சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா ரம்யா ஐஸ்வர்யா ரமேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தமிழ் விழா 2008 வினிதா ஜனனி கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் சம்ஸ்கிருதி அறக்கட்டளை 'அவர்கள் காதலித்த வனமாலி'
|
|
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது ஆண்டு விழா |
|
- கோம்ஸ் கணபதி|ஆகஸ்டு 2008| |
|
|
|
|
2008 ஜூலை 4 முதல் 6 வரையான நாட்களில் தமிழ்நாடு அறக்கட்டளை தனது 34வது ஆண்டுவிழாவை 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்' என்ற கருப்பொருளில் கொண்டாடியது. பிட்ஸ்பர்கின் புறநகரமான ஆன் மன்ரோவில் உள்ள எக்ஸ்போ மார்ட்டில் இந்த மூன்றுநாள் விழா நடைபெற்றது.
டாக்டர் வா.செ. குழந்தைசாமி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், டாக்டர் மறைமலை இலக்குவனார் போன்ற தமிழ்ப் பெருந்தகைகள் நாதசுர இசையோடு விழா அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருவிளக்கேற்றி வைத்துத் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா துவங்கியது. அறக்கட்டளையின் தலைவரும் விழா ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். மிருதுளா ஆனந்த் குழுவினர் வழங்கிய 'மதுர மார்க்கம்' என்ற பரத நாட்டியத்தோடு நிகழ்வுகள் தொடங்கின. சாஹித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையிலான கவியரங்கத்தில் ஐந்து அமெரிக்கத் தமிழ்க் கவிஞர்கள் கவிதைகள் படித்தனர். 'காதலியின் தலை வகிடு', 'ஓர் ஓலைச்சுவடி குறுந்தகடாகிறது' போன்ற வித்தியாசமான தலைப்புகளில் அமைந்த கவிதைகள் அரங்கத்தைக் கலகலக்கச் செய்தன.
இன்று கணினி உலகினை ஆண்டு கொண்டிருக்கும் நிறுவனங்களில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உபதலைவராகப் பணியாற்றும் டாக்டர் சோமசேகர் 'கணினியின் எதிர்காலம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். நம்மவர் ஒருவர் இத்தகைய உயர்பதவியில் இருக்கிறார் என்பது நமக்குப் பெருமை என்றால் 'பந்தா' ஏதுமில்லாத அவரது எளிமை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகப் பட்டது. பின்னர் சின்னத்திரை புகழ் வரதராஜன் குழுவினர் வழங்கிய 'மெகா சீரியல்' நாடகம் சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் வாய்ப்பளித்தது.
அறக்கட்டளையின் குழுவினர்களில் ஒருவரான டாக்டர் ராம் மோகன் நீரிழிவு நோய் குறித்து வழங்கிய உரை அமெரிக்கத் தமிழருக்குத் தேவையான ஒன்றாகும். மறுநாள் டாக்டர் சதீஷ் இதயநோய் பற்றி, குறிப்பாக இந்தியர்கள் அறிந்துகொள்ளச் சில கருத்துக்களை எடுத்துச் சொன்னார். 'அன்புள்ள சினேகிதியே' புகழ் சித்ரா வைத்தீஸ்வரன் 'வலிமையும் வலியும்' என்ற தலைப்பில் வழங்கிய பெண்களுக்கான கருத்தரங்கு, டாக்டர் கதிரேசன், கஸ்தூரி வழங்கிய யோகா வகுப்புகள் (ஒன்றல்ல, மூன்று!) போன்றவை வாழ்க்கைக்கு அவசியமான பலவற்றை அறியத்தந்தன.
'தென்றலே என்னைத் தொடு' திரைப்படப் புகழ் ஜெயஸ்ரீ சன் டிவியின் சூப்பர் ஜோடியை பிட்ஸ்பர்குக்கே கொண்டுவந்துவிட்டார். மறைமலை இலக்குவனார் 'தமிழ் - நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் தமிழ்ப் பேராற்றின் துவக்கத்தை தொடங்கி, அது வளம்பெற்ற நிலைகளைக் கூறி, செவ்வியல் மொழியெனச் செம்மாந்திருக்கும் தமிழ் இனி எங்குச் செல்லவேண்டும் என்பதை அழகாக எடுத்துரைத்தார். விழாவுக்கு வந்திருந்த மருத்துவர்களுக்கென்று இரண்டு நாட்களும் CME தொழிற்பட்டறை ஒருபக்கம் நடந்த வண்ணம் இருந்தது.
ராஜா அவர்கள் தலைமையேற்ற பட்டிமன்றத்துடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் கலகலப்பாகத் தொடங்கின. தலைப்பு: 'உறவா? நட்பா?'. களம்பல கண்ட உமையாள் முத்து உள்ளிட்ட இரண்டு அணியின் சார்பிலும் வாதிட்டோரின் திறமை, ராஜாவுக்கே வியப்பினைத் தந்தது.
மதியம் நகரங்களுக்கு இடையிலான போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நாலு முதல் பத்துவயதுச் சிறுவர்கள் பலர் திருவிளையாடல் நாடக நிகழ்ச்சிகளைத் தங்களது மழலைத் தமிழில் வழங்கியது குழலிலும் இனிமையாயிருந்தது. இரண்டாம் நாள் விழாவில் மகாநதி ஷோபனா தன் வீணைக் குரலில் தமிழிசை வழங்கினார். 'குறையொன்றும் இல்லை, மறைமூர்த்தி கண்ணா!' என்னும் ராஜாஜி அவர்களின் பாடலைப் நெக்குருகப் பாடியபோது அரங்கமே நெகிழ்ந்து நின்றது.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'தமிழ் அமுது' என்ற தலைப்பிலும், மறைமலை இலக்குவனார் 'புரட்சிக் கவிஞரின் கவிதைப் புரட்சி' என்ற தலைப்பிலும் ஆற்றிய உரைகள் வந்திருந்தோரின் செவிகளில் தமிழமுதைப் பாய்ச்சின. கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் 'திரை இசையில் மரபிசை' நிகழ்ச்சி ஆய்வும், ஞானமும் கலந்து வழங்கிய தேனிசை. நாட்டிய கலாவதி ஜெயாமணி குழுவினரின் 'ஜய ஜய பாரதம்!' கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. |
|
மாலை நிகழ்ச்சிகளில் சோமலே சோமசுந்தரம் உரையாற்றினார். விழாவுக்கு வரவியலாத தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறக்கட்டளையின் பணிகளை அறிந்து வியந்ததைச் சொல்லி, தமிழக அரசு எந்த விதத்தில் உதவக்கூடும் என்றும் கூறினார். சோமலே அவர்களின் இளவல்கள் இலட்சுமியும் (15), இலட்சு மணனும் (12) தமிழ்நாட்டில் அறக்கட்டளைத் திட்டங்களில் ஒன்றான அன்பாலயத்துக்கு நேரில் சென்று, மனநலம் குன்றிய குழந்தைகளோடு உரையாடிய அனுபவங்களைச் சொன்னபோது அரங்கு உறைந்துபோனது. 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்' என்னும் மந்திரம் அரங்கெங்கும் ஆயிரமாயிரமாய் அருங்கொடை வழங்கிடப் பாதை வகுத்தது.
'குலோத்துங்கன்' என்ற பெயரில் உலகத் தமிழரெல்லாம் வியந்து பாராட்டும் வகையில் தமிழில் தனக்கென ஓர் இடம்கொண்டுள்ள 'பத்மபூஷண்', 'பத்மஸ்ரீ' டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களுக்கு இவ்வாண்டு அறக்கட்டளை மாட்சிமைப் பரிசினை வழங்கிக் கவுரவித்தது. இந்திய அரசு தமிழைச் செவ்வியல் மொழியென என அறிவித்ததில் வெளிநாட்டினரின், குறிப்பாக பெர்க்கலி பல்கலைக்கழகத் தமிழ் மையத்தின் தலைவரான பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் பங்கின் சிறப்பினை வியந்துரைத்து, இனிவரும் நாட்களில் இன்னின்ன செய்வது தேவையானதென டாக்டர் வா.செ. குழந்தைசாமி அறிவுறுத்தினார்.
அறக்கட்டளை விழாவில் உணவறையிலும் தமிழ்! ஆமாம். ஒவ்வொரு மேசையின் மீதும் அழகான பூங்கொத்துக்கு இடையில் திருக்குறள் ஒன்று பூத்துநின்று மணம் பரப்பியது.
பின்னர், அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் டாக்டர் இராஜேந்திரன் அறிமுகத்தில் அரங்குக்கு வந்த செல்வி பீனோ ஜெத்தீன் கண் பார்வையற்றிருந்தும், பெண் குலத்துக்கே வழிகாட்ட வந்த கண்ணின் மணி என்கிற அளவில் உரையாற்றினார். 'எனக்கு விழியில்லை, என்றாலும் வழியில்லை என்னும் நிலையில்லை' என்று கூறிய அவரது தன்னம்பிக்கை வியப்புக்குரியது. மாலை நிகழ்ச்சிகள் கலைமாமணி மனோ, விஜய் ஏசுதாஸ், முகேஷ், சுசித்ரா, மற்றும் ப்ரியா குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சியோடு நிறைவுற்றன.
மேலைப் பென்ஸில்வேனியா வாழ் தமிழர், பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சிறப்பாக விழாவை நடத்திக் கொடுத்ததோடு கணிசமான தொகை ஒன்றை 'ஏழைக்கு எழுத்தறிவிக்கும்' உயர்பணிக்காகத் திரட்டியிருந்தனர். டாக்டர் பழனிசாமி MDயின் தலைமையில் மேலைப் பென்ஸில்வேனியாத் தமிழர் நிதிதிரட்டும் விழாவை ஒரு வேள்வியாகவே நடத்தினர் என்றால் அது மிகையில்லை.
மேலும் விவரமறிய: www.tnfusa.org
கோம்ஸ் கணபதி, டென்னசி |
மேலும் படங்களுக்கு |
|
More
சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா ரம்யா ஐஸ்வர்யா ரமேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தமிழ் விழா 2008 வினிதா ஜனனி கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம் சம்ஸ்கிருதி அறக்கட்டளை 'அவர்கள் காதலித்த வனமாலி'
|
|
|
|
|
|
|