Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
நீலகண்ட பிரம்மச்சாரி (பகுதி-6)
- பா.சு. ரமணன்|மார்ச் 2021||(1 Comment)
Share:
ஆஷ் கொலைக்குப் பின்...
தென்னிந்தியாவில் நிகழ்ந்த முதல் அரசியல் கொலை ஆஷ் கொலைதான். இங்கிலாந்தின் மன்னராகப் பதவியேற்ற ஐந்தாம் ஜார்ஜ், இந்தியாவிற்கும் ஏகபோகச் சக்ரவர்த்தியாகப் பதவியேற்க இருப்பதைக் கண்டித்தே அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டது. அந்தச் சம்பவம், பிரிட்டிஷாருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதற்கேற்றவாறு, ஆஷ் கொலையைத் தொடர்ந்து மற்றொரு படுகொலைச் சம்பவம் வட இந்தியாவில் நிகழ்ந்தது. வங்காளத்தில் மைமன்ஸிங் என்ற இடத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ராய் என்பவர் இளைஞர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரித்ததில், இதுவும், ஐந்தாம் ஜார்ஜ் இந்தியச் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்வதற்கு எதிர்ப்பைக் காட்டுவதற்காகவே நிகழ்த்தப்பட்டது தெரியவந்தது. ஆகவே, இந்தியாவில் மென்மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவிடக்கூடாது என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு கடும் சட்டதிட்டங்களை அமல்படுத்தியது.

ஆஷ் கொலை மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், மக்களின் ஆதரவு அதற்குப் பெரிதாகக் கிடைத்துவிடவில்லை. மக்களில் பலர் விடுதலை வேட்கை உடையவர்களாக இருந்தாலும், சுதந்திர வீரர்களுக்கு உதவும் பணியில் முனைந்திருந்தாலும், அவர்கள் கொலையை வரவேற்கவில்லை. தனிப்பட்ட உயிர்க் கொலைகளினால் பெரிதாக எந்தப் பலனும் விளைந்துவிடாது என்பதே பாரதி உள்ளிட்ட பல சுதந்திர வீரர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், வ.வே.சு. ஐயரின் நண்பரான மேடம் காமா, இந்த இரு கொலைகளையும் மிகவும் வரவேற்று, இச்செயலுக்காக மாண்டவர்களின் வீரத்தைப் போற்றி 'வந்தேமாதரம்' இதழில் எழுதினார். அது பிரிட்டிஷாருக்குப் பெரிதும் எரிச்சலூட்டியது. அவர்கள் சுதந்திர வீரர்கள்மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தினர். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களிடமும் கடுமை காட்டப்பட்டது. கோவைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நீலகண்ட பிரம்மச்சாரியும் இதனால் பாதிக்கப்பட்டார்.

சிறையில் எதிர்ப்பு
நீலகண்டனுக்குப் பலவிதமான தொந்தரவுகளைச் சிறை அதிகாரிகள் கொடுக்க ஆரம்பித்தனர். விறகு வெட்டும் வேலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், நீலகண்டன் அதைச் செய்ய மறுத்தார். தான் ஒரு அரசியல் கைதி என்றும், அரசின் சட்ட விதிகளின்படி தனக்கு இந்தவித வேலைகளை அளிக்க முடியாது என்றும் சிறை அதிகாரியை எதிர்த்து வாதிட்டார். தனிச்சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தாலும், உணவு மற்றும் குளியல் போன்றவற்றிற்காக அவர் தன் அறையிலிருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரங்களைப் பயன்படுத்திக் கொண்ட அவர், சக கைதிகளைத் தூண்டி, அவர்களையும் சிறை அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்பட வைத்தார். அவரது வார்த்தைகள் கைதிகளை மிகவும் ஈர்த்தன. நாளடைவில் நீலகண்டன் தலைமையில் ஒரு குழு உருவாகி, அவர்கள் சிறை அதிகாரிகளுக்குப் பெரும் தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். அதிகாரிகளால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாத நிலைமை ஏற்பட்டது. எங்கே இது ஒரு பெரிய கலவரமாகி விடுமோ என்று அஞ்சிய அவர்கள், மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

மேடம் காமா



இந்நிலையில் தனது நண்பர்கள் மூலம், அரசுத் தரப்புச் சாட்சிகளாக மாறிய கே.வி. ஆறுமுகம் பிள்ளை, ஒட்டபிடாரம் சோமசுந்தரம் பிள்ளை, சுந்தரபாண்டியபுரம் ராமசாமி ஐயர் ஆகிய மூன்று பேருக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினார் நீலகண்டன். கூடவே அரசுத் தரப்புக்கு ஆதரவாக இருந்த கடலூர் வழக்குரைஞர் சக்ரவர்த்தி ஐயங்காருக்கும் கொலை மிரட்டல் சென்றது. கடும் அச்சுறுத்தல் கொண்ட அந்தக் கடிதத்தைக் கண்டு பயந்துபோய், பிரிட்டிஷ் அரசாங்காத்திடம் புகார் அளித்தனர். உடனடியாக அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதுடன், மிரட்டல் கடிதம் குறித்து விசாரிக்கச் சிறப்பு அதிகாரியாக நீதிபதி தம்புவை நியமித்தது. நீதிபதி தம்பு ஏற்கனவே நீலகண்டனுக்கு நன்கு அறிமுகமானவர். அவர் முன்னிலையில்தான் நீலகண்டன் முன்னர் சரணடைந்திருந்தார். நீலகண்டனின் சுதந்திர வேட்கையையும், அதற்கான உள்ளத் துடிப்பையும் நன்கு அறிந்திருந்த தம்பு, விசாரணைக்காகக் கோவை சென்றார்.

ஜூலை 11, 1912 அன்று கோவை சிறையில் நீலகண்டனை அவர் தனி அறையில் சந்தித்துப் பேசினார். நீலகண்டன் அவரிடம் சிறையில் தான் நடத்தப்படும் விதம் குறித்த தனது அதிருப்தியைத் தெரிவித்தார். சக கைதிகளுக்கு அதிகாரிகளால் ஏற்படும் தொல்லைகளை விவரித்தவர், இதற்கு உடனடியாக ஒரு முடிவு வேண்டும் என்று வலியுறுத்தினார். நீலகண்டனின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. கைதிகளை இனி கடுமையாக நடத்துவதில்லை என்ற வாக்குறுதியும் அவருக்கு அளிக்கப்பட்டது. மிரட்டல் கடிதங்கள் குறித்த மேல்விசாரணைக்காக நீலகண்டன் கோவை சிறையிலிருந்து, பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதி தம்பு, அந்த விசாரணையின் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பினார். அதில், "நீலகண்டன் சிறையில் கடுமையாக நடத்தப்பட்டால், கொடுமைப்படுத்தப்பட்டால் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையின் மேல் அப்போது கவர்னராக இருந்த லாலி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கார்மைக்கேல் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர், அக்டோபர் 7. 1912 அன்று, நீலகண்டனின் கடுங்காவல் தண்டனையை எளிய தண்டனையாக மாற்றி உத்தரவிட்டார்.

