Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஜாடியா? ஜோடியா?
பழையன கழிதலும்..
கணவன்
பரிட்சைக்கு நேரமாச்சு!
பஜ்ஜியும் பட்டுப்புடவையும் போல...
- முத்துலக்ஷ்மி சங்கரன்|ஜூன் 2011||(1 Comment)
Share:
"இன்வர்ட்டர் ஒண்ணு வாங்கி வச்சுடணும். குழந்தைகளுக்கு நம்ம ஊர் வெயில் தாங்கவே தாங்காது..." என்பாள் ராதா ஒருநாள்.

"ஏ.சி. ஸர்வீஸ் பண்ணிடணும். அது எங்கயாவது சமயம் பாத்து காலை வாரிவிட்டுறப் போவுது.." என்பாள் இன்னொரு நாள்.

"மறக்காம தண்ணித்தொட்டி, சம்ப் எல்லாம் க்ளீன் பண்ணிடனும்" இது மற்றொரு நாள்.

"செடி, கொடி எல்லாம் ஒட்ட 'ட்ரிம்' பண்ணனும். அப்பதான் பூச்சி, பொட்டு அடையாமல் இருக்கும்..." இப்படி வேறொரு நாள் சொல்வாள்.

மாற்றி மாற்றி இதுமாதிரி உத்தரவுகளைச் சளைக்காமல் பிறப்பித்துக் கொண்டிருந்தாள் ராதா.

இப்படித்தான் அன்று, "இதோ பாருங்க மறக்காமல் கோமதி சங்கர் ஜாங்கிரி வாங்கி வச்சுடணும். அவங்க எல்லோருக்குமே பிடித்த ஸ்வீட் அது" என்று கூறிக்கொண்டே வந்த ராதாவைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் சந்திரசேகர்.

"அவங்க வர இன்னும் முழுசா ஒரு மாசம் இருக்கு ராதா. இப்பவே ஜாங்கிரி வாங்கி வக்கறது கொஞ்சம் ஓவராத் தெரியலே உனக்கு?" என்று கேட்டு அவளைக் கிண்டலடித்தார்.

"இரண்டு வருஷம் கழிச்சு வராங்க. அவங்களுக்கு ஒரு குறையும் இல்லாம விடுமுறை சந்தோஷமாக் கழிந்து இனிய நினைவுகளோட திரும்பப் போகணும்னுதான் நான் இத்தனை அடிச்சுக்கறேன்" என்று அங்கலாய்த்தாள்.

ஆம். அடுத்த மாதம் அமெரிக்காவிலிருந்து பேரக் குழந்தைகள் விபு, வினிதாவுடன் சென்னை வரப்போகும் தன் மகள் திவ்யாவை வரவேற்கத்தான் இத்தனை முன்னேற்பாடும், ஆர்ப்பாட்டமும்.

அவர்களுக்கு எந்த ரூம் கொடுப்பது, என்னென்ன சமைப்பது, எங்கெங்கே போகணும், யார் யாரைப் பார்க்கணும் என்று திட்டம் வகுத்து ஒரு அட்டவணையையே தயாரித்து வைத்து விட்டாள் ராதா.

*****


இதோ... அந்தப் பொன்னாளும் வந்தே விட்டது. ஏர்போர்ட்டிலிருந்து வந்து சேரும் போது 5 மணி ஆகி விட்டிருந்தது.

மடமடவென்று சூடாக ஃபில்டர் காபி போட்டு நுரை ததும்பக் கொண்டு வந்து ஆசையாக மகளிடம் நீட்டினாள் ராதா.

"இப்பத்தாம்மா ஃபிளைட்டில் காபி குடித்தேன். வை. வந்து குடிக்கிறேன்" என்று தன் கைப்பையைக் குடைந்து ஏதோ தேடிக் கொண்டிருந்தாள் திவ்யா.

சட்டென்று திரும்பிய ராதாவிடமிருந்து காபி கப்பை வாங்கியவாறே, "பொண்ணுக்கு ஸ்பெஷலா போட்ட காபி எப்படி இருக்குன்னு நான் குடிச்சுப் பாத்து சொல்றேன்" என்று புன்னகைத்தார் சந்திரசேகர்.

