CNN நிறுவனத்தால் உலகத்தின் சிறந்த 10 நிஜவாழ்க்கை ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்ஷயா ட்ரஸ்ட் கிருஷ்ணன் சமீபத்தில் அட்லாண்டா மாநிலத்திற்கு வந்திருந்தபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. Third Eye Dancers என்னும் தொண்டு அமைப்பு, பரதகலா நாட்டிய அகாடமியுடன் இணைந்து இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
பரதகலா நாட்டிய அகாடமியின் மாணவ மாணவியர் ஒரு நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார்கள். திருமதி சுபத்ரா சுதர்ஷன் இதனைச் சிறப்பாக வடிவமைத்து இருந்தார். 'சுக்லாம்பரதரம்' என்ற விநாயகர் துதியோடு நடன நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, கிருஷ்ணர், ராதை மற்றும் கோபியர்கள் ஆடுவதாக அமைந்த கதன குதூகலம் ராகப் பாடலுக்கு நடனமாடினர். 'கணேச பஞ்சரத்னம்' தோத்திரத்துக்கு, யானை முகத்துடன் தோன்றி அருள்புரியும் கணபதியின் நடனம் சுவையாக இருந்தது. பின்னர் திருமதி. காயத்ரி இந்திரகிருஷ்ணன் (பொருளாளர், தர்ட் ஐ டான்சர்ஸ்) வரவேற்றுப் பேசினார். தமது நிறுவனம் செய்துவரும் பல்வேறு சமூகநலப் பணிகள் குறித்து அவர் விளக்கினார். பிறகு மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி தொடர்ந்தது. 'அதரம் மதுரம்' என்ற பகவான் கிருஷ்ணனின் மகிமைகளைச் சித்திரிக்கும் பாடலுக்குச் சிறப்பாக நடனமாடினர். தொடர்ந்தது இந்திரா திரைப்படத்தின் 'நிலா காய்கிறது'. இறுதியாக 'கலோனியல் கஸின்ஸ்' ஒலிப்பேழையில் இருந்து 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ' பாடலுக்கான நடனம் பாராட்டைப் பெற்றது. நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி அட்சயா கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.
அட்லாண்டா தமிழ்ச் சங்கம், அட்லாண்டா தெலுங்கு சங்கம், IACA, நயா இந்தியா, எமரி ட்ருயிட் ஹில்ஸ் ரோட்டரி சங்கம், CNN-இன் சோனியா டக்கர் ஆகியோர் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய உறுதுணையாக இருந்தனர். திருமதி. பேட்டி ஷர்மா ரோட்டரி சங்கத்தின் சார்பாக 60,000 டாலர் தொகையை அக்ஷயாவுக்கு நன்கொடையாக அளித்தார். மேலும் 20,000 டாலர் அங்கே நன்கொடையாக அளிக்கப்பட்டது.
இறுதியாகத் திரு. சுதர்சன் சீனிவாசன் நன்றி நவில விழா நிறைவுற்றது.
சதீஷ் பாலசுப்ரமணி, அட்லாண்டா |