சிறையில் சில சலுகைகள்...
அதுமுதல் நீலகண்டன் கைதிகளுக்கான ஆடையல்லாமல் சொந்த ஆடைகளை உடுத்த அனுமதி பெற்றார். நாள்தோறும் அவருக்கு அரிசி உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. புத்தகங்கள், நாளிதழ்கள் தரப்பட வேண்டும் என்ற நீலகண்டனின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. அவர் விரும்பினால், விரும்பிய வேலையைச் செய்யலாம் என்ற சலுகை வழங்கப்பட்டது. இவ்விதச் சலுகைகள் பெற்ற முதல் அரசியல் கைதி நீலகண்ட பிரம்மச்சாரிதான். அவர் காலத்தில் சிறையில் இருந்த சிதம்பரம் பிள்ளைக்கோ, சுப்பிரமணிய சிவத்திற்கோ இச்சலுகைகள் அளிக்கப்படவில்லை. காரணம், சிறையிலும் அவர் தனது புரட்சி நடவடிக்கைகளைத் தொடங்கி விடுவாரோ என்ற பிரிட்டிஷாரின் அச்சம். சக கைதிகளையோ, அதிகாரிகளையோ அச்சுறுத்தும், எதிர்க்கும் எந்தச் செயலிலும் அவர் ஈடுபடக்கூடாது என்று நீலகண்டனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. சிறை அதிகாரிகளுக்கு அமைதியாக ஒத்துழைத்து நடந்தால் அவரது ஏழாண்டு தண்டனை நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், நீலகண்டன் வழக்கம் போலவே நடந்துகொண்டார். சிறையிலும் அவர் 'புரட்சி வீரர்' ஆகவே இருந்தார். அதனால், தமிழகத்தில் இருந்தால்தானே அவர் தன் தொடர்புகள் மூலம் அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்துவார் என்று எண்ணி, பிரிட்டிஷ் அரசு, அவரை பெல்லாரி சிறைக்கு மாற்றியது.

தப்பித்தார்
பெல்லாரி சிறைக்குச் சென்றாலும், தனது புதுச்சேரி நண்பர்களிடம் ரகசியக் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் நீலகண்டன். இந்நிலையில் 1914ல் முதல் உலகப் போர் மூண்டது. இதுவே பிரிட்டிஷாருக்கு எதிரான நமது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கான தருணம் என்பதை உணர்ந்தார் நீலகண்டன். போர்ச்சூழலைப் பயன்படுத்தி, ஆயுதங்களைப் பெற்று இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை முற்றிலும் ஒழிக்க நல்ல வாய்ப்பு என்று கருதினார். இனியும் சிறைக்குள் இருந்தால் தனது அதுவரையிலான செயல்பாடுகள் அனைத்திற்கும் அர்த்தமில்லாமல் போகும் என்று நினைத்தார். செப்டம்பர் 17, 1914 அன்று, பல அடுக்குப் பாதுகாப்புக் கொண்ட பெல்லாரி சிறையிலிருந்து, சிறைக் கம்பிகளை அறுத்து நீலகண்டன் தப்பித்தார்.

திகைத்துப் போனது பிரிட்டிஷ் அரசு. பல இடங்களுக்கும் தனது காவல் படைகளை அனுப்பித் தீவிரமாகத் தேடியது.



மீண்டும் சிறைக்குள்...
சிறையிலிருந்து தப்பித்த நீலகண்டன், அருகிலுள்ள சில கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிந்தார். பின் செப்டம்பர் 20 அன்று ரகசியமாக ரயிலேறிப் பயணித்தார். தர்மாவரம் நிலையத்தில் இறங்கி வெளியேற முற்பட்டபோது, நீலகண்டனுடன் சிறையில் இருந்த, விசாரணை ஒன்றிற்காக அங்கு அழைத்து வரப்பட்டிருந்த கைதி ஒருவர், நீலகண்டனை அடையாளம் கண்டுகொண்டார். உடனே அவர், "இதோ.. நீலகண்டன்.. இதோ நீலகண்டன்" என்று கூச்சலிடவே, காவலர்கள் நீலகண்டனைச் சுற்றி வளைத்தனர். நீலகண்டன் கைது செய்யப்பட்டார். மீண்டும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். தப்பிச் செல்ல முயற்சித்ததற்காக தனியாக ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பிற சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.

