Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
குற்ற உணர்வு
ஊர் வாசனை!
- அனுஷா|அக்டோபர் 2018|
Share:
இன்று காலை 10 மணிக்கெல்லாம் கிளம்பி காஸ்ட்கோ போய் வந்துவிடலாம் என்று சொல்லி இருந்தாள் மாலா.

"சீக்கிரம் ஏதேனும் சமைத்து விடுகிறேன்" என முனைந்த என்னை அவசரமாகத் தடுத்துவிட்டாள்.

"வேண்டாம்மா... நேத்தைக்கு ஐக்கியா பூரா சுத்தி ரொம்ப டயர்டா இருந்தே. இன்னும் ரெண்டு நாளில இந்தியா கிளம்பப் போறே. அதுக்குள்ளே சிரமப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காத. நிறைய சமைச்சாச்சு. இன்னிக்கு காஸ்ட்கோ போய் ஷாப்பிங் பண்ணவே நேரம் சரியா இருக்கும். லஞ்ச் வெளில பார்த்துக்கலாம். ஓ.கே?" என்று சொல்லிவிட்டாள்.

காலைச் சிற்றுண்டிக்கு பிரெட்-டோஸ்ட் சாப்பிட்டதால் வேலையும் நேரமும் மிச்சமாயிற்று. இதுவும் நல்லதுக்குதான் என்று எண்ணிக்கொண்டே அறையில் வந்து, இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பெட்டிகளைத் திறந்தேன். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த துணி மணி, சாமான்களை அதில் அடுக்கினேன். இன்று காஸ்ட்கோ போய் வாங்கப்போகும் சாமான்களை வைக்க எவ்வளவு இடம் இருக்கும் எனப் பார்த்தேன். எடையைப் பார்த்துப் பார்த்துதான் சாமான்களை அடுக்கவேண்டும் என்று மாலா சொல்லியிருந்தாள். சாயங்காலம் இரண்டு மணி நேரம் அவளோடு உட்கார்ந்து சாமான்களை அடுக்க வேண்டியதுதான்.

நேற்று வாட்ஸப் அழைப்பில் கூப்பிட்ட பார்வதி கேட்டது நினைவுக்கு வந்தது. உண்மையில் அவளுடைய அழைப்பை எதிர்பார்க்கவில்லைதான். வாட்ஸப் என்பதால் கூப்பிடுகிறாள் என வியப்பை அடக்கிக்கொண்டே பேசி, வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின் கடைசியாக அவள் கேட்டது நினைவுக்கு வந்தது. "அங்கே அமெரிக்காவில் பாதாம் எல்லாம் நன்றாகக் கிடைக்குமாமே. சீப்பா இருக்குமாமே. நம்ம ரமணிதான் சொன்னா. முடிஞ்சா உங்களுக்குக் கஷ்டம் இல்லைன்னா ஒரு பாக்கெட் வாங்கிண்டு வாங்கோ. சிரமம் இல்லாட்டா கொண்டு வந்தா போறும்." என்று நீட்டி முழக்கிச் சொன்னதை மாலாவிடம் தெரிவித்தபோது, "அதுக்கென்னம்மா வாங்கிட்டாப் போச்சு... அதுவுமில்லாம கொஞ்சம் எக்ஸ்ட்ராவா முந்திரி, சாக்லேட், சின்னச் சின்ன பரிசுகள் வாங்கிண்டு போ. அங்கே அக்கம்பக்கத்துல இருக்கிறவாளுக்கு, உன்னோட பகவத்கீதை க்ளாஸ்மேட்ஸ், டீச்சர், சொந்தக்காரங்க எல்லாருக்கும் கொடு. சந்தோஷப்படுவா" என்று சொன்னாள்.

மாலாவிற்கு ரொம்பப் பெரிய மனம்தான். பார்வதி கேட்டதற்காகவே இன்று காஸ்ட்கோ போகலாம் என்று சொன்னாள். யோசித்துப் பார்த்ததில் எனக்கும் அது சரிதான் என்று தோன்றியது. நாமும் இப்போதுதான் முதன்முறையாக அமெரிக்கா வந்திருக்கிறோம். திரும்பப் போகையில் சந்தோஷமாக ஏதேனும் கொண்டு போய்க் கொடுத்தால்தானே பெருமையாக இருக்கும்?

