|
|
|
2020 முடியப்போகிறது. ஒரு விசித்திரமான ஆண்டு. இது மனித உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளை, திட்டங்களை, உறவுகளை உடலாலும் உள்ளத்தாலும் புரட்டிப் புரட்டி எடுத்திருக்கிறது. இந்த வருடம் ஆரம்பித்த புதிதில் நாமாக என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த எதுவும் இப்போது இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப்போய்விட்டது. நம்முடைய எண்ணங்களின் போக்கே மாறிவிட்டது. இருந்தும் சலித்துக் கொள்பவர்கள் சலித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்கள். மனப்பக்குவம் உள்ளவர்கள் அழகாக வாழ்க்கையை அணுகுகிறார்கள். உறவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். உள்ளதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். உற்சாகத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். பொறுமையை வளர்த்துக் கொள்கிறார்கள். புதிய கலைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். சிந்தனை ஓட்டத்தை நன்முறையில் மாறுபட்ட வழியில் செலுத்துகிறார்கள்.
இரண்டு நண்பர்களிடம் பேசினேன். அதைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் போன வாரம் இந்த கோவிட்-19ஐத் திட்டித் தீர்த்தார்.; மனிதர்களைத் திட்டித் தீர்த்தார். அரசாங்கத்தை விளாசினார். தன் தொழில் நஷ்டத்தைப்பற்றி விளக்கினார். இன்னும் நிறைய இருக்கிறது எழுத. நான் பொறுமையாகக் கேட்டுக்கொண்டேன். அவரிடம் விவாதம் செய்து பலனில்லை. கடைசியில் பேச்சை மாற்றி, "உங்கள் மனைவி, குழந்தைகள் சௌக்கியமா?" என்றேன். மனைவி விதவிதமாக எப்படிச் சமைக்கிறாள் என்றார். அவருடைய பெற்றோர்களை விசாரித்தேன். இந்தியாவில் அவர்களும் நன்றாக இருக்கிறார்கள் என்றார். அவர் நல்ல வசதியுடன் இருப்பவர். சொந்தத்தொழில் செய்பவர். இழப்பு இருந்தாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இல்லை. அவருக்கு என்ன குறை என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.
மூன்று நாள் முன்பு ஓர் அருமையான சிநேகிதியுடன் பேசிக்கொண்டிருந்தேன். இந்திய சிநேகிதி. கணவர் ஓய்வுபெற்று, வீட்டை விற்றுவிட்டு சீனியர் சிடிசன் ஹோமில் செட்டிலாகிவிட்டார். பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு அவள் கணவர் உடல்நிலை சரியாக இல்லாமல் கவலைக்கிடமாக இருந்தது. இருந்தாலும் அவர் சொன்னதை அப்படியே எழுதுகிறேன். "இது எனக்கு மட்டும் வந்த பிரச்சினை இல்லையே! ஏழு பில்லியன் மனிதர்களும்தானே இதனால் அவஸ்தைப்படுகிறார்கள். இன்றைக்கு என் கணவர் தேறிவிட்டார். பிள்ளைகள் எப்போது முடியுமோ அப்போது கூப்பிட்டுப் பேசுகிறார்கள். மூன்று வேளையும் இங்கே ஹோமில் சாப்பாடு கொண்டுவந்து கொடுக்கிறார்கள். எந்தப் பிரச்சனையும் இல்லை. தியானம் செய்ய நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. என்னுடைய கவலையெல்லாம், குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாமல், எங்கே வேலை போய்விடுமோ என்ற பயத்திலும், அப்பா-அம்மாவைக் காப்பாற்றும் பொறுப்பிலும் உள்ள இந்த இளம் தலைமுறையினரைப் பற்றித்தான். நாம் எவ்வளவோ கொடுத்து வைத்திருக்கிறோம் இல்லையா?" என்றார். பக்குவப்பட்ட மனதில் எப்போதும் ஒரு பரவசம் இருக்கும். வாழ்க்கையில் ஒரு ரசம் இருக்கும். நம்மிடம், நமக்குள்ளே ஏற்படுத்திக்கொள்ளும் அருமையான உறவுக்கு, நாம் பார்க்கும் கோணத்தை மாற்றிக் கொண்டால் நன்றாயிருக்கிறது. I am proud of this friend.
வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம். 2021! |
|
|
|
|
|
|
|
|
|