2011 பிப்ரவரி 10 முதல் 13 வரை சன்னிவேலில் உள்ள பாலாஜி கோவில் தனது ஏழாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. முதல் நாள் ரதசப்தமி அன்று சுவாமி நாராயணானந்தா புண்யாவசனம், கலச பூஜை ஆகியவற்றோடு விழாவைத் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளன்று நவக்கிரக பூஜை, மஹாலக்ஷ்மி அபிஷேகம், அன்னபூர்ணேஸ்வரி பூஜை ஆகியன நடைபெற்றன. அபிஷேகத்தின் போது லலிதா சஹஸ்ரநாமம், மஹிஷாசுர மர்தினி ஆகிய தோத்திரங்கள் ஓதப்பட்டன.
மூன்றாவது நாளன்று ஸ்ரீ பாலாஜியின் திருமூர்த்தத்துக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது. இந்தப் பணியில் சுவாமி நாராயணானந்தாவுக்கு பிரபுராம், பார்த்தசாரதி, ராம் கோடேஷ்வராவ் ஆகிய அர்ச்சகர்கள் உதவினர். பின்னர் ஸ்ரீ பாலாஜிக்கு முத்தங்கி சேவை செய்யப்பட்டது.
நான்காம் நாளன்று விஷ்ணு சகஸ்ரநாமாவளியுடன் அர்ச்சனை நடந்தது. பெயர்கூற விரும்பாத அன்பர் ஒருவர் பாலாஜி கோவிலுக்கு கொடையாகத் தந்த 25 ஏக்கர் பரப்புள்ள ஹோலிஸ்டர் தோட்டத்துக்கு பக்தர்கள் அன்று சென்றனர். அங்கே அங்கே சுவாமிஜி அருளுரை வழங்கினார். பின்னர் திரு. பிரபு கோயல் கோவிலைப் பற்றிய பிரசுரத்தை வெளியிட்டுப் பேசினார். அடுத்து திருமதி லக்ஷ்மி விட்டல்தாசி, திரு மஹேஷ் நிலானி ஆகியோர் பேசினர். திரு. பத்மநாப ராவ் ஆண்டறிக்கை வாசித்தார். மாதந்தோறும் கோவிலில் இலவச மருத்துவப் பரிசோதனை நடத்த உதவும் டாக்டர் அஷோக் குமார் பெங்களூருவில் தினந்தோறும் இலவசப் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப் போவதாகக் கூறினார்.
வாசவி சேவா அறக்கட்டளையின் திரு. ராவ் பனகண்டே நன்றியுரை வழங்கினார். பக்தர்களுக்கு சால்வை, புடவை மற்றும் மாலைகளை சுவாமிஜி வழங்கினார்.
மஹாலக்ஷ்மி வி. தாசி |