Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்
- வெங்கட்ராமன் சி.கே.|ஆகஸ்டு 2016|
Share:
இவரது சொற்பொழிவுகள் நடக்காத ஊர்களே இந்தியாவில் இல்லை என்னுமளவிற்கு நாடெங்கிலும் உபன்யாசம் செய்துவருபவர் உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள். இந்தியா மட்டுமல்லாது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள் என உலகநாடுகள் பலவற்றுக்கும் பயணித்து பாரதத்தின் பெருமையையும், ஸ்ரீவைஷ்ணவத்தின் சிறப்பையும் நிலைநாட்டி வருகிறார். ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம், பகவத்கீதை, ராமாயணம், மஹாபாரதம், ஆழ்வார் பாடல்கள், தமிழ் வேதங்கள் எனப் பல தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபன்யாசம் நிகழ்த்துகிறார். 'கிஞ்சித்காரம்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தித் திருக்கோவில் புனரமைத்தல், இறைப்பணி செய்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கற்க உதவுதல் போன்ற கைங்கரியங்களைச் செய்துவருகிறார். பிரவசன சங்கீதபூஷணா, ஸ்ரீ ராமானுஜ சேவகா, உபன்யாச கண்டீரவா, சொல்லின் செல்வர் என்பதுட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். இவரது உரைகள் 200க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளில் வெளியாகியுள்ளன. உபன்யாசங்களுக்காக அமெரிக்காவுக்கு வந்திருக்கும் இவருடன் தென்றல் பதிப்பாளர் சி.கே. வெங்கட்ராமன் உரையாடினார். அந்த உரையாடலிலிருந்து....

*****


தென்றல்: சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக இருந்த உங்களுக்கு இறைப்பணியையே வாழ்க்கையாகக் கொள்ளத் தோன்றியது எதனால்?
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்: என்னுடைய தகப்பனார் சாஸ்திரம் வாசித்த வித்வான். அவர் பெரிய உபன்யாசகராக இருந்தார். எனக்கு உபநயனம் செய்வித்த அன்றிலிருந்தே பல சாஸ்திர விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். அதனால் அதில் பற்றுதல் எனக்குள்ளேயே இருந்துவந்தது. பிறகு வெளியில் படிப்புகள் எல்லாம் முடித்திருந்தாலும் உபன்யாசத்தின்மீது ஆர்வம் இருந்தது. திடீரென்று 1991 ஜனவரியில் தகப்பனார் வைகுந்தநாட்டை அடைந்துவிட்டார். அவரிடம் வழக்கமாக உபன்யாசம் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் என்னிடம், "நீங்கதான் படிச்சிருக்கேளே, சொல்லுங்கோளேன்" என்று தூண்டினார்கள். எனக்குள்ளேயும் அந்த ஆசை இருந்தபடியாலே "சரி, சொல்லுவோம்" என்று சொல்ல ஆரம்பித்தேன். 1991முதல் 96வரை ஐந்து வருடம் வேலையும் பார்த்துக்கொண்டு உபன்யாசமும் செய்தேன். அது சரிவரவில்லை. எதையாவது ஒன்றைத்தான் வாழ்க்கையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து 96ல் வேலையை விட்டேன். இன்றைக்கு 20 வருஷமாக உபன்யாசம் செய்துவருகிறேன்.

தென்றல்: உங்களுடைய முதல் உபன்யாசம் எங்கு, எப்போது, எந்தத் தலைப்பில் நிகழ்ந்தது?
ஸ்ரீ வேளுக்குடி: 1991 நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தது. சென்னை, ஜார்ஜ் டவுனில் பகவத்கீதைபற்றிப் பேசினேன்.



தென்றல்: உங்கள் குருநாதர்கள் யார் யார்?
ஸ்ரீ வேளுக்குடி: சம்பிரதாய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தவர் என் தந்தைதான். சம்ஸ்கிருதம், திவ்யப்பிரபந்தம் வாசித்தது மற்றவர்களிடம். குருநாதர் என்றால் என் தந்தையார்தான்.

தென்றல்: உங்கள் தந்தையார் மிகச்சிறந்த உபன்யாசகர். உங்கள் வாழ்க்கையில் அவரது தாக்கம் எந்த அளவு இருக்கிறது?
ஸ்ரீ வேளுக்குடி: அளவு என்று சொல்லுவதைவிட இருப்பதே அது ஒண்ணுதான். வேறெந்தத் தாக்கமுமே வாழ்க்கையிலே கிடையாது. நான் உபன்யாசகன் ஆகவேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார். மூன்றரை வயசில் என்னைக் கொண்டுபோய் ஸ்கூலில் சேர்த்தபோதே ஹெட்மாஸ்டரிடம் "நான் சொல்றதையே இவனும் சொல்லணும்கறதுக்காகத்தான் உங்ககிட்ட கொண்டுவிடறேன். அதுக்குண்டான புது லௌகீக படிப்பு சொல்லிக் கொடுங்கோ. அந்த எக்ஸ்போஷரும் அவனுக்குக் கிடைக்கட்டும். இங்கிலீஷ் தெரியணும். நான் தமிழ்ல மட்டும்தான் சொல்லிண்டிருக்கேன். அவன் மத்தமொழிகள்லயும் சொல்லணும். தமிழ்லயும் சொல்லணும். அதுக்காகத்தான் உங்கள்ட்ட விடறேன்" என்று அன்றைக்கே சொன்னார். அவருடைய விருப்பம்தான் இது.

தென்றல்: ஆன்மிக வாழ்க்கையின் இலக்கணம் என்ன?
ஸ்ரீ வேளுக்குடி: தனிமனித ஒழுக்கம், Individual Discipline, ரொம்ப முக்கியம். அதில் நிறையத் தடங்கல்கள், இடர்ப்பாடுகள் வரும். அதைத் தாண்டி நாம் இருக்கவேண்டும். இதில் வெறும் உபன்யாசகன் என்று மட்டும் இருப்பது பொருந்தாது. இரண்டு விஷயங்களைத் தெரிஞ்சிண்டு சொல்லப் போறோம்னு சொன்னா, அதனோட அடிப்படையே தொண்டுசெய்தல். அதனால் சமுதாயத்திற்கும், பக்தர்களுக்கும், பகவானுக்கும் நிறையக் கைங்கரியங்களைப் பண்ணவேண்டும். அதைப் பண்ணிக்கொண்டிருந்து உபன்யாசமும் சொன்னால்தான் பொருந்தும். நாம் வெறும் உபதேசியாக இருந்தால் பொருந்தாது.

