கீதா பென்னெட் பக்கம் கல்விக்கு ஆஷா: ஓடி ஓடித் திரட்டணும்
|
|
சுதந்திரம் பெற்றது தீதா |
|
- வேதம்மாள்|செப்டம்பர் 2003| |
|
|
|
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்தவள் நான். அதனாலேயே அடிமை விலங்குகளின் அழுத்தத்தை முழுவதுமாய் அறிந்தவள் நான். பின்னர் கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தமொன்று நிகழ்த்தி காந்தி அண்ணல் பெற்றுத் தந்திட்ட சுதந்திரத்தின் சுகந்தத்தை முதலில் சுகித்த முப்பது கோடி இந்தியர்களில் நானும் ஒருத்தி எனும் இறுமாப்புக் கொண்டவளும் நான். மகாகவி பாரதி உதித்த எட்டயபுரத்திலிருந்து எட்டிப் பார்த்தால் தெரியும் நெல்லையில் பிறந்து பாரதம் முழுவதும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் என்னைப் பதியம் போட்டுக் கொண்டவள் நான். "நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி" என்று எந்தப் புண்ணியவான் சொன்னானோ எனக்குத் தெரியாது. அந்த வாக்கியத்தை காயத்ரி மந்திரத்திற்கும் மேலாய் மனதில் இருத்தி, நெஞ்சினுள் நிறுத்தி, தாமிரபரணி என்றோ தட்சிண கங்கை என்றோ பாராது 'என்னுயிர்ப் பாரத மண்ணின் வேர் நாடிகள் இந்தப் புண்ணிய தீர்த்தங்கள்' என்று சொல்லிக்கொண்டே முங்கி, முங்கி, மூச்சு முட்டவும் குளித்திருக்கிறேன்; அந்த எண்ணங்களில் இன்னமும் மகிழ்ந்திருக்கிறேன்.
பள்ளியில் படிக்கின்ற நாட்களில் அப்பாவின் வேலை காரணமாய் நெல்லையிலிருந்து மதுரைக்குப் புகைவண்டியில் இரண்டு நாட்களுக்கும் மேலாய் சில நேரங்கள் பயணித்ததாய் ஞாபகம். அப்போதெல்லாம் "இது டின்னவெல்லி டிஸ்ட்ரிக்ட், இது மெஜுரா டிஸ்ட்ரிக்ட்" என்று அப்பா சொல்லிக்கொண்டே வருவார். நானோ, 'செயற்கையாய் எல்லைக் கோடுகளை வரைந்து கொண்டதாலேயே இவையிரண்டும் இரு வேறு ஊர்களாகி விடுமோ?' என்ற ஞான விவாதத்தில் என்னுள் இறங்கி விடுவேன். சில நேரங்களில், இந்தச் சுய விவாதம் விசாலமாகி, எதிரில் பயணித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்த விசாரணையில் இறங்கிவிடும். 'தன்னைச் சங்குமுத்துத் தேவர் என்றும், அய்யங்கண்ணு நாடார் என்றும் கயத்தாறு இராகவ ஐயங்காரென்றும் சொல்லித் தனிமைப்படுத்திக் கொள்ளும் இவர்களை எந்த எல்லைக் கோடு பிரிக்கிறது?' என்ற கேள்வியை எனக்குள்ளேயே கேட்டுக் கேட்டுக் குமைந்து போவதுண்டு. அந்தத் தருணங்களிலெல்லாம், "நாளையே சுதந்திரம் வரும், அப்போது அடிமை விலங்கு உடைந்து போகும், நாமெல்லாம் கல்வி பெறுவோம்... அன்று ஜாதியென்பதே இல்லாதொழியும்..." என்று சுகமான கனவுகளில் லயித்துப் போனதுண்டு. எங்கே தாளம் தப்பினால் தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருக்கும் என்னிலும் இளைய எத்தனையோ நித்தில மல்லிகைகளை உசுப்பி விட்டு விடுவோமோ என்று உணர்ந்து கொண்டு ஒரு கட வித்வானுக்கு இணையாகச் சுருதி குறையாது ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் கடகட, டகடகச் சத்தத்தில் என்னை ஒப்படைத்துவிட்டு அப்பாவின் மடியிலேயே அயர்ந்து தூங்கிப் போனதாகவும் ஞாபகம்.
