கண்ணனைச் சந்தித்து அவரிடமிருந்து பத்துலட்சம் வீரர்களைப் பெற்றுக்கொண்ட துரியோதனன், அடுத்தததாக பலராமரைச் சந்தித்தான். அவனிடமிருந்து செய்தியைக் கேள்விப்பட்ட பலராமர், 'நான் பாண்டவர்களுக்கு உதவி செய்யப் போவதில்லை' என்று அறிவித்தார். துரியோதனன் அடுத்ததாகச் சல்லியனை வழிமறிக்கப் போய்விட்டான். இதன்பிறகு, அகத்தியர், நகுஷனை முனிவர்கள் பல்லக்கில் சுமந்துசென்ற கதையைச் சொல்கிறார். இந்தக் கதையைச் சொன்ன சல்லியன், தான் துரியோதனனால் ஏமாற்றப்பட்ட கதையை தர்மபுத்திரருக்குச் சொல்லி, அவரைத் தேற்றினார். பிறகு பாண்டவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு, துரியோதனனைக் காணப் போனார். ஹஸ்தினாபுரத்தில் துரியோதனனுக்கு உதவ, படைகளோடு வந்து மன்னர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். பூரிசிரவஸ், பகதத்தன், சீனநாட்டரசன், சல்லியன், கிருதவர்மன், சிந்து தேசத்தரசன் ஜயத்ரதன், காம்போஜ நாட்டரசன், அவந்தி நாட்டரசன் போன்றோர் ஆளுக்கு ஓர் அக்குரோணி சைனியத்துடன் வந்தனர். துரியோதனன் பக்கம் பதினோரு அக்குரோணி சைனியம் சேர்ந்தது. இதனால் அஸ்தினாபுரத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. காடுகளில்கூட சேனைகள் தங்க வேண்டியதாயிற்று.
அந்தச் சமயத்தில் துருபத மன்னனால் அனுப்பப்பட்ட புரோகிதர் அங்கே வந்தார். ஹஸ்தினாபுரத்தில், நாடுகொள்ளாத அளவுக்குச் சேனைகள் தங்கியிருப்பதைக் கண்டு வியந்தார்.
பின்னர் அவர், திருதராஷ்டிரனைக் கண்டார். அனைவரையும் நலம் விசாரித்தார். அவர் அவையில் பேசத் தொடங்கினார். 'அரசநீதி என்பது, நீங்கள் அறிந்ததுதான். அப்படியிருக்க, பாண்டுவின் புத்திரர்கள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் காட்டுக்குச் சென்றபோது அவர்கள் நாட்டைத் திருதராஷ்டிரன் ஆண்டான். கௌரவர்கள், பாண்டவர்களைக் கொல்லப் பலமுறை, பலவிதங்களிலும் முயன்றனர். இருந்தாலும் அவர்களைக் கொல்ல முடியவில்லை. அவர்களோ, தங்கள் பலத்தினால், நாட்டை விரிவுபடுத்திக் கொண்டனர். ஆனால், கௌரவர்கள், சகுனியோடு சேர்ந்துகொண்டு அவர்களுடைய நாட்டைக் கபடமாகப் பிடுங்கிக்கொண்டனர். அவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வசித்தார்கள். ஓராண்டு யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்ந்தார்கள். சூதாட்ட நிபந்தனையின்படி எல்லா வகையிலும் நடந்துகொண்டனர். இப்போது, நிபந்தனையின்படித் தங்கள் நாட்டைத் திரும்பக் கேட்டால், கௌரவர்கள் அதைத் தர மறுக்கிறார்கள். இப்போது, கௌரவர்களோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவே நான் வந்திருக்கிறேன். நாட்டைப் பெற்று, முன்போல் நட்புடன் வாழவே விரும்புகின்றனர். இதைத் தெரிந்தும் கௌரவர்கள் சம்மதிக்க மறுக்கிறார்கள். தன்னிடம் அதிக எண்ணிக்கையில் சேனை இருப்பதாக எண்ணவேண்டாம். பாண்டவர்களுக்கு ஆதரவாக ஏழு அக்குரோணி சைனியம் காத்திருக்கிறது. அவர்களுடைய சேனைக்குத் துணையாக, பெருமான் வாசுதேவர் இருக்கிறார். அவர்களுடைய பலத்தையும், பராக்கிரமத்தையும் அறிந்த யார்தான் அவர்களோடு போருக்கு வருவார்கள்? எனவே, சூதாட்ட நிபந்தனையின்படி, அவர்களுடைய நாட்டை அவர்களுக்குத் திரும்பக் கொடுங்கள். இதுவே உங்களுக்கான தருணம். இதைத் தவறவிட வேண்டாம்' என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த மிகுந்த பலசாலியான பீஷ்மர் அவரை ஆதரித்துப் பேசினார் 'அவர்கள் தெய்வத்தின் அருளால் நலமாக இருக்கிறார்கள். தங்கள் உறவினர்களோடு போர்புரிய விரும்பாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய நாட்டைத் திரும்பக் கொடுப்பது அவசியமானதுதான். போர் என்று வந்தால், அர்ஜுனனை எதிர்க்க இந்திரனாலும் முடியாது அவனை வெல்ல மூன்று உலகங்களிலும் யாரும் இல்லை' என்றார். இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, கர்ணன், துரியோதனனைக் கோபமாகப் பார்த்தான். அவன் விருப்பத்தைக் குறிப்பால் உணர்ந்த கர்ணன் பேசத் தொடங்கினான். 'அந்தணரே! நீர் சொன்ன விஷயத்தை நாங்கள் எல்லோரும் அறிந்தே இருக்கிறோம். சகுனி, துரியோதனன் பொருட்டாகச் சூதாடி, வெற்றி பெற்றான். யுதிஷ்டிரன், தம்பிகளோடும் மனைவியோடும் காட்டுக்குச் சென்றான். மீண்டும் மீண்டும் அதையே பேசுவதால் என்ன பயன்? மூர்க்கமான யோசனையால் வீணே அழிய வேண்டாம். பாண்டவர்கள் மிக நிச்சயமாகத் தோல்வியையே அடைவார்கள். அதன்பிறகு வருந்திப் பயனில்லை' என்று சொன்னான்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பீஷ்மர் அவனைக் கண்டித்தார். 'காட்டில் கந்தர்வர்களோடு நடந்த யுத்தத்தில் நீ என்ன செய்தாய்? விராடனோடு நீங்கள் தேடிக்கொண்ட போரில் அர்ஜுனன் ஒருவனாகவே நின்று நம் அனைவரையும் எதிர்த்தான். நாம் அனைவரும் தோல்வியடைந்தோம். இவர் சொன்னவாறு செய்யாவிட்டால் நாம் அனைவரும் போரில் அழிவோம். இதில் சந்தேகமில்லை' என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த திருதராஷ்டிரன், கர்ணனை அடக்கினான். 'பீஷ்மர் நமக்கு நல்லதைச் சொல்கிறார். அவர் சொல்வதில் நன்மை இருக்கிறது' என்றான். பிறகு, துருபதனுடைய புரோகிதரைப் பார்த்து, 'நல்லது. நான் ஆலோசனை செய்கிறேன். பிறகு என் முடிவை உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்' என்றான். புரோகிதரை வணங்கி, அவரைத் துருபதனிடத்தில் அனுப்பிவைத்தான்.
துருபதன் அனுப்பிய புரோகிதரின் தூது தோல்வியில் முடிந்தது. கௌரவர்கள் தங்கள் பக்கத்தைப் பேச, சஞ்சயனை அனுப்ப முடிவு செய்தார்கள். அடுத்ததாக, சஞ்சயன் தூது தொடர்கிறது. அதுவும் தோல்வியில்தான் முடிவடைந்தது.
திருதராஷ்டிரன், அதன்பின்னர் பணியாட்களை அனுப்பி, சஞ்சயனை அழைத்துவரச் சொன்னான். உபப்பிலாவியத்திலிருந்து வந்திருக்கும் பாண்டவர்கள் அனுப்பிய துருபதனுடைய புரோகிதர் தூது வந்து பேசியதையெல்லாம் அவனுக்கு எடுத்துச் சொன்னான். 'வாழ்க்கையை நல்லமுறையில் முடித்துக்கொண்டு வந்திருக்கும் அவர்களுக்கு என் வாழ்த்தைக் கூறு. குற்றமற்ற அவர்கள் எங்களுடன் நட்பாய் இருக்க விரும்புவதாகக் கேள்விப்படுகிறேன். பாவியான துரியோதனனையும் அற்பனான கர்ணனையும் தவிர வேறு யாரும் அவர்களைக் குறை கூறவில்லை அவர்கள் வென்றதையெல்லாம் என்னிடமே கொண்டுவந்து கொடுத்தார்கள். துரியோதனன் சிறுபிள்ளைத்தனமாக அவர்களுடைய நாட்டை அபகரிக்க எண்ணுகிறான். அர்ஜுனனுக்கும் பீமனுக்கும் மிஞ்சியவர்கள் யாரும் இல்லை. அர்ஜுனன் ஒருவன் மட்டுமே மேகத்தைப் போல பாணங்களைப் பொழியக்கூடியவன். பீமனை கதாயுதப் போரில் வெல்ல யாரும் இல்லை. துரியோதனனால் அது முடியாது. போதாக்குறைக்குக் கண்ணன், திருஷ்டத்யும்னன், விராடன், துருபதன் போன்றோர் அவர்களுக்குத் துணையாய் இருக்கிறார்கள். பாண்டிய நாட்டுமன்னனும் அவர்களுக்குத் துணையாக இருக்கிறான் என்று சொல்கிறார்கள். கண்ணனின் துணையைப் பெற்றவர்களை யாராலும் வெல்லமுடியாது. அவன் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாய் இருக்கப் போகிறான் என்று சொல்கிறார்கள். இதைக் கேட்டு என் மனம் நடுங்குகிறது. மந்த புத்தியையுடைய துரியோதனன், பாண்டவர்களுடன் போரிடாமல் இருந்தால் நலம் பெறுவான். இல்லையேல் கௌரவர்கள் அழிவார்கள். துரியோதனனால் வஞ்சிக்கப்பட்ட யுதிஷ்டிரன் மனத்தை அடக்கியவனாக இருப்பதால் கோபம் மூண்டு கௌரவர்களை எரிக்கவில்லை. இலலாவிட்டால் அவ்வாறு எரிக்கக்கூடியவன்தான். நீ உடனடியாகப் பாண்டவர்களை அடை. என் கருத்தை அவர்களிடத்தில் கூறு. சமயோசிதமாகப் பேசி, யுத்தத்தைத் தடுத்து நிறுத்து' என்றான். இதைக் கேட்ட சஞ்சயன் உடனே தூதுக்குக் கிளம்பினான்.
(தொடரும்) |