வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கலி·போர்னியா கலி·போர்னியா பாடநூல் சச்சரவு தொடர்பான வலைச்சுட்டிகள்
|
|
கலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் - சர்ச்சை தொடர்கிறது |
|
- மணி மு.மணிவண்ணன்|பிப்ரவரி 2006| |
|
|
|
கலி·போர்னியா கல்வித்துறையின் பாடநூல் சீரமைப்புப் பணி இந்து மதம் பற்றிய பாடங்கள் எழுப்பிய சச்சரவில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. மூன்று முறை மக்கள் மன்ற விசாரணை, 1000 பக்கங்கள் வாக்குமூலம், 800 திருத்தங்கள் பரிசீலனை செய்த பின்னரும் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.
டிசம்பர் முதல் வாரத்தில் கூடிய கலி·போர்னியா பாடத்திட்டக் குழுவினர் வேதிய அறக்கட்டளை, இந்துக் கல்வி அறக்கட்டளை போன்ற இந்து மத அமைப்புகள் வேண்டிய முக்கிய திருத்தங்களை ஏற்று, ஹார்வர்ட் பேராசிரியர் மைக்கேல் விட்சல் குழுவினரின் முக்கிய பரிந்துரைகளை மறுத்து விட்டனர். தாங்கள் வேண்டிய திருத்தங்கள் எல்லாமே ஏற்கப்படாவிட்டாலும், தம் முக்கிய திருத்தங்கள் ஏற்கப்பட்டது இந்து மதக் குழுக்களுக்கு திருப்தி அளித்திருந்தது.
தலித் குழுக்களின் கண்டனம்
பாடத்திட்டக் குழு ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள் அமெரிக்க மற்றும் தலித் அமைப்புகளுக்குப் பேரதிர்ச்சி அளித்தன. தலித் அமைப்புகளோடு சேர்ந்து சில தமிழ் அமைப்புகளும் கலி·போர்னியா கல்வித் துறைக்குக் கண்டனம் தெரிவித்தன. இந்த அமைப்புகளோடு "தெற்காசியாவின் நண்பர்கள் (Friends of South Asia) குழு" இணங்கிச் செயல்பட்டது. தலித் ஒற்றுமை மன்றம், தலித் சக்தி கேந்திரம், தேசிய தலித் மனித உரிமை இயக்கம், தலித் விடுதலை இணையம் என்ற அமைப்புகளின் கண்டனக் கடிதங்கள் கல்வி வாரியம் மட்டுமல்லாமல் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கவனத்தையும் ஈர்த்தன.
பாடநூல்களில் மத அரசியல் கலக்கிறதோ என்ற கவலை கொண்ட கலி·போர்னியா கல்வித்துறை, பாடத்திட்டக் குழுவின் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலிக்க முடிவெடுத்தது. இதற்காக மாநிலக் கல்வி வாரியம் மற்றும் பாடத்திட்டக்குழு பிரதிநிதி களோடு கல்வித்துறை துணை ஆணையர், கல்வித்துறை வழக்கறிஞர், மற்றும் கல்வித் துறை நிபுணர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்துக்கு எதிரும் புதிருமான கருத்துகள் கொண்ட ஹார்வர்ட் சமஸ்கிருதப் பேராசிரியர் மைக்கேல் விட்சலும் நார்த்ரிட்ஜ் வரலாற்றுப் பேராசிரியர் சிவா வாஜ்பாயும் சிறப்பு ஆலோசகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒவ்வொரு திருத்தத்தைப் பற்றியும் இந்த இரண்டு பேராசிரியர்களும் கடுமையான வாக்குவாதம் செய்தனர். இது ஒரு கொடுமையான துவந்தம் போலிருந்தது என்று பேரா. வாஜ்பாய் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் சொன்னார். வாழ்க்கையில் இவ்வளவு கடுமையாக சண்டை போட்டதேயில்லை, பேரா. விட்சல் எதையுமே புரிந்து கொள்ளவில்லை என்று அவரிடமே சொல்ல வேண்டியிருந்தது என்று வருந்தினார் பேரா. வாஜ்பாய். "அவர் தன் மத நம்பிக்கையும், கல்வியறிவையும் குழப்பிக் கொள்கிறார்" என்று பேரா. வாஜ்பாயைப் பற்றி பேரா. விட்சல் குற்றம் சாட்டினார்.
