செப்டம்பர் 5, 2010 அன்று குமாரி மாயா ராமச்சந்திரன் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோ கபர்லி தியேடரில் 'சிவனே மாயா' என்னும் நடன நிகழ்ச்சியை அளித்தார். இவர் ஸ்ரீக்ருபா நடனப் பள்ளியின் குரு விஷால் ரமணி அவர்களின் மாணவி.
வாசந்தி ராகப் புஷ்பாஞ்சலியுடன் விறுவிறுப்பாகத் தொடங்கிய நிகழ்ச்சி, கம்பீரமான கணேச துதி, ஷண்முகப்ரியா ராக முருகன் துதி என்று ராஜநடை போட்டது. அடுத்து வந்த சிவபெருமான் குறித்த 'ஆனந்த நடமாடுவார் தில்லை' ரசிகர்களைத் தில்லையம்பதிக்கே அழைத்துச் சென்றது. நிகழ்ச்சிக்குச் சிகரமாக அமைந்த சிவரஞ்சனி ராக வர்ணம், தேவியின் லீலைகளைச் சித்திரித்ததுடன் அவளது கருணையையும் அபயமளிக்கும் குணத்தையும் அபிநயத்தில் வெளிப்படுத்தியது அற்புதம்.
நிறைவாக ஆடிய யமன் கல்யாணித் தில்லானா முத்திரைகளிலும் பாத அடித்திறனிலும் உள்ள அநாயாசமான லாகவத்தை உணர்த்தியது. குரு விஷால் ரமணியின் மேற்பார்வையில், திரு. வாசுதேவன் கேசவலு நட்டுவாங்கம், திருமதி. ஸ்வேதா ப்ரஸாத் வாய்ப்பாட்டு, திரு. தனஞ்ஜயன் மிருதங்கம், திரு.வீரமணி வயலினுடன் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் ஒரு புராதன ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்யவும், அங்கு வாழும் எளிய மக்களின் மன, அறிவு, ஆன்மீக வளர்ச்சிக்காகவும் பயன்படும் முறையில் நிதி திரட்டும் வண்ணம் இந்த நிகழ்ச்சியை மாயா வழங்கினார்.
முனைவர் ராஜலக்ஷ்மி ஸ்ரீநிவாஸன், ஃப்ரீமாண்ட், கலி. |