இப்போது சில ஆண்டுகளாய் அமெரிக்கவில் வாழும் மகனோடும், மருமகளோடும் பேரக் குழந்தைகளோடும் மகிழ்வோடு வாழ்ந்தாலும்...அறியாச் சிறுமியாய் அன்று புகைவண்டியில் பயணிக்கையில் என்னுள் விதைத்திருந்த "நாளையே சுதந்திரம் வரும், அப்போது அடிமை விலங்கு உடைந்து போகும், நாமெல்லாம் கல்வி பெறுவோம்... அன்று ஜாதியென்பதே இல்லாதொழியும்..." என்ற அந்தக் கனவுகள் இப்பொதெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து என்னை வாதிக்காத நாளில்லை. "அடிப் பைத்தியமே! பாரத பூமியை இன்னும் எத்தனை நாள் காந்தி பிறந்த நாடாய்க் கனவு கண்டு கொண்டிருக்க உத்தேசம்?" என்று அக்கனவுகள் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பது போல் நெஞ்சுக்குள்ளே நித்தமும் கலவரம்.
இன்று தமிழகம் முழுவதுமாய் ஊருக்கு நூறு ஜாதிச் சங்கம்; வேலை எதுவும் இல்லையா, வெட்டு குத்து. இன்னும் வெறி கூடிப்போய் தலை விரித்தாடும் ஜாதிக் கலவரங்களைப் பற்றிப் பத்திரிகைகளிலும் இணையத்திலும் படிக்கிற போது... அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நான் கண்ட அந்தக் கனவு கனவாகவே போய் விடுமோ என்று எண்ணி, விசனமுற்றுப் பொடிப் பொடியாய் நொறுங்கிப் போகிறேன்.
இதில் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிதும் விசாரமுண்டு. சங்கம் வளர்த்த மதுரையாகட்டும், விடுதலை வேள்வித் தீயில் திரிகளாய் எரியுண்ட வீரபாண்டிய கட்ட பொம்மன், மகாகவி பாரதியார், சுப்ரமணிய சிவா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, செங்கோட்டை வாஞ்சி நாதன் என்று எண்ணரும் வீரர் தோன்றிய நெல்லை மாவட்டமாகட்டும் - இரண்டுமே என்னை விசால நோக்கோடு வளரப் பாத்தி கட்டிய புலம் எனப் புலப்பட்டதுண்டு. அந்த மகான்கள் எல் லோருமே விடுதலைத் தீ வளர்த்திட்ட அக்கினிக் குஞ்சுகளாக மட்டுமல்லாது, 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றதோர் தாரக மந்திரத்தை என்னுள்ளே தளிர்த்து வளரச் செய்திட்ட தவக் கொழுந்துகள். இன்றோ இதே தென் மாவட்டங்கள் ஜாதிக் கலவரச் சிதைக்கு நெய் வார்த்திடும் களம் என்று பத்திரிகைகளெல்லாம் கட்டம் கட்டி ஊரெல்லாம் தமுக்குத் தட்டுகையில் எங்கே தவறிழைத்தோம் என்று பரிதவிக்கிறேன். ஐயா! நியாயமாய்ப் பரிதவிக்கிறேன்.
எங்களுக்கு நெருக்கமான தமிழ் நண்பர் ஒருவரின் மகள். இங்குள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கப் பையன் ஒருவனைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள். பெண்ணின் பாட்டி என்னைப் போலவே வயது முதிர்ந்தவர். |
|
உடல் தளர்ந்து போனாலும், உள்ளத்தில் பொதிகை மலையின் பொலிவு. பேத்தியின் மணக்கோலம் காண்பதற்காக இங்கு அமெரிக்காவிற்கு வந்திருந்தார். நாங்களெல்லாம் இங்குள்ள கோயிலொன்றுக்குப் போய்விட்டு வருகையில் எடுத்த புகைப்படமே நீங்கள் பார்ப்பது. மாப்பிள்ளைப் பையன் - க்ரெய்க் - பெண்ணின் பெற்றோரை 'அம்மா, அப்பா' என்று வாய் நிறைய அழைக்கிறான். (அவன், இவன் என்று ஏக வசனத்தில் யாரையும் அழைப்பதில் எனக்கு உடன் பாடில்லை. என்றாலும் நெடு நெடுவென்று கார்மேக வண்ணனை ஒத்து நிற்கும் க்ரெய்க் என் பேரக் குழந்தைகளில் ஒருவன்(ர்) போல் தோன்றுவதால் நீ, நான் என்று சொல்லுகையில் சொந்தம் வந்தது போல் சுகப்படுகிறேன். அவனுக்கும் அதில் பரம சுகம்... தவறில்லையே!) எந்த ஒரு தமிழ்க் குடும்பத்தைப் பார்த்தாலும் அழகாக ஒரு மழலையின் குழைவோடு தமிழில் 'செளக்கியமா' என்றே கேட்கிறான்.
ஆம்படையாளிடம் தான் 'சரியாகச் சொல்கிறேனா?' என்று அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுகிறான். பாட்டியின் கால்களிலும், என் கால்களிலும் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து, எழுந்து நெற்றியில் குங்குமமிட்டுக் கொள்கிறான். எங்கே போனாலும்..., மற்றவர்களெல்லாம் முன்னே போய்விட்டாலும் கூட, பாட்டியையும் என்னையும் இரு கைகளில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு பாந்தமாய் அழைத்துச் செல்கிறான்.
தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் தாமிரபரணிக் கரையில் ஐதீகமான ஐயங்கார் இனத்தில் - அந்த நாட்களில் தொட்டால் மடி, விட்டால் விழுது எனத் தேவையற்ற சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் ஆழமாய்ப் புதைக்கப்பட்டிருந்த நான், பின்னர் அந்த ஆஷாடபூதிகளின் வில்லிலிருந்து விடுபட்டு நாளும் நாரணனின் நாமத்தை உச்சாடனம் செய்திடும் நாணாய் இன்று இங்கு நான்; மணிமுத்தாறே தன் எல்லையாய்க் கொண்டு, 'காக்கக் காக்க கனகவேல் காக்க' என்று கணமும் தினமும் கதிர்வேலவனின் நாமாவளி பாடிடும் ஓர் கட்டுப் பெட்டிப் பாட்டி; அந்தத் தாமிரபரணியையும், மணிமுத்தாறையும் இணைத்துக் கொண்டு இங்கு மெம்·பிஸ் நகரிலிருந்து இந்த மிஸிஸிப்பி நதி நிற்கும் எழிற் கோலம்... ஓ... இதைத்தான் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' எனச் சொன்னாரோ!
இந்திய விடுதலைப் போரின்போது மகாத்மாவோடு மானசீகமாய்த் தண்டி யாத்திரை போன இந்த இரு நதிகள், ஆப்பிரிக்க மண்ணிலிருந்து அமெரிக்க மண்ணுக்கு வந்திறங்கி 200 ஆண்டுகளுக்கும் மேலாய் அடிமைகளாய் வாழ்ந்துவிட்ட மற்றுமொரு இனத்தின் ஆறரை அடிப் பிரதிநிதி... என்று நாங்கள் எல்லோருமே மானுடம் என்ற ஓர் மகா நதிக்குள் திரிவேணி சங்கமமாகி விட்டதாகவே இந்த நிமிடத்தில் உணர்கிறேன். படத்தில் மாப்பிள்ளைப் பையனின் முகத்தில் இருக்கும் மலர்ச்சியும் எங்கள் கைகளில் இருக்கும் இறுக்கமுமே இதற்கு சாட்சியன்றோ!
முதுகுளத்தூரே, இராமநாதபுரமே, நாகர்கோயிலே... தமிழகமே... தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள். உலகம் முழுமையும் கணிப்பொறியில் கடல், வான், காற்று எல்லாவற்றையும் கடந்து ப்ரபஞ்சத்தையும் பிளந்து கொண்டு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. நீங்களோ... மதமென்னும் காதறுந்த ஊசியை வைத்துக் கொண்டு, ஜாதியென்னும் சடம்புக் கயிற்றால் மூட நம்பிக்கைத் தலையணையை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் முக்கி முக்கித் தைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? திருநெல்வேலி ஸ்டைலிலேயெ சொல்லுகிறேன்: 'நாக்கு வழிக்கக் கூட உதவாத' இந்த ஜாதிப் பிண்டத்தைக் கட்டிக் கொண்டு இன்னும் எத்தனை நாள் அழப் போகிறீர்கள்? 'சுதந்திரம் பெற்றது தீதா?' என்ற பாட்டுப் பொருளாக நரகத்தில் உழலப் போகிறீர்கள்?
இனம், நிறம், மொழி என்ற எல்லைகளைக் கடந்த முக்தி நிலைக்குத் தேவையான ஒரே மூலதனம் விரிந்த மனம், பரந்த எண்ணம்... அன்று இந்தப் புவனமே நம் உள்ளங்கைக்குள்!
வேதம்மாள் |
|
|
More
கீதா பென்னெட் பக்கம் கல்விக்கு ஆஷா: ஓடி ஓடித் திரட்டணும்
|
|
|
|
|
|
|