இந்தியா நினைவு வந்தவுடனே சென்னை ஞாபகம் வந்து, அங்கே வீடு எப்படி இருக்கிறதோ, இவர் எப்படி இருக்கிறாரோ என்ற எண்ணமும் கூடவே வந்தது. இங்கு வந்து நாற்பது நாள்தான் ஆகிறது. தினசரி ஒரு முறையேனும் ஃபேஸ்புக், வாட்ஸப் மூலம் எப்படியேனும் தொடர்பு கொண்டிருந்தாலும் வீட்டைப்பற்றிய நினைவு வந்து ஒரு பெருமூச்சு விடுவது உண்மைதான். அங்கே போய் வீட்டைச் சரிப்படுத்த எவ்வளவு வேலை செய்யவேண்டி இருக்குமோ என்ற எண்ணம் மலைப்பைக் கொடுத்தது. இவரை விட்டுவிட்டு நான்மட்டும் எங்கேயும் அவ்வளவாகச் சென்றதில்லை. "இன்னும் ஆறு மாதத்தில் ரிடையர் ஆகப் போகிறாரே, அதற்குப் பிறகு நானும் அப்பாவும் வருகிறோம்" என்று சொன்னபோது, மாலா மெதுவாகப் புன்னகைத்துச் சொன்னாள். "அப்பவும் கண்டிப்பா வா. ஆனா இப்ப நான் இங்கே வந்துட்டுத் திரும்பிப் போகும்போது என்கூட வந்தா உனக்கு நல்ல துணையா இருக்கும். ஒரு மாறுதலாவும் இருக்கும். அமெரிக்கா பற்றி ஒரு ஐடியா கிடைக்கும். இப்பவே ஒரு தடவை வாம்மா, ப்ளீஸ்" என்று சொல்லி எங்களைச் சம்மதிக்க வைத்தாள்.

எனக்கும் அந்தப் பயணம், அதுவும் மாலாவோடு, ரொம்பவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. மாலா அமெரிக்கா சென்ற இந்த நான்கு வருடங்களில் மூன்று தடவைக்குமேல் ஆபீஸ் வேலை நிமித்தமாக இந்தியா வந்திருக்கிறாள். இரண்டு, மூன்று வாரங்களுக்குள் வேலை முடிந்து கிளம்பிவிடுவாள். சென்ற தடவை வந்தபோது திரும்பத் திரும்ப அம்மாவிடம் பேசி ஒருமாதம் அல்லது 40 நாளாவது அமெரிக்கா வந்துவிட்டுப்போ. அப்புறம் அப்பாவுடன் மெல்ல வரலாம் என்று சொல்லி அழைத்துவந்தாள்.

நாற்பது நாள் 40 நிமிஷம்போலப் பறந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்க அனுபவம் கொஞ்சம் புதுமையாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருந்தது உண்மைதான். இந்தச் சாலைகளில் போகும் கார்ப் பயணங்கள், பெரிய பெரிய மால்கள், நடைப் பயிற்சிக்கு ஏற்ற பரந்த பூங்காக்கள், கடைகள்... கண்களை விரித்து வைத்துக் கொண்டேதான் எப்போதும் இருந்தேன்.
நேற்று ஐக்கியா போனபோதும் அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தையும் அதில் நடந்துகொண்டே ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கி - கிச்சன் அமைப்பிற்குத்தான் எத்தனை விதங்கள், மாடல்கள், வீட்டு உபயோகச் சாமான்கள்தான் எத்தனை தினுசு! எல்லாவற்றையும் வியந்துகொண்டே கடந்து, அந்த வியப்பை வாய்விட்டுச் சொல்லிச் சொல்லி... மாலா ஒரு புன்முறுவலோடு எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள்.

அடுத்த அறையில் ஏதோ சத்தம் கேட்கவும் அங்கே விரைந்தேன். மாலா சுற்றிவர மரச்சட்டங்கள் இருக்க, கையில் ஸ்க்ரூ டிரைவர் சகிதம் எதிரே இருந்த பேப்பரைப் பார்த்து கொண்டிருந்தாள்...

என்ன செய்கிறாள் இவள்? அவள் அருகே சென்று பார்த்தபோது, கையில் இருந்த பேப்பரை எதிரே வைத்துக்கொண்டே ஒரு மரப்பலகையை சட்டத்தோடு வைத்து, திருகாணியால் இணைத்தாள்.

"என்ன செய்யறே மாலா?" என்று கேட்டபோது, "கபோர்ட் அசெம்பிள் பண்றேன்மா. நேத்து ஐக்கியால வாங்கினோமே" என்றாள்.

நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பலகைகள், சட்டங்கள் எல்லாவற்றையும் இணைத்து, கைப்பிடிகளைப் பொருத்தி முழுமையான கபோர்டைக் கண்முன்னே நிறுத்தியதும் வியப்புற்றேன்.

"ஸ்க்ரூ டிரைவர் பிடித்து இந்த வேலையெல்லாம் செய்வதற்கு எப்போ கத்துண்டே?"

"இங்கே இதெல்லாம் செஞ்சுதான்மா ஆகணும். அதுவும் இல்லாம நீ நினைக்கிற மாதிரி இது கஷ்டமான வேலை ஒண்ணும் இல்ல. இதோ இந்த டயகிரம் பார்த்து அசெம்பிள் பண்ணனும். அவ்வளவுதான். அதோ அந்த சைட் டேபிள், டீப்பாய் எல்லாம் நானே பண்ணினதுதான்" என்று சொல்லவும் எனக்கு வியப்பு அதிகரித்தது.

மாலாவுடன் காஸ்ட்கோ போகும் வழியெங்கும் அந்தச் சாலைகளின் அழகும், ஒழுங்கும் திரும்பத் திரும்ப வியப்பைக் கூட்டிக் கொண்டேதான் இருந்தன. கூடவே சென்னையின் குறுகலான தெருக்களும், குறுக்கே புகும் வண்டிகளும், அதனால் வரும் கோப வார்த்தைகளும் நினைவில் வராமலில்லை. இப்போது அங்கே வெயில் அதிகம் என்றார்களே. தண்ணீர் கஷ்டம் வேறு என்றால்... கடவுளே....

காஸ்ட்கோ சென்று உள்ளே நுழைந்ததும் அந்த பிரம்மாண்டம் மீண்டும் வியப்பைக் கொடுத்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலோ என்னவோ கூட்டம் அதிகமிருந்தது. அம்மா இன்னும் ஆறு மாசம் கழிச்சு இங்கேதானே வரப்போற. அப்ப இந்த கேட்ஜெட்ஸ், எலக்ட்ரானிக் செக்‌ஷன்ன் எல்லாம் பார்க்கலாம் என்று சொன்ன மாலா, உணவுப் பண்டங்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.

உருளைக்கிழங்கு, ஆப்பிள், சிறு சிறு மூட்டைகளாகக் குவிந்து கிடப்பதைப் பார்த்து வியந்தேன். "இங்கே குறிப்பா காஸ்ட்கோல எல்லாம் பெரிய பெரிய பாக்கெட்டாத்தான் இருக்கும்மா" என்று விளக்கினாள் மாலா.

பாதாம், முந்திரி வகைகள் பார்க்கவே எப்படிச் செழுமையாய், முழுமையாய் இருக்கிறது. இதை இந்தியாவில், நம்ம ஆட்களிடம் கொடுக்கும்போது அவர்கள் முகம் எப்படி வியப்பால் விரியும் என்று எண்ணிப்பார்த்தேன்.

"நிறையவே வாங்கிட்டோம்னு நினைக்கிறேன். எல்லாத்தையும் எடுத்துண்டு போகமுடியுமா?"

"நான் பார்த்து பேக் பண்ணித் தர்றேன்மா. டோண்ட் வொரி" என்றாள் மாலா.

வீடு திரும்புகையில் ஏதோ நினைவுக்கு வந்தவள்போல, "அம்மா, இந்தியன் ஸ்டோர்ஸில் ஏதோ வாங்கணும்னு சொல்லிட்டிருந்தியே. நானும் மறந்துட்டேன்" என்றாள்.

"ஆமாம். தேங்காய் எண்ணெய் வாங்கணும்னேன். ரெண்டு நாள் தானே. பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்."

"இல்லேம்மா. 'பட்டேல் பிரதர்ஸ்' போற வழியிலதான் இருக்கு. வாங்கிட்டே போகலாம். எனக்கும் யூஸ் ஆகும்."

பட்டேல் பிரதர்ஸில் உறையவைத்த தேங்காய்ப் பாக்கெட் எடுத்துக்கொண்டு கவுண்டருக்குப் போனோம். அங்கே இருந்த பெண் மாலாவைப் பார்த்துப் பரிச்சயமாய்ப் புன்னகைத்தாள். பில் போட்டுக்கொண்டே குரலை இறக்கிக் கேட்டாள். "தேசி கறி லீவ்ஸ் இருக்கு. வேணுமா?"

"உங்களை ரொம்பப் பழக்கம்ங்கறதால கேட்கிறேன். இந்த தேசிக் கறிவேப்பிலை மணமே அலாதி. ஆனா, இது இங்கே கிடைக்கிறதே இல்லை. ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி ஆர்டர் பண்ணினதில கிடைச்சது.. உள்ளே வச்சா ஒரு செகண்ட்ல வித்துப் போயிடும். ரொம்பத் தெரிஞ்சவங்க, ஸ்பெஷலா கேட்கறவங்களுக்கு மட்டும்தான் கொடுக்கறேன். சாதாரணமாக வர்ற கறிவேப்பிலைக்கும் இதுக்கும்... மைகாட், என்ன டிஃபெரன்ஸ். ஜஸ்ட் ஸ்மெல் பண்ணிப் பாருங்க" என்று சொல்லிக்கொண்டே அந்தச் சிறு பிளாஸ்டிக் கவரை முகர்ந்து கொண்டே முகம் மலரும் அவளைப் பார்க்கையில்...

கார் டிக்கியில் அடுக்கடுக்காக வாங்கி வைத்திருக்கும் பாக்கெட்டுகள் நினைவில் வந்து கொஞ்சம் சங்கடத்தைக் கொடுத்தது உண்மைதான்.

அனுஷா
More

குற்ற உணர்வு
Share: 


© Copyright 2020 Tamilonline