Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன்
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2012|
Share:
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் எவ்வாறு இத்தனை பெரும் முயற்சிகளில் தன் கைத்தடத்தை ஆழ்ந்துப் பதித்திருக்கக் கூடும் என்பது புரியாத விந்தை என்றே சொல்லலாம்!

இத்தனை சாதனைகள் புரிந்துள்ள ஒரு தமிழ் விஞ்ஞானியின் புகழ் இவ்வளவு நாள் மேகமூட்டத்தில் ஒளிந்த பகலவன்போல் மறைந்தே இருந்திருக்கிறது. இவரைப்பற்றி சமீபத்தில் வெளியான ஒரு புத்தகத்தில் படித்ததும் அசந்தே போனேன். இம்மாமேதையைப் பற்றி இன்னும் ஒரு சிலருக்கேனும் இந்தக் கட்டுரை விழிப்புணர்ச்சி தருமானால் அதுவே பெரும்பலன் என்று கருதுவேன்.

சாதனைகள்
கிருஷ்ணன் அவர்களின் பற்பல சாதனைகளைப் பற்றி முழுமையாக இக்கட்டுரையில் விவரிக்க முடியாவிட்டாலும், அவற்றில் சில உச்சங்களையேனும் குறிப்பிடுகிறேன். முதலில் குறிக்க வேண்டிய உன்னதமான சாதனை என்னவென்றால், ராமன் விளைவு எனப்படும் விஞ்ஞானக் கோட்பாட்டை ஸர். சி.வி. ராமனுடன் சேர்ந்து கிருஷ்ணன் கண்டுபிடித்ததுதான். இந்தக் கண்டுபிடிப்பிற்காக சி.வி. ராமன் நோபெல் பரிசு பெற்றது வாசகர்களுக்கு பரிச்சயமானதுதான். ஆனால், ராமனின் முக்கிய மாணவராக ஆராய்ச்சிக்கூடத்தில் கிருஷ்ணனே தன் கைப்பட ஆராய்ச்சி செய்து ராமன் விளைவைக் கண்டறிந்தார். அந்தக் கோட்பாடு கிருஷ்ணன்-ராமன் விளைவு என்றே குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நோபெல் பரிசும் இருவருக்கும் சேர்த்து தரப்பட்டிருக்க வேண்டும் என்று அரசல் புரசலாகப் பேசப்பட்டதுண்டு. ஆனாலும், மிகப் பணிவோடு அதை மறுத்து, கிருஷ்ணன் தன் குருவான ராமனுக்கு மட்டுமே அப்பெருமை உரித்தானது என்று ஆணித்தரமாகக் கூறியது அவரது பரந்த மனத்தையும், குரு பக்தியையும் பளிச்செனக் காட்டுகிறது!

இந்தியா சுதந்திரம் பெற்றதும் பிரதமர் நேருவின் வேண்டுகோளுக்கிணங்கி கிருஷ்ணன் இந்திய தேசிய விஞ்ஞானக் குழுமத்துக்குத் தலைவராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்து, நாட்டின் பல முக்கிய விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. நேருவுடன் கலந்தாலோசித்து, அவர் ஆணைப்படி ஒவ்வொரு புது அம்சத்தை அல்லது துறையை ஆரம்பிக்கும்போதும், "வெறும் கோட்பாடாக மட்டும் இருந்து விடாமல், இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு அது எவ்வாறு பலனளிக்கும் என்று யோசித்து யோசித்துச் செயல்பட்டு, இன்றைய இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தார். இந்தியாவின் பல நகரங்களிலும் தேசிய விஞ்ஞானக் கூடங்களை நிறுவியதோடு, இந்திய அணுசக்திக் குழுமத்திலும் பெரும்பங்கு ஏற்று ஹோமி பாபாவுடன் சேர்ந்து பணியாற்றினார். மேலும், பல பன்னாட்டுக் கழகங்களிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று இந்தியாவை வெளியுலகத்தின் நோக்கில் நன்கு நிலைநாட்ட உதவினார்.

கிருஷ்ணன் அவர்களின் சாதனைகளை அங்கீகரித்து அவருக்குப் பற்பல விருதுகளும், பட்டங்களும் குவிந்தன. அவற்றுள் தேசீய உயர்விருதான பத்மபூஷண் விருதையும், மற்றும் பிரிட்டிஷ் அரசின் ஸர் என்னும் பட்டத்தையும் முக்கியமாகக் குறிப்பிடலாம்.
வாழ்க்கைச் சுருக்கம்
பொதுவாகக் கே.எஸ்.கிருஷ்ணன் என்று அழைக்கப் பட்ட கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன், டிஸம்பர் 4, 1898 அன்று தமிழ்நாட்டில் உள்ள வற்றப் (வற்றாயிருப்பு என்னும் பெயரின் மருவல்) கிராமத்தில் தோன்றினார். அவரது தகப்பனார் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பெரும் புலமைப் பெற்றிருந்தார். ராமானுஜன் எவ்வாறு தமிழ்க் கணித மேதையாக வளர்ந்தாரோ, அதே போல் கிருஷ்ணன் தமிழ் விஞ்ஞான மேதையாக வளர்ந்து வந்தார் என்றே சொல்லலாம்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் பள்ளிப் படிப்பும், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் படித்து இயல்பியல் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு ஸர். சி.வி. ராமனோடு சேர்ந்துப் பணியாற்றியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். அங்கிருந்து டாக்கா, கல்கத்தா மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகங்களில் பல இயல்பியல் ஆராய்ச்சிச் சாதனைகள் புரிந்தார். இங்கிலாந்தின் Fellow of the Royal Society என்னும் உயர்பட்டத்தோடு அங்கீகரிக்கப் பட்டார். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றதும் கிருஷ்ணன் அவர்கள் நேருவின் அன்புக் கட்டளைக்கிணங்கி தேசீய விஞ்ஞானப் பணி புரிந்தது பற்றி ஏற்கனவே விவரித்துள்ளோம்.

திரு. கிருஷ்ணன் அவர்களைப் பற்றித் தென்றல் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம், அவரது ஆழ்ந்தத் தமிழ்ப் பற்றாகும். விஞ்ஞான ஆராய்ச்சியிலும் கல்லூரி மற்றும் தேசீயப் பணிகளில் மட்டும் ஆழ்ந்து விடாமல், தமிழிலேயே விஞ்ஞானக் கல்வியளிக்க முடியும் என்று காட்டுவதற்காக, பல விஞ்ஞானக் கட்டுரைகளை, சாதாரண மானிடருக்கும் புரியும் வகையில் தமிழில் எழுதிக்காட்டியுள்ளார். மேலும், அதைப் பற்றிப் பல இடங்களிலும் விவரமாக அயராமல் பேசி உதவியுள்ளார். பல தமிழ் பக்தி நூல்களையும் கரைத்துக் குடித்து வாழ்நாள் முழுவதும் தன் தமிழார்வத்தைத் தணியாமல் பின்பற்றினார் கிருஷ்ணன்!

கிருஷ்ணனைப் பற்றி இணையத்தில் பல தளங்களில் விவரங்கள் காணக் கிடைக்கின்றன. Wikipediaவில் உள்ள குறிப்பிலிருந்து (http://en.wikipedia.org/wiki/Kariamanickam_Srinivasa_Krishnan) பிற தளங்களின் முகவரியை அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு சுவாரஸ்யமான விவரம்: கிருஷ்ணனைப் பற்றிய புத்தகத்தின்மீது என் கவனத்தை ஈர்த்தவர் யார் தெரியுமா? சிலிக்கான் சமவெளியில் வாழ்ந்து வருபவரும், வாசகர்களில் பலருக்கும் பரிச்சயமானமானவருமான டி.எம். ரவி. அதில் என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா. இவர், கிருஷ்ணன் அவர்களின் சொந்தப் பேரன்! ரவி பல வெற்றிகண்ட ஆரம்பநிலை நிறுவனங்களை நிறுவி நிர்வகித்தவர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!

புத்தகம் வாங்க:
தலைப்பு: "Kariamanikkam Srinivasa Krishnan His Life and Work"
எழுதியோர்: DCV Malik & Sabyasachi Chatterjee
பதிப்பு: 2012
பதிப்பாளர்: Universities Press (India) Pvt Ltd (www.universitiespress.com)
அமேஸான் வலைத் தளத்தில் வாங்கக் குறுக்குவழி (URL): amzn.to/ySlv8I
பல நூல் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கின்றது.

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline