லக்ஷ்யா பாலகிருஷ்ணன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 1, 2010 அன்று குமாரி லக்ஷ்யாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஸாரடோகாவிலுள்ள மெக்காஃபி அரங்கில் நடந்தேறியது. பிரமிக்கத்தக்க வேகமும் அபிநயமும் சுத்தமான அடவுகளும் சுழன்றாடிய லாகவமும் லக்ஷ்யாவை அரங்கேற்ற மாணவியாக நினைக்கவே முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது. இது குரு விஷால் ரமணிக்கு மற்றொரு முத்திரைக் கல். நிகழ்ச்சி அஷோக் சுப்ரமணியத்தின் அமிர்தவர்ஷிணி ராக புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பித்தது. தொடர்ந்து கம்பீர நாட்டையில் அமைந்த ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் ஸ்ரீ விக்நராஜம் பஜே, கீரவாணியில் ஜதீஸ்வரம், லால்குடி ஜெயராமனின் ராகமாலிகையில் அமைந்த அங்கையற்கண்ணி வர்ணம், அடானாவில் அமைந்த மதுர மதுர வேணு கீதம் என்று ஆடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

சிந்துபைரவி ராகத் தில்லானாவின் சொற்கட்டுகளுக்கு ஜுகல்பந்தி செய்த லக்ஷ்யா கைதட்டலை வாரிக்கொண்டார். விஷமக்கார கண்ணா பதத்துக்கு ஆடியவிதம் சிறப்பு. இதற்கு குரு விஷால் ரமணியின் கற்பனைச் சிறப்பும், அழகான நடன அமைப்புமே காரணம் என்று கூறலாம். வாசுதேவனின் நட்டுவாங்கம், ஸ்வேதா பிரசாத்தின் பாட்டு, தனஞ்ஜெயனின் மிருதங்க வாசிப்பு, வீரமணியின் வயலின் என்று மொத்த பக்கவாத்தியமுமே நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

ஜயஸ்ரீ,
கேம்பெல், கலிஃபோர்னியா

© TamilOnline.com