ஆகஸ்ட்28, 2010 அன்று ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி திருமதி. விஷால் ரமணியின் சிஷ்யை அஞ்சலி குமாரின் நாட்டிய அரங்கேற்றம் பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கில் நடைபெற்றது. சிறப்பான தாளக்கட்டு, பாவம் மிளிரும் முகம், கண்கள், சுத்தமான அங்க அசைவுகள் இவை வெகு எளிதாக அரங்கத்தை வசீகரித்தன. இந்துக் கடவுளர் ஐவரின் சிறப்பை விளக்கும் நாட்டை ராக மிஸ்ரஜம்பக தாள அஞ்சலியுடன் நடனம் துவங்கியது.
சிவனின் சிறப்பை விளக்கும் சிவபஞ்சாட்சரத்தில் நடராஜப் பெருமானைக் கண்முன் கொணர்ந்து அற்புதமாக ஆடினார். தொடர்ந்த ஜதீஸ்வரத்தின் அடவுகள் முழுமையாகவும் சுத்தமாகவும் இருந்தன. வர்ணத்துக்கு விறுவிறுப்பாக ஆடி அவையை அசரச் செய்தார்.
ஸ்ரீரஞ்சனி ராகம் ஆதிதாளத்தில் 'நீதான் மெச்சிக் கொள்ளவேண்டும்' என்கிற பாடலுக்கு கண்ணனின் குறும்புகளைப் பொறுக்க முடியாத தாயாக, அதே சமயம் தன் மகன் மீது அளவிலா அன்புடைய தாயாக மாறி மாறி வாத்சல்ய ரசத்தால் கண்களைப் பனிக்கச் செய்தார். 'ராஜீவ நேத்ராய ராகவாய நமோ' என்கிற ராமனைப் பற்றியப் பாடலில் தசரதனின் மைந்தனாக, சீதையின் கணவனாக, உததம குணங்களின் வடிவாக, இறுதியில் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் காவிய நாயகனாக ராமனைச் சித்திரித்துப் பாராட்டுப் பெற்றார். சிறப்பாகத் தில்லானா ஆடியதோடு, குற்றாலக் குறவஞ்சிப் பாடலுக்கு முருகக் கடவுளைக் கண்முன் கொணர்ந்தார். மங்கலத்துடன் அரங்கேற்றம் இனிதே முடிந்தது.
வாசுதேவன் கேசவுலுவின் நட்டுவாங்கம், ஸ்வேதா ப்ரஸாதின் வாய்ப்பாட்டு, எம். தனஞ்செயனின் மிருதங்கம், வீரமணியின் வயலின் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.
நித்யவதி சுந்தரேஷ் |