Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | முன்னோடி | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | ஹரிமொழி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
மீட்சி
அப்பா
காசுமாலை
- பானுரவி|டிசம்பர் 2014||(9 Comments)
Share:
மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம்போல் இருந்தது. மொஸைக் தரை, சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது. பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும் மரணத்தின் ஓலமோ, துக்கப்பட்டுப் பீறிட்டு வரும் அலறலோ இல்லாமல் அந்த மின்மயானம் அமைதியாக இருந்தது. சீருடை அணிந்த சில ஊழியர்களின் மெளனம் சார்ந்த அசைவுகளும், சிறுசிறு பேச்சுக்களுமே அந்த இடத்தில் நிரம்பி இருந்தது. கனமான துக்கம் அந்த அமைதியில் தெரிந்தது! வாழ்வின் கடைசி யாத்திரைக்கு வருபவர்களுக்கு உரிய மரியாதை அங்கே நிரம்பக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் தெரிந்தது.

நேற்றுவரை தனது வாழ்க்கையையும், சுகதுக்கங்களையும் சிவசுவுடன் பகிர்ந்து கொண்ட லலிதா பூவோடும், பொட்டோடும் சடலமாகித், தனியே வேறு உலகிற்குப் பயணிக்கத் தயாராகி, இதோ.... இந்த மின்மயானத்துக்கு வந்தாயிற்று. துயரம் தாளாமல் பெரிய கேவலொன்று சிவசுவிடமிருந்து வெளிப்பட்ட போது, பிள்ளைகள் சங்கரும், ஸ்ரீதரும் அவரைக் கைத்தாங்கலாகச் சற்றே ஆசுவாசப்படுத்தினார்கள். மாப்பிள்ளை கண்ணன் அவரது கைகளை இதமாகப் பற்றிக் கொண்டான்.

மருத்துவரின் சான்றிதழைக் காட்டியதும், அடுத்தாற்போல் காரியங்கள் மளமளவென்று நடந்தன. மாடிப்படி ஏறி, ஒரு பெரிய ஹாலுக்குள் லலிதாவின் உடலை எடுத்துச் சென்றார்கள். கிரில் கதவுக்கு அப்பால் அந்தப் பெரிய ஹாலின் நடுவே ஒரு பெரிய அலுமினியக் கூடாரம் இருந்தது. கூடாரத்தின் முன்பாக ஒரு கறுப்புக் கதவு மூடியிருந்தது. உயர்ந்த புகைபோக்கி ஒன்று வானை நோக்கி அக்கூடாரத்தின் மேற்கூரையில் இருந்தது. அதன் முன்பாகச் சுமார் இருபதடி நீளத்துக்குத் தண்டவாளம் போல் ஒன்று இருந்தது. அதன் முனையில் ஒரு நெம்புகோல் காணப்பட்டது. லலிதாவின் உடலை அந்த ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடத்தினார்கள். மற்ற ஊழியர் நெம்புகோலைப் பிடித்து இழுக்கவும், தண்டவாளம் உடனே மேலே உயர்ந்தது. சுவிட்சை இயக்கியதும், அந்தக் கறுப்புக் கதவு உயரே நகர்ந்து சடலத்திற்கு வழிவிட்டது.

நெருப்பின் வெறியாட்டம் உள்ளே! அனல் கக்கியது. பொறிபறக்க அக்கினியின் கோரத்தாண்டவம் அங்கே நிசப்தமாக அரங்கேறிக் கொண்டிருந்தது!

லலிதாவின் உடலைச் சடசடவென்று அக்கினி ஆக்கிரமித்தது தெரிந்தது. 'வேலை முடிந்தது' என்ற ரீதியில் அந்த உயர்ந்த தண்டவாளமும், கறுப்புக் கதவும் அதனதன் இடத்தில் வந்து பொருந்திக்கொண்டன. சரியாக முப்பதே நிமிஷத்தில், ஒரு தகர ட்ரேயில் நெருப்பாகக் கொதிக்கும் சாம்பலைச் சில எலும்புச் சில்லுகளுடன் ஒரு ஊழியர் கொணர்ந்தார். மறுநாள் சஞ்சயனம் செய்வதற்கு அவற்றை எடுத்துக்கொண்டு நகர்ந்தனர்.

