Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
சமயம்
காஞ்சி காமாட்சி அம்மன்
- சீதா துரைராஜ்|பிப்ரவரி 2016|
Share:
நகரங்களுள் சிறந்தது காஞ்சி. நகரேஷு காஞ்சி என்னும் பழமொழி அதன் சிறப்பை விளக்குகிறது. சென்னை, செங்கல்பட்டிற்கு அருகே உள்ள நகரம். பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் (மண்), சக்தித் தலங்களுள் ஆகாயத் தலமாகவும் விளங்குகிறது.

பிரளயங்கள் உண்டாகும்போது மகாதேவி தனது தேஜோமயமான பிரகாசத்தினால் அழியா வண்ணம் காப்பாற்றியதால் இது பிரளயாஜி க்ஷேத்திரம் எனப் பெயர்பெற்றது. பிரம்மாவின் வேள்வியில் அவிர்பாகம் அடைந்து சங்கு, சக்ர கதாபாணியாகத் திருமால் சேவை சாதித்த தலம் காஞ்சி. இது பிரம்மாவால் பூஜிக்கப்பட்டபடியால் இத்தலத்திற்கு 'காஞ்சி' என்னும் பெயர் விளங்குகிறது. செய்யப்படும் புண்ணியங்கள் யாவும் பன்மடங்கு பலனைத் தரவல்ல தன்மைவாய்ந்த திருத்தலம் என்று இதன் பெருமையைப் புராணங்கள் கூறுகின்றன.

இத்தலத்தில் பராசக்தியாக தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறாள் தேவி ஸ்ரீகாமாக்ஷி. இந்நகரிலுள்ள முக்கியக் கோவில்களின் பிரதான கோபுரங்கள் யாவும் காமாஷி ஆலயத்தை நோக்கியே உள்ளன. அம்மன் ஆலயம் தெய்வீகக் கேந்திர ஸ்தானமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளில் முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் இருவரும் அன்னையைப் போற்றிப் பாடியுள்ளனர். பேசமுடியாத ஊமையான மூகன் என்னும் பக்தன் அன்னையின் சன்னிதியிலேயே பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டுக் காலம் தள்ளிவந்தான். ஒருநாள் இரவு சன்னிதியில் அவனிருப்பதை அறியாமல் கோவில் கதவைப் பூட்டிச் சென்றுவிட்டனர். இரவு முழுவதும் அன்னையை நினைத்துப் புலம்ப, அன்னை மூகனுக்கு பேசுந்திறனை அருளினாள். 'மூகபஞ்சசதி' என்னும் 500 சுலோகங்களை மூகன் இயற்றினார். இதில் அன்னையின் 'கடாட்ச சதகம்' என்னும் சுலோகங்கள் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது.

அன்னை காமாட்சி காயத்ரி மண்டபத்தின் நடுவில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளாள். காமகோடி பீடம் என்னும் ஸ்ரீசக்ரம் மண்டபத்தின் நடுவில் அம்பாளின் எதிரில் உள்ளது. இதில் அம்பாள் சூட்சும ரூபத்தில் விளங்குகிறாள். இந்தப் பீடத்தில் அஷ்டசக்திகள் உள்ளனர். கர்ப்பக்கிரகத்தில் தென்கிழக்கு நோக்கி பத்மாசனியாக முக்கண்ணுடன், கிரீடம் தரித்து, பாசம், அங்குசம், கரும்புவில், பஞ்சபாணம் இவற்றைத் திருக்கரங்களில் தரித்து ஸ்ரீ மூலகாமாட்சி, ராஜராஜேஸ்வரியாய்த் தோற்றமளிக்கிறாள். மூலஸ்தானத்தில் வலதுபுறம் தபஸ்காமாட்சி ஒற்றைக்காலில் நின்று தவக்கோலத்தில் விளங்குகிறாள். காத்யாயன முனிவரின் அறிவுரைப்படி பார்வதி இங்கு வந்து காமாட்சியை வணங்கினாள். அன்றிலிருந்து பார்வதி ஸ்ரீகாமாட்சியின் வலப்புறத்தில் தபஸ் காமாட்சியாக இருக்கிறாள். அவள் அனுக்ரஹத்தினால் ருத்ர கோட்டத்தில் ஸ்ரீ ஏகாம்பரநாதரை மாமரத்தின் அடியில் வணங்கி, தனது தவத்தின் பயனைப்பெற்றாள்.
அரக்கர்களின் கொடுமைகளுக்குப் பயந்து தேவர்கள் கிளிகளாக வந்து செண்பக மரங்களில் வாழ்ந்தனர். அவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி அரக்கர்களை அழிக்க தேவி, காஞ்சியில் பிலாகாஸத்தின் மூலமாகத் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினாள் என்பது வரலாறு.

அம்பாளின் இடதுபுறம் காயத்ரி மண்டபத்தில் அரூபலட்சுமி சன்னிதி உள்ளது. மஹாவிஷ்ணுவின் சாபத்தால் மகாலட்சுமி உருவமில்லாமல் அரூபலட்சுமியாக ஸ்ரீ காமாட்சியை வழிபட்டாள். அம்பாள் பிரசாதமான குங்குமத்தை அரூபலட்சுமியின்மேல் வைத்து வழிபட்டவுடன் அவள் தன் சௌந்தர்யத்தை திரும்பப் பெறுவாள் என அம்பாள் வரமளித்தாள்.

மஹாவிஷ்ணு, தன்னுடைய லட்சுமிதேவி சாபவிமோசனம் பெற்றுத் தன் அழகைத் திரும்பப் பெற்றாளா, இல்லையா என்பதை ஒளிந்திருந்து பார்க்கிறார். மஹாவிஷ்ணு அவதாரமான கள்வர் பெருமாள் சன்னிதி அம்பாளுக்கு வலதுபுறமாக தென்கிழக்கு நோக்கி உள்ளது. சௌந்தர்யலட்சுமி சன்னிதி இவருக்கு அருகே தெற்குநோக்கி உள்ளது. இந்த சௌந்தர்யலட்சுமியுடன் புண்ணியகோடியில் மஹாவிஷ்ணு வரதராஜனாகக் குடிகொண்டுள்ளார். கள்வர் பெருமாள் சன்னிதி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பெற்றதாகும்.

காயத்ரி மண்டபத்தில் வராஹீ, சௌபாக்கிய கணபதி, சந்தான கணபதி, அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. அடுத்த பிராகரத்தில் அன்னபூரணி, தர்மசாஸ்தா, ஆதிசங்கரர் சன்னிதிகள் அமைந்துள்ளன. இரண்டாவது பிரகாரத்தில் மேல்பகுதியில் துர்வாச மகரிஷி, உற்சவ காமாக்ஷி உள்ளிட்ட பல சன்னிதிகளும், மூன்றாவது பிராகாரத்தில் கால பைரவர், மஹிஷாசுரமர்த்தினி, பூதநிக்ரஹப் பெருமாள் சன்னிதிகளும், கோயில் திருக்குளமான பஞ்சகங்கையும் அமைந்துள்ளன.

அம்பாளுக்கு ஒவ்வொரு பௌர்ணமி இரவு அன்றும் விசேஷமாக நவாவரண பூஜை நடக்கிறது. தங்கரத உற்சவம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, அமாவாசை, பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. எத்திசை நோக்கினாலும் உயர்ந்த கோபுரங்களும் நெடிதுயர்ந்த மதில்களும் அனைவரையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. அன்னை காமாட்சி அடியவர்களை ஆட்கொண்ட அற்புதங்களும் அநேகம்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline