை பத்தி அவ ஆராய்ச்சி பண்றாளாம். நம்மையல்லாம் கேள்வி கேட்டு ஒரு கட்டுரை எழுதிக் கொடுக்கப் போறாளாம்."

"என்னக் கேள்வி கேட்டா எனக்குப் பேசத் தெரியாது. கையும் காலும் ஒதறும். நீங்கேள பேசிச் சமாளிச்சிடுங்க ப்ளீஸ். நேரமாயிடப்போறது. வாங்க மீட்டிங்குக்குப் போகலாம்"

*****


பொண்ணுங்க இங்க வந்ததும் முடிய வெட்டிடறாங்க. நெத்தியில பொட்டு வெக்கறத நிறுத்திடறாங்க. புடவை அதிகம் கட்டறதில்ல. பேண்ட் சட்டை போடறாங்க.
பத்துப் பன்னிரண்டு முதிய இந்தியத் தம்பதிகள் அந்த அறையில் அரைவட்ட வடிவில் குழுமியிருந்தனர்.

நடுவில் வைஷ்ணவி தன் சினேகிதி வேணியுடன் அமர்ந்திருந்தாள். "எம்பேரு வைஷ்ணவி. நான் ஸோஷியாலஜி படிக்கறேன். ஒரு ஆராய்ச்சிக்கு உங்கேளாட உதவி தேவைப்படுது. நீங்க எல்லாம் வயசில பெரியவங்க. இந்தியாவில வாழறவங்க. இப்ப பொண்ணு, பிள்ளை வீட்ல விசிட்டராய் இருக்கீங்க. உங்க பார்வையில அவங்க எப்படி வாழறாங்க, அதில உங்களுக்கு பிடிச்ச, பிடிக்காத விசயம் என்னன்னு தெரிஞ்சிக்க ஆசைப்படுகிறேன். உங்க வீட்டுக்கே வந்து இண்டர்வ்யூ எடுத்திருக்க முடியும். ஆனா உங்களால வீட்டுல மனம் திறந்து பேசறது சரியா வராதுன்னு இந்த ஏற்பாடு. இங்கே என் பக்கத்தில் இருக்கிற அசிஸ்டண்ட் வேணி குறிப்புகள் எழுதிக் கொள்வாள். உங்களுடைய பேச்சை வைத்து கட்டுரை எழுதப் போகிறேன். உங்க பேரெல்லாம் இதில வராது. நீங்க சொல்றதெல்லாம் ரகசியமா வச்சிப்போம். தைரியமா மனத்தில உள்ளதைப் பேசுங்க. உங்களுக்கு என் ஆராய்ச்சி பத்தி ஏதாவது தெரிஞ்சிக்கணுமா ?"

"பிட்சா ஹட் கூப்பன் தரதா சொன்னாங்க..." என்றார் ஒருவர்.

"யெஸ். கடைசியிலே ஒவ்வொரு ஃபாமிலிக்கும் பத்து டாலர் மதிப்புள்ள ஒரு கூப்பன் தரப்போறேன். இது உங்க நேரத்துக்காக எங்க ஸோஷியாலஜி டிபார்ட்மெண்ட் கொடுக்கிற சின்ன அன்பளிப்பு. இப்ப பேசத் தொடங்கலாமா? அமெரிக்காவில வாழற இந்தியர்களோட வாழ்க்கையில உங்களுக்குக் கண்ணுல படற விஷயங்கைளச் சொல்லுங்க. யார் வேணா முதல்ல பேசலாம்."

ஒரு பெண்மணி சொன்னாள், "பிடிக்காத விசயம் நெறய இருக்கு. பொண்ணுங்க இங்க வந்ததும் முடிய வெட்டிடறாங்க. நெத்தியில பொட்டு வெக்கறத நிறுத்திடறாங்க. புடவை அதிகம் கட்டறதில்ல. பேண்ட் சட்டை போடறாங்க."

இதைத் தொடர்ந்து பல குரல்கள் எழுந்தன.

