"நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை…", "கந்தன் எனும் மந்திரத்தை..", "பச்சை மயில் வாகனனை..", "வேல்முருகா மால்முருகா..", "உள்ளம் எனும் கோவிலிலே...", "ஆடாது அசங்காது வா கண்ணா..", "அலைபாயுதே கண்ணா.." போன்ற பாடல்களை உள்ளம் உருகப் பாடி, கேட்பவர்களையும் உருகவைத்த வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரர் பித்துக்குளி முருகதாஸ். இயற்பெயர் பாலசுப்பிரமணியன். 1920ம் ஆண்டில் தைப்பூச தினத்தன்று கோவையில் சுந்தரம் ஐயர் - அலமேலு இணையருக்கு மகனாகப் பிறந்தார். இளவயதிலேயே தந்தையை இழந்த இவர் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர், பஜனை வித்வான். சிறந்த இசைஞானம் உடையவர். பாட்டி ருக்மிணியும் பஜனை பாடுவார். இவருக்கும் சிறு வயதிலேயே இசையார்வம் சுடர்விட்டது. பாட்டியும் தாத்தாவும் இவருக்குப் பாடச் சொல்லிக் கொடுத்தனர். பள்ளியில் இறைவணக்கம் பாடுவது, போட்டிகளில் கலந்துகொள்வது என்று தனது இசைத்திறனை வளர்த்துக் கொண்டார்.
சிறுவயதில் கிட்டிப்புள் விளையாடிய போது குச்சி தாக்கி இடதுகண் பழுதுபட்டது. அந்தக் கண்ணுடனேயே படிப்பு தொடர்ந்தது. பழநியில் இவரது சித்தியின் வீடு இருந்தது. விடுமுறை நாட்களில் அங்கு செல்வது வழக்கம். ஒரு சமயம் வெட்டாற்றின் அருகே உள்ள பஞ்சவர்ண குகையைக் கண்டார். அங்கு யோகிகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தது இவரை வசீகரித்தது. அவர்கள் ஜபித்து வந்த 'சரவண பவ' மந்திரத்தைத் தானும் ஆர்வத்தின் காரணமாக விடாமல் உச்சரிக்க ஆரம்பித்தார்.
அது விடுதலை உணர்வு எங்கும் பரவியிருந்த காலம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியத்திற்கும் அந்த ஆர்வம் இருந்தது. காங்கிரஸ் இயக்கத்தினருடன் சேர்ந்து சுதேசி இயக்கத்தை ஆதரித்து வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டார். நாளடைவில் பள்ளிப்படிப்பில் நாட்டம் குறைந்தது. பழநிக்குச் சென்று சித்தப்பா நடத்தி வந்த சிறிய வணிக நிறுவனத்திலும், லாட்ஜிலும் சில காலம் வேலை செய்தார். ஆனால், அவற்றில் மனம் ஈடுபடவில்லை. அவ்வப்போது பஞ்சவர்ண குகைக்குச் சென்று தியானத்தில் ஆழ்வதும், பழநி ஆண்டவர் சன்னிதிக்குச் சென்று முருகப்பெருமான் மீது பாடுவதும் வழக்கமானது. சித்தப்பா அதைக் கண்டித்தார்.
மனம் வருந்திய இவர், ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேறினார். கோவையில் ரயிலேறினார். கையில் காசில்லாததால் பயணச்சீட்டு வாங்கவில்லை. அதனால் ஈரோடு ரயில் நிலையத்தில் பரிசோதகரால் இறக்கி விடப்பட்டார். கிடைத்த வேலைகளைச் செய்து அவ்வூரில் சில நாட்களைக் கழித்தார். கையில் காசு சேர்ந்ததும் ஊருக்குப் புறப்பட்டு வந்தார். அக்காலகட்டத்தில் இவருக்கு பிரம்மானந்தப் பரதேசி சுவாமிகள் என்ற அருளாளரின் அறிமுகம் கிடைத்தது. அவரே இவருக்கு குருவாக இருந்து பல பாடல்களைச் சொல்லிக் கொடுத்தார். பாடும்போது இயல்பாகவே தன்னை மறந்து, சூழலை மறந்து இறைவனோடு ஒன்றிப் பாடுவான் பாலசுப்பிரமணியம். இதைக் கண்ட பிரம்மானந்த பரதேசியார், "இது இப்படியே தொடர்ந்தால் நீயும் ஒருநாள் என்னைப் போன்று 'பித்துக்குளி' ஆகிவிடுவாய்" என்றார். மகானின் வாக்கு தக்க காலத்தில் பலித்தது.
சுவாமி ராமதாசர், அன்னை கிருஷ்ணா பாய் ஆகியோருடன்
ஆன்மீக தாகம் பெருகியதால் பல இடங்களுக்கும் பயணம் செய்தார். தமது 16ம் வயதில் திருவண்ணாமலை சென்றார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியைத் தரிசித்தார். மகரிஷியின் அருபார்வை இவர்மீது பட்டது. மிகப்பெரும் பரவசத்துக்கு உள்ளானார். அந்தப் பயணம் இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அண்ணாமலையில் குகை ஒன்றில் தனித்திருந்து சில நாட்கள் தியானம் செய்தார். பின் வள்ளிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கும் தனித்திருந்து தவம் செய்தார். அதுமுதல் ஆன்மீகத் தலங்களுக்குப் போவதும் ஞானிகளை தரிசிப்பதும் வழக்கமானது. தேச விடுதலைமீதும் இவர் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு சமயம் பெங்களூர் சென்றிருந்தபோது, அங்கிருந்த போராட்டக்காரர்களுடன் இணைந்து 'அந்நியத் துணி எதிர்ப்பு'ப் போராட்டத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர் தாக்கியதில், ஏற்கனவே பழுதுபட்டிருந்த கண்ணில் மேலும் அடிபட்டது. இடதுகண் பார்வை முற்றிலும் இல்லாமல் போனது. ஆனாலும் மனம் தளராமல் பயணங்களைத் தொடர்ந்தார். வள்ளிமலை சுவாமிகள் போன்றோரை அணுகித் திருப்புகழ் பாடல்களை சந்தத்துடன் பாடக் கற்றுக்கொண்டார்.
1939ல் காஞ்ஞன்காட்டில் சுவாமி ராமதாஸரைச் சந்தித்தார். அவரது அருளும் அன்னை கிருஷ்ணா பாயின் ஆசிர்வாதமும் கிட்டியது. சுவாமி ராமதாஸர் முருகன்மீது இவர் உருகி உருகிப் பாடுவதைக் கண்டு இவருக்கு 'முருகதாஸர்' என்று பெயர் சூட்டினார். தன் குருநாதர் தன்னை அன்போடு அழைத்த 'பித்துக்குளி' என்பதையும் இணைத்துக்கொண்டு, பாலசுப்பிரமணியன், 'பித்துக்குளி முருகதாஸ்' ஆனார். புனிதத் தலங்களுக்குப் போவது, அங்கு பாடல்கள் இயற்றிப் பாடுவது, ஞானியரைத் தேடிச்சென்று தரிசிப்பது என்று வாழ்க்கை கழிந்தது. 1940ல் சேந்தமங்கலம் அவதூத ஸ்வாமிகளுடன் சில நாட்கள் தங்கினார். அவரது அருளையும், ஆசிகளையும் பெற்றபின் வட நாட்டுக்குப் பாத யாத்திரையாகச் சென்றார். நேபாளத்துக்குச் சென்று வழிபட்டார். ஓராண்டு பயணத்திற்குப் பின் தமிழகம் திரும்பி வெள்ளியங்கிரியில் சில காலம் தவம் செய்தார். பின் திருப்புகழ் மணி அவர்களுடன் இலங்கைக்குச் சென்றார். இலங்கை முழுவதும் பயணம் மேற்கொண்டு பஜனைக் கச்சேரி செய்தார். தமிழகம் திரும்பியபின் தீவிரமாகக் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளுடன்
மீண்டும் வடநாட்டு யாத்திரையைத் தொடர்ந்த இவர், ரிஷிகேஷ் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். மே 11, 1941ல் அவரிடம் தீக்ஷை பெற்று, நைஷ்டிக பிரம்மச்சாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்த தனது இசைப்பயணத்தில் ஒரு சமயம் இவர் காஞ்ஞன்காடு ஆசிரமம் சென்றிருந்தார். அங்கே திடீரென இவருக்கு வலக்கண்ணில் தீராத வலி ஏற்பட்டது. நேரம் ஆக ஆக அதுவும் அதிகமானது. எங்கே தனது இந்தக் கண்ணும் பழுதாகிவிடுமோ என்று மனம் வருந்தினார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு திடீரென ஆவேசம் வந்து, "உன்னோட இந்தக் கண்ணுக்கு ஆயுசு கெட்டி. ஒண்ணும் ஆகாது" என்று சொல்லித் தடவிக்கொடுக்க, சிறிது நேரத்திலேயே அவருக்கு வலி குறைந்துவிட்டது. அதுமுதல் 'கறுப்புக் கண்ணாடி' அணிய ஆரம்பித்தார்.
இந்தியா, இலங்கை மட்டுமன்றி, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து, மொரீஷியஸ் எனப் பல நாடுகளுக்கும் சென்று பக்தியைப் பரப்பினார். தனக்குக் கிடைத்த நிதியைக் கொண்டு கல்யாணராமையருடன் இணைந்து, ராணிப்பேட்டை அருகே வாலாஜாபேட்டையில் 'தீனபந்து ஆசிரமம்' என்பதை உருவாக்கினார். அதன்மூலம் அளவற்ற ஆன்மீக, சமூக நற்பணிகளைச் செய்தார். ஏழை எளிய மக்களின், ஆதரவற்றவர்களின் குழந்தைகளுக்கு உணவு, இருப்பிடம், கல்வியை இன்றளவும் அளித்து வருகிறது அந்த ஆசிரமம்.
முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கலைமாமணி விருது பெறுதல்
திருப்புகழை பாவத்துடனும் சந்த நயத்துடனும் பாடுவதில் தேர்ந்தவர் பித்துக்குளி முருகதாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகள் தெரிந்தவர். ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடியிருக்கிறார். முருகன்மீது நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். குன்னடிக்குடி வைத்தியநாதன் மற்றும் தேவரின் வேண்டுகோளுக்கிணங்க, 'தெய்வம்' திரைப்படத்தில் 'நாடறியும் நூறு மலை…' என்ற பாடல் காட்சியில் பாடி நடித்தார். தனது குருநாதர்களைப் பற்றியும், தேவி கருமாரி, பகவதி, முருகன், கிருஷ்ணன் போன்ற தெய்வங்கள் மீதும் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார். "கடவுள் மீதான பக்திக்கு, சாதி, மதம் எதுவும் தேவையில்லை. அன்பும் பக்தியும் நம்பிக்கையும் போதும். ஒருவர் ஒவ்வொரு நாளும் பக்தி பாடல்களைப் பாடப்பாட, கடவுள் அவர்களை எல்லா வேதனைகள், துக்கங்கள் மற்றும் துயரங்களிலிருந்து விடுவிப்பார்" என்பது இவர் தவறாது வலியுறுத்திய செய்தியாகும். இவருக்கு மொழி, மதம், இனம் கடந்து உலகளாவிய ரசிகர்கள் உண்டு.
"எனக்கு ஊதியம் எதுவும் வேண்டாம். இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் அன்னதானம் செய்தால் போதும்" என்பதை நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் வேண்டுகோளாக வைத்து, பல பக்தியிசை நிகழ்ச்சிகளை நடத்திய சிறப்பு இவருக்கு உண்டு. வள்ளிமலை சுவாமிகளின் வழியில் ஆண்டுதோறும் ஜனவரி 1 அன்று படிக்கட்டுத் திருவிழாவை நடத்தினார். குறிப்பாக மருதமலையில் ஆண்டுதோறும் திருப்படித் திருவிழாவை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தினார். தனது வருமானத்தைக் கொண்டு ஏழை, எளியோருக்கு உதவிய இவர், முருகனுக்கு உகந்த தினமான சஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை, தைப்பூசம் போன்ற தினங்களில் தவறாது அன்னதானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்நாட்களில் மௌன விரதமும் மேற்கொள்வார்.
தனது குருநாதர்களைப் பற்றி நினைவுகூரும்போது, "ஸ்ரீ ரமண மகரிஷி, சுவாமி ராமதாஸ், சிவானந்த சரஸ்வதி இவங்க மூணு பேரும்தான் என்னோட குருநாதர்கள். அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன்னு நினைக்கும்போதே பெருமையா இருக்கு!" என்று கூறியிருக்கிறார். 60 வயதுக்கு மேல் இவர் சரோஜா என்பவரை மணந்து கொண்டார். அது சர்ச்சையானது. அது குறித்து முருகதாஸ், "அறுபது வயதுவரை எத்தனை விதமான சாதனைகள் செய்யணுமோ செய்தான். லௌகிகமான திருஷ்டி உடையவர்களைப் பற்றி இவனுக்குக் கவலை கிடையாது. லௌகிகமான திருஷ்டி மரத்துப்போன பிற்பாடு உலக ரீதியாகத் திருமணம் செய்துகொண்டான். மனைவியாக ஒரு நல்ல பெண் வாய்த்து விட்டால், மனநிறைவோடு கடமையைச் செய்வான். அந்த ஒரு உயர்ந்த எதிர்நோக்கை வைத்துக்கொண்டு, தேவி ரொம்ப நாளாக அவன் மனத்திலே ஏற்பாடு பண்ணி வைத்து இவளைக் காட்டிக்கொடுத்தாள். அப்படிப்பட்ட தேவி கொடுத்த மனைவியைக் கொண்டிருக்கிறான்" என்று கூறியிருக்கிறார்.
'சங்கீத சாம்ராட்' என்ற விருதை சுவாமி சிவானந்தர் அளித்தார். அதுதான் இவர் பெற்ற முதல் விருது. தொடர்ந்து 'செந்தமிழ் இசைவாணர்', 'தியாகராஜர் விருது', 'மதுர கான மாமணி', 'குரு சுரஜானந்தா விருது', 'வாழ்நாள் சாதனையாளர் விருது', 'சங்கீத நாடக அகாடமி விருது' உள்பட பல விருதுகளும் சிறப்புகளும் இவரைத் தேடிவந்தன. 1984ல் இவருக்குத் தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. 1995ல் டர்பனில் நடந்த உலக ஹிந்து சமய மாநாட்டில் சிறப்புரையாற்றினார். அதில் கலந்துகொண்ட 'நெல்சன் மண்டேலா' இவரை, 'உலகின் மிகச்சிறந்த பக்திப் பாடகர்' என்று பாராட்டினார். 'கந்தர் அனுபூதி அனுபவ விரிவுரை' (இரண்டு பாகங்கள்), 'கந்தர் அனுபூதி - சுருக்க உரை', 'தாசனின் கட்டுரைகள்', 'ஆதிபராசக்தியும் அசட்டுச் சிறுவனும்', 'The Origin, Midway and End' போன்ற நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.
கிருபானந்த வாரியார் சுவாமிகளுடன், யோகி ராம்சுரத்குமாருடன்
தமிழ் பஜனைப் பாடல்களின் முன்னோடியாகக் கருதப்படும் பித்துக்குளி முருகதாஸ், நவம்பர் 17, 2015ல், தனது 95ம் வயதில் முருகனடி சேர்ந்தார். அன்று கார்த்திகை மாதப்பிறப்பு; முருகனுக்கு உகந்த சஷ்டி திதி; செவ்வாய்க்கிழமை; கிருத்திகை நட்சத்திரம். கந்த சஷ்டி தினமும்கூட. தைப்பூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் மறைந்த இவர், சிறந்த முருகனடியார்களுள் ஒருவர் என்பதில் ஐயமில்லை. 2020-21 இவரது நூற்றாண்டு. |