தென்றல்: புராண, இதிகாசங்கள் வெறும் கட்டுக்கதைகள் அல்லது மூடநம்பிக்கைகள் என்பதாக ஒருகருத்து பரவலாகக் காணப்படுகிறது. அவைகுறித்த உங்கள் அணுகுமுறை என்ன?
ஸ்ரீ வேளுக்குடி: இரண்டு கோணங்களில் இதைப்பற்றிச் சொல்கிறேன். முதலில் அது கட்டுக்கதையே இல்லை. காரணம், அதில் குறிப்பிடப்படும் எல்லா இடங்களையும் நாம் நேராகப் போய் இன்றைக்கும் தரிசனம் செய்யலாம். பாரதத்தில் எந்தெந்த இடத்தில் என்னென்ன உள்ளது என்று இதிஹாசங்களில் சொல்லியிருக்கிறதோ அதெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது. கண்ணன் என்னென்ன செய்தார் என்று சர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ அது இன்றைக்கும் துல்லியமாக அதே இடத்தில் இருக்கிறது. நடந்ததற்கான சாட்சி இருக்கிறது. நேரடியாக அந்த இடங்களைப் பார்க்கலாம், கண்கூடாக விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது, அதை அப்படியே கட்டுக்கதை என்று வைத்துக்கொண்டாலும் அதில் சொல்லப்பட்ட கருத்தை எடுத்துக்கொண்டால் அது உயர்ந்த கருத்தாக இருக்கிறது. அந்தக் கருத்தின்படி நாம வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆரம்பித்தோம் என்றால் கொஞ்சநாளில் அது கட்டுக்கதை இல்லை, உண்மை என்பது புரிந்துவிடும். ஆகவே இதை இரண்டு கோணத்தில் எப்படி வேண்டுமாலும் அணுகலாம்.



தென்றல்: பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் மிகவும் குன்றி வருவதைப் பார்க்கிறோம். பக்திசார்ந்த வாழ்க்கை முறைப் பிரசாரத்தால் இதை மாற்றமுடியுமா?
ஸ்ரீ வேளுக்குடி: பக்தன் எப்படி எப்படி இருக்க வேண்டும், என்ன ஒழுக்கம் தேவை என்பதை பகவானே கீதையிலும், உபநிஷத்திலும் சொல்லியிருக்கிறார். விஞ்ஞானத்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பக்தனாக இருந்தால், "நீ எப்படி வேண்டுமானாலும் இரு; எனக்கு ஆராதனம் பண்ணினால்மட்டும் போதும்" என்று பகவான் சொல்லமாட்டார். அதுதான் மற்றப் படிப்பிற்கும் பக்திப்படிப்பிற்கும் இருக்கும் வித்தியாசம். மற்ற படிப்பைப் படித்துவிட்டு வேலைக்குப் போகலாம்; சம்பாதிக்கலாம். ஆனால் பக்திப் படிப்பில் முதல்நாளில் இருந்து கடைசிநாள் வரைக்கும் ஒழுங்காக இருந்தாகணும். இந்த அடிப்படை ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுப்பதுதான் இந்தக் கல்விக்கே இருக்கின்ற பெருமை. பக்தி மார்க்கத்தில் இருந்துகொண்டு தப்புத்தவறு பண்ணிக்கொண்டிருக்க முடியாது. அப்படி இருந்தால் பேர் கெட்டுத்தான் போகும்.

நான் பக்தனாக இருக்கிறேன் என்றால் அந்த பக்தியைத் தொடர்ந்து செய்வதற்கு நிறைய ஆசாரம், அனுஷ்டானம் வேணும். ஒழுக்கம் வேணும். "இதெல்லாம் இருந்தால்தான் என் பக்தனை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று பகவான் தெளிவாக இருக்கிறார். அதை எடுத்துச்சொல்லி, வாழ்க்கையில் ஒழுக்கநெறிகள் எப்படி இருக்கவேண்டும், அவை எப்படி நமக்கு முக்கியம் என்பதைப் புரியவைக்க வேண்டும்.

தென்றல்: அமெரிக்கத் தமிழர்கள் வாழ்க்கையின் எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்றவர்கள். அவர்களிடம் நீங்கள் சொல்லும் வேதாந்தக் கருத்துக்களுக்கு வரவேற்பு இருக்கிறதா?
ஸ்ரீ வேளுக்குடி: வாழ்க்கையில் வசதியிருப்பவர்கள் உலகின் பல இடங்களிலும் இருக்கிறார்கள். இந்தியாவிலும் இருக்கிறார்கள், அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். வேதாந்தக் கருத்து என்பது ஆத்மாவின் உஜ்ஜீவனத்திற்காக, ஆத்மா உய்வதற்காக ஏற்பட்டது. அதற்குத் தேவை பகவானிடத்தே விருப்பம்; ஆத்மா யார் என்கிற அறிவு. அது இருந்தது என்றாலே கண்டிப்பாக இந்தமாதிரிக் கருத்துக்களுக்கு வரவேற்பு இருக்கும். நான் போகிற இடத்துக்கெல்லாம் நிறையப்பேர் வந்து கேட்கிறார்கள். அப்படிக் கேட்கிறவாளும் கஷ்டமான கருத்தெல்லாம் சொன்னாக்கூட, பொறுமை இழக்காமல், பராக்குப் பார்க்காமல் ஒழுங்காகத்தான் கேட்டுக் கொண்டார்கள். இரண்டரை மணி நேரம் சொன்னபோதும் கேட்டார்கள். அதனால் வேதாந்தத்தின் வீச்சு ஒண்ணும் குறையவில்லை. வரவேற்பு நன்றாகவே உள்ளது.

தென்றல்: கிஞ்சித்காரம் என்றால் என்ன பொருள்?
ஸ்ரீ வேளுக்குடி: கிஞ்சித் என்றால் சிறிது. காரம் என்றால் செய்தல். நம்மால் இயன்ற கைங்கரியங்களைச் சிறிது செய்தல் என்பதுதான் கிஞ்சித்காரம் என்பதன் பொருள். ஆத்மா பகவானின் சொத்து. அப்போது ஓர் உடைமை, உடையவனுக்காகத்தான் இருக்கவேண்டும். நாமெல்லாம் பகவானின் உடைமை என்று சொன்னால் அவருக்காகத்தான் நாம் இருக்கணும். பகவானுக்குச் செய்யவேண்டிய கைங்கரியத்தையும், பக்தர்களுக்குச் செய்யவேண்டிய கைங்கரியத்தையும் துளியேனும் செய்தால்தான் ஒரு ஆத்மா தன்னிலை பெறுகிறான் அப்படின்னு வாக்கியம் இருக்கு. கிஞ்சித்காரம் (சிறிதளவேனும் தொண்டு) செய்யாத ஒருவனுக்கு பகவானின் அடிமை, பகவானின் சொத்து என்கிற அந்தஸ்து இருக்காது. நாம் அப்படிப் போய்விடக்கூடாது, நாம் சிறிதளவாவது கைங்கரியம் செய்யவேண்டும் என்பதற்காக கிஞ்சித்காரம் டிரஸ்ட் தொடங்கப்பட்டது.
தென்றல்: உபன்யாசகராக விரும்புபவருக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?
ஸ்ரீ வேளுக்குடி: சரக்கு நிறைய வேணும். நிறையப் படிச்சு நிறைய தெரிஞ்சக்கணும். முடிந்தால் 40, 45 வயதுவரை பெரியவாளிடம் பாடம் கேட்கலாம். முதல் 10 வருஷம் படிச்சிட்டோம்னு விட்டுடக்கூடாது. மேல மேல கடல்மாதிரி அர்த்தம் இருக்கு. அதனால கண்டிப்பா நிறைய படிச்சிட்டுத்தான் சொல்லணும். இரண்டாவது, தான் அனுபவத்தில் காணாததைச் சொல்லக்கூடாது; சொன்னாலும் எடுபடாது. நான் ஒண்ணு அனுபவிச்சிருக்கேன்னா, அது நம்ம உள்ளத்தை உருக்கியதுன்னா அதை இன்னொருத்தருக்கு எடுத்துச் சொன்னா, அவாளுக்கு ஆனந்தத்துல சிரிக்கவோ, கண்ணீர் விடவோ வரும். அதனால வாய் வார்த்தையாச் சொல்லாமல் உள்ளத்தில் பட்டு நன்னா அனுபவித்துச் சொல்லணும்.

உபன்யாசகர் ஆகிவிட்டால் ரொம்ப சீரியஸ் ஆகிவிட வேண்டும். அதாவது ஒருத்தருக்கு, நாள், நேரம் கொடுத்துட்டோம்னா அதுதான் முதலில். அதை எக்காரணத்தைக் கொண்டும் கேன்சல் செய்யக்கூடாது. உடம்பு சரியில்லை, பேச முடியலைன்னு இருந்தாலொழிய, மத்த எக்காரணத்துக்காகவும் அதை நிறுத்தக்கூடாது. நிகழ்ச்சி இரண்டுமணி நேரம் என்றால் இரண்டு, இரண்டரை மணி நேரம் சொல்லலாம். அரையும் குறையுமா நிறுத்திவிடக் கூடாது. உபன்யாசம் கேட்க வரவா எல்லாரும் தங்கள் நேரம் ஒதுக்கித்தான் வரா. நாம சிரத்தையா இருந்து பேசினாத்தான் அவாளுக்கு நாலு விஷயம் கிடைக்கும்.

நாம விளக்கும்போது, அவர்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சு விளக்கணும். ஆனா, நான் என்ன சொல்றேனோ அதுல அவாளுக்கு எல்லாமே தெரியும்னு நினைச்சு ரொம்ப ஜாக்கிரதையாச் சொல்லணும். அவாளுக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சு கண்டபடி உளறக்கூடாது. எல்லாம் அவாளுக்குத் தெரியும்னு நினைச்சு விவரமா விளக்காம ஓடவும் கூடாது. இதைப்போல ஒரு dual view எடுக்கணும்.

தென்றல்: ஓர் இறைத் தொண்டராக நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?
ஸ்ரீ வேளுக்குடி: பகவானை நன்னா அனுபவிக்கணும். பலருக்கு அந்த அனுபவத்தைப் பகிர்ந்துக்கணும். பல பேருடன் பகவத் விஷயத்தைப் பேசணும்.

கண்ணன் கீதையில், "போதயந்த: பரஸ்பரம் மச்சித்தா, மத்கதப்ராணா:" என்று சொல்கிறார். என்னிடத்தில் உள்ளம் வைத்தவர்கள் ஒருவருக்கொருவர் என் கதைகளையே பேசிக் கொள்கிறார்கள். ஆனந்தப்படுகிறார்கள்; கண்ணீர் உகுக்கிறார்கள். அது பண்ணினால் போதும்.

தென்றல்: தமிழின் தனித்துவம்பற்றி…
ஸ்ரீ வேளுக்குடி: தமிழ் என்னும் மொழி சம்ஸ்கிருதத்தைச் சாராமல், தனித்து, தலைநிமிர்ந்து நிற்கும் மொழி. பாரதத்தின் மற்ற அனைத்து மொழிகளும் வடமொழியைச் சார்ந்திருப்பவை. தமிழில் ஆழ்வார்கள் நான்கு வேதத்தையும் அதன் கருத்துக்களையும் மொழிபெயர்த்துள்ளனர். வருங்காலத்தில், தமிழில் இருக்கக்கூடிய வேதங்கள்தான் அனைத்துலகிலும் பரவும். அதை வைத்துக்கொண்டுதான் இறைவனை அடைவார்கள் என்கிற எண்ணத்துடன் தமிழ்மொழியை வளர்த்திருக்கிறார்கள். அகத்தியரால் வளர்க்கப்பட்டது தமிழ்மொழி.

இதன் பெருமை தெரிந்த நாதமுனிகள் முதலிய ஆச்சாரியார்கள், விஷ்ணு கோயில்களில், இன்றும், வடமொழி வேதத்திற்கு நிகராக, தமிழ்மொழி வேதத்தினையும் பாடும் ஏற்பாட்டை 1200 ஆண்டுகளுக்கு முன்னேயே செய்துள்ளனர். சம்ஸ்கிருதம் நாட்டை ஆண்டுவந்த அந்தக் காலத்தில், தமிழ்மொழிப் பாடல்களை கோயில்கள்தோறும் இசைக்க வைத்தனர். ஆக, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விஷ்ணு ஆலயங்களின் வழிபாட்டு மொழியாக தமிழ் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருமாளுக்குப் புறப்பாடு நடக்கிறதென்றால் தமிழ்மொழி வேதம் பகவானுக்கு முன்னும், வடமொழி வேதம் அவர் புறப்பாட்டிற்குப் பின்னும் ஓதப்படுகிறது. அதனால் எம்பெருமான் என்றுமே வடமொழி வேதத்தைத் தாண்டி நடப்பாரே தவிர, தமிழ்மொழி வேதத்தைத் தாண்டமாட்டார்.



தென்றல்: சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு சேர்த்தவர்களின் தொண்டுகள் பற்றிச் சொல்லுங்களேன்....
ஸ்ரீ வேளுக்குடி: நம்மாழ்வார் ஆரம்பித்தார். சம்ஸ்கிருத வேதத்தை பகவான் நம்மாழ்வாருக்கு போதிக்க, அவர் அந்தக் கருத்துக்களை உள்ளத்தில் தேக்கி, தமிழ்வேதமாக வெளிப்படுத்தினார். "வேதம் தமிழ்செய்த மாறன்" என்று அவர் போற்றப்படுகிறார். உலக இயல்பிலிருந்து மாறியிருந்ததால் அவர் மாறன். பகவானிடத்திலே ஈடுபட்டவர். 16 ஆண்டுகள் யோகத்தில் இருந்தவர். அதையே பின்னால் வந்த 10 ஆழ்வார்களும் தொடர்ந்து செய்தனர். நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரியநம்பிகள், ராமானுஜர் என்று இந்த மகான்கள் அனைவருமே அவ்வாழ்வார்களையே தலைவர்களாக ஏற்றுக்கொண்டு, தமிழ்வேதத்தை நன்கு பரப்பினர். மணிப்பிரவாள நடை என்னும் உரை முறையை ஏற்படுத்தினர்.

ராமானுஜர் காலத்திற்குப் பின்னால் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை என்னும் மகான்கள், திவ்யப் பிரபந்தம் - நாராயண ப்ரவசனங்களுக்கு - தமிழில் உரையெழுதி, இந்தத் தமிழ் வேதமாகிய நாலாயிரத்திற்கு மிகுந்த பெருமையூட்டினர். கடைசியாக மணவாள மாமுனிகள் "ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே" என்று புகழ்ந்தார். தமிழ் வேதங்களாகிய நாலாயிரமும், மணவாள மாமுனிகள் அவதரிக்காமல் போயிருந்தால் அதன் பெருமை உலகிற்கு வந்திருக்குமா என்று தெரியாது.

தென்றல்: சாஸ்திரங்கள் சொல்லும் வழிமுறைகளுக்கு மூலம் என்ன?
ஸ்ரீ வேளுக்குடி: சாஸ்திரம் என்பது வேதசாஸ்திரம். வேதங்களில் கர்மங்கள் விசாரிக்கப்படும். எந்தெந்தக் கர்மத்தை எப்படியெப்படிச் செய்யவேண்டுமென்று அது சொல்லும். வேதாந்தத்தில் பிரம்மம் விசாரிக்கப்படும். கர்மத்தால் ஆராதிக்கப்படும் பிரம்மத்தைப்பற்றிக் கூறுவது அது. அதோடு நில்லாமல் ஸ்மிருதி என்பதும் சொல்லப்படுகிறது. போதாயன ஸ்மிருதி, ஆச்வலாயன ஸ்மிருதி, கௌதம ஸ்மிருதி போன்ற ஸ்மிருதிகளில் எந்த சம்ஸ்காரத்தை எப்படிச் செய்யணும் - பிறந்தால் என்ன, இறந்தால் என்ன, கல்யாணம் ஆனால் என்ன, சீமந்தமானால் என்ன - என எல்லாவற்றிற்குமே அந்த ஸ்மிருதிகளில் வழிகாட்டுதல்கள் இருக்கும். பக்தியைப்பற்றி, எப்படி இறையன்போடு இருப்பது, ஞானத்தை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இதிகாச புராணங்கள் மூலமாகக் கிடைக்கும்.

ஆக, வேதங்கள் கர்மத்தை விசாரிக்கும். வேதாந்தம் பிரம்மத்தைப் பற்றித் தெளிவுபடுத்தும். ஸ்மிருதிகள் நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யவேண்டிய சம்ஸ்காரங்களைச் சொல்லும். இதிகாச, புராணங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய ஒழுக்கநெறிகள் என்ன, பக்தி எப்படி, ஞானம் எப்படி என்பதைச் சொல்லும்.

தென்றல்: மூவரைப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுவது பற்றி...
ஸ்ரீ வேளுக்குடி: கடவுளைப் பிடித்துக் கொள்ளவேண்டும். அந்தக் கடவுளுக்குப் பிரதிநிதியாக இருப்பவர் இருவர். ஒன்று குரு. மற்றவர் மாதா, பிதா. கடவுள் படைக்கிறார். அறிவையும் கொடுக்கிறார். அதில் மாதா, பிதாக்கள் பிரதிநிதிகளாக இருந்து படைக்கின்றனர். குரு பிரதிநிதியாக இருந்து அறிவு கொடுக்கிறார். ஆகவேதான் மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ; ஆச்சார்ய தேவோ பவ; அதிதி தேவோ பவ என்று சாஸ்திரம் கூறுகின்றது. ஆகவே கடவுளின் பிரதிநிதிகளான இவர்களையே கடவுளாகக் கண்டு தொழவேண்டும்.

தென்றல்: இந்தியத் தத்துவப் பாரம்பரியத்தில் ஸ்ரீ பகவத்கீதையின் பங்கு என்ன?
ஸ்ரீ வேளுக்குடி: இந்தியப் பாரம்பரியம் என்பதே சரீர-ஆத்ம விவேகம்; உடல் வேறு, ஆத்மா வேறு. இந்த உடல் அழியக்கூடியது. ஆத்மா நிலையானது. ஞானமற்றது உடல், ஞானமுடையது ஆத்மா என்பதுதான். ஆத்மா நித்யம் என்றாலே அது என்றுமிருக்கும், வாழும் என்பது பொருள். அப்போ எங்கே வாழும் என்ற கேள்வி வந்தால், கர்மாதீனமாக அடுத்தடுத்த பிறவிகள் எடுத்து வாழும் என்பது பதில். இதுதான் பாரத கலாசாரமே! சனாதன தர்மத்தின் அடிப்படையே சரீர-ஆத்ம விவேக ஞானம்தான். ஆத்மா, கர்மாதீனமாக வெவ்வேறு உடல்களை எடுக்கிறார். இந்தச் சுழல்களைப் போக்குவதற்காக பக்தியோகம் சொல்லப்படுகிறது.

அப்போ ஆத்மாவைப்பத்தின தத்வார்த்தம், ஒருவர் எதற்காகப் பிறவி எடுக்கிறார், அந்தப் பிறவிகள்லேர்ந்து வெளில வர்றதுக்கு அவர் செய்யவேண்டியது என்ன என்பதுதான். அதுதான் பக்தி. அந்த பக்தியை, கண்ணனைக் குறித்துச் செய்யவேண்டும், அவர் திருவடிகளை அடையலாம். இதுதான் கீதையினுடைய கருத்து. இந்தக் கருத்துதான் பாரததேசத்தின் அடிப்படைத் தத்துவமே!

உடலும் ஆத்மாவும் ஒன்று என்று நினைத்தால் உடலுக்கு வேண்டிய சொகுசுகளை, வசதிகளைப் பண்ணப் பார்ப்போம். அவை வெவ்வேறு என்று நினைத்தால் ஆத்மாவுக்குரிய வசதிகளைச் செய்வோம். ஆத்மா நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எது செய்தாலும் அது புண்ணியமாகவும், நமக்கும் பிறருக்கும் உதவுவதாகவும் உள்ளது. ஆனால் சரீர சுகங்களுக்காகச் சிலவற்றைச் செய்யும்போது அது சில சமயங்களில் பாபமாகவும், சில சமயங்களில் பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கிறதாகவும் முடிந்துவிடுகிறது. இந்த கலாசாரம் இரண்டும் சொல்லப்பட்டதே கீதையில்தான்.

தென்றல்: இன்றைக்கும் ராமாயணம், மகாபாரதத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்குக் காரணம் அவற்றின் கதையம்சமா அல்லது அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்களா?
ஸ்ரீ வேளுக்குடி: வாழ்க்கைத் தத்துவங்களைத் தனியாகக் கொடுத்தால் எடுபடாது. கதையம்சங்கள் மட்டுமே இருந்தாலும் பல கதைகள் எடுபடுவதில்லை. ரிஷிகள் பண்ணினதே வேப்பங்கொழுந்தை, வெல்லப்பாகுக்குள் வைத்து, அதைச் சாப்பிடும்படிக் கொடுத்ததுதான். நேரே தத்துவார்த்தங்கள், வாழ்க்கை நுணுக்கங்கள் என்று சொல்லிவிட்டால் சற்று கசக்கலாம். அந்தக் கசப்பு வேண்டாம் என்றுதான் அதைக் கதையோடு புனைந்து, யாரெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்களோ அவர்கள் கதையைச் சொல்லி, அதோடு சேர்த்து, வெல்லப்பாகு மாதிரி அதற்குள்ளே தத்துவார்த்தங்களை வைத்துச் சொன்னதுதான் அவற்றின் தனிச்சிறப்பே!

வேதாந்தம் என்று எடுத்துக் கொண்டால் கதையே இருக்காது. தத்துவம் மட்டுந்தான் இருக்கும். கதைப்புத்தகம் என்று எடுத்துக்கொண்டால் கதைமட்டுந்தான் இருக்கும். ஆனால் மகாபாரதம், ராமாயணத்துள்தான் தத்துவங்கள் கதைக்குள் வைத்து நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். அதுதான் அவற்றின் தனிச்சிறப்பு.

தென்றல்: முன்பைவிடக் கோயில்களில் இப்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அது ஒரு வணிகமாகி விட்டதாகப் பலர் கூறுகின்றனர். நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஸ்ரீ வேளுக்குடி: கூட்டம் கூடியிருப்பதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று, ஜனத்தொகை கூடிவிட்டது. இரண்டு, கோயில்களின் மகாத்மியம், பிரபலத்தன்மைபற்றி புத்தகங்கள், தொலைக்காட்சி, வலைத்தளம் என்று பரவலாகப் பலருக்கும் தெரியவந்துவிட்டது. 'நாமும் ஒருதடவை போய் பார்த்துவிட்டு வருவோமே' என்று வருகிறார்கள். மூன்றாவது காரணம், ஓரிடத்திற்குப் போவது, வருவது சுலபமாகிவிட்டது. நல்ல நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. கார், பஸ் எல்லாம் இருக்கவே நினைத்தவுடன், நினைத்த இடத்துக்குப் போய்விட்டு வரமுடிகிறது. நான்காவது காரணம், இன்ன கோயிலுக்குப் போனால் இன்னது கிடைக்கும் என்கிற பிரச்சாரம் முன்னாளில் கிடையாது. ஆனால் இன்றைக்கு இன்ன நாளில், இந்தப் பெருமாளை, அம்பாளை, சிவனை வழிபட்டால், இன்னின்ன பரிகாரம் செய்தால் இன்னது கிடைக்கும் என்று ஆகிவிட்டபடியால் அது நமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் கோயிலுக்கு வருகிறார்கள். இது கடைசிக் காரணம்தான்.

இதில் வணிகமயமாகி விட்டது என்று சொன்னால் பக்தர்கள் உள்ளத்தில் தம்மைப் பொறுத்தவரை வணிகமயம் கிடையாது. வணிகமாக நினைத்து ஆலயங்களுக்கு வருவதில்லை. இறைவனை வணங்கத்தான் வருகிறார்கள். ஆனால், நடத்துபவர்களின் கோணத்தில் இருந்து பார்த்தால், வணிகமயம் என்று சொல்லிவிட முடியாது. இன்னும் கொஞ்சம் கூட்டத்தை வரவழைப்பதற்காக தனக்குத் தெரிஞ்சதையெல்லாம் பண்ணவேண்டும் என்ற ஆசையில், அவர்கள் செய்யும் சில செயல்களைப் பார்த்தால் வணிகமயம்போல நமக்குத் தோற்றமளிக்கலாம். எதனால் அந்தத் தோற்றம் வருகிறதென்றால் எந்தெந்த விஷயங்களுக்கு நன்கு செலவழிக்க வேண்டுமோ அதையெல்லாம் சுருக்கிவிட்டு, எது ஆகமப்படி ரொம்ப முக்கியமில்லையோ அதற்கு அதிகம் செலவழிப்பதால்தான்.

ஆராதனைக்குப் புஷ்பம், சந்தனக்காப்பு, குங்குமப்பூ, பிரசாதம், திருமஞ்சனம், புறப்பாடுகள், கோயில்களை நன்கு பராமரித்தல் இவற்றுக்குத்தான் ஆகமத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது பத்திரிகை அடித்தல், பெரிய பாண்டு வாத்தியம் வைத்தல், மற்ற களியாட்டங்கள், பட்டாசு வெடித்தல், பெரிய விளக்குகளை வைத்தல் போன்றவற்றிற்கு அதிகம் செலவழிக்கிறோம். இந்த மாறுதல்களினாலேதான் இது வணிகமாகுமோ என்று தோன்றுகிறது. எதைப் பண்ணினால் அது சாஸ்திரோக்தமாக இருக்குமோ அதைப் பண்ணவேண்டும் என்பது தெரியாததினாலே அவரவர் தங்களுக்குத் தெரிந்ததைச் செய்துவிடுகிறபடியால், இதைப்போல் குழப்பம் வருகிறது.

தென்றல்: யார் தர்மத்தைக் காக்கிறார்களோ அவர்களை தர்மம் காக்கிறது என்று பெரியோர் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கும் இது உண்மையா? இதற்கு கண்கூடான உதாரணம் ஏதும் சொல்ல முடியுமா?
ஸ்ரீ வேளுக்குடி: தர்மம் என்பது, இன்றைக்கு தர்மம் செய்கிறோம், உடனே அது நம்மைக் காக்கும் என்பதோடு நிற்காது; பகவான் நம்மை தர்மம் செய்யச் சொல்லியிருக்கிறார் என்பதற்காகச் செய்யப்பட வேண்டியதுதான் தர்மம். பகவானும் கீதையில் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். சாஸ்திரம் இன்ன தர்மம் வேணும் இன்ன தானம் வேணும்னு சொல்லியிருக்கிறதோ அதுதான் தேவை. 'எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து நான் இதைச் செய்யவில்லை' என்ற எண்ணத்தோடு செய்யவேண்டும். அப்பத்தான் அது தர்மமாகிறது.

குளம் வெட்டுதல், மரம் நடுதல், புலால் உண்ணாமை, அஹிம்சையைக் கடைப்பிடித்தல், சத்தியம் பேசுதல், பிறன் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தல், புலன்களை அடக்குதல் இதெல்லாமே தர்மத்தின் வெவ்வேறு வகைகள். இந்த தர்மங்களைக் கடைப்பிடித்தால் அவர் சொன்னதை நாம் செய்தோம் என்று இறைவன் சந்தோஷப்படுகிறார்,. அவர் சந்தோஷப்பட்டால் அவன் வாழ்வும் நலமாக இருக்கும். அது அவன் வாழ்வோடு நிற்காது. அவன் புண்ணியத்தைச் சேர்க்கிறான். அவன் சிறந்த புண்ணியசாலி என்றால் அவன் சந்ததியரும் நன்கு வாழ்கிறார்கள். இவனுடைய புண்ணியத்தை அவர்கள் கணக்கில் பகவான் கிரெடிட் பண்ணிவிடுகிறான் என்பதால் அல்ல; அப்படியெல்லாம் நடக்காது. இவன் நன்றாக தர்மம் செய்யவே, பகவான் சந்தோஷிக்க, பகவானின் சந்தோஷத்தால் அவர்கள் சந்ததிகள் நன்றாக இருக்கிறார்கள். ஆக தர்மம் என்பது நம்மோடு நிற்கப் போவதில்லை; நம்மையும் காக்கும்.

"தர்மேண பாபம் அபநுததி" என்று சொல்வார்கள். நாம் பல பிறவிகளாகச் சேர்த்துவைத்துக் கொண்டிருக்கும் பாபங்களைத் தொலைப்பதற்கு தர்மங்கள் செய்வோம். அதனால் கண்டிப்பாக நாம் தர்மத்தைச் செய்தால் அது நம்மை ரக்ஷிக்கும். நம்மை ரக்ஷிக்கும் என்றால் ஆத்மாவை ரக்ஷிக்கும். ஆத்மா, பகவான் சொல்படி கேட்டு நடக்க வேண்டியவர். தர்மத்தைச் செய்துவிட்டால் பகவான் சொல்படி கேட்பவர் ஆகிறார். அதனால் பகவான் சந்தோஷப்பட்டு ஆத்மரட்சணம் நடைபெறுகிறது.

தென்றல்: எனக்கும் கடவுளுக்கும் இடையில் யாரும் வேண்டாம்; எனக்கு குரு தேவையில்லை என்பவர்கள் இக்காலத்தில் இருக்கிறார்கள். உங்கள் கருத்தென்ன?
ஸ்ரீ வேளுக்குடி: நமக்கும் இறைவனுக்கும் நடுவில் யாரும் வேண்டாமென்று சொல்லிவிடுகிறோம். அப்போ இறைவனிடம் நேரே போகவேண்டும். ஆனால், அப்போ இறைவன் என்ன சொல்லியிருக்கிறார் என்பது முக்கியம். அவர், "என்னிடத்தில் நேரே வராதே! ஒரு குரு மூலமாகத்தான் வரவேண்டும்" என்று சொல்கிறார்.

நான் அவருக்கு அடியவன். அவர் சொன்னதைக் கேட்கவேண்டியவன். ஆனால், இந்த ஒரு வார்த்தையைமட்டும் விட்டுவிட்டு எனக்கும் அவருக்கும் நடுவில் யாரும் வேண்டாம்; நான் நேரே போகிறேன் என்று சொன்னால், வாசல் கதவுகூடத் திறக்காது. எதனால் இந்த அபிப்பிராயம் வருகிறது என்று பார்ப்போம்.

யாரோ ஒருசிலர், சிலசமயம் தப்பாக நடந்து விடுகிறபடியால் இடைத்தரகர் தேவையில்லை என்று பேசலாம். எந்தத் துறையில்தான் இல்லை? டாக்டர்களிலும் போலி உண்டு; வக்கீல்களிலும் போலி உண்டு; எதிலும் போலி உண்டு. நாளைக்கு நான் உடம்பு சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் போகாமலா இருக்கப் போகிறேன்? எனக்கும் மருத்துவருக்கும் இடைத்தரகர் வேண்டாம். இன்டர்நெட்டில் படித்துவிட்டேன். நானே என் உடல்நிலையைப் பார்த்துக்கொள்கிறேன் என்று எவரும் பேசுவதில்லை. ஆக, இது எடுபடாத வாதம். ஒரு கணக்குப் பாடமோ, அறிவியல் பாடமோ எது வேண்டுமானாலும் சொல்லித்தர ஆசான் கண்டிப்பாக வேண்டும். ஆக யார் சரியானவர்கள் இல்லையோ அவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களைப் பற்ற வேண்டியதுதான்.

பகவான் தெளிவாக இருக்கிறார். அவர்:
"பசுர் மநுஷ்ய பக்ஷீவா ஏச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா:
தேநைவ தே ப்ரயாச்யந்தி தத்விஷ்ணோ: பரமம்பதம்"

என்று சொல்லியிருக்கிறார். "விஷ்ணுவுடைய பரமபதத்தை அடைவதற்கு நேரே செல்லமுடியாது. பசுவோ, மனிதனோ, பறவையோ, யாராக இருப்பினும் ஒரு குரு மூலமாகத்தான் செல்ல வேண்டும்" என்கிறார் அவர்.

இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். தாமரையை ஆதவன்தான் மலர்த்தவேண்டும். நான் ஒரு சட்டியில் தணலைப் போட்டு தாமரைக்கருகே கொண்டுபோய் வைத்தால் அது மலர்த்தாது, உலர்த்திவிடும். ஆக, தள்ளியிருக்கும் சூரியன்தான் மலர்த்தவேண்டும். அதேபோல் ஆத்மா என்னும் தாமரை, ஞானத்தால் மலர வேண்டுமானால் எங்கோ சூரிய மண்டலத்திற்கு நடுவில் இருக்கும் நாராயணன் - "சூர்யமண்டலமத்ய வர்த்தீ நாராயணா!" என்னும் அவர்தான் இந்தத் தாமரையை மலர்த்த வேண்டும். பக்கத்தில் இருக்கும் யாரும் மலர்த்த முடியாது.

