ஜூலை 10, 2010 அன்று, ரெட்வுட் சிடியில் உள்ள கன்யாடா கல்லூரியில் தமிழ் நாடு டேங்கர் அறக்கட்டளைக்கு (Tamilnadu Tanker Foundation) நிதி திரட்டுவதற்காக வித்யா சுந்தரத்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இசைமேதை திரு ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சி ’வரவல்லப ரமண’ என்ற ஹம்ஸத்வனி ராகப் பாடலுடன் துவங்கியது. ராஜூ வாசுதேவன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து திஸ்ர ஏக தாள அலாரிப்பு. கல்யாணி ராக ஜதீஸ்வரத்திற்குப் பிறகு ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவனின் ‘ஸ்வாமி நீ மனமிரங்கு’ என்ற பாடலுக்கு வித்யா ஆடிய விதம் சிறப்பு.
பின்னர் ஜி.என்.பி. அவர்களைப் பற்றி கலா ஐயர் சிறப்புரையாற்றினார். அடுத்து ஜி.என்.பி.யின் பாடல்களுக்குச் சிறப்பாக ஆடினார் வித்யா. ’உன்னடியே கதி’ என்ற பஹதார ராகத்திற்குப் பிறகு, ஜி.என்.பிக்கு மிகவும் பிடித்த பாடலான ‘சொன்னதைச் செய்திட சாகசமா’ என்ற அவரது இசைத் தட்டையே ஒலிபரப்பி ஆடியது பொருத்தமான அஞ்சலிதான். ஹம்ஸாநந்தி ராகத் தில்லானாவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
சென்னையிலிருந்து வந்திருந்த கே.பி.யசோதா (நட்டுவாங்கம்), கே.பி. ராமகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), கே.பி. ரமேஷ்பாபு (மிருதங்கம், தபேலா), வளைகுடாக் கவிஞர் கோவிந்த் ராகவன் (வயலின்) ஆகியோர் பக்கம் வாசித்தனர்.
நிகழ்ச்சியின்மூலம் திரட்டப்பட்ட $2000 நிதி Tamilnadu Kidney Research Foundation என்ற டேங்கர் அமைப்புக்கு அளிக்கப்பட்டது. இது 1993ல், வசதியற்ற ஏழைக் குடும்பத்தினரின் சிறுநீரகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் tanker@tankerfoundation.org என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.
செய்திக் குறிப்பிலிருந்து |