செப்டம்பர் 11, 2010 அன்று, சிலப்பதிகாரத்தை நாட்டிய நாடகமாகத் தயாரித்து இயக்கி வழங்கினார் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியருமான மதுரை முரளிதரன். விரிகுடாப் பகுதியில் தரமான இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கி வரும் கலாலயாவின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவாக சான் ஹோஸே நகரில் உள்ள CET அரங்கில் இது நடைபெற்றது. பாடகர், பாடலாசிரியர் என்று பல்வேறு திறமைகள் கொண்ட அவர் எழுதி இசையமைத்த வர்ணங்கள் நாட்டியக் கலைஞர்களிடையே பிரபலம். பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சியின் இன்றியமையாத அம்சங்களான அலாரிப்பு, வர்ணம், தில்லானா போன்றவைகளை 35 வகைத் தாளங்களிலும் இயற்றி வழங்கிய பெருமை முரளிதரனையே சாரும்.
இந்தியாவிலிருந்து வந்துள்ள கலைஞர்களுடன் இணைந்து, விரிகுடாப் பகுதியிலுள்ள 'அபிநயா', 'லாஸ்யா', 'நிருத்யோல்லாஸா', விஸ்வசாந்தி', 'திருச்சிற்றம்பலம்', 'ஜயேந்திர கலாகேந்திரா', 'புஷ்பாஞ்சலி' ஆகிய நாட்டியப் பள்ளிகளைச் சார்ந்த இயக்குனர்களுடனும் மாணவியருடனும் இணைந்து இந்த நாட்டிய நாடகத்தை வழங்கினார். 'ஞாயிறு போற்றுதும்' என்ற துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. முரளிதரன் தாமே கோவலன் பாத்திரமேற்று நடனமாடினார். கண்ணகியிடம் கொண்ட அன்பையும், மாதவியிடம் கொண்ட தீராக் காதலையும் வெளிப்படுத்தி இயல்பாகவும், நயமாகவும் அதே சமயம் சற்றும் பெண்மை கலவாமலும் நடனமாடினார். கண்ணகியாகப் பாத்திரமேற்றவர் பிரபல நாட்டியக் கலைஞரும், 'லாஸ்யா'வின் இயக்குநருமாகிய வித்யா சுப்ரமணியம். உணர்ச்சிகளை தெளிவாகப் பிரதிபலிக்கும் அழகிய முகம் கொண்ட வித்யா, கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்டு விழுந்தும், எழுந்தும், வெறித்தும், துவண்டும், அழுதும், அரற்றியும் துயரை வெளிப்படுத்தியது சிறப்பு.
மாதரியாக வந்த 'திருச்சிற்றம்பலம்' இயக்குனர் தீபா மகாதேவனின் கருணையான முகபாவமும், ஆயர் குடியினராக ஆடிய மாணவியர் கண்ணகியின் துயரத்தில் பங்கேற்றதும் நெஞ்சைத் தொடுவனவாக அமைந்தன. இந்தியாவில் பிரபலமான குச்சுப்புடி நடனக் கலைஞர் உமா முரளிகிருஷ்ணா மாதவியாகத் தோன்றியது புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. இந்திர விழாவின்போது பலவகை நடனங்களைக் குழுவினருடன் உமா ஆடியது சிறப்பு. முதலிலிருந்து இறுதிவரை கதையுரைப்பவராக வந்து 'விஸ்வசாந்தி' இயக்குனர் ஸ்ரீலதா சுரேஷ் ஆடிய நடனங்கள் பளிச். ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் விரிகுடாப் பகுதி இளம் மாணவியர் பலவித நடனங்களைக் கச்சிதமாக ஆடினர். குறிப்பாக, அவர்கள் ஆடிய கிராமிய நடனம் மனதைக் கவர்ந்தது. 'யானோ அரசன் யானே கள்வன்' என்று வேரற்ற மரமாய் வீழ்ந்து மாயும் பாண்டிய மன்னனாக சிந்து நடராஜனும், உடன் உயிர் நீத்த கோப்பெருந்தேவியாக ராதிகா கண்ணனும், சிறுபொழுதே தோன்றினாலும் திறமையான நடிப்பினால் நெஞ்சில் இடம் பிடித்தனர்.
சோழ மன்னன் சுற்றம் புடைசூழ வெண் கொற்றக் குடையுடன் ரசிகர் மத்தியிலிருந்து புறப்பட்டு மேடையேற ஊர்வலமாகச் சென்றது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. பெரும்பாலான இடங்களில் பின்னணி அலங்காரங்கள் இல்லாமல் மேடை வெறுமையாக இருந்தது ஒரு குறையே! இந்தியாவிலிருந்து நடனக் குழுவினர் வந்துள்ளனர் என்பதால் மேடையலங்காரங்களை அதிகமாகக் கொண்டுவர முடியாமல் போயிருக்கலாம். ஆனாலும், விரிகுடாப் பகுதிப் பள்ளிகள் எளிமையான மேடையலங்காரங்களை அளித்து உதவியிருக்கலாமே? உதாரணத்திற்கு, கவுந்தியடிகள் துணையுடன் கோவலனும் கண்ணகியும் ஆயர்குடிக்கு வரும்போது மேடையில் அமைந்த ஒன்றிரண்டு பசுமையான செடிகள் ஆயர்குடிலை அழகு செய்தன. பல காட்சிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆடும்போது, பிரதான பாத்திரத்தின் மீது மட்டும் ஸ்பாட் ஒளி பட்டது. உடன் ஆடும் கலைஞர்களை மங்கலான ஒளியில் காட்டியது நல்ல உத்தியாகத் தெரியவில்லை.
பாடல்கள் டாக்டர் எஸ்.ஜானகி மற்றும் பல இசைக் கலைஞர்கள் குரலில் இனிமையாக ஒலித்தாலும், மனத்தில் நிலைத்து நிற்கும்படியாக அமையவில்லை. விரிகுடாப் பகுதி நாட்டியக் கலைஞர்களுக்கும் மாணவியருக்கும் வந்திருக்கும் இந்தியக் கலைஞருடன் இணைந்து நடனம் பழகக் குறைந்த நாட்களே கிடைத்திருந்தாலும், நாட்டிய நாடகம் துவக்கத்திலிருந்து இறுதிவரை, தொய்வின்றி விறுவிறுப்பாக நடந்தேறியது. மொத்தத்தில் ஒரு தேர்ந்த கலைஞரின் படைப்பில் அழியாத காவியத்தைப் பார்த்த மனநிறைவை அனைவருக்கும் தந்தது இந்த நாட்டிய நாடகம்.
அருணா கிருஷ்ணன், சன்னிவேல் கலிபோர்னியா |