தனது விதியை நினைத்து மனம் நொந்தார் நீலகண்டன். ஜெர்மனியில் இருந்து ஆயுதங்களை வரவழைத்து, மிகப்பெரிய புரட்சியைச் செய்து இந்திய விடுதலைப் போரை தீவிரப்படுத்தியிருக்கலாமே, அனைத்தும் பாழாய்ப் போனதே என்று மனம் குமைந்தார். அவர் செய்த கடும் முயற்சிகளின் தோல்வியை அவரால் ஏற்கவே முடியவில்லை. உணவு பிடிக்கவில்லை. உறக்கம் வரவில்லை. நாளடைவில் மனதை வேதாந்த விசாரணையில் செலுத்த ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாந்தம், தத்துவம் பற்றிய பல நூல்களை ஆழக் கற்றவர் நீலகண்டன். ஆகவே தனது மனத்தைத் தத்துவ விசாரணையின் பக்கம் திருப்பினார். எண்ணங்களையும், ஏக்கங்களையும், பிரார்த்தனைகளையும் தினந்தோறும் டைரியில் எழுத ஆரம்பித்தார். அதன் மூலம் மெல்ல மெல்ல அமைதி பெற்றார். சில மாதங்களுக்குப் பின் அவர் அங்கிருந்து கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலை
1919ல் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது. 'அமைதிக்கான கையொப்பம்' (Signature of Peace) நிகழ்வில், நல்லெண்ணத்தின் அடிப்படையில், அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், நீலகண்டன் விடுவிக்கப்படவில்லை. அவர் விசாகப்பட்டினம் சிறைக்கு மாற்றப்பட்டார். பல மாதங்களுக்குப் பின், ஆகஸ்ட் 14, 1919 அன்றுதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தவிப்பும் கம்யூனிச ஈர்ப்பும்
சென்னை வந்து சேர்ந்தார் நீலகண்டன். அதையறிந்த அவரது தந்தை, அங்கு வந்து அவரைச் சொந்த ஊரான எருக்கூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு சில மாதங்கள் தங்கியிருந்த நீலகண்டன், பின் மீண்டும் சென்னை திரும்பினார். உடன் அவரது சகோதரர் லக்ஷ்மி நாராயண சாஸ்திரிகளும் வந்திருந்தார். திருவல்லிக்கேணியில் உள்ள வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் ஓர் அறையில் அவர்கள் குடியிருந்தனர். இக்காலகட்டத்தில் நீலகண்டன் உடலளவிலும், உள்ளத்தளவிலும் சற்றே சோர்ந்திருந்தார். அவருடன் பாரதமாதா சங்கத்தில் இணைந்து செயல்பட்ட நண்பர்கள் பலர் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டிருந்தனர். சிலர் காலமாகி விட்டிருந்தனர். நீலகண்டனுக்கு உறுதுணையாக இருந்த சங்கரகிருஷ்ணனும் உயிரோடில்லை. பாரதி புதுச்சேரியிலிருந்து சென்னை வந்துவிட்டிருந்தார். இந்த நிலையில் யாரைச் சந்திப்பது, என்ன செய்வது என்ற குழப்பம் நீலகண்டருக்கு இருந்தது. வேலை இல்லை. கையில் காசும் இல்லை. என்ன செய்வதென்று புரியாத நிலை.

