'விண்ணையும் தாண்டி சினிமாவா...' - நாடகம்
ஜனவரி 22, 2010 அன்று அடடே க்ரியேஷன்ஸ் வழங்கிய 'விண்ணையும் தாண்டி சினிமாவா...' என்ற நகைச்சுவை நாடகம் சாக்ரமெண்டோவில் அரங்கேறியது.

"பிள்ளையாரப்பா...பிள்ளையாரப்பா.. இன்று நடக்க வேண்டியது எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்" என்று முதல் காட்சியில் தனக்கே உரிய கலகக் குரலோடு நாரதர் தோன்றவுமே 'ஆஹா.. இது என்ன புராணக் கதையா?' என்ற யோசனையில் கண்கள் விரிந்தன. விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் சினிமாவால் நகைச்சுவையோடு இணைக்கும் அழகான கற்பனைதான் இந்த நாடகம். சினிமாவை இழிவாகப் பேசும் இந்திரனுக்கு எமலோகத்தில் ஒரு மானுடன் சாபம் இட்டுவிடுகிறான். சாப விமோசனத்திற்காக இந்திரன் திரைப்படம் எடுக்கும் கலாட்டாதான் திரைக்கதை.

எமலோகம் போல வடிவமைக்கப்பட்ட மேடை, அதில் திரைச்சீலை, ஆசனங்கள், ஆடை அணிகலன்கள் எல்லாவற்றுக்கும் ஒரு பெரிய சபாஷ்! பார்வையாளர்களை மேடையின் பிரம்மாண்டம் அசத்திவிட்டது. எமதர்மராஜன் மற்றும் சித்ரகுப்தனின் தோற்றமும் நடிப்பும் கச்சிதம். எமலோகத்துக்குள் படு ஸ்டைலாக நுழையும் மானுடன் "குமாரசாமி.... குத்துப்பாட்டு குமாரசாமி" என்று மார்தட்டிக்கொள்ளும் இடம் நச்! கிங்கரர்கள் வசனமே பேசாமல் சிரிப்பூட்டியது ரசிக்கும்படியாக இருந்தது.

பிரபலமான சினிமா வசனங்களும் பாடல்களும் சிச்சுவேஷனுக்கு ஏற்ப ஒலிக்கும்போது இந்திரன் கடுப்பாவது ரசிகர்களிடம் பலத்த கரவொலியை எழுப்பியது. "திரைப்படத்தை இழிவுபடுத்தி சாபம் பெற்றதால் நீ சினிமா எடுத்துதான் விமோசனம் தேட வேண்டும்" என்று கதை மேலே தொடர வித்திடுகிறார் நாரதர். ஆரம்பிக்கிறது டைரக்டர் வேட்டை. 'தில்லாலங்கடி டப்பாங்குத்து..' பாட்டு ஒலிக்க கிங்கரர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் திரைக்குப் பின்னால் இருந்து தெருக்கூத்து நடிகையான கூத்து கோமளவல்லி (நாடகத்தின் நிஜ டைரக்டர் ஜெயந்தி) வெளியே வர, ஆரம்பமாகிறது கலாட்டா கல்யாணம். பிரபல டைரக்டர் தாடி தாண்டவராயனையும் கிங்கரர்கள் அழைத்து வர எமலோகம் கலகலக்கிறது.

அழகாக வடிவமைக்கப்பட புஷ்பகவிமானத்தில் குபேரனின் மகள் வந்திறங்கிய காட்சி பிரம்மாண்டம். படத்திற்கு குபேரன் ஃபினான்சியர் ஆக ஒப்புக்கொள்ள "இவர்கள் எடுக்கப் போகும் திரைப்படத்தில் நீதான் கதாநாயகி" என்று குபேரன் சொல்ல "ஆஹா. எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று மீனலோசனி மெய் சிலிர்க்க "இன்னும் படமே எடுக்கவில்லை. இதையெல்லாம் விருது வழங்கும் விழாவிற்கு வைத்துக் கொள்ளம்மா" என்கிறான் குபேரன். மீனலோசனியின் பெயரை "மிஷ்கி" என்று டைரக்டர் மாத்துவது சினிமா டச்.

படப்பிடிப்பு நடக்கும் அமெரிக்கத் தோழி வீட்டில் நடக்கும் காட்சிகளும், எல்லாக் காட்சிகளுக்கும் "டூப் போட்டுக்கலாமா?" என்று கேட்கும் ஹீரோ வரும் காட்சியும் சரியான நகைச்சுவைச் சூறாவளிதான். குடைச்சல் நிருபர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் குழப்பமான பதில்களைத் தந்து மிஷ்கியும் கோமளவல்லியும் தாண்டவராயனும் தப்பிக்கும் காட்சி காமெடிக் கூத்து.

நாரதரராக மூர்த்தி, இந்திரனாக சுந்தர், எமனாக ஷண்முக சுந்தரம், சித்திரகுப்தனாக சாம், குபேரனாக வெங்கட், குபேரனின் மகளாக ஸ்ரவந்தி, கு.கு.வாக முருகேஷ், கோமளவல்லியாக ஜெயந்தி, தாண்டவராயனாக ரமேஷ், கிங்கரர்களாக ராமராஜ் பாலா எல்லோருமே நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் பிரமாதப்படுத்தி விட்டனர். ஒரே காட்சியில் தோன்றினாலும் தங்கமணியாக வாணி, ரங்கமணியாக குமார், ஹீரோவாக ஞிக்ஷீ. குமார், நிருபராக சுபி, டிவி நிர்வாகியாக சுபோ இவர்களின் நடிப்பு படு இயல்பாக இருந்தது. சுதீரின் மேடை வடிவமைப்பும் ப்ரீத்தியின் கலை நுணுக்கமும் நாடகத்துக்கு மெருகேற்றின.

அடடே க்ரியேஷன்ஸ் முதல் முயற்சியிலேயே பெரிய உயரத்தைத் தொட்டிருக்கிறது. இந்த முயற்சிக்கு மூலகாரணமான, நாடகத்தை எழுதி இயக்கிய ஜெயந்திக்கு ஒரு பெரிய சபாஷ்!

அர்ச்சனா பரமேஸ்வரன்,
சாக்ரமெண்டோ

© TamilOnline.com