விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூங்கா விருந்து நிகழ்ச்சி
|
|
|
கலவரம்
கடந்த ஆகஸ்ட் மாதம் 4, 5-ம் தேதிகளில், ஸான்·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியைச் சேர்ந்த, 'நாடக்' குழுவினர் அரங்கேற்றிய, 'கலவரம்' நாடகம், எல்லாவிதத்திலும், வித்தியாசமான முயற்சி, துணுக்குத் தோரணங்களே நாடகம் என்ற பெயரில், நாடகக்கலை, 'களை' இழந்து கொண்டிருக்கும் வேளையில், சமூக விழிப்புடனும், அதே சமயம் ஒரேயடியாக யதார்த்த பதார்த்தமாக இல்லாமல், மிகவும் இரசிக்கும் படியாக, எழுதப்பட்டு, இயக்கப்பட்டு. நடிக்கப்பட்ட நாடகமாக இருந்தது, மிகவும் வியப்புக்கு உரிய விஷயம் தான்.
'பிஷம் சஹானியின்' இந்தி மொழி மூல நாடகம், உமா ஷங்கர் என்பவரின் கை வண்ணத்தில், தமிழ் நாட்டு பின்னணிக்கு மிகவும் இயல்பாக மாற்றப்பட்டிருப்பது, மிகவும் பாராட்டுக்குரியது.
தற்கால சமூகத்தின் சீர்கேடுகளையும், அரசியல் அவலங்களையும், ஒட்டு மொத்தமாக நாம் எல்லோருமே ஒவ்வொரு ஆதாயக் கணக்கைப் போட்டுக் கொண்டு, சமுதாயத்தோடு சோரம் போய், கற்கால நாகரிகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை, மில்லிகிராம் துல்லியமாக சொல்லியிருக்கிறார்கள். கலவரத்தின் கதை இதுதான்.
தமிழ்நாட்டின் ஒரு பெரிய நகரத்தில், ஒரு கலவரம் நடக்கப்போகிறது. கதை ஒரு காவல் நிலையத்தில் ஆரம்பமாகிறது. மிகவும், கவனமாக வேலை செய்யும் ஒரு இன்ஸ்பெக்டரும், மந்த கதியில் இயங்கும், அவ்வளவான புத்திசாலித்தனம் இல்லாத, அவரது இரண்டு கான்ஸ்டபிள்களும், வெடிக்கப் போகும் கலவரத்தை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது, முன்னேற்பாடுகள், கலவரம் நடக்கும் போதும், கலவரத்துக்கு அப்பால் நடக்க வேண்டிய விஷயங்களுக்காகவும், மிகவும் கவனமாகச் செய்யப்படுகின்றன.
அதே சமயம், தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவரும், அவரது செயலர், 'பன்னீரும்' பொதுமக்களுக்கு, எந்தெந்த சந்தர்ப்பங்களில் எந்தெந்த அறிக்கைகள் சென்றடைய வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். 'செயலர் பன்னீருக்கு, இது மிகவும் சுலபம். ஒவ்வொரு கலவரத்தின் போதும். வெவ்வேறு அமைச்சர்களுக்கு எழுதிக்கொடுத்த பல அறிக்கைகள் அவரது கைவசம் தயாராக உள்ளன. கொஞ்சம், தட்டிக் கொட், மாற்றி எழுதினால், இந்த கலவரத்துக்கான 'அமைச்சர் அறிக்கைகள்' ரெடி....!
இதில் என்ன வேடிக்கை என்றால், செயலர் பன்னீர், தமது உபரி வருமானத்துக்காக, மற்ற அமைச்சர்களுக்கும், ஏன்... மாற்றுக் கட்சித் தலைவர்களின், காரசாரமான சாடல்களையும் எழுதிக் கொடுப்பதுண்டு....! ஆளுங்கட்சி அமைச்சரு தான் எழுதி கொடுத்த அறிக்கையை அக்கு வேறு ஆணி வேறாக, சுக்கு நூறாக கிழித்து, காட்டமாகப் பேச, எதிர்க்கட்சியினருக்கு, பேச்சினை தயார் செய்வதும்.... பன்னீர்தான்...!
மற்றொரு புறம், சகலத்துக்கும் தரகரான சந்தானமும், சமூகத்தில் அந்தஸ்த்து உள்ள இரண்டு வியாபாரிகளும், மூத்த வியாபாரியின் தொழிற்சாலைக்குப் பக்கத்தில் உள்ள, குடிசைப் பகுதி நிலத்தை கபளீகரம் செய்து, அந்த குடிசைவாசிகளை அவ்விடத்திலிருந்து துரத்துவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள்.
மிஸ்டர் பொதுஜனமோ, வழக்கம் போல எருமை மாட்டின் மேல் மழை பெய்தாற் போல் நடக்கப் போகும் கலவரத்தினைப் பற்றிக் கவலையே படாமல், இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
டீக்கடைகளிலும், தெருமுனைப் பெட்டிக் கடைகளிலும், மாயமாய்த் தோன்றி மறைந்து விட்ட 'குடைக்காரனை'ப் பற்றியே பேச்சு அவனைப் போலீஸ் வேறு துரத்துகிறது. இனி முஸ்லீமா அல்லது இந்துவா என்பது தான் பலருடைய கவலை....!
தரகர் சந்தானம், சாதாரணமாகவே ஆட்டைத் தூக்கி மாட்டிலும், மாட்டைத் தூக்கி போடுபவர். கலவரம் என்பது அவருக்கு கிடைத்த வரப்பிரசாதம் மாதிரி. தன் கையில் அகப்பட்டுக் கொண்ட வியாபாரிகளை, பயமுறுத்தியே, கலவரத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆயுதங்களும், ஆட்களையும் ஏற்பாடு செய்து அதில் வேறு கமிஷன்...! இந்த வகையிலே பேட்டை ரவுடியான, 'கபாலி'யை இந்த காப்பாற்றும் காரியத்துக்கும், குடிசைவாழ் மக்களை காலி செய்ய வைப்பதற்கும், கைக்கூலியாக ஏற்பாடு செய்கிறார், தரகர்...! |
|
கபாலி, பேட்டை ரவுடியாயிருந்தாலும், செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம் என்று, ரவுடித் தொழிலையும், ஒரு தொழில் கண்ணியத்தோடு நடத்தி வருபவன். கபாலியின் தொழில் கொலை....'தலைக்கு ஆயிரம் ரூபாய்' என்பது, அவனத ரேட்.... குடிசை மக்களைக் காலி செய்ய வைப்பது, அவனது தொழில் திறமைக்கு சவாலான காரியமாக இல்லாவிட்டாலும், பணத்தின் அள¨ப் பார்த்து, தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறான்.....!
குடிசைவாசிகளுக்கோ, இந்த 'விரட்டி அடிக்கப்படப் போகும் திட்டமெல்லாம்' தெரியாது. கலவரத்தினை ஒட்டி, அவர்களது திட்டமே வேறு....! யோகி என்னும், ஒரு நாடோடி இந்த குடிசைவாசிகளுக்கு, கலவரத்தில் இறந்தவர்களுக்கு, பெரும் தொகை, அரசாங்கம் அளிக்கவிருப்பதைக் கூறவும், அவர்கள், தங்களின் ஒருவனான நொண்டி மாரியை (காலில் அடிபட்டு, குணமாகதவன்!) கொல்லத் தீர்மானிக்கிறார்கள்....! அதற்கும் ஒரு கண்டிஷன்... மாரிக்கு கல்யாணம் ஆகியிருந்தால் தான், அவன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கிடைக்கும் என்று தெரிந்து, அவனுக்கு குப்பத்துப் பெண், சாந்தியை கலவரத்துக்கு முன்பாகவே கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.....!
கபாலி, எப்படி, நஷ்ட ஈடு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை, காவல்நிலையத்திலிருந்தே திருடி, பொது மக்களுக்கும், குப்பத்து மக்களுக்கும், விநியோகம் செய்து, நகரத்து மக்களின் பேராதரவைப் பெற்று ''கபாலீஸ்வரன்'' ஆகிறான் என்பது மீதிக் கதை. யோகி, நாடோடியாக இருந்தாலும், சரியான 'உரத்த வாய்' மனிதன்.......! அவன் கூறிக் கொண்டிருந்தபடி, 'கலியுகக் கண்ணன்', கபாலீஸ்வரன் வடிவிலே வந்து விட்டார்.... இனிமேல், ஒளிமயமான எதிர்காலம் தான்...!
இத்தனைக்கும் பிறகு... கலவரம் நடந்ததா இல்லையா....? யாருக்குக் கவலை அதைப் பற்றி....!
இந்த நாடகத்தின் இயக்குனர், மகேஷ் உமாசங்கர், நாடகத்தை மிகவும் சீராக, எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இயக்கி இருப்பது, அவருடைய, 'நாடக்' குழுவின் அனுபவத்தைக் காட்டுகிறது. எல்லா நடிகர்களுமே தங்கள் பாத்திரங்களின் தன்மையை உணர்ந்து, மிகையில்லாமல் நடித்ததும், பாராட்டப் படவேண்டிய ஒன்றே....! இத்தனைக்கும், பெரும்பாலான நடிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்டப் பாத்திரங்களின் நடித்திருந்தார்கள்....! காட்சி ஜோடனைகளும், மேக்கப்பும் (ஒப்பனை என்று எழுத ஆசைதான்... புரிய வேண்டுமே!), மிகவும் நேர்த்தி.....!
ஆக மொத்தம், சென்னையிலிருக்கும், தொழில்ரீதியான நாடகக் குழுவினர்களுக்குச் சற்றும் குறைவில்லாத நாடகத் திறன் கொண்ட குழுக்கள் நம்மிடையே இருப்பதும், அவர்களின் முயற்சிகள் பாராட்டத்தக்க வகையிலே இருப்பதும், பெருமைக்குரிய விஷயங்கள் தானே....! 'நாடக்' குழுவினருக்கு.... சபாஷ்...!
அசோக் சுப்பிரமணியம் |
|
|
More
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் பூங்கா விருந்து நிகழ்ச்சி
|
|
|
|
|
|
|
|