ஜூலை 13, 2010 அன்று லிவர்மோர் ஷ்ரன் சென்டரில், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றமும், தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து கவிஞயரசர் கண்ணதாசனுக்குச் சிறப்பு விழாவை நடத்தினர். 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மதியம் 2 மணிக்குத் தொடங்கி நள்ளிரவுக்கு மேலும் தொடர்ந்து நடந்தது. திருமதி உமையாள் முத்துவின் கண்ணதாசன் குறித்த உரையைத் தொடர்ந்து கவிமாமணி அப்துல் காதரின் தலைமையில் கருத்து விவாதம் நடைபெற்றது. 'கவிதை வளமே' என்ற வாதத்தை திருமதி பாகீரதி சேஷப்பன், திருமுடி துளசிராமன், சுப்பிரமணிடம் லட்சுமணன் முன்வைக்க, 'கருத்து வளமே' என்ற அணியில் வேதா நாராயணன், நித்யவதி சுந்தரேஷ், டில்லிதுரை ஆகியோர் வாதிட்டனர்.
கம்பீரமான குரல்வளம் படைத்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல்ஹமீது இடைவிடாது நின்றும், நடந்தும் அறிவிப்புக்களை அசராமல் செய்த பாங்கு வியக்க வைத்தது. 'கேட்டவரெல்லாம் பாடலாம்!' இசை நிகழ்ச்சி மிக நன்று. வாத்ய இசையைக் கேட்டு வரிகளுடன் பாட மேடைக்கு வந்த 20 பேரில் கணபதி சுவாமி பரிசை வென்றார். 'மீன் சந்தையில் விண்மீன் விற்றவள்' என்ற கவிதைப் போட்டியில் டில்லிதுரை பரிசு வென்றார். கின்னஸ் சாதனை படைத்த லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இசைநிகழ்ச்சியில் மாலதி லக்ஷ்மண், கிருஷ், டி.எம்.எஸ். செல்வகுமார், மஹதி, லக்ஷ்மண் ஆகியோர் பங்கேற்றுப் பாடினர். உற்சாக மிகுதியில் மக்கள் பாடல்களுக்கு எழுந்து நடனமாடியது கண்கொள்ளாக் காட்சி. மாலதி லக்ஷ்மண் கே.பி. சுந்தராம்பாள் குரலில் தொடங்கி தற்போதைய பாடகர்கள் வரை பலரது குரல்களில் பாடி அசத்தினார்.
நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட நிதி, தமிழ்நாடு அறக்கட்டளை வழியே தமிழகத்தில், வறுமையால் கல்வி தடைப்பட்ட மாணவர்களது கல்வி தொடரப் பணிபுரிய அளிக்கப்பட்டது.
உமையாள் முத்து, கலிபோர்னியா |