"பார்ட்டி பார்ட்டினு அலையறாங்க. சாயங்காலம் ஃபிரண்டு வீட்ல டின்னர் பார்ட்டின்னா மத்தியானம் லஞ்சே சாப்பிடாமக் காயறாங்க. சாப்பாட்டைக் குறவன் சாப்பாடு போல டேபிள்ல பரத்திடறாங்க. எல்லாரும் இடது கையால எடுத்துக்கிறாங்க. பார்ட்டில சாப்பாடை தட்ல வெச்சிட்டுச் சாப்பிடறாங்க. ரசத்தை ஊத்திக்கிட்டு எப்படிங்க நின்னுகிட்டு திங்கறது? மேல, கீழெல்லாம் சிந்திடுது."

"வீட்டுல கார்ப்பெட்னு வீட்டுத் தரைய மூடிடறாங்க. குளிர்ல காலுக்கு இதமா இருக்கு சரிதான். பட்டுனு ஒரு பக்கெட் தண்ணிவிட்டுக் கழுவ முடியல. வேக்வம், ஷாம்பூனு அழுக்கையும் சோப்பையும் வச்சித் தேய்ச்சிடறாங்க."

"குழந்தைகள சுத்தமா வெச்சிக்கிறது போறாதுங்க. டயப்பர்னு ஒண்ணை மாட்டிவிடறாங்க. அடிக்கடி மாத்தறதில்ல. டயப்பர் விலை ஜாஸ்தி, இன்னும் போவட்டும், இன்னும் போவட்டும்னு விட்டிடறாங்க. குழந்தையத் தூக்க முடியாம கனக்குது. குழந்தையவிட டயப்பர் கனம் அதிகமா இருக்கு. நாமளும்தான் ஊருல குழந்தை வளர்த்திருக்கோம். அப்பப்ப தண்ணி போட்டுக் கழுவி விடல?"

"பண்டிகைகள சரியாவே கொண்டாடறதில்ல. வேள தப்பி வேளையில, இல்லாட்டி இன்னொரு நாள்ல கொண்டாடுறாங்க."

"காசு காசுன்னு அலையறாங்க. எம்பொண்ணைப் பாருங்க. ஏதோ புருஷன் சம்பாதிக்கறாருனு வீட்ல இருந்து குழந்தையப் பாத்துக்காம, பார்ட் டைம் ஜாபுக்குப் போறா. நாங்க இல்லாட்டி அவ காசு பேபி சிட்டருக்குதான் சரியா இருக்கும்."
"அவசரத்துக்கு ஆட்டோ போல எதுவும் இல்லீங்க. பஸ் சரியில்ல. வெளியே போகணும்னா பொண்ணு, பிள்ளையத் தொந்தரவு பண்ண வேண்டியிருக்கு."

வைஷ்ணவி தலையைச் சுழற்றி எல்லோரையும் பார்த்தாள்.

"லஷ்மி சீனிவாசன், பொறுமையா கேட்டுட்டு இருக்கீங்க. நீங்க ஒண்ணும் சொல்லலியே."

"அவளுக்கு பதிலா நான்..." என்று சீனிவாசன் சொல்ல, "நானே பேசறன்" என்று லஷ்மி எழுந்தாள்.

நான் ஏதாச்சும் ஏடாகூடமா மருமகளைப் பத்திச் சொல்லப் போக, மைதிலிகிட்ட வேணி வத்தி வெச்சிட்டா, நம்ம பாடு சங்கடமாயிடும்.
"நானும் இங்க ஆறுமாசமா என் மருமகேளாட இருக்கேன். பல பார்ட்டிகளுக்குப் போய் பல பேரைச் சந்திச்சிருக்கேன். இங்குள்ள புடிக்காத விசயங்கள் பத்தி எல்லோரும் பேசினதக் கேட்டேன். இதை நாம எந்தக் கோணத்துல பார்க்கிறோம்ங்கறது ரொம்ப முக்கியம். இங்க வர்ற நம்ம இந்தியப் பெண்கள் பல விஷயங்கள் கத்துக்க வேண்டியிருக்கு. சமையல், குடும்பம், வரவு செலவு, பேங்க், கார் டிரைவிங், முதலீடுகள், கல்வி, வேலை, குழந்தை, வளர்ப்பு, விருந்துபசாரம் இப்படி எல்லாத்திலயும் புகுந்து புறப்பட வேண்டியிருக்கு. அதுனால ஊருக்குத் தகுந்தாப்பல சில மாற்றங்கள் தேவையா இருக்கு. காலையில எழுந்து வேலைக்குப் போகிறவள் தலையச் சீவி பின்னிக்கிட்டா இருக்க முடியும். முடியை வெட்டிட்டா பராமரிக்கச் சுலபமா இருக்கு. வெளியே போகணும்னா என் மருமக ஒரு நிமிஷத்துல தலைய பிரஷ் பண்ணிட்டு கிளம்பிடுவா.

"பொட்டு ஏன் வெச்சிருக்கே, ஏன் இன்னிக்கி வெக்கலே இந்தக் கேள்விக்கெல்லாம் ஆபீசுல பதில் சொல்லிக்கிட்டு இருக்காம பொட்டு வெக்காம ஆபீசுக்கு போறாங்க. அதோட இல்ல, பொட்டு வெச்சா, அவ இந்தியன், தங்கத்தில நகை போட்டுருப்பானு ரவுடிங்க விஷமம் வேற. புடவை கட்டினா கார் ஓட்டறது கஷ்டமா இருக்கு. ஆபீஸ்ல மெஷின்ல புடவை சிக்காம இருக்க பேண்ட் போட்டுட்டுப் போறாங்க. நம்ம பண்டிகை வார நாள்ல வந்தா இங்க கொண்டாடுறது கஷ்டம். அதுக்கு இங்க லீவு கிடையாது. ஆனா இந்தியால பண்டிகைன்னு லீவு தராங்க. எல்லாம் கொண்டாட முடியுது. அதனால இங்க வார இறுதியில கொண்டாடறதுனு வெச்சிக்கிறாங்க. இந்த ஊர்க்கோயில்லேயே அப்படித்தானே பண்றாங்க. அதில தப்பில்ல. பஃபே சாப்பாடு தப்புனு சொல்ல மாட்டேன். பொது எடத்தில போய் ரசம், சாம்பார், பாயசம், மோர்னு சமச்சு தட்டுல கொட்டிக்கிட்டு முழங்கையிலிருந்து நக்கிட்டு எதுக்கு அவதிப்படணும்? இந்த வம்பே வேண்டாம்னு என் மருமக கெட்டிக்காரத்தனமா 'பாட்லக் டின்னர்'னு வெச்சு லெமன் ரைஸ், வெஜிடபிள் பிரியாணின்னு எல்லா சினேகிதிகளையும் பண்ணிட்டு வரச்சொல்லிடறா. தன் பங்குக்கு கோக், செவன் அப், சிப்ஸ்னு ரொம்பக் கஷ்டப்பட்டு கடையில அலைஞ்சு திரிஞ்சு வாங்கி ரொப்பிடுவா.

"நம்ப பெண்களுக்கு இந்தியாவில மாமியார், நாத்தனார், அம்மா, பாட்டி, அக்கா, அடுத்த வீட்டுக்காரின்னு சமையல் சொல்லித்தர ஆயிரம் உதவி இருக்கும். இங்க புத்தகம், இன்டர்நெட், சினேகிதிகிட்டனு எப்படியோ கத்துக்கிட்டு நல்லாப் பண்றாங்க. எவ்வளவோ புதுப்புது ரெசிப்பி கத்துக்கிறாங்க. இன்னிக்கி லஞ்சுக்கு என் மருமக ஃப்ரிட்ஜுல மிஞ்சின கறிகாயெல்லாம் வெட்டிப் போட்டு ஒரு சாலட் பண்ணினா. பேரு மறந்து போச்சு. சூப்பரா இருந்துது. இதை நான் ஊர்ல போயிச் சொல்லப்போறேன். அங்க கோயம்பேடு கறிகாய் மார்க்கட்டுல அழுகிப் போச்சுனு எவ்வளவு கறிகாயை வீணாக் குப்பையில போடறாங்க தெரியுமா? குழந்தையோட படிப்புல ஆர்வமா இருக்காங்க. முன்ன இந்தியால இருந்தாப்புல குழந்தைங்க அனா ஆவன்னா, ஆத்திசூடி, வாய்ப்பாடுனு வீட்லேய கத்துக்கிட்டு, தாத்தா பாட்டியோட விளையாடி நேரத்தை வீணாக்கக்கூடாதுன்னு ரெண்டு வயசிலேய ப்ரீ ஸ்கூல்ல போட்டுடறாங்க. அங்க குழந்தை தூங்க படுக்கை கூட இருக்காமே! இங்க படிப்புக்கு வயசு ஒரு கணக்கே இல்ல. நம்மூர்ல காலேஜ் முடிச்சிட்டா புத்தகப்பைய பரண்ல போட்டுடறாங்க. இங்க ஈவினிங் காலேஜ்ல எவ்வளவு பேரு புதுசாக் கத்துக்க வாய்ப்பு இருக்கு? டிபன், டின்னர்னு நேரத்தை வேஸ்ட் பண்ணாம என் மருமக வாரத்துக்கு நாலுநாள் காலேஜுக்கு போயி செராமிக் கப் செய்யக் கத்துகிறா. பாக்கி நாளுக்கு யோகா.

கல்வியோட அருமை தெரிஞ்சிருக்கு இங்க உள்ள பெண்களுக்கு. எல்லாம் சும்மா வருமா? காசு தேவையா இருக்கு. நேரத்தை வீணாக்காம வேலைக்குப் போய் காசு பண்றது தப்பில்ல. பார்ட் டைம், ஃபுல் டைம், ஓவர் டைம்னு செய்ய வேண்டியிருக்கு. எனக்கும் படிப்பு இல்லையேன்னு வருத்தமா இருக்கு. இருந்தா ஜாலியா வேலைக்குப் போவேன். இப்படி தோசை, இட்லி, கொழக்கட்டை, வடை, முறுக்குனு சமையல் அறையிலயே பழியாக் கிடப்பேனா? ஆ, சொல்ல மறந்திட்டேன. இங்க இந்தியக் கணவர்கள் பொண்டாட்டி சொன்னபடி கேட்கிறங்க. எம்புள்ளைய எடுத்துக்கங்களேன். ஊர்ல இருக்கிறச்சே கெஞ்சுவேன், ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட மாட்டான். இங்க பாருங்க. குப்பையக் கூடையில கொட்டறான், கறிகாய் வெட்டறான், அவசியமானா சமையலும் செய்வானாம். கடைக்குக் கூடப்போய் சாமானைத் தூக்கிட்டு வரான். வீட்டை வாக்வம் பண்றான். பெண்டாட்டிக்கு கார் கதவைத் திறந்து விடறான். என் மருமக சாமர்த்தியமா எப்படி அவனைக் குச்சி இல்லாமலேயே ஆட வெக்கிறான்னு கேட்டுத் தெரிஞ்சிக்கப்போறேன். பொதுவாச் சொன்னா அமெரிக்கால இந்தியர்கள் வாழ்க்கை சுலபமா, மகிழ்ச்சியா, பயனுள்ளதா இருக்கு என்பதுதான் நிஜம்."

மீட்டிங் முடிந்து எல்லோரும் புறப்பட்டார்கள்.

மைதிலியின் வருகைக்குக் காத்திருந்தார்கள் சீனிவாசனும், லஷ்மியும்.

"எனக்கு பேசத் தெரியாது, நீங்க பேசுங்கன்னு சொன்னே! பொழிஞ்சிட்டயே" என்றார் சீனிவாசன்.

"வைஷ்ணவிகிட்ட யாரு உட்கார்ந்திருந்தா தெரியுமா? வேணி. அவ மைதிலிக்கு பெஸ்ட் ஃபிரண்டு. அவ அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து தெரிஞ்ச வம்பெல்லாம் அலசறா. நான் ஏதாச்சும் ஏடாகூடமா மருமகளைப் பத்திச் சொல்லப் போக, மைதிலிகிட்ட வேணி வத்தி வெச்சிட்டா, நம்ம பாடு சங்கடமாயிடும். 'வேகற தோசைக்கல்லு வெப்பம் தாங்காத பல்லி, வென்னீர் அடுப்பில விழுந்து வெந்துதாம் துள்ளி'னு ஆயிடும். அதான் பொதுவா பேசிட்டேன். மைதிலி காரு வருது. என்ன பேசினாங்கனு கேட்டா ஏதாவது ஒளறிக்கொட்டி, கிளறி மூடாதீங்க"

எல்லே சுவாமிநாதன்
More

பாட்டியின் ஏக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline