Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
உயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு
மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு
செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|டிசம்பர் 2011|
Share:
"எம்மா கோதே, குடிக்கத் தண்ணியும் விசிறியும் எடுத்தாம்மா. அப்பப்பா, என்னா ஒரு வெயிலு, என்னா ஒரு வெக்கை" என்றபடியே நடையில் செருப்புகளை விட்டவண்ணம் உள்ளே நுழைந்தார் அனவரதம். அவர் குரல் வருமுன்னே தாழ்வாரப் பெஞ்சுப் பலகையில் இரண்டும் காத்திருந்தன. சொம்புத் தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்து, கண் மூடி ஆசுவாசப் படுத்திகொண்டு, ஆக்கப்புரைப் பக்கம் அரைக்கண்ணை ஓட்டி, சாப்பாடு தயாரா என ஜாடையாக வினவினார் மகள் பூங்கோதையை.

"ஆஹா, உதிர வடிச்சு உப்புச்சார் காய்ச்சி வைச்சிருக்கு, வட்டிக்கிறேன், ஒரு பிடி பிடியுங்க" என அசரீரி வந்தது அடுக்களையிலிருந்து; மனைவி வடிவுதான். இந்த நையாண்டிக் கெல்லாம் அசருபவரா அனவரதம்? காதிலேயே வாங்காது கொல்லைப்புறம் சென்று கால்கை கழுவி வரவும், தாழ்வாரக் குறட்டில் கைக்கா ஓலை வட்டிலும், குவளையில் நீரும் காத்திருந்தன.

"அப்பனே நெல்லையப்பா, தாயே காந்திமதி!" என அழைத்தபடி அமர்ந்தவரிடம் "இன்னிக்கு நெல்லையப்பன் நொய்க் கஞ்சியும், நாரத்தங்காயும் படியளந்திருக்கான்" என்றபடி நாலு அகப்பை கஞ்சியை வார்த்தாள் பூங்கோதை. அதுவே தேவாமிர்தமாக இருந்தது அவருக்கு. சற்று முன்பசி ஆறியதும் தாழ்ந்த குரலில் "போன சோலி என்ன ஆச்சுப்பா?" என வினவினாள் கோதை. நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு, "ஹூம், அந்த மவராசன் திரும்ப வாய்தா வாங்கிட்டான். இன்னும் எத்தனை வட்டம் கொக்கிரகுளம் யாத்திரை வாய்ச்சிருக்கோ? எழுதாக் குறைக்கி அழுதா வருமா?" என அலுப்புடன் பதிலிறுத்தபடி கை கழுவச் சென்றார். பாத்திரத்தில் மீதமிருந்த கையளவு கஞ்சியை வழித்து வாயில் இட்டபடி அடுக்களைப் பக்கம் சென்றாள் கோதை. எதைப்பற்றியும் கவலையின்றி கூடத்து இடைகழியில் தலைக்குயரக் கட்டையை வைத்துப் படுத்திருந்த வடிவு, "ஆம்மாம், இவுக கேசாடி மீட்டுக் கொண்டாந்து சாய்க்கப் போறாக. 'அக்காடு வெட்டிப் பருத்தி வெளைஞ்சா அக்கா எனக்கும் ஒரு முழத் துண்டு'னு காத்துக் கிடக்கணும்" என முனகுவது கேட்டது. அதைக் காதில் வாங்காது முன்னறைப் பக்கம் சென்று புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்து விட்டாள் கோதை. மன அலுப்பு, வெயிலில் அலைந்த சடைவு எல்லாம் தள்ள, பெஞ்சுப்பலகையில் கட்டையைக் கிடத்தினார் அனவரதம்.

*****


நெல்லை மாவட்டச் சிற்றூர் ஒன்றில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்தான் அனவரதம். வயல் வேலை, கூலி வேலை என்று உழைக்கும் அன்றாடங்காய்ச்சி ஜனங்களின் தேவைகளை விற்கும் செலவுக்கடை என்னும் சில்லறைக் கடை அவருடையது. ஒஹோ என்று இல்லாவிட்டாலும் மன நிறைவுடன் வாழ்ந்து வந்தார். ஒரே மகள் பூங்கோதை ப்ளஸ் டூ முடித்து, குடும்பச் சூழ்நிலை கருதி, ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு உள்ளூரிலேயே ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தாள். சம்பளம் என்று அவர்கள் கொடுப்பதுதான், கொடுக்கும்போது தான்; குடும்பத்துடன் ஒரே இடத்தில் இருக்கும் நிம்மதி ஒன்றுதான் லாபம். இந்தச் சிங்காரக் குடும்பம் இன்று இறங்கிப் போய் நொய்க்கஞ்சி நிலைக்கு வந்துள்ளதற்கு அவர்களுடன் சில காலம் வாழ்ந்திருந்த ஆவுடையப்பனின் மறைவுமுதல் எழுந்த பிரச்னைகளே காரணம்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அனவரதம் செய்த பெரும்புண்ணியம் அவரைவிட மிகவும் மூத்த தமக்கையாக கோமதியம்மாளையும் அக்காள் புருஷனாக ஆவுடையப்பனையும் பெற்றதுதான். அவர்களே இவருக்குப் பெற்றோராக இருந்து போஷித்தனர். ஆவுடையப்பன் தமிழாசிரியர்; ஊரில் தமிழையா என்றால் அப்படியொரு மரியாதை. தம் இரு மகன்களுக்கு மூத்தவராகவே அனவரதத்தைப் பாவித்தார். ஆனாலும் அவர் எவ்வளவு முயன்றும் அனவரதத்துக்குப் படிப்பு மட்டும் எட்டுக்கு மேல் எட்டவில்லை. இந்தக் கடையை வைத்துக் கொடுத்து, அவர் காலூன்றியவுடன் வடிவைத் தேடி மணம் செய்வித்ததும் அவர்தான். எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது, கோமதி காய்ச்சலென்று படுத்தவள் நாலு நாளில் மீளாத் துயில் கொள்ளும்வரை. ஆவுடையப்பனின் பையன்கள் இருவரும் அவ்வளவு குறியாக இல்லை. பெரியவன் செந்தில் காதல் திருமணம் செய்து கொண்டு, அவர் சற்று எதிர்த்தார் என்ற ஒரே சாக்கை வைத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டான். நாசரேத் பக்கம் எங்கோ இருப்பதாகக் கேள்வி. இளையவன் சரவணனுக்குப் பார்த்துப் பார்த்து கொண்ட மருமகளும் சரியில்லை. பிள்ளையோ வெறும் தலையாட்டிப் பொம்மைதான். சின்னதும் பெரிசுமாக எழுந்த பூசல்கள் ஒரு கட்டத்தில் வெடித்து விட மனம் கசந்து போய் வெளியே வந்து விட்டார் ஆவுடையப்பன். அனவரதம் உள்ளூர்ப் பெரியவர்களைக் கொண்டு எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தார். பிள்ளை பிடிவாதமாக அவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிடவே, தம்முடன் வைத்துக் கொண்டு விட்டார். கோதைக்கு மாமாமேல் மிகவும் பாசமும், மரியாதையும் உண்டு. வடிவுக்குத்தான் இவர் தங்களுடன் வந்தது சற்றுப் பிடிக்கவில்லை. அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனை கிளம்புவதும், அனவரதம் சமாதானப்படுத்துவதும் நித்திய நிகழ்ச்சிகளாக இருந்தன.

ஆவுடையப்பன் தம் சேமிப்பில் ஒரு வீடும், கழனி, தோப்புகளும் வாங்கி வைத்திருந்தார். அனவரதத்துடன் வசிக்க வந்த பிறகு அவர் ஏதாவது பண ஒத்தாசை செய்ய முன் வந்தாலும் அதை மறுத்து விடுவார் அனவரதம். வடிவுக்கு இதில் மனத்தாங்கல்தான். "பேட்டைப் பக்கம் போனேன், போட்டுக்கம்மா" என்று பூங்கோதைக்கு ஏதாவது போலி நகைகளும், "மாயன் தோட்டத்திலே விளைஞ்சதுன்னு குடுத்தான்" என்று மெழுகுபீர்க்கும், வெண்ணெயாக ருசிக்கும் கத்தரிக்காயும் கொண்டு தருவதுடன் சரி. கழனி, தோப்பு வரவு செலவு என்ன ஏதென்று யாரும் கேட்டதுமில்லை, அவராகச் சொன்னதுமில்லை. நினைத்தால் கோயில், குளம் என்று கிளம்பிப் போய் நாலைந்து நாட்கள் சென்று வருவதும் அவரது வழக்கமாக இருந்தது. வயதான காலத்தில் மனம் புழுங்கிக் கொண்டு முடங்கிக் கிடக்காமல் நல்லபடியாகப் பொழுதைப் போக்குவது பற்றி அனவரதத்துக்கும் ஆறுதலாகத்தான் இருந்தது. ஒரு முறை ஆடித்தபசுக்கென்று சிநேகிதர்கள் இருவருடன் சங்கரன் கோயில் சென்றவர் அங்கேயே மயங்கி விழுந்து விட, வீடு கொண்டு வந்து சேர்த்தனர் உடன் சென்றவர்கள். அதிக நாள் பாய் படுக்கை என்று கிடந்து யாருக்கும் சிரமம் கொடுக்காமல் அவரது முடிவு நேர்ந்துவிட்டது. ஆள் அனுப்பியும், நேரில் சென்று சொல்லியும் மகன்களில் ஒருவனும் வராததால் அனவரதமே அவரை முறையோடு வழியனுப்பி வைத்துவிட்டார்.
தகப்பனை வைத்துக் காப்பாற்றவோ, இறந்தபின் கடன்களைச் செய்யவோ முன்வராத மகன்கள், அப்பாவின் சொத்து கைவிட்டுப் போய்விடக் கூடாதே என ஒற்றுமையாக வந்து அனவரதத்திடம் வல்லடி செய்துகொண்டு நின்றனர். ஊர்ப்பொதுவில் வைத்து, "அவரும் நாலைஞ்சு வருஷமா உங்கப்பாவை வச்சுக் காப்பாத்தியிருக்கார். ஏதாவது அவருக்கும் ஒதுக்கிட்டு நீங்க எடுத்துக்கோங்க" என்று தீர்ப்பளித்தனர். "அது எப்படி? இத்தனை நாளா தோப்பு, காட்டிலேந்து வந்ததெல்லாம் எங்கே போச்சு? எல்லாத்தையும் இந்த மனுஷன் அமுக்கியிருக்கார். அதுக்கு ஈடா கடையைக் குடுத்துட்டுப் போகச் சொல்லுங்க" என்று அடாவடி செய்து கடையையும் பூட்டி வைத்து விட்டனர். கோடை விடுமுறையானதால் பூங்கோதைக்கும் சம்பளம் ஏதும் கிடையாது. வழக்கு, வாய்தா என செலவும் சேரவே, இன்று குடும்ப நிம்மதி போய், வறுமையும் சூழ்ந்திருக்கிறது.

*****


"என்னவே அனவரதம், ஒறக்கம் பலமோ? உண்ட மயக்கம் போல! வாசக்கதவு விரியத் தொறந்து கெடக்கு; நான் வந்தாப்பிடி வேறே எவனாச்சும் வந்தா என்ன கெதியாவும்?" என்ற குரலைக் கேட்டுத் தலையைத் திருப்புவதா, வேண்டாமா என யோசித்தபடி "இங்கே எவன் வந்தாலும் எடுக்க ஏதும் இல்லே; அவனே ஏதாச்சும் போட்டுட்டுப் போவான்," என பதிலளித்த வண்ணம் எழுந்த அனவரதம், "அட, சீவரமங்கை வக்கீலய்யாங்களா? பாத்து வெகு காலமாச்சுதுங்களே" என வரவேற்றுவிட்டு, உள்புறம் நோக்கி "எம்மா, கோதை, அய்யாவுக்குக் குடிக்க மோர் எடுத்தாம்மா" என உத்தரவிட்டார்.

"கேசு ஒண்ணுக்காக நா அடிக்கடி சென்னைக்கும் இங்குமா அலைய வேணுமாயிட்டு. போதாக்குறைக்கு மவனுக்கும் வடக்கே மாத்தலாயி, அவனண்டையும் இருக்க வேணுமாயிட்டு. ஆயிரமே ஆனாலும் நம்ம நெல்லையப்பனையும் அம்மையையும் மறக்க ஏலுமா? அதான் கிளம்பி வந்துட்டேன். வந்தப்புறம்தான் தமிழய்யா காலமாயிட்டாருன்னு கேள்விப் பட்டேன். ஹும், நல்ல மனுசர்; போன வருஷம் மார்கழித் திருநாளிலே ஸ்ரீவில்லிபுத்தூர்ல வச்சுப் பார்த்தது. கடைசிக் காலத்திலாச்சும் மவனுங்க ஆதரவா இருந்தாங்களா?" என ஆதங்கத்துடன் வினவினார் வக்கீ லய்யா.

"அத்தய ஏன் கேக்கிறிங்க? அள்ளிப் போடக்கூட எவனும் வரலை. மவனுக்கு மவனா இருந்து நானே எல்லாம் முடிச்சு வச்சேன். பத்தாததுக்கு ரெண்டு பேரும் அப்பன் ஆஸ்தியை நான் அமுக்கிட்டேன்னு தகராறு செஞ்சு கோர்ட்டு கேசுன்னு ஆட்டிப் படைக்கிறானுவ; கடையையும் மொடக்கிப் போட்டுட்டானுவ. இப்பமும் கொக்கிரகுளம் போயிட்டுதான் வர்றேன்," என அலுத்துக்கொண்டார் அனவரதம்.

"என்னவே, ஒமக்கு ஒண்ணுமே தெரியாதா? பெரியவரு வெவரமானவருதான். எப்ப மவனுங்களால தொல்லைன்னு இங்க வந்தாரோ அப்பவே வீட்டத் தவிர மீதி சொத்தை எல்லாம் ஒம்ம மவ பேருக்கு மாத்தி பதிவும் செஞ்சிட்டாரே. நாந்தானே எல்லாம் முடிச்சுக் குடுத்தேன். தோப்பு, காடு வருமானத்தையும் அப்பிடியே தபாலாபீஸ் கணக்கு, அவ பேர்ல தான், ஆரம்பிச்சு வச்சிருக்காரே. நாளை எல்லாக் காயிதமும் எடுத்தாறேன். என்கிட்டதான் குடுத்து வச்சிருக்காரு," எனத் துட்டிக்கு வந்த இடத்தில் நல்ல சேதி சொல்லி விட்டுச் சென்றார் வக்கீலையா.

சொன்னபடி மறுநாள் சொத்துப் பதிவுக்கும், அஞ்சல் கணக்குக்குமான ஆவணங்களைக் கொணர்ந்து, ஆவுடையப்பனின் மகன்களையும் வரவழைத்து விவரத்தைத் தெரிவித்தார். ஊர்ப் பெரியவர்களைக் கூட்டி, வழக்காடுவதால் ஏதும் பயனில்லை எனக்கூறி வழக்கைத் திரும்பப் பெற அறிவுறுத்தினார். சற்று முரண்டு பிடித்தாலும் அவர்கள் வேறு வழியின்றிச் சம்மதித்தனர். "இவர் வீட்டு காடிக்கஞ்சிக்கும், கடிச்சிக்கிட்ட வெங்காயத்துக்கும் எங்கப்பன் நல்ல விலை குடுத்துட்டாரு. எல்லாத்தையும் நல்லா ஆண்டு அனுபவிச்சுக்கங்க" என வெறுப்புடன் மொழிந்தான் சரவணன்.

கோதை எழுந்து பேச ஆரம்பித்தாள். "பெரியவங்க சபையிலே நான் பேசுறது சரியில்லதான். ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிடறேன். எங்கப்பா செலவுக்கடை வச்சிருந்தாரே கண்டி சோத்துக்கடை நடத்தலை. வக்கீல் மாமா, அத்தனையையும் இவங்க பேருக்கே மாத்தி மறுபதிவு செஞ்சிடுங்க. கேசை வாபஸ் வாங்கிட்டு, கடையை மட்டும் திருப்பிக் குடுத்தா போதும்," எனத் தீர்மானமாகக் கூறியதை அனவரதமும் ஆமோதித்தார். பஞ்சாயத்தார் "கன்னிக் கடன் இருக்கே, பணத்தையாவது ஒம்ம பங்கா வச்சுக்குமய்யா" என்றதையும் மறுத்துவிட்டார்.

வழக்கு வாபஸ் பெறப்பட்டு, கல்லா சிம்மாசனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியாக வாடிக்கையாளருடன் அளவளாவியபடி, செலவுக்கடை வியாபாரத்தை ஆரம்பித்தார் அனவரதம்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

*****


அம்புஜவல்லி தேசிகாச்சாரி
தென்றலின் ஆரம்ப காலத்திலிருந்தே சிறுகதை, நகைச்சுவைக் கட்டுரை, கவிதை என்று ஊக்கத்தோடு எழுதி வருபவர் அம்புஜவல்லி தேசிகாச்சாரி. இவருடைய கதைகள் எல்லாமே செய்நேர்த்தி கொண்டவை என்ற போதும், 'க்ரீன் கார்டு' (நவ. 2003), 'புழக்கடையில் கீதை' (செப். 2007) போன்றவை குறிப்பிடத் தகுந்தவை. தமிழகத்தின் கிராமப்புற வாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்து அந்த வட்டார வழக்கில் நேர்த்தியாக உயிரோட்டமுள்ள படைப்புகளைத் தருவதில் வல்லவர். தன் மகனோடு கலிஃபோர்னியாவின் சான் ஹோசே பகுதியில் வாழ்ந்து வரும் இவரது படைப்புகள் கல்கி, மங்கையர் மலர் ஆகியவற்றில் வெளியாகியுள்ள போதிலும், “உண்மையில் எழுத்துலகில் அறிமுகமும் அங்கீகாரமும் கிடைத்தது தென்றலின் மூலம்தான் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்” என்கிறார் இவர். பரிசு பெற்றுள்ள 'செலவுக்கடை' கதையிலும் நெல்லைத் தமிழ் துல்லியமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதோடு, அதன் பாத்திரங்களின் தன்மானமும் பயன்கருதா நேர்மையும் தனித்து நிற்கின்றன.
More

உயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு
மடி நெருப்பு: சிறுகதைப் போட்டி 2011 - மூன்றாம் பரிசு
Share: 




© Copyright 2020 Tamilonline