தாமரையைத் தண்ணீரில் இருந்து எடுத்து, நிலத்தில் போட்டுவிட்டால் அதே சூரியன் மலர்த்தமாட்டார். உலர்த்திவிடுவார். ஆகத் தண்ணீரில் இருக்கவேண்டும்; தள்ளியிருக்கும் சூரியன்தான் மலர்த்தவேண்டும் என்று இரண்டு கண்டிஷன்கள். அதேபோல ஆத்மஞானம் மலர வேண்டுமானால் இறைவன்தான் மலர்த்த வேண்டும். அதேசமயம் ஆச்சார்யன் என்னும் தண்ணீரில் அம்மலர் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இறைவன் மலர்த்துவார். குருவினுடைய சம்பந்தம் என்னும் தண்ணீரிலிருந்து 'ஆத்மா' என்னும் தாமரை வெளியேற்றப்பட்டுவிட்டால், அதே பகவான், கோபித்துக்கொண்டு நன்றாக உலர்த்திவிடுவார்.

இப்படித்தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. 'தெய்வம் இல்லை' என்னும் நாத்திக வாதத்திற்குக்கூட குரு தேவைப்படுகிறார். 'தெய்வம் இல்லை' என்று சொல்பவர்கூட யாரோ ஒருவர் அப்படிக் கற்றுக்கொடுத்துதானே சொல்கிறார்! ஆக, தெய்வம் உள்ளது; தெய்வம் இல்லை - எந்த வாதத்திற்குமே குரு உண்டு. குருவின் மூலமாகத்தான் பகவானை அணுகமுடியும்.

தென்றல்: ஓர் இறைத்தொண்டராக நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?
ஸ்ரீ வேளுக்குடி: நம்முடைய சாஸ்திரங்கள், ஜீவாத்மா பகவானுடைய சொத்து என்று கூறுகின்றன. அதை உணர்ந்துவிட்டால், அவர்களை தானே தாய் தந்தையர் குழந்தையைக் காப்பாற்றுதல்போலே இறைவன் காப்பாற்றிவிடுகிறார். இந்தச் செய்தி எல்லாரையும் அடையவேண்டும்.

நாம் இறைவனை அனுபவிக்கிறோம். ஆனந்தமாக உள்ளது. 'இனியது தனி அருந்தேல்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நம் தமிழ்ப் பண்பாடே இனிமையானவற்றைத் தனிமையாகச் சாப்பிடாதே என்பதுதான். ஆக, நமக்கு இனிமையாக ஒன்று கிடைத்திருக்கிறது என்றால் அதைத் தனியாக உண்ணாமல், பலரிடம் பகிர்ந்து உண்கிறோம். இறையருளை, இறைவனின் இன்பமயமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்.

கண்ணன் கீதையில், "போதயந்த: பரஸ்பரம் மச்சித்தா மத்கதப்ராணா" என்கிறார். "என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவன் என் கதைகளை ஆனந்தமாகப் பேசிப் பொழுதுபோக்குகிறான். இதுதான் என் பக்தன்" என்கிறார். அதனால் ஒருவருக்கொருவர் பகவானுடைய கதைகளைப் பேசுவதே புண்ணியம். அதுதான் நா படைத்த பயன். அதுதான் செவி கிடைத்த பயன். அதைச் செய்யவேண்டும் என்ற ஒன்றே என் குறிக்கோள்

தென்றல்: கடவுளிடம் நாட்டம் கொண்டாலே அவர் நம்மை வழிகாட்டி நடத்துவார் என்பதுபோன்ற அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை வைத்து உதாரணத்துடன் சொல்லமுடியுமா?
ஸ்ரீ வேளுக்குடி: கண்ணனே கீதையில் சொல்லும்போது, "சிறிதளவேனும் நான் சொல்வதைச் செய்தால் கண்டிப்பாக அது மங்களகரமாக முடியும்படிக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்" என்கிறார். "நஹி கல்யாணக்ருத் கஸ்சித் துர்கதிம் தாத கச்சதி" என்கிறார். அந்த நாட்டம் இருந்து, வெறுப்பில்லாமல், விலக்காமல் இறைவனிடத்தில் நாட்டம் கொண்டால், கண்டிப்பாக வழிநடத்திச் செல்வார்.

நானும் ஏதோ படித்து எங்கோ இருந்தவன்தான். தந்தையார் இருந்தார், சொல்லிக்கொடுத்தார். உண்மை. அதன் வழி வந்திருந்தாலும் வேறு படிப்பு படித்திருந்த காரணத்தால் ரொம்பச் சுலபத்தில் சுழல் இழுத்துக்கொண்டு போயிருக்கலாம். இரண்டு குழந்தைகள், மனைவி இருந்தனர். தாயார் இருந்தார். தகப்பனார் மட்டும் இல்லை. அந்தச் சமயத்தில் ஏதோ ஒன்று இழுத்துக்கொண்டு போகாமல், தந்தையினுடைய அருள், இறைவனிடத்தில் இருந்த ஒரு சிறு நாட்டம், இந்த அளவுக்குக் கொண்டுவந்து விடணும்ங்கறதில்லை. அது அவராகப் பார்த்து கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போயிருந்தால்தான் வரும்.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்

*****


ஸ்ரீராமர் முகத்தில் சந்தோஷம்
பாம்பேல ஒருசமயம் ராமாயணம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒன்பது நாள் நிகழ்ச்சி. ஒரு வடநாட்டுப் பெண்மணி ஒன்பது நாளும் கேட்க வந்தார். ராமர் சன்னதியில் அவரும் உட்கார்ந்து கேட்பார். எனக்கு அவர் ஹிந்திக்காரர் என்பது தெரியாது. கடைசிநாள் நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததும் அவரும் வந்து நமஸ்காரம் பண்ணினார். தினமும் வருகிறாரே என்பதற்காக நான் தமிழில் ஏதோ கேட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் "அவர் இந்த ஊரைச் சேர்ந்தவர். அவருக்குத் தமிழ் தெரியாது" என்று சொன்னார்கள்.

தமிழர்கள்கூட நான்குநாள் வந்தால் ஐந்தாம்நாள் காணோம் என்று இருந்தார்கள். இவரோ ஒன்பது நாளும் விடாமல் வந்தார். "9 நாளும் வந்து ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்து கேட்டீர்களே, உங்களுக்கு தமிழே தெரியாது என்றால் எதற்காக உட்கார்ந்திருந்தீர்கள்?" என்று ஹிந்தியில் கேட்டேன். அதற்கு அவர், "எனக்கு நீங்க சொன்ன விஷயமெல்லாம் புரியலை. ஆனா, நீங்க சொல்லிண்டிருந்த ராமாயணத்தை இங்க இருக்கிற ராமர் கேட்டார். அதைக் கேட்டு அவர் முகம் ரொம்பசந்தோஷமா இருந்தது. நான் அதைச் சேவிச்சிண்டு உட்காரத்தான் தினமும் வந்தேன்" என்று சொன்னார். அது என் பொட்டில் அடித்தமாதிரி இருந்தது. ராமாயணத்தில் ஊறி ராமர் ரசிக்கிறார்; அவர் முகத்தைப் பார்த்து ஆனந்தப்படுவதுதான் பக்தனின் இலக்கணம் என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார்.

- ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

*****


பக்தர் குழாத்தைத் திருத்தல யாத்திரை அழைத்துச் செல்வதால் என்ன பயன்?
முதலில் சகிப்புத்தன்மை வரும். வீட்டில் வசதியுடன் பிரைவசி, பிரைவசி என்று இருக்கிறோம். அதைத் துறந்து வெளியில் வந்து பலபேருடன் பழக, தங்கும் அறையைப் பகிர்ந்துகொள்ள, முடிகிறது. அதற்கு ஒப்புக்கொள்கிறோம்; அதற்குப் பழகுகிறோம். பொது இடங்களில் பலருடன் இணைந்து சாப்பிடப் பழகுகிறோம். பிருந்தாவன யாத்திரையின்போது ஒரு கிரவுண்டில், ஒரே சமயத்தில் எட்டாயிரம் பேரை அமர வைத்து, 20 நிமிஷத்தில் அனைவருக்கும் பரிமாறியிருக்கிறோம். 8,000 பேர் அந்த யாத்திரைக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு செவ்வகமான மைதானத்தில் அமரவைத்து ஏழுநாள் பாகவத சப்தாஹம் சொன்னேன். இரண்டரை மணிநேர உபன்யாசம் அது. முடிந்ததும் அத்தனை பேருக்கும் ஒரே சமயத்தில் சாப்பாடு!

எங்கள் யாத்திரையில் டி.வி., மீடியா, வம்பு, தும்பு எதுவும் கிடையாது. அதெல்லாம் இல்லாமல் பகவானிடத்திலேயே உள்ளத்தைச் செலுத்திப் பழகமுடிந்திருக்கிறது. எல்லா இடங்களிலும் பொதுநதிகளில்தான் குளிக்கவேண்டும். அதற்குப் பழகுகிறார்கள். திமிர்த்தனமும், வீண் பேச்சும் இல்லாமல், கோபித்துக் கொள்ளாமல் இருக்கப் பழகுகிறார்கள். Indirect weight reduction program இது. நிறைய நடக்க வைப்போம். மலை ஏறவேண்டும், இறங்கவேண்டும். நதிக்கரையில் நிறைய நடக்கவைப்போம். சரீரம் இளைத்து நன்றாக ஒத்துழைக்கும். நம் மனம், சரீரம், ஆத்மா என எல்லாவற்றிலும் இது நல்ல மாறுதல்களைக் கொண்டுவருகிறது.

- ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

*****


கிஞ்சித்காரம் டிரஸ்ட்
'கிஞ்சித்காரம் டிரஸ்ட்' மூலம் பல்வேறு நற்பணிகளைச் செய்கிறோம். ஐந்து கோயில்களில் நந்தவனத்தைப் பராமரித்து எம்பெருமானுக்கு புஷ்பமாலை சாற்றும் கைங்கரியத்தைச் செய்கிறோம். அங்கே இயற்கைச்சூழல் கெடாமல் பார்த்துவருகிறோம். ஸ்ரீரங்கத்தில் வேத பாடசாலை நடத்துகிறோம். கிராமப்புறக் குழந்தைகளுக்கு 12 வயதிலிருந்தே நல்ல பள்ளியில் சேர்ந்து படிக்கப் பணவுதவி செய்கிறோம். தற்போது எஞ்சினியரிங் படிக்கக்கூட உதவுகிறோம். 'அப்யாச கேந்திரா' என்னும் vocational training center for special children (kinchit.org/abhyasa-kendra) ஒன்றை ஸ்ரீரங்கத்தில் ஆரம்பித்து நடத்தி வருகிறோம். இவர்களை 14 வயதுக்குமேல் வைத்துப் பராமரிக்க நிறைய சென்டர்கள் இல்லை. அதனால் நாங்கள் எடுத்துக் கொள்ளும்பொதே 14 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களை எடுத்துக்கொண்டு, அவர்களுக்குப் பயிற்சிகொடுத்து, சின்னச் சின்ன வேலைகளைச் சொல்லிக் கொடுத்து அதன்மூலம் வருவாய் வரும்படிச் செய்கிறோம். இதை V-Excel Foundation of Chennai உடன் சேர்ந்து செய்கிறோம். ஒழுக்க நெறிகளைச் சொல்லிக் கொடுக்கவும், அதில் எப்படி, ஆழ்வார்கள் பாசுரங்களில் உயர்வு தாழ்வில்லாமல், சாதி வேறுபாடில்லாமல் சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காகவும் ஒரு 20 சென்டர்களில் வகுப்புகள் நடத்துகிறோம். இது 8-18 வயதுக்குட்பட்டவர்களுக்கானது. இதை ஸ்ரீரங்கம் மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி என்று பல இடங்களில் நடத்திவருகிறோம். கேரளாவில் திருச்சூருக்கருகில் குலசேகர ஆழ்வாரின் அவதாரத் தலத்தில் 12 வருடம் முன்பு ஒரு கோயில் கட்டும் பாக்கியம் கிடைத்தது. தவிர நிறைய மருத்துவ முகாம்கள் நடத்திவருகிறோம்.

அடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். அது கோவிலாக இருக்கலாம், நினைவிடமாக இருக்கலாம். அவை பழுதுபட்டிருந்தால், HR & CE துறையுடன் சேர்ந்து, அதற்கான அனுமதி வாங்கி அந்த இடங்களை முழுவதுமாகச் சீர்செய்து, புதிதாக்கி பராமரிக்கிறோம்.

- ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்

*****


பார்க்க, கேட்க, படிக்க
பாசுரங்களைப் பாராயணம் செய்யும் முறையை அறிய: kinchit.org/audio/

சுவாமிகளின் சிறு சிறு ஆன்மிக உரைகளை வாட்ஸப் மூலம் தினந்தோறும் கேட்க: kinchit.org/en-pani-whatsapp-satsang

சுவாமிகளின் உபன்யாசங்களைப் பார்க்க: www.youtube.com

ஆழ்வார்கள் பாசுரங்கள், பிரபந்தங்கள் பற்றிய இலவச மின்நூல்களைத் தரவிறக்க

*****
Share: 




© Copyright 2020 Tamilonline