'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா
செப்டம்பர் 11, 2010 அன்று, கலிஃபோர்னியாவின் சாரடோகா நகரில் இயங்கிவரும் ட்ரினிடி இசைப்பள்ளி 20ஆம் ஆண்டுகளை எட்டியதைக் கொண்டாடும் விதமாக பாலோ ஆல்டோ, ஜூயிஷ் கம்யூனிட்டி வளாகத்தில் ஒரு நிறைவான இசை நிகழ்சியை அளித்தது.

முதல் நிகழ்ச்சியான ராக-ஸ்லோக மாலிகாவில், 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஒத்திசைவாக கமகபூர்வமான கர்நாடக சங்கீதத்தினைப் பாடினர். 'பாவனன் நீயே' (உத்தரி) என்னும் ஸ்ரீ லால்குடி கோபால அய்யரின் கீர்த்தனையைத் தொடர்ந்து லலிதா ராக வாத்யவிருந்தா செவிகளை நிறைத்தது. பின்னர் ஹிந்தோளம், ஹம்ஸானந்தி, ஸரஸ்வதி, அமீர்கல்யாணி ராகங்களில் கோக்கப்பட்ட ராகமாலிகா விருத்தம், கச்சிதமான கௌரிமனோஹரி ஆலாபனை, தியாகபிரும்மத்தின் 'குருலேக எடுவண்டி' கீர்த்தனை என நிகழ்ச்சி அமுதப் பிரவாகமாக மேற்சென்றது.

கானடா ராக ஸ்ரீநாரத கீர்த்தனை, புன்னாக வராளியில் ஸ்யாமா சாஸ்திரிகளின் கனகசைல கீர்த்தனை, முத்து ஸ்வாமி தீட்சிதரின் முத்திரைப் படைப்பான பூர்விகல்யாணியில் அமைந்த 'மீனாக்ஷி மேமுதம்' ஆகியவை சங்கீத மும்மூர்த்திகளுக்கு அஞ்சலியாக மின்னியது. இவை லால்குடி பாணிப் பயிற்சியின் சிறப்பையும், ஸ்ரீமதி அனுராதாவின் கடுமையான உழைப்பையும் தெளிவாகக் காட்டுவதாக அமைந்தன. மிருதங்கக் கலைஞர் ஸ்ரீராம் பிரம்மானந்தத்தின் (அனுராதாவின் சகோதரர்) வழிநடத்தலில் அமைந்த “தனி” கணக்கும், கவனமும் சரிவிகிதத்தில் அமைந்த கச்சிதம்.

பாரதியாரின் 'சுட்டும் விழிச்சுடர்தான்' ராகமாலிகை அனுராதாவின் தாயார் ஸ்ரீமதி பிரம்மானந்தத்தின் இசையமைப்பில், தமிழும், இசையும் கலந்த பஞ்சாமிருதமே. தமையனாரோடும், தனியாகவும், பின்னர் மகளோடும் பல மேடைகளில் சிறப்பான கச்சேரிகளைச் செய்த மூத்த கலைஞரின் அனுபவத்துக்கு இது ஒரு சான்று.

வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் சிந்துபைரவி தில்லானா வயலின்களில் இசைக்கோலமாகவும், சரண சாஹித்யத்தில் வாய்பாட்டாகவும் நிர்வகிக்கப்பட்டது அழகான வெளிப்பாடு. எல்லோருக்கும் தெரிந்த வைஷ்ணவ ஜனதோவானாலும், நிகழ்ச்சியின் நிறைவுக்கு ஏற்ற சாய்ஸ்.

நிஜன்

© TamilOnline.com