Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
காந்தி தந்த பாடம்
பிறந்த மண்
மறுபடியும் விடியும்
- உமா விஸ்வநாதன்|நவம்பர் 2007|
Share:
சிகாகோ லேமாண்ட் கோவிலில் பாட்டுக் கச்சேரி. பாடுபவள் தெரிந்தவர் வீட்டுப் பெண். குடும்பத்துடன் அனைவரும் கிளம்பினோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது பக்கத்தில் இன்னொரு தமிழ்க் குடும்பம் இறங்கிக் கொண்டிருந்தது.

முப்பது, முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய இளைஞன் ஒருவன், அவனுடன் இளம் பெண் ஒருத்தி, மனைவி போலும். எண்பதுக்கு மேல் மதிக்கிறாற்போல ஒரு பெரியவர். வயதான அவர் மனைவி அவர் கையைப் பிடித்துக் கொண்டு. மூன்று வயதுக் குழந்தை ஒன்று. அது என்னவோ வெளிதேசத்தில் நம்மவர்களைப் பார்க்கையில் ஒரு தனி சந்தோஷம்தான். ஏதோ கிட்டின உறவினரைப் பார்ப்பது போல. அவர்களைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பை உதிர்த்து விட்டு கோயிலுக்குள் நடந்தோம்.

பெரிய கோயில். கச்சேரிக்குத் தனி அரங்கம் இருந்தது. அங்கே தெரிந்தவர்களிடம் எல்லாம் குசலம் விசாரித்து, செளகரியமாக இடம் கண்டுபிடித்து அமரும்போது நாலு சீட் தள்ளி அதே குடும்பம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தோம். என் மனதில் ஏதோ நெருடல். இந்தப் பெரியவரையும், அவர் மனைவியை யும் எங்கேயோ பார்த்திருக்கிறோம். எங்கே? மிகவும் பரிச்சயமாகத் தோன்றுகிறார்கள். பிடிபடவில்லை.

சரியாக நாலு மணிக்குக் கச்சேரி ஆரம்பித்தது. எல்லோரும் அதில் கவனத்தை திருப்பினோம். சின்னப் பெண். நன்றாகப் பாடினாள். குரல் வளமும் பொருந்தியிருக் கவே கச்சேரி பிரமாதமாக அமைந்துவிட்டது. பாடகி மங்களம் பாடி முடித்தபின் எல்லோரும் சுவாமி தரிசனம் செய்யக் கிளம்பினோம்.

முருகன் சந்நிதியில் தீபாராதனை. கணகணவென்று மணியடிக்க, என் மனதிலும் மணியடித்தது.

அந்தப் பெரியவர் ஜெகதீசய்யர் இல்லையோ? பட்சண வண்டி ஜெகதீசய்யர்... மாமியும் பூரணிமாமிதான்.

அப்பாடி எத்தனை காலம் கழிந்துவிட்டது. இருபத்து ஐந்து வருஷமாவது இருக்குமே! விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பினால், மறுபடியும் பக்கத்தில் பூரணி மாமி, மாமா.

இம்முறை சிநேகமாகச் சிரித்துவிட்டு நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.

'ஜெகதீசன் மாமா, பூரணி மாமிதானே?'

'ஆமாம்மா. நீங்க யாருன்னு தெரியலையே' தயக்கத்துடன் கேட்டார் மாமா.

'நான்தான் சாந்தா, மாமா. பன்னிரண்டாம் நம்பர் வீடு. கோகுலம் காலனி' என்றதும் மாமிக்கு நினைவு வந்துவிட்டது.

'வயசாச்சில்லையாம்மா. பார்வையும் குறைஞ்சிண்டு வரது' என்ற மாமா, அருகில் நின்ற பேரன் சந்துரு என்கிற சந்திர சேகரையும், அவன் மனைவியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

சா·ப்ட்வேர் எஞ்சினியராக உத்தியோகம் செய்கிறானாம். ஆரோராவில் சொந்தவீடு வாங்கியிருக்கிறானாம். 'இப்பல்லாம் வருஷத்தில் ஐந்தாறு மாசம் இவன்கிட்டதான் இருக்கோம்மா. லதாவும் ரொம்ப நல்ல பெண். நன்றாகப் பார்த்துக்கறா' என்றாள் மாமி.

'பட்சணக் கடையெல்லாம் நிறுத்தியாச்சு. சேலத்திலேயே ·ப்ளாட் வாங்கி கொடுத் திருக்கான் சந்துரு. அங்கேதான் இருக்கோம்' என்றார் மாமா பெருமையாக.

இருவரும் சந்தோஷமாகத் தெரிந்தார்கள்.

என் கணவரும், மகனும் அருகில் வர அவர்களையும் அறிமுகப்படுத்தினேன். அவர்களுக்கும் நன்றாகவே நினைவிருந்தது. லதாவும், சந்துருவும் அவர்கள் வீட்டுக்கு மறுவாரம் சாப்பிட வருமாறு வற்புறுத்த ஒப்புக் கொண்டோம். என் மருமகள், பேரன், பேத்தியெல்லாம் பார்த்து மாமிக்கு மிகவும் சந்தோஷம்.

விலாசம் எல்லாம் பரிமாறிக் கொண்டு விடைபெற்றுக் கிளம்பினோம்.

கோவிலிலேயே அருமையான டிபன். அங்கேயே சாப்பாட்டுக் கடையை முடித்துக் கொண்டோம். 40 மைல் தூரத்தில் இருந்த வீடு நோக்கி திரும்பும் வழியெல்லாம் என் மனது அந்தப் பெரியவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது...

அப்போது என் கணவர் சேலம் உருக் காலையில் உத்தியோகத்தில் இருந்தார். நாங்கள் புறநகர்ப் பகுதியில் ஒரு காலனியில் இருந்தோம். புதிய காலனி. சின்ன சின்னத் தோட்டங்களுடன் கூடிய அழகான வீடுகள்.

மாலை நான்கானால் மணியடிக்கும் ஒலியுடன் ஜெகதீசய்யர் பட்சண வண்டியுடன் ஆஜராகிவிடுவார். பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரமாதலால் தெரு நாலு மணியிலிருந்து கலகலப்பாக இருக்கும். குழந்தைகளை எதிர்பார்த்து வாசல் பக்கம் காத்திருக்கும் பெண்களுக்கும் அதுதான் அரட்டை நேரம். அநேகமாக எல்லார் வீட்டிலுமே குழந்தைகளுக்கு மாலை டிபன் பட்சண வண்டியிலிருந்துதான் வாங்கப்படும்.

'அண்ணபூரணி பட்சண வண்டி' பச்சைக் கலரில் ஒரு தள்ளுவண்டி. சுற்றிலும் கண்ணாடி போட்டு உள்ளே பட்சண வகைகளை சுத்தமான எவர்சில்வர் பேசின்களில் வைத்திருப்பார். வெங்காய பகோடா, மசால்வடை, மைசூர் போண்டா, உருளைக்கிழங்கு போண்டா, வாழைக்காய் பஜ்ஜி--எல்லாமே அப்படி ஒரு ருசியாக இருக்கும். சூடாகக் கொண்டு வருவார். நமுக்காமல் இருக்கக் காய்ந்த தையல் இலையால் மூடிக் கொண்டு வருவார். இரைக்காமல், சிந்தாமல் அவர் பட்சணங் களைக் கட்டிக் கொடுக்கும் ஒழுங்கே தனிதான். அதிகம் பேச்சுகிடையாது. கணக்கில் கறார்.
சற்றுத் தள்ளாத வயதுதான். ஆனால் அதிகம் அலையமாட்டார். எங்கள் காலனியில் அடுத்தடுத்த மூன்று தெருக்கள், பக்கத்துக் காலனியில் இரண்டே தெரு. இதைச் சுற்றி வருவதற்குள் அவருடைய பட்சணங்கள் காலி. எங்கள் காலனியைத் தொட்டாற்போல் ஒரு பழைய குடியிருப்பு. அங்கே அவுட்ஹவுஸ் ஒன்றில் அவரது வாசம். நைந்துபோன உடம்பானாலும் எப்போதும் சுத்தமாக உடுத்தியிருப்பார். ஒரு நாலு முழ வேட்டி. அரைக்கை சட்டை. இதுதான் அவரது உடை.

பதினெட்டாம் நம்பர் கோமு பாட்டி சொல்லித்தான் எங்களுக்கு அவரைப் பற்றித் தெரியவந்தது.

'வாழ்ந்து கெட்ட குடும்பம்டியம்மா. அவா அப்பா ஈஸ்வரய்யர் காலத்தில ஓகோன்னு இருந்தவான்னா? இந்த ஜெகதீசன் கல்யாணம் எத்தனை விமரிச¨யா நடந்தது. அருமையான சாப்பாடு. கேட்டுக் கேட்டு பந்தி பரிமாறி... இப்பவும் போடறாளே கல்யாண சாப்பாடு. டீஸ்பூனாலே பரிமாறிண்டு. நிச்சயத்துக்கு ஈஸ்வரய்யர் பூரணிக்கு ஒரு அரக்குக் கலர் தகடிப் புடவை வாங்கி பழைய சிகப்புப் பதித்த அட்டிகையும் போட்டார் பாரு. வந்தவா எல்லாரும் கல்யாணப் பொண் அழகைச் சொல்லிச் சொல்லி மாஞ்சு போனா.

'பாவம்... கடைசியில எல்லாம் போய்... அவா சொந்த பங்களாவுடைய அவுட்ஹவுஸ் ஒண்ணுதான் மிஞ்சித்து. விதி யாரை விட்டது' என்று முடித்தாள் கோமுப் பாட்டி.

திடீரென்று இரண்டு நாளாக பட்சண வண்டி வரவில்லை. என்னவோ ஏதோ என்று கவலைப்பட்டவர்களுக்கு வேலைக்காரப் பெண் ரஞ்சிதம்தான் செய்தி கொண்டு வந்தாள்.

'ஏம்மா, இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா? அந்த டிபன் வண்டிக்கார ஐயாவை யாரோ காலிப் பசங்க அடிச்சுப் போட்டுட்டு அவராண்ட இருந்த பணத்தையும் பிடுங்கிக் கிட்டாங்களாம். நேத்தெல்லாம் எழுந்துக்கவே முடியலையாம். இன்னிக்குப் பரவாயில்லையாம்.'

ரஞ்சிதத்தையே துணைக்கு அழைத்துக் கொண்டு போய்ப் பார்த்துவிட்டு வரக் கிளம்பினேன். என்னை அவர்கள் வீட்டு வாசலில் விட்டுவிட்டு ரஞ்சிதம் கிளம்பிவிட, தயக்கத்துடன் கதவைத் தட்டினேன். ஒரு மாமிதான் கதவைத் திறந்தார். கேள்விக் குறியுடன் என்னைப் பார்த்தார். நானே என்னை அறிமுகம் செய்து கொண்டேன். வந்த காரியம் சொல்ல, என்னை உள்ளே அழைத்தார்.

முன்னால் ஒரு அழிக்கம்பி போட்ட வராந்தா. தாண்டினால் சற்றுப் பெரியதாக ஓர் அறை. பின்னால் சமையல் அறை போலும். எல்லாம் சுத்தமாகத் தெரிந்தது. உள் அறையில்தான் மாமா படுத்திருந்தார். என்னைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து கொண்டார். உடல்நிலை பற்றி விசாரித்தேன். பாவம், பிடித்துத் தள்ளியிருக்கிறார்கள். தோளில் அடி. முகமெல்லாம் சிராய்ப்புக் காயங்கள். உதடு வீங்கி இருந்தது.

மாமி சமையல் அறைக்கு அழைத்துச் சென்றார். ஒரு பலகையைப் போட்டு உட்கார உபசரித்தவர், தம்ளரில் மோர் கொண்டு வந்து கொடுத்தார். சற்றுநேரம் பொதுவாகப் பேசிவிட்டுக் கிளம்பும்போது மாமி 'ஏதாவது விசேஷங்களுக்குக் கூட ஆர்டர் கொடுத்தால் செய்வேன் அம்மா. 50, 60 பேர் வரை சமாளிப்பேன். ஆனால் யார் வீட்டுக்கும் போவதில்லை. இங்கேயே செய்து கொடுப்பேன்' என்றார்.

இதன் பிறகு காலனியில் பிறந்தநாள் விழா, சிறிய, பெரிய பார்ட்டிகள்--எல்லா இடங்களிலும் மாமி கைச்சமையல் மணத்தது. நவராத்திரி, வரலட்சுமி விரதம் போன்ற பண்டிகைகளுக்கு எல்லா வீடுகளிலிருந்தும் மாமிக்குக் கட்டாயம் அழைப்பு உண்டு. மாமி மிக இனிமையாகப் பாடுவார். சிலர் குழந்தைகளுக்கு பாட்டு, ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்கும்படி வேண்ட, வாரத்தில் இரண்டு நாள் பட்சண அடுப்படியில் வேலை செய்தவாறே வகுப்பு எடுத்தார்.

வயதில் என்னைவிட நிறைய மூத்தவராக இருந்தாலும் எனக்கும் அவருக்கும் ஒரு வித்தியாசமான சிநேகம் வளர்ந்தது. மாமிக்கு வர ஒழியாவிட்டாலும் நான் அவ்வப்போது அவர்கள் வீட்டுக்குப் போய் வருவேன். ஒருமுறை சென்றிருந்த போது மாமி தன் கதையைச் சொன்னார்.

'இவர் என் சொந்த மாமா பிள்ளைதான், தெரியுமா சாந்தா. ஈஸ்வர மாமாவுக்குக் கடைசித் தங்கை என் அம்மா. வசதி குறைவான குடும்பம்தான். ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றுதான் என்னைத் தன் பிள்ளைக்குக் கல்யாணம் செய்து கொண்டார். அதுவுமில்லாமல் என் அண்ணாவுக்கும் தன் கடையிலேயே கணக்கு வழக்குப் பார்க்கும் வேலையும் செய்து வைத்தார். அப்போ மாமா குடும்பம் ரொம்ப ஓகோன்னு வசதியாக இருந்த காலம். மாமாவுக்குப் பெரிய ஹார்டுவேர் பிசினஸ். இப்ப அவுட்ஹவுஸில் இருக்கிறமே, இதோட சேர்ந்த அந்தப் பெரிய பங்களாதான் எங்கள் சொந்த வீடு. எங்களுக்கு ஒரு பிள்ளை இருக்கிறான்.

'மாமா என்னவோ வியாபார நெளிவு சுளிவுகள் எல்லாம் இவருக்குக் கற்றுக் கொடுக்க நினைக்கவே இல்லை. ஒரே பிள்ளை. தாயில்லாப் பிள்ளை, சொகுசாக வளர்த்துவிட்டார். அப்பா எதிர்பார்க்காததால் இவரும் வியாபாரத்திலே சுவாரசியம் காட்டல்ல. எனக்கு இது சில சமயம் குறையா இருக்கும்.

'திடீரென்று ஒருநாள் ஈஸ்வர மாமாவுக்கு ஸ்ட்ரோக் வந்தது. இடது பக்கம் முழுதுமே வராமல் போய்விட்டது. வாயும் குழறிவிட்டது. பேசுவது முக்கால்வாசி புரியாது. ஒரு வருஷம் கிடையாகக் கிடந்தார். இந்தச் சமயம் பார்த்துதான் என் அண்ணா தன் கைவரிசை யைக் காட்டிட்டான். மாமாவும் அவனை ரொம்ப நம்பி சொன்ன இடத்தில் கையெழுத்துப் போட, வியாபாரத்தைச் சுருட்டிவிட்டான். எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான். உடன்பிறந்தானின் குணம். ஒரளவு தெரியுமே. திடீரென்று ஸ்கூட்டர் என்ன? பொண்டாட்டிக்கு வைரத்தோடு என்ன? நான் இவரிடம் நடந்ததைச் சொன்னபோது காலம் கடந்துவிட்டது. ஆடிட்டர் வைத்து எல்லாக் கணக்கும் பார்த்தால் கடையை விற்றுக் கொடுத்தால்கூட போதவில்லை. அதற்கு மேல் ஐந்து லட்சம் கடன். அண்ணாவின் மீது கேஸ் போட்டிருக்கலாம். ஆனால் மாமாவுக்கு என் அம்மாவின் மீது தாட்சணியம். விட்டுவிட்டார். ஆனால் அந்த ஏமாற்றமே அவருக்கு எமனாகிவிட, போய்ச் சேர்ந்துவிட்டார்.

'இந்த அவுட்ஹவுஸை மட்டும் வைத்துக் கொண்டு பங்களாவையும், சுற்றிலும் இருந்த 12 கிரவுண்டு தோட்டத்தையும் விற்றுக் கடனை அடைத்தோம். என் அண்ணா இத்துடன் விடவில்லை. என் ஒரே பிள்ளையை, 14 வயது விடலைப் பிள்ளையை, தன் பக்கம் இழுத்துக் கொண்டான். எல்லா கெட்ட பழக்கமும் கற்றுக் கொடுத்தான். பணபலமும் அங்கே இருக்க எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. திடீரென்று 20 வயதில் ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்த என் பிள்ளை ஒரு வாரம் வீட்டுக்குள்ளேயே ஒளிந்திருந்தான். ஏதோ போலீஸ் தூரத்துவதாகச் சொன்னான். விவரம் சொல்ல மறுத்தவன் அந்தப் பெண்ணைக் காட்டி அவளைத் தான் மணந்திருப்பதாகவும் அவள் வயிற்றில் தன் பிள்ளை வளருவதாகவும் சொன்னான். அதிர்ந்த எங்களிடம் ஒரு வாரத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி வெளியே போனவனை இன்றுவரை பார்க்கவில்லை. என்ன ஆனான் என்பது யாருக்கும் தெரியாது.

'நாலு மாதம் கழித்து அந்தப் பெண் ஒரு பிள்ளைக் குழந்தையைப் பெற்றெடுத்தாள். பொறுப்பும், செலவுகளும் ஏறிவிடவே இந்த பட்சண வியாபாரத்தைத் தொடங்கினோம். அந்தப் பொண்ணும் ரொம்ப நாள் இங்கிருக்கவில்லை. கையில் காசு நடமாட்டமுள்ள ஒருவன் கிடைத்தவுடன் அவனுடன் கிளம்பிப் போய்விட்டாள். குழந்தையை மட்டும் நாங்கள்தான் வளர்க்கிறோம்' என்று முடித்தார்.

நான் பிரமித்துப் போய் பதில் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன்.

திடீரென்று ஒரு பையன் உள்ளே ஓடி வந்தான். 9, 10 வயதிருக்கலாம். துறுதுறு வென்று சிரித்த முகமாக இருந்தான்.

'என் பேரன் சந்துரு. மகா விஷமம். ஸ்கூலில் எல்லாத்திலேயும் ·பர்ஸ்ட். படிப்பு, விளையாட்டு, பேச்சுப் போட்டி என்று எல்லாத்திலும் கெட்டிக்காரன்.' மாமி முகத்தில் பெருமை ஜொலித்தது.

அவர் கண்ணில் நம்பிக்கை சுடர்விட்டது. நாளை மறுபடி விடியும் என்ற நம்பிக்கை.

'பகவானே இந்த நல்ல மனிதர்களை மறுபடி ஏமாற்றிவிடாதே' என்று மனதில் வேண்டிக் கொண்டே வீடு திரும்பினேன்.

மறுவருஷமே மாற்றலாகி நாங்கள் சேலத்தைவிட்டுக் கிளம்பிவிட்டோம். மாமா, மாமி பற்றிய சேதி ஏதும் காதில் விழவில்லை. இருபத்தி ஐந்து வருஷங்களுக்குப் பின் இந்த எதிர்பாராத சந்திப்பு!

பரவாயில்லை. அவர்களுக்கு விடிந்து விட்டது. நம்பிக்கை பொய்க்கவில்லை. நிம்மதியாகத் தூங்கினேன்.

உமா விஸ்வநாதன், சைப்ரஸ், கலிபோர்னியா
More

காந்தி தந்த பாடம்
பிறந்த மண்
Share: 




© Copyright 2020 Tamilonline