செப்டம்பர் 19, 2010 அன்று, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் குழுத் தலைவரும் கருமுத்து தியாகராசர் குழுமங்களின் தலைவருமான தி. கண்ணன் அவர்கள், வட அமெரிக்க டெக்ஸாஸ் மாகாண ஹூஸ்டன் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு நிறுவனர்களின் ஒருவரான சொ. கண்ணப்பன் அவர்களின் அழைப்பிற்கிணங்க இராமன் அவர்களுடன் வருகை தந்தார்.
ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் ஜி.எஸ். கோபால கிருஷ்ணா வரவேற்றார். அம்மன் சன்னிதானத்தில் பூரணகும்ப மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து நேர்நிலையில் இருக்கும் வெள்ளித்தேரைக் கண்ணன் பார்வையிட்டார். துணைத்தலைவர் தூப்பில் நரசிம்மன் வரவேற்புரை நிகழ்த்தினார். பியர்லேண்ட் நகர மேயர் டாம் ரீட் அவர்கள் கண்ணன் அவர்களைப் பாராட்டிக் கேடயம் வழங்கினார். தொடர்ந்து கண்ணன், தொன்மை வாய்ந்த மதுரை மீனாட்சி ஆலய வரலாற்றுக் குறிப்புகளை, சைவ சமய சிந்தனைகளை எடுத்துக்காட்டுக்களுடன் கூறினார். புகைப்படங்களுடன் கூடிய கும்பாபிஷேகம் பற்றிய செய்தித் தொகுப்பை வழங்கி அனைவரையும் பரவசப்படுத்தினார். ஆலய நிர்வாக இயக்குநர் பார்த்திபன் முன்னிலையில் பொருளாளர் ஞானம் அவர்கள் கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார்.
மதிய விருந்துக்குப் பின் நிகழ்ந்த சிறப்புரையில் திரு கண்ணன் இந்தியாவின் சமீபத்திய தொழில் வளர்ச்சி, உலகளாவிய நிலையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவது மற்றும் பல்வேறு சிறப்புத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தியாகராயர் கல்விக் குழுமங்களில் பயின்ற மாணவர்களைச் சந்தித்து உரையாடினார். அவர்களிடம் கல்விக் குழுமம் பற்றிய கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
சொ. கண்ணப்பன் தனது நன்றியுரையில், கண்ணன் அவர்களது ஹூஸ்டன் வருகை இரு கோயில்களுக்கும் நல்லுறவை வளர்க்கும் என்று உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
கரு. மாணிக்கவாசகம், ஹூஸ்டன், டெக்ஸாஸ் |