நீலகண்டன் நண்பர்கள் சிலரைச் சந்தித்தார். அவர்கள்மூலம் கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். அவ்வப்போது பாரதியாரைச் சந்தித்து உரையாடியதுண்டு. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷெவிக்) ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்தது. எனவே போல்ஷெவிக் கருத்துக்களும் கம்யூனிசக் கொள்கைகளும் இந்தியாவில் பரவலாயின. பாரதியும், நீலகண்டனும் பொதுவுடைமைச் சித்தாந்தம் பற்றி அவ்வப்போது உரையாடுவர். இந்தப் பேச்சில் பாரதியாரின் நெருங்கிய நண்பரான வழக்குரைஞர் எம். சிங்காரவேல் செட்டியாரும் கலந்துகொள்வார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை குறித்துச் சிங்காரவேலர் பேசுவார். அவரது பேச்சு நீலகண்டனைக் கவர்ந்தது. நீலகண்டன் சிங்காரவேலரின் நண்பரானார்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்...
நிரந்தரப் பணி என்று எதுவுமில்லாது கிடைத்ததைச் செய்து வாழ்க்கை நடத்தினார் நீலகண்டன். கையில் காசிருந்தால் உணவு, இல்லாவிட்டால் பட்டினி என்ற அவரது நிலை தொடர்ந்தது. ஒருநாள் இரவு பாரதியாரைச் சந்திக்கச் சென்றார் நீலகண்டன். அன்று காலை முதல் அவர் எதுவும் சாப்பிடவில்லை. ஒருவித மயக்கத்தில் இருந்தார். பாரதியார், நீலகண்டனை வழக்கம்போல் அன்போடு வரவேற்றுப் பேசினார். பேச்சில் மனம் செல்லவில்லை நீலகண்டனுக்கு. பசி மயக்கம். பாரதியாரிடம் கேட்கவும் தயக்கம். ஒரு விதமாகத் தயக்கத்தை விலக்கி, "ஒரு நாலணா இருக்குமா?" என்று கேட்டுவிட்டார். பாரதியார் திடுக்கிட்டு ஏன் என்று கேட்க, நீலகண்டன் தனது நிலைமையை எடுத்துச் சொன்னார். பதறிப்போன பாரதியார், "பாண்டியா! உடனே போய்ச் சாப்பிட்டு வாரும்" என்று கூறி, செல்லம்மாவிடமிருந்து, நாலணாவை வாங்கிக் கொண்டுவந்து நீலகண்டனிடம் கொடுத்தார். சாப்பிட்டு வந்ததும் அமைதியானார் நீலகண்டன். ஆனால், பாரதி அமைதியாகவில்லை. நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற உண்மையான தேச பக்தர்களுக்கா இந்த நிலை என்று மனம் வருந்தினார். ஆவேசப்பட்டார். அந்த வருத்தமும், கோபமும், ஆவேசமுமே பின்னர் ஒரு பாடலாக முகிழ்த்தது. "பாரத சமுதாயம் வாழ்கவே" என்ற அந்தப் பாடலில், நீலகண்டனின் அவல அனுபவத்தின் வெளிப்பாட்டை, "தனியொருவனுக் குணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற வரியின் மூலம் அதைச் சாடியிருந்தார் பாரதி. பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் மீதான தனது நம்பிக்கையை, ஈர்ப்பை அந்தப் பாடலில் வெளிப்படுத்தியிருந்தார் அவர். பாரதி மரணத்துக்குப் பின் அவரது பூத உடலைச் சுமந்து, பாரதிக்குத் தனது நன்றியை வெளிப்படுத்தினார் நீலகண்டன்.

சிங்காரவேலு செட்டியார் (அஞ்சல்தலை)



ரகசிய கம்யூனிஸ்ட் பிரசாரம்
பாரதியின் மறைவுக்குப் பின் சிங்காரவேலருடன் இணைந்து பொதுநலப் பணிகளில் ஈடுபட்டார் நீலகண்டன். The communist Federal League of India என்ற சங்கத்தை அவருடன் இணைந்து உருவாக்கினார். அதன்மூலம் பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். துண்டுப் பிரசுரங்களை அச்சடிப்பதிலும், ரகசியமாக விநியோகிப்பதிலும் தேர்ந்தவர் நீலகண்டன். அவர் அதனை மிகத் திறம்படச் செய்தார். அப்படி அச்சிடப்பட்ட ஒரு ரகசியத் துண்டுப்பிரசுரம், உளவுப் பிரிவினரின் கையில் கிடைத்தது. அதன் பின்னணியில் இருப்பவர் யார் என்று ஆராய்ந்தபோது, அது நீலகண்டன் என்பது தெரிய வந்தது. உடனே அரசின் தலைமைச் செயலாளருக்கு, "ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் குற்றவாளி நீலகண்ட பிரம்மச்சாரியே இந்த கம்யூனிச ஆதரவு துண்டுப் பிரசுரத்தின் ஆசிரியர் மற்றும் விநியோகஸ்தர்" என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நீலகண்டனைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மீண்டும் சிறையில்...
நீலகண்டனைப் பல இடங்களிலும் தேடியது காவல்துறை. இரண்டு மாதத் தேடலின் இறுதியில், ஆகஸ்ட் 25, 1922 அன்று, சென்னை, திருவல்லிக்கேணியில் ஓர் இடுகாட்டில் மறைந்திருந்த நீலகண்டன், காவல்துறையினரால் அதிரடியாகச் சுற்றி வளைக்கப்பட்டார். அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, தன்னிடமிருந்த பழைய ரிவால்வர் ஒன்றின் மூலம் உடன் வந்துகொண்டிருந்த காவலர் ஒருவரைச் சுட்டுத் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், அந்த ரிவால்வர் மிகவும் பழையது என்பதால் சரிவர இயங்கவில்லை. நீலகண்டனின் திட்டம் பலிக்கவில்லை. கைது செய்யப்பட்டு, விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டார் நீலகண்டன்.

