நவம்பர் 14, 2010 அன்று, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து இந்த ஆண்டின் மூன்றாவது 'வறியோர்க்கு உண'வை Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506) இல்லத்தில் வசிப்போர்க்கு நண்பகலில் அளித்தனர். (http://www.hesedhouse.org/). தமிழுக்கும் தமிழர்க்கும் தமிழ் மண்ணின் விடுதலைக்கும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தோரை நினைவில் கொண்டு, மதிக்க வேண்டிய நாள் என்பதாக நவம்பர் 27 நாளை நிர்ணயித்து இவ்வறப்பணியை நிறைவேற்றின. தமிழ்ப்பள்ளி மாணக்கர்களும், அவர்தம் பெற்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு செயலாற்றினர். 'மெய்ஞான வழிகாட்டி'யான திருக்குறளின் சொல்வன்மை, இடுக்கண்ணழியாமை, ஊக்கமுடைமை, மடியின்மை ஆகிய அதிகார குறட்பாக்களின் விளக்கமும், 'தமிழர் நன்றி கூறும் நாளான நவம்பர் 27' குறித்த விவரமும், தமிழ் மண்ணின் பெருமை கூறிச் சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்களின் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பும், உணவுடன் அளிக்கப்பட்டன. கூடியிருந்த 120க்கும் மேற்பட்ட வறியோர் வழங்கிய வாழ்த்துக்கள்தாம், உதவிய தமிழ் மாணக்கர்களுக்கும், மற்றோர்க்கும் ஆசியாக அமைந்தது.
செய்திக் குறிப்பிலிருந்து |