அக்டோபர் 29, 2010 அன்று ஷாம்பர்கிலுள்ள (இல்லினாய்ஸ்) Ensemble of Ragas School of Performing Arts 'அபிநவ கானாம்ருதம்' என்ற தனது முதல் தயாரிப்பை ஷாம்பர்க் ப்ரைரீ ஆர்ட்ஸ் சென்டரில் வழங்கியது. பன்னாட்டு மணமும் ஆன்ம ஒருமைப்பாடும் விரவிய, செவ்வியல்-சமகால இசை-நடனத்தை வழங்குவது இந்நிகழ்ச்சியின் நோக்கம். வேறுபட்ட பின்புலங்கள் கொண்ட கருவியிசையோடு, பரதநாட்டியமும் கதக் நடனமும் இதில் இடம்பெற்றன.
சரஸ்வதி ரங்கநாதன் (வீணை), கார்லோ பசில் (ஃப்ளெமங்கோ கிடார்), மார்டின் மெட்ஸ்கர் (ஜாஸ் கிடார்), ஜோ மார்ட்டினஸ் (லத்தீன் டிரம்ஸ்), தனஞ்சய் குன்டே (தப்லா), கணபதி ரங்கநாதன் (மிருதங்கம்), ரவி ஐயர் (கடம்) ஆகியோர் வாத்தியங்கள் வாசித்தனர். நடனம் ஆடியோர் விஜயலக்ஷ்மியும் காத்யாயினியும்.
சிறப்புப் பிரார்த்தனைப் பாடலை சாந்தா ரங்கநாதன் தலைமையில் பள்ளியின் மாணவர்கள் பாடினர். 'ஆவாஹனா', 'கல்யாணி' முதலிய பாரம்பரிய ராகத்தில் அமைந்த இசைக் கோவையும் அவற்றுக்கான நடனம் எழிலாக இயைந்திருந்தன. 'ரைம்ஸ் இண்டியானா' அவையோரை எழுந்து ஆடச் செய்தது. ஜாஸ், ஃப்ளெமங்கோ, இந்திய இசை ஆகியவற்றின் சுவாரசியமான கதம்பமாக அமைந்த 'பஹுதாரி' நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது. இறுதி உருப்படியான 'ரெவரீ' அமைதியும் ஆரவாரமும் ஒருசேரக் கொண்ட பன்முக இசையாகப் பெருகியது. சரஸ்வதி ரங்கநாதன் வீணையில் வாசித்த வேத மந்திரத்துடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.
ஷாம்பர்க் கிராமத்தின் மூத்த அறங்காவலர் திரு. ஜார்ஜ் டன்ஹம் நிகழ்ச்சியி சிறப்பு விருந்தினராக வந்திருந்து திருவெம்பாவை குறுந்தகடை வெளியிட்டார். டாக்டர் சாரதா சொன்ட்டி (நிறுவனர்-இயக்குனர், SAPNA), சாயி சல்லபள்ளி (அமரர் டாக்டர் சிட்டிபாபுவின் மகன்) ஆகியோரும் பங்கேற்று பாராட்டிப் பேசினர்.
செய்திக் குறிப்பிலிருந்து |