|
தென்றல் பேசுகிறது... |
|
- |செப்டம்பர் 2014| |
|
|
|
|
|
இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கமான காஷ்மீரைக் காலங்காலமாக ஆண்டுவரும் ஒரு குடும்பத்தின் வாரிசும், இன்றைய ஜம்மு காஷ்மீர் முதல்வருமான ஓமர் அப்துல்லா, "பாகிஸ்தானோடு பேச்சு, வார்த்தை தொடரவேண்டும்" என்று கூறித் தமது இதயம் யார் பக்கம் என்பதைத் திறந்து காட்டியிருக்கிறார். டெல்லியிலிருக்கும் பாகிஸ்தானிய ஹைகமிஷனர் அப்துல் பசித், இந்தியாவின் எதிர்ப்பையும் மதிக்காமல், காஷ்மீரப் பிரிவினைவாதிகளைத் தமது அலுவலகத்துக்கு அழைத்து உரையாடியதற்கு எதிர்வினையாக மோதி அரசு பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று கூறியது. நடக்கவிருந்த வெளியுறவுச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. அரைநூற்றாண்டுக்கு மேலாக நடந்துவரும் இழுபறிப் பேச்சுக்களால் இந்தியாவுக்குக் கிடைத்த லாபம் எதுவுமில்லை. "போக்கிரி நாடு (Rogue nation)" என்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் வன்முறையாளர்களின் கூடாரமாகத்தான் இருந்து வருகிறது. அதை ஏதோ செல்லநாய்க்குட்டி போலக் கையாள்வதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
இந்திய எல்லைப் பகுதியில் எந்த முகாந்திரமும் இல்லாமல் அத்துமீறி நுழைவதும், தூண்டுதலின்றித் தாக்குதல் நடத்துவதும் பாகிஸ்தானுக்கு வழக்கமாகிவிட்டது. இதற்கு முன்னர், இந்திய ராணுவம் மேலிடத்தின் அனுமதியில்லாமல் எதிர்த்துத் தாக்கக்கூடாது என்றிருந்தது. அதை நீக்கி, அவர்கள் சுட்டால், நீ திருப்பிச் சுடு என்று மோதி அரசு அனுமதித்துள்ளது எல்லை காக்கும் படையினருக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. இம்ரான் கானின் 'தெஹ்ரீக்-இ-இன்சாஃப்' கட்சி, நவாஸ் ஷரீஃப் அரசைப் பதவிவிலகக் கோரிப் பாகிஸ்தானியப் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ளது. அங்கே செழித்துவரும் பல்வேறு வன்முறை அமைப்புகள் கேட்பாரின்றிக் கோலோச்சி வருகின்றன. அமைதியை நாடும் சராசரிக் குடிமகனுக்கு அங்கே நிம்மதி இல்லை. சீனா போன்ற சில ஏகாதிபத்திய நாடுகளின் சுயநலம் நோக்கம் கொண்ட உதவியால்தான் இன்னும் பாகிஸ்தான் பிழைத்திருக்கிறது. இந்த நிலையிலும், இதுநாள்வரை நடந்ததுபோல, இந்தியா பாகிஸ்தானுக்குப் பின்னால் வாலைக்குழைத்துக் கொண்டு போகத் தேவையில்லை.
*****
சுதந்திர தினத்தன்று பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்ட 'ஜனதன் யோஜனா' (மக்கள்நிதித் திட்டம்) வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். எல்லாத் தட்டு மக்களையும் நிதி வட்டத்துக்குள் கொண்டுவருதல் (Financial Inclusion) என்ற இலக்கை நோக்கி எடுத்துவைக்கும் முதல் உறுதியான அடி இதுவாகும். இதன்படி, மலைப்பகுதி மற்றும் இடதுசாரி வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தவிர இந்தியாவின் பிற எல்லா வசிப்பிடங்களுக்கும் 5 கி.மீ. தூரத்துக்குள்ளாக வங்கி இருக்கும்படி செய்யப்படும். தற்போது 10 கோடிக் குடும்பங்கள் வங்கிக் கணக்கு இல்லாமலிருக்கின்றனவாம். அவை அனைத்துக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி, 'RuPay' கார்டுகள் வழங்கப்படும். அவற்றின்மூலம் 10,000 ரூபாய்வரை மிகைப்பற்று (overdraft) அனுமதிக்கப்படும். இந்தியப் பொருளாதார வரைபடத்தில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்கிறது எகனாமிக் டைம்ஸ்.
***** |
|
ஆயிரமாண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் அருங்கவிஞன் பாரதி. அவனது வழித்தோன்றலான ராஜ்குமார் பாரதி, இசையையே வாழ்க்கையாகக் கொண்டவர். அவரது நேர்காணலை நீங்கள் ரசிப்பீர்கள். கிண்டி பொறியியல் கல்லூரிக் காலத்தில் கலைச்செயலர் பதவிக்குப் போட்டியிடுகையில் தனது வேட்புரையை எழுதிவைத்த தாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய கணத்தில் தனித்தன்மையைக் காட்டிய ராம் துக்காராம், வழிகாட்ட எவருமில்லாத காலத்தில் எண்ணற்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, உழைத்து, மேலேறி, இன்றைக்குப் பல குழுமங்களின் தலைவராக இருக்கிறார். வளரும் தலைமுறைக்கு நல்லதோர் வழிகாட்டியாக இருக்கும் அவரது நேர்காணல். சாதனையாளர்கள், சமையல், அமெரிக்கத் திகில் அனுபவம் என்று பல சுவையான அம்சங்களோடு முழுவிருந்து ஒன்றை மீண்டும் படைக்கிறோம்.
வாசகர்களுக்கு ஓணம் மற்றும் உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
செப்டம்பர் 2014 |
|
|
|
|
|
|
|