|
அழகுநிலா கவிதைகள் |
|
- அழகுநிலா|மார்ச் 2008| |
|
|
|
|
காரைக்காலில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் அழகுநிலா, எழுத்தாளர் பூதலூர் முத்துவின் மகள். பிரபல நாவலாசிரியர் அழகாபுரி அழகப்பனின் மகள் வயிற்றுப் பேத்தி. கணவர் சுரேஷ் ஒரு மருத்துவர். 'பலூன்காரன் வராத தெரு' என்ற தொகுப்பின் மூலம் பரவலாக கவனத்தைக் கவர்ந்த அழகுநிலா, தொடர்ந்து 'தேவதையின் காலம்', 'ஆகாயத்தின் மக்கள்' ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். தற்காலப் பெண்கவிஞர்களுள் அழகுநிலாவின் கவிதைகள் வித்யாசமானவை. 'இயற்கைப் படிமங்கள், மெய்மை கடந்து செல்லல், வாழ்தலில் அவசம் போன்றவை அழகுநிலா கவிதைகளின் சிறப்பம்சங்கள் என்று கூறலாம். இளைய தலைமுறைப் பெண்கவிஞர்களில் வித்தியாசமானவர் அழகுநிலா' என்கிறார் பிரம்மராஜன். 'தேவதையின் காலம்' தொகுப்பிலிருந்து சில கவிதைகள்....
குழந்தைகள் விளையாடும்போது நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம்
பருந்துகளும் பட்டங்களும் நிறைந்த வானில் சூடேறிக் கொண்டிருக்கிறது காற்று.
நிலம் அதிர்ந்த இடங்களில் தார்ச்சாலைகள் பிளந்துகிடக்க வெளிச்சத்தில் பழகிய வார்த்தைகள் மறந்து விரல்களைக் கோத்துக் கொள்கிறோம்.
எப்போதும் போலவே பாதி இருளில் பூமி.
மேற்குப் பார்த்த எனது வீட்டின் சாவித்துவாரம் தேடியலைகிறது மாலை வெளியில்.
அறைகளில் நிரம்பிக்கிடக்கும் வெறுமையைச் சுவர்களும் கதவுகளுமாய்க் கூறு போட,
ஊரே உறங்கும் இந்த நேரத்தில் புத்தரின் குரலைப் போல இருக்கிறது ஜன்னலுக்கு வெளியே பூனையின் முனகல்.
நீ என்னைச் சபிக்கத் தொடங்கியபோது உன்னை மட்டுமல்ல என்னையும் கடந்து சென்றிருந்தேன் நான்.
திட்டமிட்ட நமது சந்திப்பில் வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு மீண்டும் நண்பர்களாகவோ அல்லது எதிரிகளாகவோ பிரிந்து செல்கிறோம்
இவற்றிற்கிடையே கதை சொல்லிகளிடம் போய்ச் சேர்ந்திருக்கும் நம்மைப்பற்றி அவர்கள் சொல்ல விரும்பிய கதை.
ஒளிந்துகொண்டு தேடவைத்தார்கள் விளையாடக் கொடுத்ததை காலால் நசுக்கினார்கள் உணவூட்டும்போது கடித்தார்கள் |
|
பூக்களைப் பிய்த்துப் போட்டு அவர்களே அழுதார்கள் பூச்சாண்டிக்குப் பயந்து வளர்ந்தார்கள்.
அதற்குப் பிறகான நாட்களில்... பிறகு அவர்கள் பெரிய பெரிய பதவிகளில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
யாருக்குப் புரிந்திருக்கும் வாழ்ந்தேயாக வேண்டியதன் அவசியம். முடிக்கப்படாமலிருக்கும் இந்தக் கடிதம் முடிக்க முடியாமல் இருக்கிறது வாழ்க்கையைப் போல
துகள் கூடித் தசை நெளிய இதழ் குவித்து இலை தின்னும் புழுவாய் வலி தாங்கி நரை கூடி முளைவிட்டு நீர் தேடி வேரலைய நிலமதிரப் பாய்ந்து நகங்கீறி என் பெண்மை நாணி கூனிக் குறுக பால் கசியும் பெருங் கடல் விலங்கின் மார்பு
நன்றி: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை - 600 017. |
|
|
|
|
|
|
|