தெரியுமா?
|
|
வெறும் சோற்றுக்கு வந்ததிந்தப் பஞ்சம் |
|
- முரளி பாரதி|ஜூன் 2008| |
|
|
|
|
மூன்றாம் உலக நாடுகளில் பரவலாக உணவுப் பற்றாக்குறை, இந்திய அரிசி ஏற்றுமதிக்குத் தடை போன்ற செய்திகளைத் தொலைநடப்பாகக் கவனித்து வந்த என்னை 'ஒருவருக்கு ஒரு மூட்டை' என்ற இந்தியக் கடை அட்டை சற்றுச் சிந்திக்க வைத்தது.
வளர்ந்த நாடுகளின் மக்கள் மாத வருமானத்தில் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே உணவுக்கெனச் செலவிடுகின்றனர். அரிசி பவுண்டு பதினெட்டு டாலர் என்பதைப் பார்த்து கல்லாவில் நெற்றி சுருக்கிவிட்டு, கடைவாசலில் மறந்துவிடுவோம். ஆனால் வளர்முக நாடுகளில் இந்த கிடுகிடு விலையேற்றம் உயிர் பிரச்சனையாகியுள்ளது.
40-50 சதவீதத்துக்கு மேல் உணவுக்காகச் செலவிடும் பல நாட்டினர் கிளர்ந்து வருகிறார்கள். ஹெய்டி, மேற்காப்பிரிக்க நாடுகள், எகிப்து, ஏமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் என்று பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் நீளுகிறது. 'முன்னெச்சரிக்கையின்றி பத்துக் கோடி மக்களை ஏழைமைக்குத் தள்ளிய சுனாமி இது' என்று உணவுப் பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளார் உலக வங்கித் தலைவர் ஜோனிக்.
நிகழ்வுகளைக் கவனித்து வந்த எனக்குள் தோன்றிய இரு வினாக்கள்: 1. ஏனிந்த திடீர் விலையேற்றம்? 2. நாளென்றுக்கு ஒரு விவசாயியாவது உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்திய வேளாண்மை நிலை, விலையேற்றத்தினால் மாறுமா?
| 'முன்னெச்சரிக்கையின்றி பத்துக் கோடி மக்களை ஏழைமைக்குத் தள்ளிய சுனாமி இது' என்று உணவுப் பிரச்சினை குறித்து கவலை தெரிவித்துள்ளார் உலக வங்கித் தலைவர் ஜோனிக். | |
முதல் கேள்விக்கு வருவோம். கடந்த மூன்று வருடங்களாகவே அரிசி, கோதுமை, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கூடிவந்தாலும் கடந்த ஜனவரியிலிருந்து ஏறும் வேகம் மூச்சு முட்டுவதாகவே உள்ளது. பெட்ரோலிய எரிபொருள் மற்றும் அதுசார்ந்த செயற்கை உரங்களின் விலையேற்றம், உணவு தானிய ஏற்றுமதி நாடான ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வறட்சி, வங்க தேசம் கண்ட வெள்ளம், பதுக்கல், ஏற்றுமதித் தடை மற்றும் யூரோ அடிப்படையிலான உலகச்சந்தை வணிகம் ஆகியன உடனடிக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. உணவு தானியங்கள் எரிபொருளாக மாற்றப்படுவது, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மிகுந்த நாடுகளான இந்தியா மற்றும் சீன நாட்டினரின் இறைச்சி நுகர்வு கூடியது, தொழில்மயம் மற்றும் நகரமயம் ஆகியவற்றுக்காக விளைநிலங்கள் பயன்படுத்தப்படுதல் ஆகியன நீண்ட காலக் காரணங்கள் எனலாம். சீனா மற்றும் வியட்நாமில் எழுபத்தேழு லட்சம் ஏக்கர் விளைநிலம் பத்தே வருடங்களில் பிற தேவைக்களுக்காக விழுங்கப்பெற்றன. |
|
முப்பது வருட மலிவு உணவு சகாப்தம் முடிவு பெற்றுள்ளது. விலையேற்றத்திற்கான செயற்கைக் காரணிகளின் தாக்கம் குறைந்து, சீர்நிலைக்கு உணவு உற்பத்தி இரண்டு வருடங்களில் மீளும் என்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.
இனி ஏழை விவசாயிகளின் நிலை மாறுமா என்ற கேள்விக்கு வருவோம். பொம்மைகள் தேவை மிகுந்ததால் விலைகூடினால் தயாரிப்பாளர்கள் இரவு பகல் பாராது உற்பத்தியைப் பெருக்கிப் பணம் பார்க்கலாம். ஆனால் விவசாய உற்பத்தியைத் தேவை கருதி வெகு குறுகிய காலத்தில் செய்ய இயலாது. விலை அதிகரித்து வரும் உரம் மற்றும் விவசாய எந்திரங்கள், வீரிய வித்துக்கள் ஆகியவற்றை வாங்க இயலாதவர்களாகச் சிறுவிவசாயிகள் உள்ளனர். முதலீட்டுக்குக் கந்து வட்டியையும் சந்தைக்கு இடைத்தரகர்களையும் நம்பி இருப்பதால் சந்தை விலையேற்றத்தால் விவசாயிகள் பயனடைய முடியவில்லை.
அரசாங்கங்கள் அரசியல் செய்வதை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி செய்துதர வேண்டும். மேலும் மான்ய விலையில் செயற்கை உரங்கள், வீரிய விதைகள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றைத் தருவதோடு விவசாயம் சார்ந்த பிற செலவுகளுக்கு சிறுகடனுதவி அளித்தல் வேண்டும். இவ்வாறு முனைப்பாகச் செயல்பட்டால் ஏழை விவசாயிகளின் நிலை முன்னேறும்.
நுகர் அங்காடித் துறை பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் நுட்பங்களைப் பெற்றால் நுகர்வோரும் விவசாயிகளும் ஒருங்கே பயன்பெறுவர். உணவு நெருக்கடி மிகுந்த நாட்டில், ரொட்டிக்கடை வரிசையில் நின்று நொந்து போன ஒருவன் கோபத்துடன் தலைவரை ஒருவழி செய்வதற்காகச் சென்றானாம். சிறிது நேரத்தில் தொங்கிய முகத்துடன் வந்தவனை என்னவென்று கேட்டதில், 'அங்கேயும் பெரிய வரிசை' என்றானாம்.
முரளி பாரதி |
|
|
More
தெரியுமா?
|
|
|
|
|
|
|