மீண்டும் ஒரு பொதுமக்கள் மன்றம்
இந்தச் சிறப்புக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, கலி·போர்னியா கல்வி வாரியம் ஜனவரி 12ம் தேதி கூடியது. அதன் தொடர்பாக நடந்த மக்கள் மன்றத்தில் கலி·போர்னியாவின் ரியோ லிண்டா மற்றும் பிட்ஸ்பர்க் நகரங்களின் குரு ரவிதாஸ் குருத்வாரக் கோவில், அம்பேத்கர் நீதி அமைதி மன்றம், வகுப்புவாத எதிர்ப்புக் கூட்டணி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, மற்றும் தெற்காசியாவின் நண்பர்கள் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் "இந்துத்துவ அமைப்புகள்" பரிந்துரைத்த திருத்தங்களை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
குறிப்பாக "தலித்" என்ற சொல் நீக்கப்பட்டது, தீண்டாமையின் தீவிரத்தை மறைக்கும் திருத்தங்கள், ஜாதீயம், தீண்டாமை, பெண்ணுரிமை பற்றிய செய்திகள் இருட்டடிப்பு, ஆரியர் வருகை, தொடர்பான திருத்தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். பர்க்கெலி கலி·போர்னியா பல்கலைக்கழக மாந்தவியல் பேராசிரியர் லாரன்ஸ் கோனும் தன் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்.
வழக்கமாக இது போன்ற கூட்டங்களைத் தவற விடாத இந்து மத அமைப்புகள் ஏனோ இதில் முழுமையாகப் பங்கேற்கவில்லை. வேதிய அறக்கட்டளையின் சார்பில் அமெரிக்க இந்து அறக்கட்டளையின் வழக்கறிஞர் ஒருவர் மட்டுமே வந்திருந்தார். அவர் வேதிய அறக்கட்டளையின் பல நூற்றுக்கணக்கான திருத்தங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைக் கல்வி வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் இந்து மதம் பற்றிய பாடங்களைப் பற்றிய திருத்தங்களை மீள்பரிசீலனை செய்ய இன்னுமொரு துணைக்குழுவைக் கூட்டக் கல்வி வாரியம் முடிவு செய்தது. |
|
இந்தியாவில் அதிர்ச்சி
கலி·போர்னியா பாடநூல் திருத்த முயற்சியின் எதிரொலி இந்தியாவையும் எட்டியது. இந்தியாவின் வரலாற்று அறிஞர்கள் ஏற்கனவே பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி பாடநூல்களில் கொண்டு வந்த இந்து மையத் திருத்தங்கள் திரிக்கப்பட்டவை என்று போராடி நீக்கி வருகின்றனர். இந்த வரலாற்று அறிஞர்கள் எல்லோரும் இடதுசாரிகள் அல்லது மேற்கத்திய அடிவருடிகள் என்று இந்துத்துவ அணியினர் சாடுகின்றனர். இந்தியாவின் இந்துத்துவ அரசியலின் தாக்கம் கலி·போர்னியாவுக்கும் வந்த பின்னர் இங்கேயும் எதிரணிகள் உருவாகத் தொடங்கி விட்டன. இந்தியாவைப் போலவே இங்கும் இடது சாரிகள், தலித் மற்றும் இந்தியச் சிறுபான்மையினர் ஒரு புறம்; பாரதீய ஜனதா கட்சி அனுதாபிகள், இந்து ஸ்வயம் சேவக், இந்துத்துவப் பரிவாரங்கள் ஆதரவோடு இந்து மத அமைப்புகள் மறுபுறம். இந்தச் சச்சரவு அமெரிக்கப் பெரு நீரோட்ட ஊடகங்களான வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர், ஏபிசி நியூஸ் போன்றவற்றின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியதில் வியப்பில்லை.
குற்றச்சாட்டுகள்
பாடநூல் பற்றிய சச்சரவு தீவிரமாகியதும் வன்மையான குற்றச்சாட்டுகள் இரண்டு அணிகளிடமிருந்தும் பறக்கத் தொடங்கின. சாக்கடை அரசியல் வாடை கல்வி தொடர்பான இந்தச் சச்சரவிலும் அடிப்பது நடுநிலையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்தியவியல் பேராசிரியர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசத் தொடங்கினர். குறிப்பாக பேராசிரியர் விட்சல் ஒரு இனவெறியர் என்ற பிரச்சாரம் இந்தியவியல் பேராசிரியர்களுக்கு எரிச்சலூட்டியது. அறிஞர்கள் கருத்துப் பரிமாறும் ஆரவாரமற்ற ஆராய்ச்சி மொழியை உதறிவிட்டு, பரபரப்பான, குற்றம் சாட்டும் தொனியை இந்தியவியல் குழுவினரும் மேற்கொண்டனர்.
நேர்மையான பாடநூல்களை எதிர் பார்க்கும் பெற்றோர்கள், கலி·போர்னியா கல்வித்துறையின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இந்து அமெரிக்க அறக்கட்டளை தன் கலி·போர்னியா கல்வி வாரிய முறையீடுகளைக் கவனித்துக் கொள்ள சாக்ர மென்டோவில் ஒரு வழக்குரைஞர் குழுவை நியமித்துள்ளது. கல்வி வாரியம் என்ன முடிவு எடுத்தாலும் இந்த வழக்கு நீதிமன்றத்துக்குத் தான் செல்லும் என்று சில நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
More
வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கலி·போர்னியா கலி·போர்னியா பாடநூல் சச்சரவு தொடர்பான வலைச்சுட்டிகள்
|
|
|
|
|
|
|