Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல்
- சுந்தரேஷ்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeடாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி என்ற சிறு கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பு கூடிய குடும்பத்தில் "சின்னார்" ஆக வளர்ந்து அமெரிக்கா வரை வளர்ந்து. இன்று ஐ.நா. சபையில் வறுமை ஒழிப்பு மற்றும் மானிடநேய முன்னேற்றத்துக்காக விருது வாங்கும் அளவுக்குப் பல மைல் கற்களைக் கடந்து வந்திருக்கும் இவரது பயணத்தின் கிராம அத்தியாயங்கள் இந்த நூலில் அழியாத நினைவுத் தடங்களாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன.

'தூரம்' அதில் பொதிந்துள்ள எளிய உண்மைத்தனத்திற்காக தனிப்பட்ட இடத்தைப் பெறுகிறது. பொக்கிஷமாய்க் கிடைத்த "மேமூடியோடு" உள்ள தூக்குச் சட்டி, கோவில் திருவிழா, மூன்று நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வித்தை காட்டுபவர், அத்திமரக் கொப்பை ஊன்றி ஊர்ப்பொதுவிடத்தில் கொண்டாடப்படும் தைப்பொங்கல் என்று கிராம வாழ்க்கையின் பல பரிமாணங்களையும் நிதானமாக அசை போட்டுக் கதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

மூடப்பழக்கம் என்று தமிழில் உலவும் வார்த்தை உண்மையில் அரசியல் சாயம் பூசப்பட்ட, அறிவுசார் நேர்மையற்ற வார்த்தை.
தமிழக கிராமத்தின் தவிர்க்க முடியாத ஜாதி இறுக்கங்களும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன, என்றாலும் சின்னாரது குடும்பத்திற்கும் மணியக்காரர் குடும்பத்திற்கும் இருந்த தகராறு முழுமையும் ஜாதியில் வேர் கொண்டதாகத் தெரியவில்லை; மாறாக, பொறாமையில் முளை விட்டு இரு குடும்பங்களுக்கு இடையில் படிப்படியாய் வளர்ந்த கிராமத்துப் பகையாகவே தெரிகிறது. வானம் பார்த்த பூமியில் விவசாய வாழ்க்கையின் நிச்சயமின்மை சின்னாரின் விவசாயக் குடும்பத்தை வியாபாரக் குடும்பமாக மாற்றுகிறது. ஏழ்மையிலும், விவசாயத்திலும் கூட்டுக் குடும்பம், வியாபாரத்தில் செல்வம் சேரச்சேர விரிசல் விடுகிறது. சின்னார் குடும்ப உறுப்பினரே அவரது குடும்பத்திற்கு எதிராக மணியக்காரர் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டு கொடும் சதி செய்கிறார். குடும்பப் பிளவை கிராமத்தின் ஆதிக்கக் குடும்பம் வசதியாகத் தனது அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்கப் பயன்படுத்திக் கொள்கிறது. இறுதியில் வீட்டின் நடுவே சுவர் எழுப்பப்பட்டு, சேர்ந்திருந்த குடும்பம் நிரந்தரப் பகையாகப் பிரிந்த வாழ்க்கை நடத்துவதைக் காணும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் நூல் முடிவடைகிறது.

கிராமத்துப் பாத்திரங்கள் நல்லவர்கள், கெட்டவர்கள், அப்பாவிகள் எனத் தெளிவாகப் பிரித்து வரையறுக்கப்பட்ட கூறுகளுடன் ஒரு எம்.ஜி.ஆர். பட எளிமையுடன் வடிக்கப்பட்டிருந்தாலும், இது இவரது சுய வாழ்க்கை சார்ந்த பதிவு. அதனால்தானோ என்னவோ பல இடங்களில் "சின்னார்" கற்பனை செய்திருந்த குடும்ப அமைப்பு சிதிலமடைவதைச் நூலாசிரியரால் தாங்க முடியவில்லை. இந்த ஆற்றாமை ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் தொடர்கதையில் வரும் "தொடரும்" போல, தவறாமல் வெளிப்படுகிறது.

கிராமப் பழக்கவழக்கங்கள் சிலவற்றை "மூடப்பழக்கங்கள்" என எழுதுவதைத் தவிர்த்திருக்கலாம். ஆங்கிலத்தில் கூட Superstition என்றுதான் சொல்லப்படுகிறதே தவிர stupid belief என்று குறிப்பதில்லை. மூடப்பழக்கம் என்று தமிழில் உலவும் வார்த்தை உண்மையில் அரசியல் சாயம் பூசப்பட்ட, அறிவுசார் நேர்மையற்ற வார்த்தை. சிக்கலான சமூக உறவுகளில் தொன்றுதொட்டு வரும் பல பழக்க வழக்கங்கள் அவற்றின் சமூகவியல் காரணங்களுக்காகப் பல நேரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலோட்டப் பார்வைக்கு பொருளற்றதாகத் தோன்றினாலும் காலங் காலமாய் வரும் இவ்வழக்கங்கள் பலவற்றுக்கு உளவியல், சமூகவியல் காரணிகள் உள்ளன.

பஞ்ச காலத்தில் "கோமான்" பொம்மை இழுக்கப்பட்டு அடித்து நொறுக்கப்படுவது விரக்தியான வாழ்வின் கோபம் வெளியே கொட்டக் கிடைக்கும் ஓர் உணர்ச்சி வடிகால். பஞ்ச காலத்தில் அன்றைய ஐரோப்பிய சமுதாயம் கிராமத்தில் சில பெண்களைச் சூனியக்காரிகள் என்று சொல்லி பஞ்சம், நோய் ஆகியவற்றிற்கு ஒட்டு மொத்தக் காரணமாக்கி அன்றைய ஐரோப்பிய மதபீடங்களின் உதவியுடன் நெருப்பிலிட்டுக் கொன்றதைச் சமூகவியலாளர் மார்வின் ஹாரிஸ் சுட்டிக் காட்டுகிறார் (பார்க்க: 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்'). இதன் பின்னணியில் நம் கிராமங்களில் பஞ்ச காலங்களில் 'கோமான்' பொம்மை உருவம் அடிக்கப்படுவதை ஆராய்ந்தால், நம் கிராமிய சமூகம் உளவியல் விரக்தியையும் வெறுப்பையும் கோமான் என்ற உயிரற்ற படிமத்தின் மீது இறக்கி வைத்து, அதன் மூலம் எளிய வலுவற்ற மக்கட் குழுக்கள் பலிகடாவாகாமல் காத்த சமூக உளவியல் பரிமாணம் புரிபடலாம்.

இந்த நூலின் மிகச்சிறப்பான அம்சம், இதில் நுணுக்கமாக விவரிக்கப்பட்டிருக்கும் தமிழக கிராமிய விவசாய வாழ்க்கை முறைதான். குருது செய்வது, இயற்கை உரம் செய்வது, "பத்தக்கட்டை" கொண்டு மீன் பிடிப்பது, "பாம்பு கட்டி" விவசாயம் செய்வது, ஊர்கூடிக் கூரை 'மேய்வது' என்று இயற்கையும் வாழ்க்கையும் இணைந்ததோர் எளிய இயக்கமாக இருக்கும் கிராம வாழ்க்கையை, அணுக்கத்தில் இருந்து கண்ட ஒருவரின் நேர்த்தியோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Click Here Enlargeகிராமப் பொருளாதாரம் உடல் உழைப்புக்கு அஞ்சாத கம்பீரத்துடன், எந்த அளவுக்கு ஒருவரையொருவர் சார்ந்து நிகழும் கூட்டுப் பொருளாதாரமாக, இயற்கையோடு இயைந்து வாழும் ஆரோக்கியமான வாழ்முறையாக இரு(ந்திரு)க்கிறது என்பதை இவரது விவரணைகள் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. கடன் வாங்கியும் மற்ற செல்வந்தர்களின் உதவியோடும் கல்வியும் மேற்படிப்பும் நடந்தேறுவதைப் படிக்கையில் உள்ளம் நெகிழ்கிறது.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் தமிழகக் கிராமத்தில் கீழ்மட்ட நிலையில் இருந்த சின்னார் அமெரிக்காவில் டாக்டராகி செல்வம் ஈட்ட முடிந்ததும், அவரது கிராமக் கூட்டுக்குடும்பம் சிதைந்ததும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்தான் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் எல்லா நிலையிலும் பிறருக்கு உதவும் உயர்ந்த பண்புகள் பேணப்பட வேண்டும் என்ற ஆசிரியரின் வேட்கையில் மானுடத்தின் மீது அவருக்குள்ள அக்கறை வெளியாகின்றது.

இந்த முதல் நூல் வெற்றிகரமான முதல் படியாக அமையட்டும் என்று வாழ்த்துவோம்.

பதிப்பாளர்: காவ்யா பதிப்பகம்,
சென்னை - 600 024
தொலைபேசி: (044) 2372 6882

பக்கம்: 256 + 12
விலை: ரூ. 250 (US $5.00)
புத்தகம் வாங்க: svadivel@yahoo.com

வே.சுந்தரேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline