அமெரிக்காவில் வாழும் முதிய தலைமுறை இந்தியர் நைஜீரியாவில் மதுபானம் மலிவு பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை காதில் விழுந்தது...
|
|
|
அந்நிய மண்ணில் தொண்டு ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு முப்பது ஆண்டுகள் வேர்விட்டு ஆலமரமாக வளர்வது என்பது மிகப் பெரிய சாதனை. இவ்வாண்டு இந்தச் சாதனையைக் கொண்டாடுகிறது தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு (TNF Convention). அமெரிக்க வாழ் இந்தியர்களிடம், குறிப்பாகத் தமிழர்களிடம் தமிழ்நாடு அறக்கட்டளை பற்றிய உணர்தலை உண்டாக்கத் துவங்கப்பட்ட இந்த மாநாடு, முதல் 15 ஆண்டுகளில் நீத்தார் நினைவுநாள் (மெமோரியல் டே) வார இறுதியிலும், அடுத்த 10 ஆண்டுகளில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையுடன் (FETNA) இணைந்தும், கடந்த சில ஆண்டுகளில் ஜுலை 4 வார இறுதியிலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் நடக்கும் இம் மாநாடு இவ்வாண்டு சிகாகோ மாநகருக்கு வருகிறது. ஜுலை 2, 3, 4 தேதிகளில் சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படும் இவ்வாண்டு மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முப்பது வருடச் சாதனையைப் படக்காட்சிகளாகவும், விரிவுரைகளாகவும் சுவையாக வழங்கவிருக்கின்றனர். சாகித்ய அகாதெமி விருது பெற்றதற்காகக் கவியரசு வைரமுத்துவும், சீரிய சேவை செய்தமைக்காகக் கோவையைச் சேர்ந்த தொழில திபரும், கொடைவள்ளலுமான திரு எஸ். வி. பாலசுப்ரமணியமும் கௌரவிக்கப்படுகிறார்கள். கவியரசு வைரமுத்து அவர்களும், அறக்கட்டளையின் தமிழ்நாடு கிளையின் தலைவர், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பேரா. அனந்தகிருஷ்ணனும் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
சமூகத் தொண்டு மட்டுமல்லாமல் இலக் கியச் சேவையும் தொடர்கிறது - கவியரங் கம், பட்டிமன்றம், நகைச்சுவை விருந்து, குழந்தைகள் திறன் காட்டும் நிகழ்ச்சிகள், அமெரிக்கவாழ் தமிழ் இளைஞர்கள் பங்கேற்கும் நடனம், பாட்டு என்று இயல், இசை, நாடகத்தின் பல பரிமாணங்களும் மிளிரப்போகும் நாட்கள் இவை. பாடகர் மனோ, லக்ஷ்மண் (லக்ஷ்மண் ஸ்ருதி), (மன்மத ராசா) மாலதி, ஹரீஷ் ராகவேந்திரா, பட்டிமன்றப் புகழ் ராஜா போன்ற பல பிரபலங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து பார்வையாளர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இருக்கின்றனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாந்தில் மனித நேயம் கொண்ட நால்வரின் தீர்க்க தரிசனத்தால் ஒரு நன்றி நவிலும் நாள் விருந்தில் (Thanksgiving Dinner) தம்மை வளர்த்து ஆளாக்கிய தாய்நாட்டுக்கு நன்றி கூறும் விதமாகத் தொடங்கப்பட்டதே, தமிழ்நாடு அறக்கட்டளை. இத்தனை ஆண்டுகளாக நல் உள்ளம் கொண்ட தனி மனிதர்கள், தமிழ் மன்றங்களுடன் இணைந்து 230 நற்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு பெருமித நடை போடும் அறக்கட்டளை, டெட்ராய்ட்டில் பெரிய அளவில் 3-4 பணிகளைத் திட்டமிடும் தருவாயில் இருக்கின்றது. பிட்ஸ்பர்க்கில் தொழுநோய் ஒழிப்பு சம்பந்தமான ஒரு திட்டமும் உருவாகிக் கொண்டிருக்கிறது. சென்ற மாதம், க்ளீவ்லண்டு பாரதி பண்பாட்டுச் சங்கத்துடன் இணைந்து சேவை நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் காச நோயால் அவதிப்படும் அனாதைகளுக்கு உதவும் மேன்மையான சேவை யையும் அறக்கட்டளை செய்து கொண்டிருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது மூன்று முதன்மைத் திட்டங்களை இதன் செயற் குழுவினர் வழி நடத்துகின்றனர். இவ் வருடம், சங்கரா கண் அறக்கட்டளை (Sankara Eye Foundation)-கோயம்புத்தூர், உதவும் கரங்கள், தொழுநோய் ஒழிப்பு மையம்-வட ஆற்காடு, இவற்றிற்கு உதவு கிறார்கள். சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாகக் கோயம்புத்தூர் செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திரு எஸ். வி. பாலசுப்ரமணியத்தை இவ்வாண்டு மாநாட் டில் பெருமைப்படுத்துவதையும், வட ஆற்காடு மையத்தின் காரணகர்த்தாவான அட்லாண்டாவைச் சேர்ந்த பெக்கி டக்ளஸ் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் பெருமை யாகக் கருதுகின்றனர்.
பல்லாண்டுகளாகத் தழைத்து ஓங்கி நிற்கும் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அமெரிக்கா வில் 7 மண்டல அமைப்புகள் இருக்கின்றன. கலிஃபோர்னியா, மேரிலாந்து, இல்லினாய், மிஸௌரி, ஒஹையோ, பென்சில்வேனியா, மிச்சிகன் போன்ற மாநிலங்களில் இருக்கும் 15 செயற்குழுவினரும் மாதமொருமுறை தொலைபேசியிலோ, நேரிலோ சந்திக்கின்றனர். |
|
நல்ல பல சேவைப் பணிகளைச் செவ்வனே செய்யும் அறக்கட்டளையின் முயற்சி களில் தென்றல் குடும்பத்தைச் சேர்ந்த நாம் எவ்வாறு பங்கேற்று, ஊக்குவிக்கலாம் என்பதை அதன் தலைவராக இருக்கும் திரு மாணிக்கம் அவர்களுடன் பயணித்து அறிந்தோம். உறுப்பினராகச் சேர்ந்து ஒரு திட்டப் பணிக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள, "tnf-usa.org" என்னும் வலைத்தளத்திற்குச் சென்று $30 வருடச் சந்தாவாகவோ, $300 ஆயுள் சந்தாவாகவோக் கட்டி விண்ணப்பிக் கலாம். செயற்குழுவினர் விண்ணப்பித்த வரின் தகுதியை ஆய்ந்த பின் அங்கத்தின ராக்கிக் கொள்வர். உறுப்பினரானவர்கள், அறக்கட்டளையின் காலாண்டுப் பத்திரிகை யும் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளும் பெறுவர். அமைப்பின் வலைத்தளத்திற்குச் சென்றுத் திட்டப்பணிகளைப் பற்றிய விளக்கங்கள், செயற்குழுவின் கலந்துரையாடல்கள், தீர்மானங்கள் பற்றி அறியலாம். அறக்கட்டளையின் திட்டங்களுக்கோ, அல்லது வேறு திட்டங்களுக்கோ அறக்கட்டளை மூலம் பண உதவி வழங்கலாம். அறக்கட்டளை மூலமாக அளிக்கப்படும் தொகை, நன்கொடை இவற்றிற்கு வரி விலக்கும் உண்டு. நற்பணிக்குப் பொறுப்பேற்று உதவ விழையும் உறுப்பினரின் திட்ட விண்ணப்பத்தைத் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து வழிநடத்த அறக்கட்டளை துணை நிற்கும். நன்கொடையிலிருந்து 5% மட்டுமே நிர்வாகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
பேரா. அனந்தகிருஷ்ணனின் தலைமையில் இயங்கும் அறக்கட்டளையின் சென்னைக் கிளை இந்தியாவில் நடக்கும் திட்டப் பணிகளை மதிப்பிடுவதிலிருந்து செம்மையான முறையில் அவற்றைத் தொடர்ந்து நடத்த உதவுகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் அறக்கட்டளையின் சொந்தக் கட்டிடத்திலுள்ள அறைகளை இந்திரா காந்தி பல்கலைக்கழகத்திற்கு வாடகைக்கு விட்டு வருவாய்க்கு வழி வகுத்துள்ளனர். அங்கு பயிலும் 20% குழந்தைகளுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.
"எங்கள் நிறுவனம் சமூகத் தொண்டுக் காகவே ஏற்படுத்தப்பட்டது. எங்கள் வலைத்தளத்தில் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று பறை சாற்றியுள்ளது போல், தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் எங்கள் சேவை தொடரும். உதாரணத்திற்கு, 1984ல் இலங்கைக்கு விரைந்து சென்று உதவிக்கரம் நீட்டினோம். எங்கள் பணிகளில் இந்நாட்டுத் தமிழர்களும், மற்ற இந்தியர்களும், வேறு நாட்டவரும் மிக்க ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் அவா. உறுப்பினர்கள் பெருகப் பெருகத் திட்டப் பணிகளும் தழைத் தோங்கும். இதைப் படிக்கும் உங்கள் தென்றல் வாசகர்களும் எங்கள் முயற்சி களுக்குப் பெரிதளவில் ஆதரவு தந்து ஊக்குவிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று முடித்தார் திரு மாணிக்கம்.
உமா வெங்கடராமன் |
|
|
More
அமெரிக்காவில் வாழும் முதிய தலைமுறை இந்தியர் நைஜீரியாவில் மதுபானம் மலிவு பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை காதில் விழுந்தது...
|
|
|
|
|
|
|