பதிமூன்று நாள் காரியங்களையும் பண்ணிவைக்க வரும் வேம்பு வாத்யாருக்குச் சமஸ்க்ருதம் மட்டுமல்ல, தமிழும் நல்ல வளமை! சிறந்த பாண்டித்தியம் உள்ளவர்!

'ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப், பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச், சூரியக் காட்டிடை கொண்டு போய் எரித்திட்டு, நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரே'. பாட்டு என்னவோ நாளாவட்டத்துலே மனசு துக்கமெல்லாம் போயி நினைவுகூட மரிக்கும்னு சொல்றது. ஆனால் மாமா.... நினைவுகள் எப்படி மரிக்கும்? உயிரும் உணர்வுமாக, பரிவும் பாசமுமாக, அன்பும் ஆதரவுமாக வாழ்நாள் முழுவதும் நிழலாய்த் தொடர்ந்து, ஆத்மாவிலே கரைஞ்சு போயிருக்கா லலிதா மாமி! லேசுல மனசைச் சமாதானப்படுத்திக்க முடியாதுதான்...

சிவசுவுக்குத் துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. 'லலிதா. நீ நிஜமாவே என்னை விட்டுட்டுப் போயிட்டியா? நம்பவே முடியலையே? எங்க பாத்தாலும் நீ நிக்கறாப்பலயும், பாக்கராப்பலயும் இருக்கே...' மனசுக்குள் மறுகிக் கொண்டிருந்தார். தவிப்பும் தத்தளிப்புமாகப் பெரிய அவஸ்தையில் அவர் சிக்கி அவதிப்படுவது சகிக்க முடியாததாக இருந்தது!

மனம் தனது பெருவெளியில் விந்தைகளைச் சுமந்தபடியே சுழன்றுகொண்டு இருக்கிறது. அடர்ந்த மெளனம் தனது மாயவிரல்களால் சிவசுவின் துக்கத்தை மீட்டியபடியே இருக்கிறது. உடம்பின் நுண்துளைகள் எல்லாம் காதுகளாகி, அவரது நினைவின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. லலிதாவின் மரணம் தந்த வலியில் வேண்டாத யோசனைகளும் எண்ணங்களும் இரைச்சலாகி, அவரது கடந்தகால நினைவுகளின் கடிவாளத்தைச் சிறிது சிறிதாக முடிச்சவிழ்த்துக் கொண்டிருந்தன.

நிழல்படலமாக லலிதாவோடு வாழ்ந்த நாட்கள் அவரைப் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.

பதினேழு வயதில் லலிதாவைக் கரம்பற்றியபோது, சிவசுவுக்கு இருபத்திரண்டு வயசு. இரண்டு சகோதரிகளோடு ஒரே பையனாகச் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அம்மா சொல்படி வளர்ந்தவர். அம்மா சொல்லும் எதுவும் அவருக்கு வேதவாக்காக இருந்தது. படித்து நல்ல வேலையில் அமர்ந்தவருக்கு லலிதாவைப் பேசி முடித்ததும் அம்மாதான்! நல்ல பெற்றோர்களின் வளர்ப்பு என்பதால், லலிதா அக்குடும்பத்தின் கிரகலட்சுமியாகக் கோலோச்சினாள். எதையும் எதிர்ப்பேச்சு பேசாமல், அவரது சகோதரிகள் சற்றே ஏறத்தாழ இருந்தாலும் பெரிதுபடுத்தாமல் அவர்கள் திருமணம் நல்லபடி நடப்பதற்கு ஒத்தாசையாக இருந்து, மாமியார் மனம் கோணாமல் நடந்துகொண்டு 'சமர்த்து' என்ற பேர் வாங்கியதில் சிவசுவுக்கு ஏகப்பெருமை. சிவசு சரியான சாப்பாட்டுப் பிரியர். எல்லாம் வக்கணையாக இருக்கணும். அவரது மனமறிந்து, வயிறறிந்து,

