Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
- வற்றாயிருப்பு சுந்தர்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeb>எஃப் டிவிக்கு இங்கே என்ன அவசியம்!

முன்பெல்லாம் ஒளிந்து ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த எஃப் டிவி சானலையெல்லாம் இப்போது யாரும் சீண்டுவதில்லை போல. அதைவிடப் பிரமாதமாகவே சினிமாக் காட்சிகளிலும் பாடல்களிலும் நங்கைகள் நடமாடுகிறார்களென்பதால் யாரும் இரவு கண்விழித்துச் சிரமப்படத் தேவையில்லை. தொலைக்காட்சிகளில் கவர்ச்சி பொங்கி வழிய குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவசரமாக பாத்ரூம் போகவேண்டியிருப்பது போல தொலைக்காட்சிகளின் இளைய அறிவிப்பாளர்கள் நிமிடத்திற்கு நூறு வார்த்தைகள் (தமிழாங்கிலம் ஹையர்) பேசுகிறார்கள். சமீபத்திய பாடல்கள் எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டே இருக்க வாண்டுகள் நாக்க முக்க போன்ற இலக்கியத் தேனொழுகும் பாடல்களை பாடியாடுகிறார்கள். இப்படி ஒரே தாம்தூமென்று பாடல்களின் புழுக்கம் தாங்கமுடியாது மூச்சுத் திணறுகையில் நம்மை ஆசுவாசப்படுத்த சில சமயம் தாம்தூமின் 'அன்பே என் அன்பே' தென்றலாக ஒலிக்கிறது.

பாடலில் நாயகி, நாயகன் இருவரின் விழிமொழிவழி உரையாடல்களின் சுவாரஸ்யமும், ஹாஸ்யமும் வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுகிறது
சுப்ரமணியபுரம் படம் அசுர ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை - ஏனோ பார்க்கத் தோன்றவில்லை. சன் டிவியின் டாப் டென் ஜேம்ஸ் வசந்தன் திடீரென்று எதிர்பார்க்காத மூலையிலிருந்து சுப்ரமணியபுரத்தில் புயலாக வெளிவந்ததை எதிர்பார்க்கவேயில்லை. நாயகன் ஜெய் மற்றொரு ஆச்சரியம். நாயகி இன்னொரு ஆச்சரியம். மற்ற பாடல்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து 'கண்கள் இரண்டால்' பாடல் மட்டும் லட்சார்ச்சனை மாதிரி எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தது. அப்பாடல் ஒரு காட்சிப்படுத்தப்பட்ட அழகிய கவிதை! பாடலின்போது ஒரு காட்சி - வண்டியில் அண்ணன் பின் அமர்ந்து நாயகி நாயகனைப் பார்த்துக்கொண்டே வர, அண்ணன் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறான். வேகம் மட்டுப்பட்டு வண்டி நிறுத்தப்பட்ட அந்தத் தருணத்தில் சட்டென்று அவள் விழிகள் அண்ணனின் முதுகை ஏறிட்டுப் பார்க்க, ஜாக்கிரதை உணர்வுடன் வண்டியிலிருந்து இறங்கும் அந்த ஒரு மைக்ரோ நொடிக்காட்சி ஆயிரம் கதை சொல்கிறது. பாடலில் நாயகி, நாயகன் இருவரின் விழிமொழிவழி உரையாடல்களின் சுவாரஸ்யமும், ஹாஸ்யமும் வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி முக்கொம்பு செல்லும் சாலையில் தென்னூர் செல்லப் பாலமொன்று இருக்கிறது. அதன் கீழே முன்பு தண்ணீர் தேக்கிய நினைவு - ஏரியோ என்னவோ. இப்போது பாலத்தின் இரு பக்கமும் ஏராளமான கட்டிடங்கள். ஆங்காங்கே தண்ணீர்க் குட்டைகள் கொசுக்களையும் பன்றிகளையும் வாழ வைக்க மரக்கடையிலிருந்து குழந்தைகள் மருத்துவமனை வரை எல்லாம் நிறைந்திருக்கின்றன. பாலத்தின் மீது நின்று பார்க்க, செயிண்ட் மேரீஸ் ஊசிக்கோபுரமும் மலைக்கோட்டையும் மேகமாகத் தெரிய வெயில் எப்போதும் சுட்டெரித்துக்கொண்டு செப்டம்பர் போலவே இல்லை. முன்பெல்லாம் தென்னூர் சாலை காற்று வாங்கிக் கொண்டிருக்க பக்கத்து தில்லை நகர்ச் சாலை முழி பிதுங்கிக்கொண்டிருக்கும். இப்போது தில்லை நகர்ச்சாலைகளில் வாகனங்கள் சர்க்கஸின் மரணக்கிணற்றில் ஓடுவது போல ஓட, தென்னூர் சாலையில் பெரிய கட்டிடங்கள் முளைத்து புது அடையாறு ஆனந்தபவன் கடையில் மக்களும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். 'அண்ணே டீ' என்று மூன்று வருடங்கள் முன்பு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் குடித்த பெட்டிக்கடைகள் எதையும் காணவில்லை.

அகண்ட சாலையாக இருந்தாலும் வழக்கம் போல இருபுறமும் அடங்காத ஆக்கிரமிப்பாலும், வரையறையற்ற வாகன நிறுத்தங்களாலும், ஒரு வழிப் பாதையில் எல்லா வாகனங்களும் பறந்துகொண்டிருந்தன. சாலையின் முடிவில் தலைக்கு மேல் மேம்பாலம் ஓட மாகாத்மா காந்திப் பள்ளி. புது வர்ணமடித்து ஒவ்வொரு மாடியிலும் குழந்தைகள் விழாமலிருக்க இரும்புச் சட்டங்கள் போட்டிருக்கிறார்கள். நான்கைந்து மாடிகள் - ஆனால் லிப்ட் இருப்பதுபோலத் தெரிய வில்லை. தேனடைபோல ஒவ்வொரு வகுப்பிலும் சீருடைக் குழந்தைகளும் சிரிக்காத ஆசிரியர்களும்.

மறுநாள் குடும்ப சகிதமாக கால் டாக்ஸியை அமர்த்திக்கொண்டு கொள்ளிடம் பாலம், கிராமங்கள், வண்டிச்சாலை, இருபுறம் பசேலென வயல்வெளிகள், அம்மணக் குழந்தைகள், மாடுகள், மாவுமில் வெள்ளை மனிதர்கள், மசாலா வாசனை, விவசாயிகள், தூக்குச்சட்டிகள் எல்லாவற்றையும் கடந்து அழகிய மணவாளம் என்ற சிறு கிராமத்தை விட்டு விலகி நிற்கும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் என்ற பெயர்ப்பலகை தாங்கிய (உபயம்: S. ராமசாமி செட்டியார் மளிகை, மணச்சநல்லூர்) கோவிலுக்குச் சென்றோம். திருச்சியின் களேபர இரைச்சல் வாழ்க்கையிலிருந்து விலகி விண்வெளியில் எறியப்பட்டதுபோல அப்படியொரு பேரமைதி நிரம்பிய இடம். சுற்றுவட்டத்தில் வீடுகள் எதுவும் இல்லாது ஒதுக்குப்புறத்தில் குடியிருக்கிறார் அதிர்ஷ்டக்காரர் பெருமாள்.
Click Here Enlargeஇடிந்து நிற்கும் வரலாறு

கோவிலைப் பார்த்து நின்றால் வலப்புறம் கோவிலை ஒட்டியே ஒரு சிதிலமடைந்த செங்கற் கட்டிடம் ஒன்று அனாதையாக நின்றிருக்க ஏராளமான செடிகள். பொதுவாகவே வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க நேரிடும்போதும், அவற்றைத் தொடும்போதும், அவ்விடத்தில் உலவும்போதும் விவரிக்கவியலாத எண்ணங்கள் என்னைச் சூழும். அதே உணர்வு அப்போதும் எழுந்தது. மெல்ல அதைச் சுற்றி வந்தேன். இங்கே ஒரு காலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. மனிதர்கள் இதைச் சுற்றி வாழ்ந்திருக்கிறார்கள். உள்ளே ஒரு கடவுள் நிறுவப்பட்டிருந்தார். பூஜைகள் நடந்திருக்கின்றன. கருவறையை அடையாளம் காண முடிந்தது. விதானம் இடிந்திருந்தது. கருவறையின் சுவர் இடிந்திருந்தால் பின்பக்கமாக நின்று அதைப் பார்க்க முடிந்தது. முன்புற வாசல் செங்கற்களால் அடைக்கப்பட்டிருந்தது. முழுமையான செங்கல் கட்டிடம் - ஒரு பாறை கூட இல்லாது - அதிசயமாக இருந்தது.


உள் பிரகாரத்தில் இருந்த தண்ணீர்க் குழாயை நெருங்கி லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு, பீடியை எறிந்துவிட்டு, காறித் துப்பிவிட்டு, நீரைக் குடித்தான். பிறகு செங்கல் கோபுரத்திற்கும் நல்ல கோபுரத்திற்கும் இடைப்பட்ட சுவரில் ஏறி அமர்ந்து இன்னொரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டான்.
பூஜை முடியக் காத்திருந்து வெளியே வந்த அந்த வயதான அர்ச்சகரிடம் செங்கற் கோவிலைப் பற்றி விசாரித்தேன். எக்ஸ்ட்ரா புளியோதரை, சுண்டல் கேட்டவர்களையே சந்தித்துப் பழகியிருப்பார் போல, நான் விசாரித்ததும் சட்டென்று என்னை ஏறிட்டு நோக்கிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். 'அதுவா.. 12ஓ, 13ம் நூற்றாண்டோ, சரியா தெரியலை. பெருமாள் அங்கதான் இருந்தார். அதான் ஒரிஜினல் கோவில். இது அப்புறம் கட்டினது. அப்போ சுல்தான் இருந்தாரில்லையா. வாத்தலைலருந்து சென்னைவரை சுல்தானோட சேனைகள் கோவில் கோவிலா போய் கொள்ளையடிச்சுட்டு (அக்கம் பக்கம் ஒருமுறை பார்த்துக்கொண்டார்) கோவில்களையெல்லாம் இடிச்சதுல இதுவும் இடிபட்டுப் போச்சு. ஆனா மூலவரை முன்னாடியே வெளியே எடுத்துட்டுப் போய் ரகசியமா வச்சிருந்ததால அவருக்கு ஒண்ணும் ஆகலை. அதுக்கப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப நாம நிக்கற இந்தக் கோவில் எழுந்தது. மூலவரைக் கொண்டு திரும்ப இங்கே வச்சாச்சு. அது அப்படியே இருக்கு - அடையாளமா' என்று சொல்லிவிட்டு காத்திராமல் வெளியேறி அவரது டிவிஎஸ் 50-ஐ எடுத்துக்கொண்டு விரைந்து சென்றுவிட்டார்.

அப்போது குளிக்காத, கண்களில் தூக்கம் ததும்பும், வாயில் பீடி புகையும், இறுக்கமான சட்டையும் பாதம்வரை புரளும் லுங்கி ஒன்றைக் கட்டிக்கொண்டு பத்து பதினைந்து வயதே ஆன அந்தப் பையன் உள்ளே வந்தான். கையில் இருந்த கைப்பேசியில் குசேலன் பாட்டு சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மெதுவாக நடந்து உள் பிரகாரத்தில் இருந்த தண்ணீர்க் குழாயை நெருங்கி லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு, பீடியை எறிந்துவிட்டு, காறித் துப்பிவிட்டு, நீரைக் குடித்தான். பிறகு செங்கல் கோபுரத்திற்கும் நல்ல கோபுரத்திற்கும் இடைப்பட்ட சுவரில் ஏறி அமர்ந்து இன்னொரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். இப்போது வேறொரு புரியாத பாட்டு சத்தமாக ஒலிக்கத் துவங்க, நான் வெளியேறி டாக்ஸியில் அமர்ந்து (மனைவி: எவ்வளவு நேரம் காத்திருக்கறது?) கதவை அறைந்து மூடினேன்.

இன்னும் வரும்....

வற்றாயிருப்பு சுந்தர்,
பாஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline