ஆகஸ்ட் 7, 2010 அன்று செல்வன் அருண் கௌசிக்கின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் அரோரா அருள்மிகு பாலாஜி கோவில் அரங்கில் நடைபெற்றது. திருமதி மாலதி தியாகராஜன், திரு சங்கர் ஜகதீச ஐயர் ஆகியோரிடம் சங்கீதம் பயின்றுள்ளார் கௌசிக். தவிர, திரு ரவிசங்கரிடம் மிருதங்கம் கற்றுத் தேர்ந்துள்ளார்.
கோபாலகிருஷ்ண பாரதியின் 'திருவடி சரணம்' (காம்போதி), தியாக பிரம்மத்தின் 'ராமா நீ வாதுகொந்துவோ' (கல்யாணி), துளசிதாசர் பஜனை, புரந்தரதாசர் கிருதி, பிருந்தாவனியில் தில்லானா என்று முத்து முத்தான பாடல்களால் கச்சேரியைக் களைகட்டச் செய்தார் கௌசிக். ராக ஆலாபனை, நிரவல், கல்பனா சுவரங்கள் என்று எதிலும் சளைக்கவில்லை.
செல்வி கீர்த்தனா சங்கர் (வயலின்), திரு ராஜேஷ் சேலம் (மிருதங்கம்) ஆகியவற்றில் திறம்படத் துணை நின்றனர்.
தெற்கு க்ளென்ப்ரூக் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து இல்லினாய் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு கல்வியைத் தொடரவிருக்கிறார் அருண் கௌசிக். திரு கணேஷ் பிரசாத், திருமதி சந்திரிகா மஹாலிங்கம் ஆகியோரிடம் கர்நாடக இசையில் சில பாடாந்தரங்களைக் கற்றுள்ளார். தஞ்சாவூர்ப் பாணி ஓவியம், மேற்கத்திய இசை ஆகியவற்றிலும் ஆர்வமும் திறமையும் பெற்றுள்ளார் கௌசிக். தான் படித்த மேல்நிலைப் பள்ளியின் ஒன்பது பாடகர்கள் கொண்ட 'நைன்' குழுவில் அருண் முக்கியப் பாடகர். இந்தக் குழுவின் இசை விரைவில் குறுந்தகடாக வெளியாகவுள்ளது.
டாக்டர். சுந்தர்ராஜன், சிகாகோ, இல்லினாய் |