மே 1, 2010 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் விக்ருதி வருடத்தை விமரிசையாகக் கொண்டாடியது. சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான தமிழர்கள் கலந்துகொண்டனர். கல்பகம் கவுசிக் கடவுள் வாழ்த்துப் பாடினார். முதலில் விக்ருதி ஆண்டை வரவேற்று குழந்தைகள் சேர்ந்திசைப் பாடல் ஒன்றைப் பாடினர். சங்கச் செயலர் திருமுடி மற்றும் கௌரி தொகுத்தளித்தனர். தொடர்ந்து தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் என்று பக்திப் பாடல்களை இளம் கலைஞர்கள் இசைத்தனர். தொடர்ந்து கிட்டத்தட்ட 185 சிறுவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்ட பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. தீபா மஹாதேவன், இந்துமதி கணேஷ், ப்ரியா ராமதாஸ், அகிலா ஐயர், ஷாலினி, கௌரி, ராமா ராஜ், நித்யவதி, கீதா சேஷாத்ரி, ஸ்வரலயா ஆகியோரின் மாணவர்கள் வழங்கிய பரத நாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புற நடனங்கள், வயலின், வீணை இசை, பிற நடனங்கள், சிறு நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப் பட்டன.
சங்கமம் குழுவினர் நகைச்சுவை நாடகம் மற்றும் நடனங்களோடு இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கினர். வெங்கட் குழுவினரின் ‘சங்கமம்’ வளைகுடாப் பகுதியில் வசிக்கும் கலைத் திறன் கொண்ட இளைஞர்களைக் கொண்ட அமைப்பாகும். வந்திருந்தோருக்கு பாரதித் தமிழ்ச் சங்கம் தயாரித்திருந்த விக்ருதி தமிழ்ப் புத்தாண்டு விழா மலர் அளிக்கப்பட்டது.
பாரதி தமிழ்ச் சங்கம் வரும் ஜூன் மாதத்தில் டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி, தியாகி கக்கன் அவர்களின் சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் பொருளாதாரம், பாரத கலாசாரம் குறித்து அளிக்க இருக்கும் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவர்கள், இளைஞர்களுக்கான போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. பாரதி தமிழ்ச் சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். வரவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களுக்கும், பங்கு கொள்ளவும், பாரதி தமிழ்ச் சங்கத்தின் துணையோடு புதிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளலாம்:
ராகவேந்திரன்: 785.979.5497 திருமுடி: 510.604.9019 வாசுதேவன் 650.868.0510
மின்னஞ்சல் முகவரி: bharatitamilsangam@yahoo.com
ச.திருமலைராஜன் |