வகைவகையாகச் சமைத்துப் போட்டும், ஆசாரக்கார மாமியாருக்கு என்று விசேஷ மடியாகவும் அக்கறையாகக் கவனித்துக் கொண்டும் லலிதா பொறுப்பாக இருந்ததால், சிவசுவின் அம்மா தைலா ரொம்பவே பூரித்துப்போனார்.

'சிவசு! லலிதாமாதிரி ஒரு பொண்ணு உனக்குக் கிடைச்சது ஈஸ்வர கடாட்சம்தான்! உறவு ரெண்டு வகைனு சொல்வா. ஒண்ணு, பாலில் ஒரு சொட்டுத் தயிரை விட்டதும் மொத்தப்பாலும் கெட்டியாத் தயிராகிவிடற மாதிரி, ஒரு உறவின் வழியே எல்லா உறவும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகி ஐக்கியப்பட்டுடும். இன்னொண்ணு, அதே பாலில் ஒரு சொட்டு உப்பு ஜலம் விட்டதும், மொத்தப்பாலும் அப்படியே திரிஞ்சு யாருக்கும் உபயோகம் இல்லாமப் போயிடும். நம்ப லலிதா, எல்லோரையும் அரவணைச்சுண்டு போறதால மனசுக்கு சந்தோஷமா, நிறைவா இருக்கு. மனசும் கையும் தெளிவா இருக்கிறதால லலிதாவோட காரியங்கள் எல்லாம் மணத்துப் போகிறது.'
பேசிக்கொண்டே போன சிவசுவின் அம்மா, லலிதாவைக் கூப்பிட்டார். 'என்னம்மா?' என்று வந்தவளின் கழுத்தில் தனது காசுமாலையைப் போட்டபடியே, 'தோ பாரு லலிதா! இந்தக் காசுமாலை, எனக்கு என் மாமியார் போட்டது...வழிவழியா இது இப்போ மூணாவது தலைமுறையா உனக்கு வந்துடுத்து! கிரகலட்சுமியா, அன்னலட்சுமியா, சந்தானலட்சுமியா இந்த வீட்டு மகாலட்சுமியா வந்திருக்கே. உன் காலத்துக்கு அப்புறம் யாருக்குக் கொடுக்கணும்னு தோண்றதோ, அப்போ நீங்கள் தீர்மானம் பண்ணிக்கோங்கோ. ஆனாக்கக் காசுமாலையை அழிக்கப்படாது!'

தைலாம்பா கொடுத்த காசுமாலையை சுவாமி முன்னே வைத்துக் கழுத்தில் போட்டுகொண்டு, லலிதா நமஸ்காரம் செய்தபோது, காசுமாலையின் கனத்தில், அந்தக் குடும்பத்துப் பெருமையும், பாரம்பரியமா வந்த தலைமுறையின் கெளரவமும், மரியாதையும் தெரிந்தது. சிவசுவுக்கு சாட்சாத் அன்னபூர்ணேஸ்வரியாகத் தெரிந்தாள் லலிதா. ஒவ்வொரு காசும் முழுசா ஒரு பவுனுக்கு, மகாலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டு நூறு காசுகள் கொண்ட அந்தக் காசுமாலை, லலிதாவின் கழுத்தில் தகதகவென்று ஜொலித்தது.

எல்லோரையும் அன்போடு நடத்தியும், குழந்தைகளைப் பொறுப்பாக வளர்த்தும், குடும்பத்தைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு வந்ததில் லலிதாவுக்குப் பெரும்பங்கு இருந்தது. மூணு குழந்தைகளை ஒரு தட்டிலும், சிவசுவை மறுதட்டிலும் வைத்தால் சரியாக இருக்கும். தனது உடுப்புக்களும் உடைமைகளும் எங்கே என்றுகூடத் தெரியாமல் சிவசு தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார். ஒரு காய் வாங்கிவரத் தெரியாது; அவசரத்துக்கு ஒரு கா:.பி போடத் தெரியாது. சமயங்களில் லலிதாவின் வாயைக் கிளறுவதுண்டு... 'லலிதா, இப்படி ஒண்ணும் தெரியாம இருக்கேனே... நீபாட்டுக்கு ஒரு நாளைக்கு எனக்கு முன்னாடி போய்ச் சேர்ந்துட்டாக்க நான் என்ன பண்ணுவேன்?'

'க்கும்! மித்த பொம்மனாட்டி மாதிரி நான் சுமங்கலியா போணும்னு நினைச்சதே இல்லை. ஒரு நிமிஷம் நான் எங்கானும் போனாலே உங்களுக்கு இருக்கற இடம் பூலோகமா, கைலாசமானு இருக்கு. கடேசி வரைக்கும் உங்களைக் கவனிச்சுட்டு, அப்புறமா நான் கடவுள்கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கிறேன்.'

ஒரு இருமல் என்றால், உடனே மிளகும் சுக்கும் போட்டு கஷாயம் வந்துவிடும். மஞ்சப்பொடியும் பனங்கற்கண்டும் போட்டு சூடாகப் பால் வந்துவிடும்! வயிற்று வலி என்றால் ஓமம் போட்டு அரைத்த வெற்றிலைச் சாறு வந்துவிடும். எதற்கும் சலிப்பில்லை; சங்கடமில்லை! ஒரு தீர்மானம் எடுத்தால் கூட, அதில் ஒரு ஸ்திரத்தன்மை இருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் சொல்வதில்லை; செய்வதில்லை!

சங்கருக்கும், ஸ்ரீதருக்கும் திருமணமானபோது அவர்களைத் தனித்தனியே வீடு பார்த்துக் குடித்தனம் வைத்ததும் லலிதாதான். ஒரு தீர்க்கதரிசிபோல் அப்போதைக்கு அவள் முடிவெடுத்ததும் சரியாகத்தான் இருந்தது.

'தோ..பாருங்கோ! நம்ப வீடு கடலாட்டம் பெரிசா இருக்குதான். ஆனாக்க எலி வளைன்னாலும் தனி வளையா இருக்கறதுதான் நல்லது. நாளக்கி வேட்டாத்துக்காரா வரணும்பா. பொண்ணோட ரெண்டு நாள் இருக்கணும்பா. இல்லாட்டா சமய சந்தர்ப்பங்கள்ள குழந்தைகளே ஸ்வதந்திரமா இருக்கணும்னு பிரியப்படுவா. நம்ப காலம்போல இப்போ இல்ல. காலம் மாறிண்டு வரது. நம்மோட இருந்தா இதெல்லாம் ஏறுக்குமாறாப் போகும். அத்தோட தனியாக் குடித்தனம் பண்ணி நாலுபேரை வரவேத்து உபசாரம் பண்ணினாத்தான் அவாளுக்கும் அனுபவம்னு ஒண்ணு வரும். இல்லாட்டா, தேர்ச் சக்கரத்துப் பல்லி மாதிரி ஒரு அனுபவமும் இல்லாமப் போய்டும். அத்தோட ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும். குழந்தைகளோட குறிப்பறிஞ்சு நாம நடந்துட்டா, நல்லது இல்லையா?'

லலிதாவின் அனுபவபூர்வமான பேச்சு வெகுவிரைவிலேயே அவருக்கு நிதர்சனமாகத் தெரிந்தபோது, சிலிர்த்துப் போனார். பின்னே? மூத்தவன் சங்கரின் மாமனாருக்குப் பக்கவாதம் வந்துவிட்டது தெரிந்து, உடனே அவன் மனைவி சாந்தா வீட்டோடு அழைத்து வந்து கவனித்துக்கொண்டது மட்டுமல்லாமல், தான் ஒரே பெண் என்பதால் தங்களுடனேயே அவர்களையும் இருக்கும்படிச் செய்து கொண்டாள். ஸ்ரீதரும் அவன் மனைவி வேலைக்குப் போவதால், குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வீட்டோடு அவன் மனைவி சுமதியின் பெற்றோரைத் தங்களோடு வைத்துக் கொண்டிருப்பவன் தான்.

வடகம், அவர்களுக்குப் பிடித்த பட்சணங்கள், ஊறுகாய், சாம்பார்ப்பொடி, ரசப்பொடி எல்லாம் இரண்டு பிள்ளைகளுக்கும் செய்து கொடுத்து அனுப்புவாள்.

ஒரே பெண் ரஞ்சனா திருமணமாகி மும்பையில் இருப்பவள், குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறையின்போது வந்து போவாள். மாப்பிள்ளை கண்ணன் அயல்நாட்டுக் கம்பெனியில் டைரக்டராக இருப்பவன். ஒரே பிள்ளை என்பதால், கண்ணனின் பெற்றோரும் அவர்களுடனே இருப்பவர்கள்.

இப்படித்தான் போன வருஷம், அவர்களது குடும்ப வக்கீல் நாராயணனைக் கூப்பிட்டு உயிலும் தயாரித்துவிட்டாள் லலிதா. சிவசு அவளைச் சீண்டினார் 'லலிதா, உயிலுக்கு இப்போ என்ன அவசரங்கிறே? நெஜமாவே நான் உன்னை முந்திண்டு போய்டப் போறேன்னு திட்டவட்டமா இருக்கியா என்ன? கொஞ்சம் நாள் செல்லட்டுமே'

'தோ பாருங்கோ, அந்தப் பேச்செல்லாம் வேண்டாம். நாம சுயபுத்தியோட இருக்கறச்சயே, இதெல்லாம் பண்ணிடனும். இது பெரிய சமாச்சாரம் இல்லியா? தான தருமம், கோவில், வேத பாடசாலை, அப்புறம் கோ சம்ரக்ஷணம் இதுக்கெல்லாம் நம்மால முடிஞ்சதைக் கொடுத்துட்டு, நம்ப குழந்தைகளுக்குச் சேர வேண்டியதை எழுதி வச்சுட்டா நிம்மதியா இருக்கும் இல்லையா?' சொன்ன தினுசில் அந்த வேலையை முடித்தவள், தனது எல்லா நகைகளையும் இன்னார்க்கு இன்னது என்று பெயரிட்டுப் பிரித்து வைத்தாள். குறுகுறுவென்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த சிவசு 'எல்லாம் சப்ஜாடா பண்ணியாச்சு. அந்தக் காசுமாலை மேலே எல்லார்க்கும் ஒரு கண்ணு இருக்கே? என்ன பண்ணப் போறே?' என்றார்.

'ஹூம்! அந்தக் காசுமாலையைப் போட்டுக்க யாருக்குக் கொடுப்பினை இருக்கோ, தெரியலையே! கடேசி காலத்துல பெத்தவாளை, வயிறு வாடாம குளிரப்பண்ணி, ஆத்மார்த்தமா, கடமையுணர்வோட சேவை பண்றவா யாரோ, அவர்களுக்குத்தான் இந்தக் காசுமாலை போகணும்' சொல்லும்போதே தனது மாமியாரை எண்ணிக் குரல் கரகரத்துப் போகிறது லலிதாவுக்கு.

யாருக்குத் தெரியும், இப்படி திடுமென்று ஹார்ட் அட்டாக் வந்து ஒரு நோயுமில்லாமல், பாய் படுக்கையில் விழாமல் இருந்த லலிதாவைக் கொண்டு செல்லுமென்று? அண்டை அயலாரும், சொந்தபந்தங்களும் திரண்டு வந்து மாலையும் மரியாதையுமாக லலிதாவின் இறுதிப்பயணம் நடந்தபோது, யாருக்குமே லலிதாவின் மரணம் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. அந்தக் குடும்பத்தின் எல்லோரது வாழ்வுக்கும், வலிமையும் அர்த்தமும் கொடுத்து வந்த லலிதாவைப் பற்றி எல்லோரும் ஏகமனதாகப் புகழ்ந்தும் நெகிழ்ந்தும் பேசிக்கொண்டனர். தனித்து விடப்பட்ட சிவசுவை அவரது சகோதரிகள் ஆறுதல் படுத்தினாலும், இனி அவருக்கு வாழ்வு ஒரு சவாலாகவே இருக்குமென்று அவர்களுடைய அனுபவத்தை வைத்துச் சொன்னபோது, அவரது மனத்தில் இனம்புரியாத பயம் தலைகாட்டியது.

கல்லெறிந்த குளம் மாதிரி சிவசுவின் மனதுக்குள் ஆயிரமாயிரம் நினைவுகள். எல்லோரும் அவரவர் இருப்பிடத்திற்குப் போனபின்பு, வாழ்வதே வீண் என்ற எண்ணம் தோன்றியது. அடிக்கடி பசி எடுத்தது. சங்கரும் ஸ்ரீதரும் தங்களோடு வரச்சொல்லிப் பலமுறை கூப்பிட்டும் போகப் பிடிக்கவில்லை.

வயிற்றைக் குடைந்தது. பசி மட்டுமே அவரை இயங்க வைத்துக் கொண்டிருந்தது. பசியை வெல்வதுதான் மனிதரின் நெடுநாளைய போராட்டமாக இருக்குமோ? தன்மீதே கோபம் வந்தது! தனக்கென்று எதுவும் சமைத்துக் கொள்ளத் தெரியாத நிலையில், வறட்டு கெளரவம் பார்க்காமல் சங்கரிடமும் ஸ்ரீதரிடமும் இனிமேல் இருந்துகொள்ள வேண்டியதுதான் என்று எண்ணியவராகச் சிவசு சங்கரிடம் தான் புறப்பட்டு வருவதாகச் சொன்னார். பேரக்குழந்தைகள் கத்தின 'தாத்தா வந்தாச்சு. இனிமே நமக்கு நிறையக் கதைகள் கிடைக்கும்'. அவர்களின் உற்சாகம் அவருடைய இறுக்கத்தைத் தளர்த்தியது.

அவருக்கு எந்த அறையைக் கொடுப்பது என்கிற பேச்சு கிளம்பியது. குழந்தைகள் ரூமில் இருந்து கொள்ளட்டும் என்று அவருக்கு ஒரு படுக்கையைப் போட்டார்கள், ஆரம்பத்தில் தென்பட்ட பணிவும் கவனிப்பும் சாந்தாவிடம் நாளடைவில் காணாமல் போயின. 'டங்'கென்று சாப்பாட்டை வைப்பதும், வயிற்றைக் காயவைத்து நேரம் தாழ்த்தியே உணவு தருவதுமாக அவளிடம் ஒரு அலட்சியம் தெரிந்தது. சங்கரின் பணி, அவரிடம் ஒரு பெரிய இடைவெளியை உண்டாக்கி இருந்தது. சிவசுவிடம் இரண்டொரு வார்த்தை பேசுவதற்கே அவனுக்கு நேரமில்லாமல் இருந்தது. அங்கே இருந்த சாந்தாவின் பெற்றோர்களும், ரூமிலேயே முடங்கிக் கிடந்தார்கள்.

இயந்திரகதியில் இது என்ன வாழ்க்கை?

லலிதா சொன்னது எத்தனை உண்மை! காலம் மாறிவிட்டதுதான். யாருக்கும் சுயநலமே பெரிதாய் இருக்கிறது. 'நேரமில்லை' என்ற போர்வையில் முடங்கிக் கொண்டு, பொறுப்பிலிருந்து தப்பித்து விடுகிறார்களே. சிவசுவுக்கு வேதனை மண்டியது. யாரைச் சொல்லியும் குற்றமில்லை. இப்படியெல்லாம் அவமானப்படுவது ஒன்றும் பெரிய விஷயமில்லைதான். ஆனால் நமது குழந்தைகளிடமே ஒருவாய்ச் சோற்றுக்கும், நிழலுக்கும் அவமானப்படுவது கூரிய வாள் கொண்டு இதயத்தைக் கிழிப்பதாக அல்லவா இருக்கிறது?

தோல்வியை விடவும் அதை ஒப்புக்கொள்ளும்போது ஏற்படும் வலியில் சிவசு மிகவும் துவண்டு போனாலும் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தார். ஸ்ரீதர் வீட்டுக்கும் போக வேண்டாமென்று மனது கெஞ்சியது. சங்கரிடம் சொல்லிவிடும்படி சாந்தாவிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். 'உங்கள் செளகர்யம்' என்று முடித்துக் கொண்டாள் சாந்தா!

அகிலாண்டேஸ்வரி கோவிலின் சாயரட்சை மணி ஒலித்தது. வெகுநாட்களுக்குப் பிறகு கோவிலுக்குச் சென்றுவர எண்ணி நடந்தார். வழியில் வேம்பு வாத்யார் 'அடடே! சிவசு மாமா! எப்படி இருக்கேள்? லலிதா மாமியோட நீங்க வந்ததுதான். உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். வேதம் கத்துக்கிற குழந்தைகளுக்கு இப்போ இருக்கிற இடம் போறல. நம்ப ஆகம் சும்மாத்தானே இருக்கு. நீங்க மனசு வச்சா அந்த இடத்தில வேத பாடசாலை நடத்தலாம். அந்தக் குழந்தைகளுக்கும், வாத்யார்களுக்கும் அங்கேயே ஒரு சமையலுக்கும் ஏற்பாடு பண்ணிட்டா, உங்க ஆத்திலே வேத அத்யயனமும், அன்னதானமும் அமோகமா நடக்கும். லலிதா மாமி இருந்தாக்க ரொம்பவும் சந்தோஷப்படுவா'. வேம்பு வாத்யார் சொன்னபோது சிவசுவுக்கு இதுவரை தழலாய்ப் பசியில் எரிந்து கொண்டிருந்த வயிறு சட்டென்று குளிர்ந்து போனது.

'தாராளமா. என்னோட லலிதா வாழ்ந்த வீட்டில், வேதகோஷம் சதா ஒலிக்கப் போறதுன்னா, அதைவிட வேற என்ன வேணும்? வேத பாடசாலையை நடத்தறதுக்கு என்ன ஏற்பாடு செய்யணுமோ அதை உடனே பண்ணிடுங்கோ' என்றார். திரும்பவும் வீட்டிற்குச் சென்று கோவிலுக்குத் திரும்பிய சிவசுவின் கைகளில், அவரது வயிற்றுப் பசிக்கும், ஞானப் பசிக்கும் ஒருசேர அன்னமிட்ட தாயாகிய அகிலாண்டேச்வரிக்குச் சாற்றுவதற்கு எடுத்துவந்த அந்தக் காசுமாலை கனத்தது.

பானுரவி,
சிங்கப்பூர்
More

மீட்சி
அப்பா
Share: 




© Copyright 2020 Tamilonline