அரசாங்கத்திற்கு எதிராகத் துண்டு பிரசுரம் தயாரித்ததாகவும், அனுமதியின்றி ரிவால்வர் வைத்திருந்ததாகவும், அதன்மூலம் கான்ஸ்டபிள் ஒருவரைக் கொலைசெய்ய முயற்சித்ததாகவும் நீலகண்டன் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு நடந்தது. வழக்கின் இறுதியில் நீலகண்டனுக்குப் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. நீலகண்டன் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், நீலகண்டனைக் கண்டு அஞ்சிய சென்னை சிறைச்சாலைக் கண்காணிப்பாளர், "நீலகண்டன் தேசத்துரோகத்தின் காரணமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மற்ற கைதிகளிடையே மோசமான செல்வாக்கைச் செலுத்த வாய்ப்புள்ளது. ஆகவே, இவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்" என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். "இவரது இருப்பு, சக கைதிகளுக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். இவர், அவர்கள் மன உறுதியைக் குலைத்துவிடும் வாய்ப்பும் உள்ளது" என்று அவர் அரசுக்குத் தெரிவித்தார். சிறைக் கண்காணிப்பாளரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, ராஜமுந்திரி சிறைக்கு மாற்றப்பட்டார் நீலகண்டன்.

சிறைச்சாலை சிந்தனைகள்...
ஆனால், அங்கு இவர் சாதாரணக் கைதி போலவே நடத்தப்பட்டார். எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படவில்லை. காரணம், இவர் மீதிருந்த அச்சம் ஒருபுறம், மற்றொருபுறம் எந்தவிதமான துன்புறுத்தலாலும், பயமுறுத்தலாலும் இவரைப் பணிய வைக்க முடியாது என்பதைச் சிறை அதிகாரிகள் நன்கு உணர்ந்திருந்தது. சில வருடங்களுக்குப் பின், ராஜமுந்திரியிலிருந்து மாண்ட்கோமெரி சிறைக்கும், அங்கிருந்து பஞ்சாபில் இருந்த மூல்தான் மத்திய சிறைக்கும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) மாற்றப்பட்டார் நீலகண்டன். ஐந்தாண்டுகளுக்குப் பின் அங்கிருந்து பர்மா-ரங்கூனில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

தனிமைச் சிறைவாசம் அவருக்குள் இருந்த சுயத்தைத் தேடச் செய்தது. தன்னுள் தான் ஆழ்ந்து பார்க்கக் கற்றுக்கொண்டார். பிறவி ஏன் நிகழ்கிறது, வாழ்க்கை என்றால் என்ன, மனிதன் அவன் வாழ்வில் செய்யவேண்டிய பணிகள் யாவை என்பது பற்றியெல்லாம் சிந்தித்தார். அதுவரை அவரது உள்ளத்துள் இருந்த அலைச்சல்களும், ஏக்கங்களும், ஏமாற்றங்களும் முடிவுக்கு வந்தன. மனம் தெளிவுற்றது. சிறைச்சாலை சிந்தனைகள் அவரது உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்தின.

விடுதலை
1922ல் கைதான அவர், சுமார் எட்டாண்டு காலச் சிறைவாசம் அனுபவித்த பின்னர், 30 ஜூன் 1930 அன்று ரங்கூன் மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஞான வாழ்க்கையை நாடும் ஒரு விவேகியாய், அவர் சிறையிலிருந்து வெளிப்பட்டபோது அவரது வயது 41.

(தொடரும்)
பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline