செப்டம்பர் 25, 2010 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை போலிங் ப்ரூக் உயர்நிலைப் பள்ளிக் கலையரங்கில் ஏற்பாடு செய்திருந்தது. மூத்த கலைஞரான சி.எஸ். ஐங்கரன் அவர்களது வெள்ளிவிழா ஆண்டு இது. தன்னலமற்ற ஈடுபாட்டுடன் இசை நிகழ்ச்சிகளை அர்ப்பணித்து வரும் அவரது சேவையைப் பாராட்டி, வாழ்த்துப் பத்திரமும், பரிசுகளும் சங்கத்தலைவர் டோனி சூசை முன்னிலையில் அளிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் ஐங்கரனைக் கண்டெடுத்து வளர்த்த ஒரு நல்லுறவை நினைவுகூர்ந்து வாழ்த்திப் பேசினார் டாக்டர் சேவியர் ரோச்.
மயூரி, ஷோபா சுரேஷ், பிரசாத், சபரி ஆகியோர் சுவாரஸ்யமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். 'கொஞ்சும் சலங்கை' முதல் 'எந்திரன்' வரையிலான பல படங்களின் புகழ்பெற்ற முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் அரங்கேறின. பல இசைக்கலைஞர்களையும், இசையமைப்பாளர்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்திய இந்நிகழ்ச்சியில் மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. இசைக்குயில் திருமதி ஸ்வர்ணலதா அவர்களுக்குச் செய்யப்பட்ட நினைவாஞ்சலி நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.
அனுபவம் முதிர்ந்த ஐங்கரன், ரமா ரகுராமன், ரோச், ராம் பிரசாத், பவித்ரா, ஆனந்த் ஆகியோருடன் இசையரங்கைக் கலக்கியவர்கள் - பரணி, அரவிந்த், பாபுராஜன், ரவிச்சந்திரன், ரங்கா, நாதன், அருண்குமார், கீதா, ஷைலஜா, சாய் ப்ரியா, வினித்ரா, ரம்யா, ஸ்வப்னா, சந்திரகலா என்று ஒரு பெரிய இசைக் கூட்டத்தினர். சிறுமியர் திவ்யா ஆனந்த், சுஷ்மிதா சுரேஷ் சேர்ந்து பாடிய பாடலில் பல புதிய பரிமாணங்கள் தெரிந்தன.
அழகாகத் திட்டமிட்டு நிகழ்ச்சியை உருவாக்கியிருந்த ராம் ரகுராமன், சோமு, சீனி குருசாமி ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். சினோவ் மேபில்டன் தலைமையிலான இசைக்குழு ஓர் இசைக் கொண்டாட்டத்தை அளித்து மகிழச் செய்தது. ரமிதா சந்திரா, சிகாகோ |