*****


"பசங்களா... போன தடவை ஆசையா சாப்பிட்டீங்களே மா லாடு. பாட்டி செஞ்சு வச்சிருக்கேன். வாங்க" ராதா மா லாடுகளை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு விபுவையும், வினிதாவையும் அழைத்தாள்.

"நோ பாட்டி. ஐ டோண்ட் லைக் இட் எனி மோர்" என்று சொல்லி விட்டு குழந்தைகள் இருவரும் தங்கள் விளையாட்டில் மூழ்கி விட்டனர்.

"சரி... இங்கே பாருங்க... ரஜினி படம் டிவிடி எல்லாம் வாங்கி வச்சிருக்கேன்... " என்று ஆரம்பித்தவளை நிறுத்தி, "பாட்டி சூர்யா தான் என் ஃபேவரிட் இப்ப" என்றான் விபு.

"வினிதா கண்ணு. உனக்கு கிரேயான்ஸ் இங்கே இருக்கு பாரு.. இந்தா ... பிக்சர் புக்...." உற்சாகமாகச் சொன்ன ராதாவை அசுவராஸ்யமாகப் பார்த்தவாறே, " நான் இப்ப ஃபேப்ரிக் பெயிண்ட், வாட்டர் கலர் கத்துக்கறேன் பாட்டி!" என்றாள் பேத்தி.

*****
"திவ்யா, விபுவுக்கு குர்தாவும், வினிதாவுக்கு காக்ரா டிரஸ்ஸூம் எடுத்திருக்கோம். எப்படி இருக்கு?" என்றாள் ராதா.

"நன்னா இருக்கும்மா.. ஆனால்...." என்று இழுத்தாள் திவ்யா.

முகத்தில் கேள்விக்குறையைத் தேக்கி நின்ற தாயைப் பார்த்து, "வினிதா இந்தத் தடவை சுடிதார் செட்தான் வேணுங்கறா. விபுவுக்கு குர்தா அவ்வளவு இஷ்டமில்லை" என்று திவ்யா முடிக்கவும் அங்கிருந்து சட்டென்று நகர்ந்து விட்டாள் ராதா.

" அவங்க இஷ்டப்படி விடலாமேம்மா" என்றூ பெண் சொன்னது காற்றில் கலந்தது.

*****


"குழந்தைகளுக்கு வேணும் வேண்டாங்கறது பார்த்து நீ வேணும்னா சாப்பாடு போடறியா திவ்யா" என்றாள் ராதா பெண் பக்கம் திரும்பி.

"ஏனாம்? உன் ஆசைக் கையாலே சாதம் போட்டுச் சாப்பிட்டு குழந்தைகள் நல்லா பூசின மாதிரி ஆயிட்டாங்கன்னு நானே மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அங்கே போனால் நான்தானே இதெல்லாம் பண்ணனும். இங்கே நீயே பார்த்துப் பண்ணு. நான் என் ஃப்ரெண்ட்ஸுடன் கேட்ச் அப் பண்ணப் போறேன்" கொஞ்சலாகச் சொல்லிவிட்டுப் போன திவ்யாவுக்கு மறுபேச்சுப் பேசாமல் இயந்திரம் போல் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு முடித்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர்.

*****


குழந்தைகள் தாத்தாவிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்களுக்குச் சமமாக கார்டூன் நெட்வொர்க், போகோ சானல் பார்த்தார். பார்க்குகிற்கு மாலை விளையாடக் கூட்டிப் போனார். லைப்ரரிக்கு அழைத்துப் போய் புத்தகமெல்லாம் வாங்கித் தந்தார்.

*****


ஷாப்பிங், அவுட்டிங், உறவினர் விசிட் என்று நேரம் பறந்தது. அன்று உள்ளே நுழைந்ததுமே, "அம்மா இந்தப் பட்டுப் புடவை உனக்காக வாங்கினேன். உனக்குப் பிடிச்ச க்ரீன் கலர் ... எப்படியிருக்கு பாரு.." என்று சொல்லியவாறே திவ்யா நீட்டிய பார்சலை வாங்கிய ராதா, "இப்பல்லாம் பட்டுப்புடவை கட்டிக்கறதை நிறுத்திட்டேன் திவ்யா. சில்க் காட்டன், கத்வால் மாதிரிதான் கட்டறேன். ஆனாலும் நீ ஆசை ஆசையா வாங்கிண்டு வந்திருக்கே. கொடு" என்றாள்.

"பரவாயில்லை அம்மா. வேறு யாருக்காவது பிரசன்ட் பண்ணலாம்" என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் திவ்யா.

புடவையைத் தடவியவாறே மௌனமானாள் ராதா.

*****


அன்று எல்லோருமாக பீச்சுக்குச் சென்றிருந்தனர். ஜாலியாக துள்ளித் திரிந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததிலேயே உற்சாகம் பீரிட மணலில் அலைந்து கால் வலிக்க அயர்ந்து உட்கார்ந்திருந்த ராதா, "பாட்டி... பாட்டி..." என்று பேரன், பேத்தி கூக்குரலிட்டதைக் கேட்டுத் திரும்பினாள்.

"பாட்டி பாத்தியா மிளகா பஜ்ஜி. உனக்கு ரொம்பப் பிடிக்குமே. போன தடவை நாமல்லாம் வாங்கிச் சாப்பிட்டோமே. அதான் இப்ப மறக்காம வாங்கிண்டு வந்தோம். சாப்பிடு பாட்டி" என்று பொட்டலத்தை நீட்டினர் குழந்தைகள்.

ஏதோ சொல்ல வந்த ராதாவின் கையை அழுத்தி, சமிக்ஞை செய்துவிட்டு குறுக்கிட்ட சந்திரசேகர், " எங்கே கொண்டாங்க பார்ப்போம். அட, சூடா மிளகா பஜ்ஜியா. வெரிகுட். இதை நானும் பாட்டியும் ஷேர் பண்ணிக்கறோம். நீங்க போய்ச் சாப்பிடுங்க" என்று அனுப்பி வைத்தார். மனைவியிடம் ஒரு விள்ளலை நீட்டி விட்டு மிச்சத்தை தானே சாப்பிட்டு முடித்தார். தனக்குச் சற்றும் பிடிக்காத மிளகாய் பஜ்ஜியை சர்வ சாதாரணமாக விழுங்கி வைத்த கணவரை வியப்புடன் பார்த்தாள் ராதா. அவள் மனதில் ஏதோ திரை விலகியது போல் இருந்தது.

இரவின் தனிமையில் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கண்ணீரை மறைத்தபோது சந்திரசேகரின் குரல் மெல்ல வருடிக் கொடுப்பது போலக் காதில் விழுந்தது. "குழந்தைகள் நாளுக்கு நாள் வளர்கிறார்கள் ராதா. இரண்டு வருஷம் முன்பு நீ பார்த்த குழந்தைகள் இல்லை இவர்கள். திவ்யாவையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். அதைப் புரிஞ்சிக்கணும் நீ. அவங்களுக்கு இப்ப என்ன பிடிக்கும்ணு கேட்டுத் தெரிந்து கொண்டு அதைச் செய். போன தடவைக்கு இப்ப டேஸ்ட் மாறியிருக்கும் இல்லையா? நமக்கே பாரு வயசானதால அல்சர், மூட்டு வலின்னு இரண்டு வருஷத்தில் நம்ம வாழ்க்கை முறைகூட மாறித்தான் இருக்கு..."

"மிளகாய் பஜ்ஜியும் பட்டுப் புடவையும் போல" என்று முனகியவாறே நிமிர்ந்து கணவரைப் பார்த்த ராதா, அழத் தொடங்கி, திடீரென்று வானவில்லாகச் சிரித்தாள்.

*****


முத்துலக்ஷ்மி சங்கரன்,
சான்ஹோஸே, கலிபோர்னியா
More

ஜாடியா? ஜோடியா?
பழையன கழிதலும்..
கணவன்
பரிட்சைக்கு நேரமாச்சு!
Share: