|
|
மேலை வேளாண்முறை நம் நிலத்தின் சத்தை அழித்து நிரந்தரப் பஞ்சத்தை உருவாக்கியது.' 'மேலை மருத்துவ முறை நம்மை நிரந்தர நோயாளி யாக்கியது.' 'மேலை அறிவியல் - தொழில்நுட்பம் வாழும் பூமியை பாழ் நிலமாக்கியது.'
மேற்குறித்த சிந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளில் உயிர்ப்பான சிந்தனை வீச்சுகளாகக் கிளம்புகின்றன. 'சமூக மாற்றம்', சூழல் பாது காப்பு' பற்றிய அரசியல் பிரக்ஞையாகவும் இவை உருப்பெற்று வருகின்றன. மேலை நாட்டு அறிவியல் தொழில்நுட்பம், மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது என உறுதியாக நம்ப முடியாத அளவிற்கு இன்றைய யதார்த்தம் உள்ளது.
பொதுவாக அறிவியல் - தொழில்நுட்பம், மருத்துவம் என்பன உலகத்துக்குமே பொது வானதாக எப்போதும் இருந்ததில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் புவியியல், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், வரலாற்றுக்கு ஏற்பவே அறிவியல்-தொழில்நுட்பம் வளர்ந்து வந்திருக்கிறது.
காலனி ஆதிக்கக் காலத்தில்தான் உலகத்துக்கே பொதுவான அறிவியல்-தொழில்நுட்பம் உருவாக ஆரம்பித்தது. அதுவும் உள்நாட்டு அறிவியல்-தொழில்நுட்பத்தை அழித்துத்தான் வளர்ந்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இன்று சமூகவியலாளர்களும், சூழலியலாளர் களும் மக்களையும் உயிர்ச் சூழலையும் (சுற்றுப்புறச் சூழல்) மையமாகக் கொண்ட அறிவியல்-தொழில்நுட்பம் உருவாக வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். காலனி மயமான சிந்தனையிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கும் பொழுதுதான் 'சூழலியல்-மனித வாழ்வு' பற்றியதே என்ற எண்ணம் தீவிரமாகும். அதுவே அனைத்து மாற்றங்களுக்கும் வழிகாட்டும்.
காலனி மயப்பட்ட இந்தியாவில், சுற்றுச் சூழல் பற்றிய பிரக்ஞையுடன் இயங்கியவர் ஜே. சி. குமரப்பா, காந்தீயப் பொருளியலாளராக வெளிப்பட்ட இவரது சிந்தனைகள், கருதுகோள்கள் எழுபதுகளில் எழுந்த சுற்றுச் சூழல் இயக்கத்துக்கு முன்னோடியாக அமைந்தன. இதனை ஜெர்மானியப் பொருளியலாளரும், சுற்றுச் சூழல் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தவருமான ஷ¤மாக்கர் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆக, காலனிமயமாக்கப்பட்ட இந்தியாவில், காலனிமயமான சிந்தனைக் கட்டமைப்பிலிருந்து விடுபட்டு சூழல்மயமான சிந்தனையில் வழி நடந்தார் குமரப்பா. அக்கால சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்கள், காந்தி, ராஜேந்திர பிரசாத், படேல், நேரு போன்ற தலைவர் களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார்.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தவ குடும்பத்தில் குமரப்பா பிறந்தார். இவர் தந்தையார் தஞ்சாவூரில் அரசுப் பொதுப் பணித்துறை ஊழியர். அவர் பெயர் சாலமன் துரைசாமி கொர்னீலியஸ். தாயார் பெயர் எஸ்தர். இவர்கள் இருவருக்கும் குமாரப்பா 4.1.1892 இல் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் ஜோசப் செல்லத்துரை கொர்னீலியஸ் குடும்பத்தி னருக்கு "செல்லா".
1912இல் குமரப்பா லண்டன் வென்று வணிகக் கணிதவியலைப் படித்து, கணக்காள ராகத் தேறினார். தொடர்ந்து அவர் மேல்நாட்டு வாழ்க்கைப் பாணியில் நாட்டம் கொண்டவராக விளங்கினார். ஒரு வங்கியிலும், ஒரு தனியார் நிறுவனத்திலும் லண்டனிலேயே பணிபுரிந்தார்.
1928-இல் அமெரிக்காவில் சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும், பின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பொருளாதாரமும் பயின்றார். அங்கு மாணவ ராக இருந்த பொழுது ஒரு தேவாலயத்தில் "இந்தியா ஏழ்மையாக இருப்பது ஏன்?" என்ற உரையை நிகழ்த்தினார். அந்த உரையின் சாரம் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளி யானது. அதைப் பார்த்த குமரப்பாவின் பேராசிரியர் இந்த தலைப்பையே எம். ஏ. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள ஆலோசனை கூறினார்.
இந்திய மக்களின் வறுமைக்கான பொருளாதார, அரசியல் காரணிகளைத் தேடி 'பொது நிதியும் நமது வறுமையும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்த பொழுது தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவின் ரத்தத்தை உறிஞ்சுகிறது என்பதை உணர்ந்தார். இந்நிலை மாற வேண்டுமானால், காலனி அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்.
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டார். சுதேசியம், விடுதலை, சுதந்திரம் பற்றிய மனப்பாங்கு காலனிமயமான அடிமை மனோபாவத்திலிருந்து குமரப்பாவை விடுவித்தது. தேசிய உணர்வு பீறிட்டமையால் தன் பெயரைக் குமரப்பா என்று மாற்றிக் கொண் டார். இது பூர்வீக வழியில் வரும் அவரது முப்பாட்டனார் பெயர்.
தான் மேற்கொண்ட ஆய்வேட்டிற்கு முகவுரை வேண்டி அதனை காந்திஜிக்கு அனுப்பினார். அதைப்படித்துவிட்டு உடனே குமரப்பாவை சபர்மதி ஆசிரமத்துக்கு காந்திஜி வரச் சொன்னார். அந்தச் சந்திப்பு ஓர் ஆழமான சித்தாந்த பூர்வமான சந்திப்பாக இருந்தது. இருவருக்கும் இடையே மிக நெருக்கமான ஆத்மார்த்தமான உறவை வளர்த்தது. இருவர் சிந்தனைத்தளமும் ஒன்றாகவே அவாவி நிற்பதை புரிந்து கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான் செய்த ஆய்வு மூலம் தனக்கு கிடைத்த பொருளியல் புரிதலுக்கு ஏற்ப காந்தியின் சிந்தனைகள், கோட்பாடுகள் இருப்பதைக் குமரப்பா உணர்ந்து கொண்டார்.
சுரண்டல் பொருளாதாரம் சுற்றுச் சூழலை நாசமாக்குகிறது. சுரண்டலற்ற பொருளாதாரம் இந்தியாவின் பிரச்சினைகளுக்கு விடை காண்கிறது. இது மெய்ப்படக் கூடிய கனவு என்று உறுதியாக குமரப்பா நம்பினார். இந்த இலக்கை அடையச் சுற்றுச் சூழலை அழிக்கத் தேவையில்லை, வாழ்வின் ஆதாரமான இயற்கை யைச் சீரழிக்க வேண்டியதில்லை. எரி பொருள்களை வீணடிக்க வேண்டியதில்லை என்பது குமரப்பாவின் வாதம். சூழல் சார்ந்த அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொருளியல் சிந்தனை சுதேசியத் தன்மையுடன் ஆழமாக வெளிப்பட்டது. இன்று சூழலியலாளர்கள் முன்வைக்கும் போற்றும் திட்டங்கள் சிந்தனைகள் பலவற்றை 1930 களிலேயே குமரப்பா பிரகடனம் செய்தார். இவை சார்ந்த கட்டுரைகள் 'ஹரிஜன்' இதழில் வெளியிட்டார். இயற்கை வளம் நம் பாரம்பரியச் சொத்து. நம் சந்ததிகளுக்கு நாம் அவற்றை விட்டுச் செல்ல வேண்டும் என்று குமரப்பா அன்றே எழுதி வைத்தார். இதன் மூலம் அவரது தொலை நோக்குப் பார்வை தெளிவாகிறது.
குமரப்பாவின் ஆய்வுக்கட்டுரை 'யங் இந்தியா வில்' தொடராக வெளிவந்தது. மேலும், காந்தி கேட்டுக் கொண்டமையால் குஜராத் மாநிலத்தில் கிராமப் புற ஆய்வு ஒன்றையும் மேற்கொண்டார். ஆய்வை மேற்கொண்டிருந்த பொழுதுதான் தண்டி யாத்திரையின் போது காந்தியும், மகாதேவ் தேசாயும் கைதானார்கள். இதைத் தொடர்ந்து 'யங் இந்தியா'வின் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி குமரப்பா கேட்டுக் கொள்ளப்பட்டார். இது அவருடைய முதல் சிறைத் தண்டனைக்கு வழிவகுத்தது.
குமரப்பாவின் கட்டுரைகள் 'யங் இந்தியா', 'ஹரிஜன்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும் வெளிவந்தன. கிராமப்புற மக்களின் மேம்பாடு, அதிலும் இயற்கையுடன் கூடிய பாதுகாப்பு வாழ்க்கை இவைதான் குமாரப்பாவின் அவாவாகவும் அக்கறையாகவும் இருந்தன.
சுற்றுச்சூழல் பேணலில் குமரப்பாவுக்கு இருந்த அக்கறையின் வெளிப்பாடுதான் கிராமியத் தொழில்களில் அவர் காட்டிய ஆர்வம். பூமியின் இயற்கை வளத்தைச் சுரண்டி அழிக்காமல், அதைச் சமநிலைப்படுத்தி வைக்கும் வழியாகவே வன்முறையற்ற பொருளாதாரம் உள்ளது என நம்பினார். தொடர்ந்து கிராம இயக்கம் பற்றியும் அதற்கான தத்துவம், பொருளாதாரம் பற்றியுமே அவர் பெரிதும் கவலை கொண்டார்.
மும்பையில் 1934 இல் நடந்த காங்கிரஸ் மாநாடு அகில கிராமத் தொழில்களின் சங்கத்தை நிறுவத் தீர்மானித்தது. காந்திஜியைத் தலைவராகக் கொண்டு வார்தாவிற்கு அருகில் உள்ள மகண்வாடி என்ற இடத்திலிருந்து இயங்கிய இந்த அமைப்பிற்குக் குமரப்பா செயலாளராக நியமிக்கப்பட்டார். சங்கத்தின் செயல்பாடுகளாக ஆராய்ச்சி, உற்பத்தி, பயிற்சி, கருத்து விரிவாக்கம், நூல் வெளியீடு என ஐந்து அம்சங்களில் பணிகள் இருந்தன. இங்கு 20 ஆண்டுகள் வாழ்ந்தார்.
மேற்கத்திய முறையிலான பொருளாதார வளர்ச்சி நம் நாட்டிற்கு உகந்தல்ல என்பது குமரப்பாவின் உறுதியான நம்பிக்கை. சூழல் பேணக்கூடிய பொருளாதார வளர்ச்சிதான் நமக்கான சுய சார்புப் பொருளாதார வளர்ச்சி யைத் தரும். ஆக, இது போன்ற சிந்தனைகளால் மேலும், உரம் பெற்றுத் தெளிவு பெற்ற ஒருவராகத் தான் குமரப்பா வெளிப்பட்டார்.
பொருளாதாரச் சித்தாந்தத்தில் காந்தியுடன் நேரு கொண்டிருந்த கருத்து வேறுபாடு குமரப்பா - நேரு உறவிலும் வெளிப்பட்டது. |
|
1937 இல் காங்கிரஸ் தலைவராக நேரு இருந்த பொழுது நேரு தலைமையில் தேசியத் திட்டக் குழு ஒன்றை அமைத்தார். அதில் குமரப்பாவும் ஓர் உறுப்பினர். பாரம்பரியக் கிராமத் தொழில் களையும் கிராமம் சார்ந்த பொருளாதாரத் தையும் கைவினைகளையும் பேணுவதில் நேருவுக்கு நம்பிக்கையில்லை. தொடர்ந்து சில அமர்வுகளில் கலந்து கொண்ட குமரப்பா சோவியத் ரஷ்யாவை முன்மாதிரியாகக் கொண்டு கனரகத் தொழில்களுக்குத்தான் நேரு சிறப்பிடம் என்பதை உணர்ந்தார்.
கிராமத் தொழில்களில் அலையென எழுந்த புதிய ஆர்வம் சுதந்திர இந்தியாவில் ஓய்வதைக் கண்டார். நேருவின் பொருளாதாரச் சிந்தனை நாட்டை இட்டுச் செல்லும் பாதை மிக மோசமான விளைவுகளைத் தரும் என்பதில் உறுதியாக இருந்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பொருளாதாரத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவை இட்டுச் செல்லும் நேருவின் போக்கைக் கடுமையாக விமர்சித்தார். இந்திய மூலவளங்கள் பற்றி அறியாத இந்தப் பேதைமை மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என எச்சரிக்கை செய்தார். நேருவும் பதிலுக்கு 'All India Village Industries Association' என்பதை 'All India Village Idiots Association' என்று பரிகசித்தார்.
ஆக நேருவின் சிந்தனைப் பாதை இயற்கை வளத்திற்குக் குந்தகத்தையும் சுற்றுச் சூழல் சீர்கேட்டையும் பொருளாதாரப் பின்னடைவை யும் வேலை வாய்ப்பின்மையையும் விளைவிக் கும் என்பதால் திட்டக்குழுவிலிருந்து விலகினார்.
இந்தியப் பொருளாதாரம் பற்றிய தன் அளவில் லட்சிய உருவமாகவும் தனது பிரதிநிதியாகவும் குமரப்பாவை காந்தி வெகுவாக நேசித்தார். குமரப்பாவை காந்தி எப்போதும் புரொ·பசர் என்றே அழைப்பது வழக்கம். காங்கிரஸ் தலைமைப் பீடத்திலும் சரி, அமைச்சரவை மட்டங்களிலும் சரி பல்வேறு பதவிகள் குமரப்பா வகிக்கக் காத்திருந்தன. ஆனால், அவற்றை குமரப்பா மறுத்து வந்துள்ளார்.
காந்தியின் மறைவுக்குப் பின் குமரப்பாவின் கவனம் வேளாண்மை சீர்திருத்தத்திலும் ஆசிரம வாழ்க்கையிலும் சென்றது.
1948 இல் சுதந்திர இந்தியாவில் விவசாய சீர்திருத்தக் குழுவின் செயலாளராக நாடு முழுவதும் குமரப்பா பயணம் செய்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கை நிலம் தனியுடைமை யாக இருக்கக்கூடாது. உழுபவனுக்கே நிலத்தின் பலன் நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது போன்ற புரட்சிகரமான பரிந்துரைகளைக் கொண்டிருந்தது. இதனாலேயே அந்த அறிக்கை ஏற்கப்படாமல் போனது. ஆனால், நாட்டின் நில விவசாயப் பிரச்சினைகளை ஆழமாக ஆராய அவருக்கு நல்ல சந்தர்ப்பத்தை இது வழங்கியது.
வேளாண்மை பற்றியும், எந்தப் பயிர்களை எப்போது பயிரிட வேண்டும் என்பது பற்றியும், பணப்பயிர்களினால் வளரும் கேடு பற்றியும் பல கட்டுரைகளை எழுதினார்.
உணவுப் பஞ்சம் ஏற்பட்டதற்குத் தன்னிறை வைப் பிரதான நோக்கமாகக் கொண்ட கிராமியப் பொருளாதாரத்தையும் நாம் கைவிட்டதுதான் அடிப்படைக் காரணம். சுயதேவைப் பூர்த்தி - தன்னிறைவு என்ற நோக்கோடு சமன் முறைச் சாகுபடியில் மனப்பூர்வமாக ஈடுபட்டாலொழிய உணவு, துணிப்பஞ்சத்தைத் தீர்ப்பதென்பது சாத்தியமில்லை என்று எழுதினார். குமரப்பாவின் பல நூல்களுக்கு காந்திஜி முன்னுரை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமிய தன்னிறைவுப் பொருளதாரமே சாத்வீகமானது, உலக அமைதிக்கானது, பண அடிப்படையிலான நவீன பொருளதாரம் வன்முறையானது, யுத்தங்களுக்கு வழி அமைப்பது என்று மிக உறுதியுடன் கூறி வந்தார். எழுதி வந்தார்.
1953-ஆம் ஆண்டு உடல் நலம் மிகவும் குன்றிய நிலையில் மருத்துவர்கள் அவருக்குப் பூரண ஓய்வைப் பரிந்துரைத்தனர். தன் வாழ்வின் இறுதிக் காலத்தை அமைதியாகவும் பயனுள்ளதாகவும் செலவிட மதுரைக்கருகே கல்லுப்பட்டியில் இருந்த 'காந்தி நிகேதன்' என்ற ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு வசித்த ஐந்து ஆண்டுகளில் சுற்றியிருந்த கிராமங்களில் நிர்மாணப் பணியாற்றினார். 1956ஆம் ஆண்டு மதுரைக் கருகிலுள்ள 27 கிராமங்களில் பொருளாதாரக் கணிப்பு நடத்தினார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதிய அறிக்கையில் சுற்றுச் சூழல் பற்றிய அவரது சிந்தனைகள் தீர்க்கதரிசனமாய் ஒலித்தன. நீர்வளத்தைக் காடுதான் காக்கிறது என்ற உண்மையை நம் அரசு மறந்து விட்டது. காட்டிலிருந்து கிடைக்கும் வருவாயிலேயே கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் நல்ல முறையில் பாதுகாக்கப்படும் பொதுக்காடு இருக்க வேண்டும்.
பாசன ஏரிகள் யாவுமே தூர்ந்து போய் மண் அரிப்பில் சீர்கெட்டு விட்டன. இந்த ஏரிகளை ஐந்தாறடி ஆழத்துக்குத் தூர் வாரினால் பாசன நீர்ப்பற்றாக்குறை தீரும். ஒரு போகச் சாகுபடிக்குக் கூடத் திண்டாடும் இன்றைய நிலை மாறி இரண்டு அல்லது மூன்று போக விளைச்சலைக் காணலாம் அல்லது மூன்று போக விளைச்சலைக் காணாம். இந்த ஏரிகளைப் பராமரித்தால் வெள்ளச் சேதத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நில அரிப்பையும் தடுக்கலாம்.
கிராமங்களில் மண் அல்லது நீர்ப்பரி சோதனைக்கு வழி இல்லை. இது இல்லாத நிலையில் வேதி உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. இப்போ மலிவு விலையில் இரசாயன உரங்கள் விற்கப்படுகின்றன. நாளாவட்டத்தில் இவற்றால் கேடே விளையும். ஆனால், அரசோ இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகளை ஆராயாமல் அவற்றை விநியோகிப் பதிலேயே கண்ணாயிருக்கிறது என்றார்.
அவர் ஆரம்பித்து வைத்த பாணியைத் தான் இன்று சூழலியாளர்கள் தொடர்கிறார்கள். மண்வளம் வனப்பராமரிப்பு, நீர்ப்பாதுகாப்பு, கைவினைத் தொழில்கள் போன்றவற்றைக் கிராம மக்களின் ஈடுபாட்டால் மட்டுமே பேண முடியும் என்று அவர் நம்பினார். அவரது சிந்தனைகளின் விரிவு இதை மெய்ப்பிக்கிறது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய உரத்த சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். குமரப்பா பற்றிய மீள் வாசிப்பு இன்றைய சூழலில் பிரச்சினைகளுடன் அவர் எந்தெந்த ரீதியில் தக்க மாற்றுகளைத் தருகிறார் என்பதை இனங்காட்டும்.
காந்திஜி மரித்த அதே நாளில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று குமரப்பா காலமானார். ஆனால், அவரது சிந்தனைகள் இன்றைய சுற்றுச் சூழல் இயக்கச் செயல்பாடுகளுக்கு முன்னோடி யாக உள்ளன. சூழலியலாளர்கள் அவரது சிந்தனையின் விரிவும் ஆழமும் தேடுவது காலத்தின் கட்டாயமாகிறது.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|