|
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
|
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ. பிச்சை|அக்டோபர் 2007| |
|
|
|
ஆங்கிலத்தில்:சி.கே. கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை
சி.கே. கரியாலி
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதிகளைத் தென்றல் தருகிறது...
தேசிய நிர்வாக அகாடமியில் ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகை எப்போதுமே உணர்ச்சி வேகத்துடனும், உற்சாகத்துடனும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒன்று. சாதியாலும் வகுப்பாலும் பிரிந்து கிடக்கும் இந்தியாவில், இந்தத் திருவிழா எல்லோரை யும் இணைக்கிறது. பணக்காரர்கள், ஏழைகள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து இதனைக் கொண்டாடுகின்றனர். பாங் என்ற மதுவை அருந்துகிறார்கள். (இது மூலிகையிலிருந்த தயாரிக்கப்படும் ஒருவகை மது. மதிமயக்கும் பானம்.) உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் கிராமங்களில் உள்ள பெண்கள், ஆண்கள் மீது வர்ணப்பொடியை வீசுவது மட்டு மல்லாமல், பதிலுக்கு பதில் கொடுப்பது போல ஆண்களைத் தடியால் அடிக்கிறார்கள். ஆண்டில் குறைந்தபட்சம் ஒருநாள் ஆண்கள் அந்த அடிகளை சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார்கள். மதுரா, பிருந்தாவனம், பர்சானா (இது யசோதை பிறந்த இடம்) ஆகிய இடங்களில் நடைபெறும் ஹோலி விளையாட்டு உலகப்புகழ் பெற்றது.
தேசிய நிர்வாக அகாடமியில் ஹோலி மிக முக்கியமான திருவிழாவாகும். இதில் பெண் அதிகாரிகள் மீது வர்ணப் பொடி வீசும் சந்தர்ப்பத்தை யாரும் தவறவிட மாட்டார்கள். 1973-ல் நான் அகாடமியில் இருந்தபோது, இந்த விழாவை உற்சாகத்துடன் முன்னின்று நடத்தும் உத்தரபிரதேச, பீஹார் அதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இவர்களுக்குத் தலைவராக இருந்து இந்த வண்ணமயமான கேளிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்தவர் உ.பியைச் சேர்ந்த A.K. சிங் என்ற அதிகாரி. நாங்கள் இருபது பேர்களுக்கு அதிகமாகப் பெண்கள் இருந்தோம். இருநூறுக்கும் அதிகமான ஆண்களுடன் ஹோலி விளையாட பயந்து கொண்டு, எங்கள் விடுதி அறைகளின் கதவை மூடிக்கொண்டு அமைதியாகத் தங்கி இருப்பதென்று நாங்கள் முடிவு செய்திருந் தோம். ஆனால் ஏ.கே.சிங் தன் பரிவாரங் களுடனும் ராஜ கோலாகலத்துடனும் மேள தாளத்துடன் பெண்கள் விடுதியின் நுழைவாயில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவார் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பெண்கள் விடுதி முற்றுகையிடப்பட்டதும் நாங்கள் வெளியே வந்து கேளிக்கைகளில் கலந்து கொள்ளும்படி ஆயிற்று. குதூகலமான கலாசார நிகழ்ச்சி களை கண்டுகளித்ததுடன் விழா இனிது முடிந்தது. அகாடமி இயக்குநர், நிர்வாக அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், பணியாட்கள், பயிற்சியில் இருந்த அதிகாரிகள், ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடியும் பாடியும் கொண்டாடிய இந்த மகத்தான தினம் என்றென்றும் என் நினைவில் இருக்கும்.
ஜே.கே. முன்னிலையில் பாலாவின் நாட்டியம்
'பாலா' என்று அனைவராலும் பிரியமாக அழைக்கப்படும் பாலசரஸ்வதி நமது காலத்தில் பரதநாட்டியத்தை உரைகளாலும் செயல்களாலும் விளக்கிக் காட்டிய மேன்மை பொருந்திய பெண்மணி. தேவதாசிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சங்கீதத்துடனும், நாட்டியத்துடனும் கடவுளிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்தக் கலையும் பக்தி உணர்வும் அவரது ரத்த நாளங்களில் ஓடிக் கொண்டிருந்தன. சத்தியஜித் ரே எடுத்த திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் அவரைப் பற்றி நான் முதன்முதலாகத் தெரிந்து கொண்டேன்.
1973-ல் நான் தமிழ்நாட்டிற்கு சென்ற போது அவர் முதுமை அடைந்து ஆசானாகி இருந்தார். அதனால் அவருடைய நிகழ்ச்சி யாருக்கும் காணக் கிடைப்பது அபூர்வமாக இருந்தது.
1977-ல் தமிழக ஆளுநருக்குச் செயலாளராக இருந்தேன். ஒருநாள் ஆளுநரின் விருந்தினர் ஒருவரை ஜே. கிருஷ்ணமூர்த்தியின் இருப்பிடமான வசந்தவிஹாரில் கொண்டு போய் விட்டுவர நேரிட்டது. ஜே.கே. சமகாலத்திய புகழ் பெற்ற தத்துவஞானி. அங்கிருந்து நான் புறப்படத் திரும்பிய போது பிரதான கூடத்திலிருந்து சங்கீத ஒலி வெளியே தவழ்ந்து வந்தது. என் பாதையில் அசையாது நின்றேன். காரில் ஏறுவதற்குப் பதிலாக நான் கூடத்துக்குள் நுழைந்தேன். அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் தரையில் அமர்ந்திருக்க, முதிய பாலசரஸ்வதி தூய்மையான வெண்ணிற நூல்சேலை அணிந்து கொண்டு அலங்கார ஆபரணங்கள் இன்றி ஒரு சிறிய மேடையில் நின்றபடி அபிநயத்துடன் பாடிக் கொண்டிருந்தார். அன்று கிருஷ்ணாஜியின் பிறந்த நாள் என்பது எனக்குத் தெரியாது. அவரை கெளரவிக்க அன்று அவர் முன்பாக நாட்டியமாட பாலா முடிவு செய்திருந்தார். கிருஷ்ணாஜி கூடத்தின் நடுவில் மகிழ்ச்சியுடன் மனநிறைவோடு அமர்ந்திருந்தார். நம்பமுடியாத ஒளி வட்டத்துக்குள் அவருடைய முகம் பிரகாசித் துக் கொண்டிருந்தது. பாலா மிகப் பொருத்தமாக 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ' (கிருஷ்ணா நீ விரைந்து வருவாயாக) என்ற பாடலைத் தேர்ந்தெடுத்திருந்தார். வயது முதிர்ந்தவரானபடியால் கால்களை அசைக்க முடியவில்லை. ஆனால் தன் முகத்தில் காட்டும் பாவத்தினாலும், கண்களின் சுழற்சியாலும், கைகளின் அசைவாலும் உணர்ச்சிப்பெருக்காலும் அர்ப்பணிப்போடு பகவான் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டிருந்தார். அங்கே சங்கீத வித்வான் களோ பின்னணிப் பாடகர்களோ இல்லை. தானே பாடிக் கொண்டும் நடனமாடிக் கொண்டிருந்தார். என்னுடைய வேலையை மறந்து எல்லோரையும் போல சொக்கிப் போய் நின்றேன். அங்கு பூரண அமைதி நிலவியது. அவரது இனிய மெல்லிய குரல் கூடம் எங்கும் தவழ்ந்தது. புன்னகையோடும், கூவிக் கொண்டும், கைகளைக் கூப்பிக்கொண்டும், கண்களிலிருந்து நீர் வழிய கிருஷ்ணனை அழைத்துக் கொண்டிருந்தார்.
சூழ்நிலை, தெய்வீக சக்தியாலும் கனத்த உணர்ச்சிப் பெருக்காலும் நிறைந்திருந்தது. கடவுளே வருவது போல் நாங்கள் உணர்ந் தோம். அந்த இடம் முழுவதுமே ஒருவித அதிர்வில் இருந்தது. கிருஷ்ணாஜியின் முகத்தில் ஒளிவெள்ளம் பெருகிக் கொண்டே இருந்தது. அவரது புன்முறுவல் மேலும் மேலும் புரியாத புதிராகவே இருந்தது. நாட்டியமாடிய பாலா குலுங்கிய போது பார்வையாளர் பகுதி முழுவதுமே குலுங்கியது. அவர் பாடி முடித்த போது அங்கிருந்தவர்களின் மோனநிலை கலைந்தது. சுயநினைவு பெற்று பலர் விம்மி விம்மி அழ ஆரம்பித்தனர். அன்று, நாட்டியத்தின் உன்னதத்தையும், மேன்மை யையும் தெரிந்து கொண்டேன். பாலாவைப் பற்றித் திரைப்படம் எடுக்க சத்யஜித் ரே ஏன் முடிவு செய்தார் என்பதையும் புரிந்து கொண்டேன். இன்று பாலாவோ கிருஷ்ணாஜி யோ நம்மிடையே இல்லை. ஆனால் அன்றைய டிசம்பர் பிற்பகலில் இருவருமே நாங்கள் கடவுளை அறிந்து கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி
நாட்டியக் கடவுள் நடராஜருக்கு என்று ஒரு கோவில் சிதம்பரத்தில் இருக்கிறது. சிவபெருமானை இங்கு லிங்க உருவில் வழிபடுவதில்லை. நடராஜரின் நடன உருவில் சிவபெருமானை வழிபடுகிறார்கள். கடவுள் நாட்டியம் ஆடியதன் விளைவுதான் இந்த உலகம் என்று கருதப்படுகிறது. சிவ பெருமானின் நாட்டியத்தைப் போலவே சக்தியுள்ள அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கிறது. சிவனின் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. தாண்டவம் பல்வேறு நிலைகளைக் (கரணங்களை) கொண்டது. இவைகளில் சில ஆனந்த தாண்டவம் என்றும் மற்றும் சில ஊழித்தாண்டவம் என்றும் கூறப்படுகிறது. இறுதியாக, சிவபெருமான் ஆடும் ருத்ர தாண்டவத்தினால் உலகம் அழியும் என்பது இந்துக்கள் நம்பிக்கை.
தத்துவார்த்த மரபுவழிகளுக்கும் அப்பால், நினைவு தெரிந்த காலத்திற்கு முன்பே நாட்டியக் கலைஞர்களைத் தமிழர்கள் ஆதரித்திருக்கிறார்கள். சிதம்பரத்தின் நாட்டியம் நீண்டகாலப் பாரம்பரியம் கொண்டது. நெடுங்காலமாகக் கலைஞர்கள் நாட்டியக் கடவுளின் சந்நிதியில் நடனமாடி வந்திருக்கிறார்கள். இதற்காக ஒரு சங்கீத சபை இருந்ததாகப் பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோவில் அர்ச்சகர்களால் உருவாக்கப்பட்ட 'பதஞ்சலி வியாக்ரபாத சபா'தான் நிகழ்ச்சிகளை நடத்தியது. திருக்கோவில் ஊழியர்களில் சில தேவதாசிகளும் இருந்தனர். திருவிழாக் களிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் ஒரு பகுதியாக இவர்களது நாட்டியங்கள் நடைபெற்றன. வெள்ளையர் ஆட்சியில் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டதால் 1935-ல் இருந்து நாட்டியம் நடைபெறவில்லை.
1983-ல் நான் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற போது சிதம்ரபம் கோவிலுக்குச் சென்றேன். இந்தியாவில் மிகவும் பழைமை வாய்ந்ததும் புகழ் பெற்றதுமான திருக்கோவில்களில் ஒன்றான இக்கோவில் மிகவும் சீந்துவாரற்று இருந்ததைக் கண்டு என் மனம் பெரிதும் வருந்தியது. கோவிலில் வருமானம் பெருமளவு குறைந்திருந்தது. தமிழ்நாட்டில் முருகனை வணங்குவது பிரதானமாகி சிவபெருமானை வழிபடுவது படிப்படியாகக் குறைந்துவிட்டது. இதனிடையில் கோவிலுக்கு சோழ மன்னர் களால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்து குத்தகை நெல்லும் பணமும் சரியாக வராமல் இருந்தது. கோவில் ஊழியர்களும் அர்ச்சகர்களும் சரியான ஊதியமின்றிப் பொருளாதார நெருக்கடியில் மனம் நொந்து போய் இருந்தனர். கோவிலிலோ நகரத்திலோ நடன நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. சிதம்பரத்தில் ஒரு நாட்டிய ஆசிரியரைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருந்தது. இது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பக்கத்தில் உள்ள அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த நாட்டியத் துறையையும் மூடிவிட்டார்கள். மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால் கோவிலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மிகவும் நேர்மையான திருப் பணிகுழுத் தலைவராக வாகீசம் பிள்ளை அவர்கள் கிடைத்ததுதான்.
திரு.பிள்ளை பழங்காலத்திய, தர்ம சிந்தனையுள்ள பெருநிலக்காரர். மிருதுவாகப் பேசும் சுபாவமுடையவர். அந்தப் பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக மக்களுக்கு நீண்டகாலம் சேவை செய்தவர். பொது மக்களால் நேசிக்கப்பட்ட காந்தியவாதிகளில் ஒருவர். அனைத்தையும் விடச் சிறந்தது உண்மையில் முற்றிலுமாக நடராஜப் பெருமானுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரை சந்திக்கவும், சில ஆண்டுகளுக்கு முன் அவர் காலமாகும் வரை அவரது சகாவாக இருக்கவும் நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவரை தந்தையைப் போல மதிப்பளித்து அவருடன் பழகினேன். அவரும் அதே போல் அன்புடன் என்னிடம் நடந்து கொண்டார். அவரது உதவியுடன் கோவில் நிலைமை பற்றி விவாதிக்க நகரப் பிரமுகர்கள் கொண்ட ஒரு அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. |
|
என் மனதில் மூன்று விஷயங்கள் இருந்தன. இந்தக் கோவில் சிற்பங்களினாலும், திருவிழாக்களினாலும் சிறப்புப் பெற்றது. எனவே ஊழியர்களும், அர்ச்சகர்களும் முறையாக நல்ல ஊதியம் பெறவேண்டும், கோவிலைச் சிறப்பாக பராமரிப்பதற்கு வேண்டிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும், மீண்டும் கோவிலுக்குள் நாட்டிய நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பது பற்றி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் நாட்டியம் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்துவிட்டால் மற்ற இரண்டுக்கும் தீர்வுகாணப்பட்டுவிடும் என்று என் உள்மனம் உணர்த்தியது. நாட்டியாஞ்சலி என்று பெயரிட்டு அப்போது தமிழ்நாடு கல்வெட்டு ஆராய்ச்சித்துறை இயக்குனராக இருந்த திரு. நாகசாமி, டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன் ஆகியோர் உதவியுடன் 1981ல் இரண்டு நாள் விழா நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கு சில பகுதியினரிடமிருந்து கடுமையாக விமர்சனம் எழுந்ததால் 82ல் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. நாங்கள் புதிதாக அந்த விழாவை ஆரம்பிக்க முடிவு செய்தோம். அதிகாரிகள், அரசியல்வாதிகள் இல்லாத, வாகீசம் பிள்ளையை ஆயுள்காலத் தலைவராகக் கொண்ட, நகரப் பிரமுகர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. எங்களுக்கு உதவியாகச் சென்னையிலிருந்து டாக்டர் நாகசாமியை அழைத்துக் கொண்டோம். கோவிலின் பரம்பரை அர்ச்சகர்களான தீட்சிதர்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வசதியான தேதியையும் நிச்சயித்துக் கொண்டு இரண்டு நாள் நாட்டிய விழாவுக்கு ஏற்பாடு செய்தோம். சிதம்பரம் உதவி ஆட்சியாளர் மச்சேந்திர நாதன் இ.ஆ.ப. கணிசமான அளவு நிர்வாகம் சம்பந்தப்பட்ட வேலை களையும், விழாவுக்கு வேண்டிய ஆதாரங் களையும் திரட்டும் பணிகளையும் திறமை யாகச் செய்திருந்தார். 1981-1982 முதல் மற்றும் இரண்டாவது முயற்சிகளுக்குப் பிறகு 1984-ல் மூன்று நாள் நாட்டிய விழா நடத்தினோம். விழா பிரபலமடைய வேண்டுமானால் அதை நிச்சயமான தேதியில் சரியான நேரத்தில் நடத்த வேண்டியது அவசியம் என்று முடிவானது. தீட்சிதர்களின் ஆலோசனைக் குப் பிறகு, சிவராத்திரித் திருநாளுடன் சேர்நது நாட்டியாஞ்சலியை நடத்துவதென்று முடிவு செய்தோம். அதிக எண்ணிக்கையில் நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்ள விரும்பியதால் விழாவை ஐந்து நாட்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1983-ல் மாநில, மத்திய சுற்றுலாத்துறை நாட்டியாஞ்சலியை இந்தியாவின் முக்கிய சுற்றுலா விழாவாக அங்கீகரித்து இந்தியா விலும் வெளிநாடுகளிலும் விளம்பரம் செய்ய ஆரம்பித்தது. 1985-லிருந்து இந்த விழா இதே முறையில் நடைபெற்று வருகிறது.
1994ல் அகில இந்திய சுவரொட்டிப் போட்டியில் நாட்டியாஞ்சலியின் சுவரொட்டி தேசிய விருது பெற்றது. மாநில, மத்திய அரசுகள், சங்கீத நாடக அகாடமி, தென்மண்டல கலாசார மையம், ஆகிய வற்றிடமிருந்து உதவிகள் கிடைத்தாலும்கூட உண்மையில் விழா நகரமக்கள் குழுவினால் தான் நடத்தப்படுகிறது. தற்போது குழுவில் நடராஜன், சாமிநாதன், ராமநாதன், வி.எஸ். ராமலிங்கம், ஆர். ராமலிங்கம், சம்பந்தம், கணபதி, டாக்டர். முத்துக்குமரன், பாலதண்டாயுதம் (வாகீசம் பிள்ளையின் மகன்) ஆகியோர் உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து வரும் கலைஞர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உள்ளூர் நிறுவனமான அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற வையும் கலைஞர்களுக்கும் விருந்தினர் களுக்கும் தொடர்ந்து தங்க இடம் கொடுத்து உணவளித்து உபசரித்து குழுவிற்கு உதவி செய்து வருகிறது. கோவிலுக்குள் நாட்டியம் நடப்பதை தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் தடை செய்துள்ளபடியால் விழா கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நடைபெறுகிறது. ஆயினும் சிவராத்திரி அன்று நடராஜர் சிலையின் முன்பாகத்தான் நடனமாடுவோம் என்று வரிசையாகக் கலைஞர்கள் நிற்கும்போது கட்டுப்படுத்த முடியவில்லை. கோவிலில் நாட்டியம் நடைபெறுவதைத் தடைசெய்யும் சட்டத்தை ரத்து செய்வதற்கு இதுதான் சரியான தருணம்.
நாட்டியாஞ்சலி நடைபெறும் ஐந்துநாள்களும் சிதம்பரம் நகரம் விழாக் கோலம் பூண்டு விடுகிறது. நகரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் உறவினர்களும் நண்பர்களும் வந்து குவிகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கல் தரையில் அமர்ந்து நாட்டியத்தை ரசனையுடன் பார்க்கிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து நாட்டியக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடவுளிடம் தங்கள் நடனத்தை காணிக்கையாக்க வருகிறார்கள். அவர்கள் இதற்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்வதில்லை. நாட்டியத்தை புனிதமாகக் கடவுளிடம் சமர்ப்பிக்கிறார்கள்.
விழாவில் நீண்டகாலமாகச் செயல்படுவதால் பல அரிய பெரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். ஒருதடவை மல்லிகா சாராபாய், பிரான்ஸில் மகாபாரத நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த சமயம், நாட்டியாஞ்சலியில் நடனம் ஆட விருப்பம் தெரிவித்து அங்கிருந்து எனக்குக் கடிதம் எழுதினார். வாணிகணபதி தன் சொந்த வாழ்க்கைத் தொல்லைகள் தீர்ந்தபிறகு, மீண்டும் தன் நிகழ்ச்சியை சிதம்பரத்தில்தான் தொடங்கினார். மீனாட்சி சேஷாத்திரி தன் இல்லற வாழ்க்கையில் அமர்ந்ததும் சிதம்பரம் வந்து நாட்டிய மாடினார். தன் சகோதரனுக்கு கோர விபத்து நடந்ததிலிருந்து நாட்டியத்தை மீனாட்சி சித்தரஞ்சன் மீண்டும் சிதம்பரத்தில்தான் தொடங்கினார்.
முதன்முதலாக பரதநாட்டியம் பயின்ற ரோமன் கத்தோலிக்க மதகுருவை நாட்டிய மாட அழைப்பு விடுத்தோம். ஒரு விருந்தி னருக்கு கொடுக்கும் மிகச் சிறந்த கெளரவமான 'பூர்ணகும்ப' மரியாதையுடன் கோவில் அர்ச்சகர்கள் அவரை வரவேற்றனர். இந்த நூற்றாண்டின் மிக உயர்ந்த பரதநாட்டிய விற்பன்னர்கள் மட்டுமன்றி, கதக், மணிப்புரி, கதக்களி, ஆகிய நாட்டிய வகைகளின் சிறந்த கலைஞர்களும் இங்கு வந்து தங்கள் நாட்டியங்களை நடத்தி உள்ளனர். மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று புகழ்பெற்ற கதக் கலைஞர் துர்காலால் தான் மரணம் அடைவதற்கு முந்தைய ஆண்டு 'நாகேந்திர ஹாராய' நிகழ்ச்சி நடத்தியது தான்.
ஒரு தடவை தேவதைகள் போன்ற அழகான எட்டுப் பெண்கள் சிதம்பரம் வந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த ஆண்டு கதக் கேந்திராவிலிருந்து வந்த ரஷ்ய மாணவிகள் அரங்கத்தையே ஆக்ரமித்துக் கொண்டனர். இளம் கலைஞர்கள் சிதம்பரம் வந்து நாட்டியம் ஆடுவதைப் பட்டயம் பெறுவதாகக் கருதுகிறார்கள். வெளிநாட்டுப் பார்வையாளர்களும் அதிகமாக வருகிறார்கள். ஒருநாள் டாக்டர். பத்மா சுப்ரமண்யம் குழந்தை கிருஷ்ணனுடன் யசோதையாக நாட்டியம் ஆடிக் கொண்டிருந்ததை என் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அயல்நாட்டுப் பெண் மனம் நெகிழ்ந்து அழ ஆரம்பித்துவிட்டார். இந்த நாட்டிய விழாவின் விளைவாக இன்று சிதம்பரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டியப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. உண்மையாகவே நாட்டியம் சிதம்பரத்திற்குத் திரும்பி வந்துவிட்டது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
(தொடரும்)
ஆங்கிலத்தில்:சி.கே. கரியாலி தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை |
|
|
|
|
|
|
|
|