நாட்யா டான்ஸ் தியேடரின் 'கலாசாரங்களைக் கடத்தல்'
2010 அக்டோபர் 23, 24 தேதிகளில் நாட்யா டான்ஸ் தியேட்டர் வேறுபட்ட கலாசாரங்கள் பலவற்றின் நடன வடிவங்களை உள்ளடக்கிய 'Crossing Cultures' என்ற நிகழ்ச்சியைச் சிகாகோவின் ஹரால்ட் வாஷிங்டன் நூலக மையத்திலுள்ள சிண்டி ப்ரிட்ஸ்கர் அரங்கில் வழங்கியது.

'நாட்யா'வின் கிருத்திகா ராஜகோபாலன் முதல்நாளன்று பரதநாட்டியத்தோடு நிகழ்ச்சியைத் துவக்கினார். அடுத்து, ஜெய்ப்பூர் கரானாவில் உலகப் பிரசித்தி பெற்ற பண்டித துர்காலால் அவர்களின் முக்கிய சிஷ்யையான உமா டோக்ரா, கதக் நடனம் வழங்கினார். பின்னர் டான்ஸ் வொர்க்ஸ் சிகாகோ குழுவினர் 'My Witness' என்ற நிகழ்ச்சியை வழங்கினர். ஆண்ட்ரையா பெட்ச்சர், ஜூலி நககாவா ஆகியோரைப் பிரதம நர்த்தகிகளாகக் கொண்ட இந்தத் 'தற்கால நடன'க் குழு அண்மையில் வெற்றிகரமாக ஐரோப்பியப் பயணத்தை முடித்து வந்துள்ளது. இறுதியாக 'நாட்யா'வின் ஹேமா ராஜகோபாலனும் ஷர்லி மோர்டைனும் இணைந்து வடிவமைத்த 'The Elements' நிகழ்ச்சியோடு முதல்நாள் நிகழ்ச்சி முடிவடைந்தது.

ஞாயிறு மாலை நிகழ்ச்சி, ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கிருதிகளை ஆதாரமாகக் கொண்டமைந்த 'Divine Equations' நிகழ்ச்சியிலிருந்து தேர்ந்தெடுத்த இரண்டு உருப்படிகளோடு தொடங்கியது. அதைத் தொடர்ந்து வந்த ஹெட்விக் டான்சஸ் (கலை இயக்குனர் ஜேன் பார்ட்டொஸெக்) குழுவினர் வழங்கிய 'Night Blooming Jasmine' என்ற ஃப்யூஷன் நடனம் விருந்தாக அமைந்தது. ஹேமா-ஷர்லி வெற்றிக் கூட்டணியின் மற்றொரு படைப்பான 'சஹ்ருதயா'வோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது.

"இந்த விழாவை வருடந்தோறும் கொண்டாடும் எண்ணம் உள்ளது" என்கிறார் 'நாட்யா'வின் பிரதம நடனமணியும் இணைக் கலை இயக்குனருமான கிருத்திகா. "கிழக்கு-மேற்கு, பழமை-புதுமை ஆகியவற்றின் சந்திப்பாக அமையும் இந்தப் படைப்புகள் இந்திய-அமெரிக்க மற்றும் பிற கலாசாரத்தினருக்குப் பலவகைப்பட்ட நடன வடிவங்கள் குறித்த அறிதலை ஏற்படுத்துகிறது" என்கிறார் அவர்.

வரவிருக்கும் நிகழ்ச்சிக் கட்டணத்தில் சலுகை பெற நாட்யா உங்களை அவர்களது Facebook Fan page-க்கு அழைக்கிறது. மேலும் அறிய: www.natya.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com