கனடாவில் சிவத்தமிழ் விழா
ஏப்ரல் 24, 2010 அன்று டொரண்டோவில் உள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் இந்துக் கல்லூரியும், ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானமும் இணைந்து சிவத்தமிழ் விழாவைச் சிறப்புற நடத்தினர். கோவில் நிறுவனர் திரு. பஞ்சாட்சர விஜய குமார குருக்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் இளம் சிறார்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக 65 குழந்தைகளுடன் பண்ணிசை வகுப்புகளை ஆரம்பித்தார். 2006ல் 220 மாணவர்களாக வளர்ந்து தமிழ், சமயம் முதலியவை இணைக்கப்பட்டன. பத்து தரமிகுந்த ஆசிரியர்களால் கல்வி, கலை, கலாசாரம் முதலியன கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இந்த ஆசிரியர்களின் நெறியாள்கையில், கல்லூரியின் மாணவர்களே பலவகைக் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். 'ஆறு துணை' நடனம் 16க்கும் மேற்பட்ட சிறுவர்களால் நடைபெற்றது. ஓடி விளையாடு பாப்பா பாடல் அஸ்வின், ஹரி நடராஜா, சயானா, தர்சனா போன்ற பல சிறார்களால் வழங்கப்பட்டது. வீரவேல் காவடி ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 'எல்லாம் அவன் செயல்' என்ற நாடகம் நடைபெற்றது. இறைவனை நம்பினால் எதுவும் துச்சம் என்ற நீதியை அழகாக விளக்கியது.

பின்னர், ஔவை பற்றி ராகவி, மெய்ப்பொருள் நாயனார் பற்றி துஷான், குங்கிலியக்கலய நாயனார் பற்றி பாபிசன், திருநாளைப்போவார் பற்றி சங்கீர்ணா, பூசலார் பற்றி ஆரபி, சிவபெருமானைக் குறித்து புருஷோத், சணடேச்வரர் பற்றி சுருதி ஆகியோர் அழகாகப் பேசினர்.

காத்தவராயன் கூத்து நம்மைப் பழங்காலத்துக்கே அழைத்துச் சென்றது. அருமையாக இழுத்து இழுத்துப் பாடி, பாரம்பரியக் கூத்து உடையுடன், இடதும் வலதும் திரும்பித் திரும்பி அழகாகக் கூத்துப் போட்டனர் சிறுவர்கள். பின்னர், அருமையான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக வந்த பட்டி மனறம், கனடா நாட்டுக் குழந்தைகளா இப்படி அருமையாகத் தமிழ் பேசுகிறார்கள் என்ற வியப்பை ஏற்படுத்தியது. ‘பெற்றோர்கள் அடுத்த தலைமுறைக்குத் தமிழர் பண்பாட்டை எடுத்துச் செல்கிறார்களா? இல்லையா?’ என்பதே தலைப்பு. தீபனா, நிஷந்தி, ஆகாஷ், செயோன், பவதரணீ, சாயிசங்கர், மிதுஷா, திவ்யா, ரோஷன் முதலியோர் பங்கேற்றனர்.

அலமேலு மணி,
கனடா

© TamilOnline.com