ஜூலை 31, 2010 அன்று, ஜெயேந்த்ர கலாகேந்த்ராவின் முதல்வர் திருமதி சுகந்தா ஸ்ரீநாத்தின் மாணவி ஸ்நேஹா ஜெயப்பிரகாஷின் நடன அரங்கேற்றம் பாலோ ஆல்ட்டோ கப்பர்லி அரங்கில் நடைபெற்றது. கலைமாமணி, பத்மபூஷண் சாந்தா தனஞ்செயன் மற்றும் திரு. தனஞ்செயன் அவர்களின் நடன அமைப்பில் உருவான ஷண்முகப்ரியா ராக சுப்ரமணிய கௌத்துவத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய அரங்கேற்றம், சங்கீர்ண ஜாதி அலாரிப்பில் தொடர்ந்து வாசஸ்பதி ஜதிஸ்வரத்தில் துரித நடை போட்டது. நல்ல ஓவியத்திற்கு வர்ணக்கலவை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவே நாட்டியத்தில் வர்ணம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டக்குறிஞ்சி ராகத்தில் அமைந்த சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் "ஸ்வாமி நான் உந்தன் அடிமை" வர்ணத்துக்குத் திருமதி சுகந்தாவின் அற்புத நடன அமைப்பு அனைவரையும் ஈர்த்தது. அதற்கு ஈடு கொடுத்த ஸ்நேஹாவின் அபிநயமும் பாவமும் கண்டோரை வியக்கவும் மெய்மறக்கவும் செய்தது.
இடைவேளைக்குப் பிறகு "ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?" என்ற ராகமாலிகைப் பாடலுக்கு ஸ்நேஹா ஆடியது, திருமாலின் ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரப் மகிமையைப் பறை சாற்றியதோடு, பக்திப்பரவசத்திலும் ஆழ்த்தியது. சிவதாண்டவம் ஆதியந்தம் இல்லாத ஆடற்கடவுளின் ஆக்கலும் அழித்தலும் ஆகிய ஆனந்த மற்றும் ருத்ர தாண்டவத்துக்குத் ஸ்நேஹா சுழன்றாடியது என் மனத்திரையில் குதி போட்டுக் கொண்டிருக்கின்றது. சக்தியின் மகிமையையும் மறக்காமல் கேதாரகௌளையில் அமைந்த கீர்த்தனத்துக்கு ஸ்நேஹா ஆடியது அற்புதம். நிறைவாக ஹிந்தோள தில்லானாவுக்கு கலாக்ஷேத்ரா பாணியில் ஸ்நேஹா நடனமாடினார்.
நிகழ்ச்சிகு, திருமதி சுகந்தாவின் (நட்டுவாங்கம்), திரு. ஈஸ்வர் ராமகிருஷ்ணன் (வாய்ப்பாட்டு), திரு. ரமேஷ்பாபு (மிருதங்கம்), திருமதி லக்ஷ்மி பாலசுப்ரமண்யம் (வயலின்), திரு. அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) ஆகியவற்றில் பக்கபலமாக நின்று செழிப்பூட்டினர்.
மாலா கிருபாகரன், ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா |